Saturday, March 19, 2011

தேர்தல் பிரச்சார வியூகம் முதல்வர் கலைஞர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 19- தேர்தல் பிரச்சாரம் பற்றி தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் கலைஞர் அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- வரவிருக்கின்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும், களத்திலே நிற்கவிருக்கும், வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 119 பெயர்களில் 58 பேர் புதுமுகங்கள், 70 பேர் பட்டதாரிகள், அதிலே வழக்கறிஞர்கள் 24 பேர், மருத்துவர்கள் 3 பேர், முதுகலைப் பட்டதாரிகள் 27 பேர்.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சென்னை யிலே தங்கியிருந்தோரும், கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் நேற்றையதினம் இரவே என்னைச் சந்தித்து வாழ்த்தினைப் பெற்றுக் கொண்டு தொகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
இதுவரை பொறுப்பிலே இருந்த ஒரு சிலருக்கு இந்தமுறை வாய்ப்பளிக்கப்படவில்லை. ஏன் அமைச்சர்களாக இருந்தவர்களான, எனக்கு மிகவும் நெருங்கிய, கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமியும், என்னுடைய தளகர்த்தர் களில் ஒருவர் என்று சொல்லத்தக்க அளவிற்கு என் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய கோ.சி. மணியும் இந்தமுறை தேர்தலில் போட்டியிட வில்லை.
இன்னும் சொல்லப்போனால், நான் வேட் பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே ஆர்க்காடு வீராசாமி என்னைச் சந்தித்து தனது உடல் நிலையைப் பற்றிக் கூறி தனக்கு இந்த முறை வாய்ப்பளிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாகவே அண்ணா அறிவாலயம் வந்து, என் பக்கத்திலே இருந்து வேட்பாளர்களை அறிவித்த வுடன், அவரும் என்னை வாழ்த்தினார்.
அதைப்போலவே கோ.சி. மணிக்கு வாய்ப்பு தராவிட்டாலும், அவரால் வளர்க்கப்பட்ட மற்றொருவருக்குத்தான் அந்தத் தொகுதியிலே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கோ.சி.மணி இளமை முதல் எப்பொழுதும் எனக்கு கவசமாகவும் எதிர்ப்புக் கணைகளிலிருந்து என்னைக் காத்திடும் கேடயமாகவும் விளங்குபவர். நானும் அவரும் வாழும்வரை இந்த உணர்வு நிரந்தரமாகவே இருக்கும்.
வடசென்னை மாவட்ட செயலாளராக அரும்பணியாற்றி, சுழன்று சுழன்று உழைத்து வரும் வி.எஸ். பாபுக்கு, அவருடைய தொகுதி இந்தத் தேர்தலில் சீரமைப்பு காரணமாக பிரிந்துவிட்ட காரணத்தினால், வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற போதிலும், அவருடைய பட்டாளத்தோடு அறிவாலயம் வந்து எனக்கு பொன்னாடை அணிவித்து, அவருடைய மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணியினரையெல்லாம் வெற்றி பெறச்செய்து அழைத்து வருவதாக கூறிவிட்டுச் சென்றபோது, என் மனத்திற்கு என்னாலேயே ஆறுதல் கூற முடியவில்லை.
ஆனால், ஒருசிலர் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் வருத்தப்படத்தான் செய்கிறார்கள். ஓர் உதாரணம் கூறுகிறேன். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் என்னுடைய நண்பராக இருந்தவர் கடலூர் இளம்வழுதி. அண்ணா இருந்த காலத்திலிருந்து கட்சியை வளர்த்தவர். அவர் இப்போது இல்லை, மறைந்துவிட்டார். ஆனாலும் அவருடைய குடும்பமே கழகக் குடும்பம். அவருடைய வீட்டிலே உள்ள பிள்ளை குட்டிகள் எல்லாம் கோபாலபுரம் வீட்டைத்தான் தங்கள் சொந்த வீடாகக் கருதுபவர்கள்.
அந்தக் கடலூர் இளம்வழுதியின் புதல்வன்தான் இள.புகழேந்தி. வழக்கறிஞரும்கூட. அவர் அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். ஆனால், கடந்த முறை அந்தத் தொகுதிக்கான வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியிலே வேறொருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருதி, புகழேந்தியை அழைத்து நிலைமையை நான் கூறியபோது அதனையேற்றுக் கொண்டு, மிகப் பொறுமையாக இந்த அய்ந்தாண்டு காலமும் அவர் கட்சிப் பணிகளை ஆற்றி வந்தார்.
கடந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டபோது, தனக்கு வாய்ப்பு தராமல் விட்டு விட்டார்களே என்று அவர் எந்தத் தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. யாரையும் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தக் கூறவில்லை. மாணவர் அணியிலே பொறுப்பேற்று ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவ இயக்கங்களை தொடங்கிட உழைத்தார்.
