Wednesday, July 20, 2011

ஏமாறாதீர்கள்!

சாமியார்கள் சித்து விளையாடி, அதிசயங்களை நிகழ்த்திக் காட்டி, தாங்கள் கடவுள் அருள் பெற்றவர்கள், கடவுளிடம் நேரிடையாகப் பேசக் கூடியவர்கள் என்ற மாயையை ஏற்படுத்தி, மக்களைச் சுரண்டுவதை ஒரு கலையாக நடத்தி வருகின்றனர்.

மிகப் பெரிய தந்திரவாதியான சாயிபாபா பல அதிசய செயல்களை செய்து காட்டி மக்கள் மத்தியில் ஒரு பிரேமையை ஏற்படுத்தி வந்தார். லிங்