எனவே, இந்த அய்ந்தாண்டுகள் சட்ட மன்றத்திலே நல்ல பணி ஆற்றிய நண்பருக்கு வாய்ப்பு அளிக்க இயலாமல், கட்சிப்பணியை ஆற்றி வந்த இள.புகழேந்திக்கு வாய்ப்பு தரப்பட்டது என்றதும், இந்த அய்ந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவரின் ஆதரவாளர்கள் சிலபேர் அங்கே எதிர்ப்புகளைத் தெரிவித்ததாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் பொறுமையாக இருந்தபோதிலும், அவருடைய ஆதரவாளர்கள் என்போர், அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைகிறார்கள்.
இத்தகைய போக்குகள் நமது கட்சிக்கு ஏற்றதல்ல. மாற்று முகாம்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையெல்லாம் ஏடுகளில் கண்டு வருகிறோம். அதைப் பற்றிக்கூட செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது மற்றவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கலைப் பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடியவன் நான் அல்ல என்றுதான் பதில் அளித்திருக்கிறேன். எனவே, மற்றவர்களைப் பற்றியே நாம் நினைத்துக் கொண்டிராமல் நமது பணியினைத் தொடங்கிட வேண்டும்.
முறைப்படி கூட்டணிக் கட்சிகளோடெல்லாம் கலந்து பேசி எந்தெந்தக் கட்சிகள் எத்தனை தொகுதிகளிலே போட்டியிடுவது என்பது உறுதியாகிவிட்டது. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது பற்றியும் கூட்டணிக் கட்சிகளோடு கலந்து பேசி மணிக்கணக்கிலே விவாதித்து, அந்தத் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதன்பின்னர் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களையெல்லாம் நேர்காணலுக்கு அழைத்து, இரவும் பகலுமாக கட்சியின் தலைமை யோடு கலந்து பேசி, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். இதைத் தொடர்ந்து இன்று (19ஆம் தேதி) அன்று கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப் படவுள்ளது. அந்தத் தேர்தல் அறிக்கையினைத் தயாரிப்பதற்காக கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினர் அளித்த விவரங்களை வைத்துக்கொண்டு தேர்தல் அறிக்கை தயாராகி, அச்சுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. அதைப்பற்றிக்கூட செய்தியாளர் ஒருவர் கடந்தமுறை கழகத்தின் சார்பில் வெளி யிடப்பட்ட தேர்தல் அறிக்கையை அந்தத் தேர்தலிலேயே அதுதான் "கதாநாயகன்'' என்று வர்ணிக்கப்பட்டதே, இந்த முறை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்குமென்று கேட்டபோது, நான் சிரித்துக் கொண்டே "கதாநாயகி''யாக இருக்குமென்று சொன்னேன்.
அந்தத் தேர்தல் அறிக்கையிலே கூறப்படும் கருத்துகளையெல்லாம் வாக்காளப் பெரு மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு தொண்டர்களுக்கு இருக்கிறது. கட்சியின் சார்பில் கடந்த அய்ந்தாண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதைப் போன்ற சாதனைகளில் மீண்டும் தொடர்ந்து பெற்றிட நமது அணியினை ஆதரிக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்ள வேண்டியதும் தொண்டர்களுடைய கடமைதான். கட்சியின் பொதுச் செயலாளரும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும், தென் மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியும், கட்சியின் முன்னணியினரும், பிரச்சாரகர்களும், கட்சிக் கலைஞர்களும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபடுவது பற்றிய விவரங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன.
இதற்கு முன்பெல்லாம் நான் விடிய விடிய தேர்தல் பிரச்சாரம் செய்வேனே, வேனிலே அமர்ந்து கொஞ்சம் தயிர் சாதத்தை சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு தொகுதியாக வலம் வருவேனே, அந்த அளவிற்கு பிரச்சாரம் செய்ய எனது உடல் நிலை இடம் கொடுக்காவிட்டாலும், வராவிட்டால் தொண்டர்கள் கோபித்துக் கொள்வார்களே என்பதற்காக என்னால் முடிந்த அளவிற்கு ஆங்காங்கு வருவதற்கு முயற்சி செய்கிறேன். அதுபற்றிய விவரங்களையும் இரண்டொரு நாள்களில் தெரிவிக்கின்றேன்.
இன்று (19ஆம் தேதி) முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம் கூட இல்லை. எண்ணி 24 நாள்கள்தான் உள்ளன. அதற்குள் நமக்கு எண்ணிலடங்கா பணிகள் உள்ளன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடிதம் மூலமாக தொண்டர்களுடன் தொடர்பு கொள்வேன். மாற்றார் முகாமிலே என்ன நடக்கிறது என்றெல்லாம் பார்த்துக் கொண்டிராமல், மக்களை நேரில் சந்தித்து நாம் செய்தவற்றைச் சொல்லி, செய்யப் போவதையும் சொல்லி உண்மை உழைப்புக்கான அங்கீகாரத்தை அளிக்கச் செய்ய வேண்டும். -இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...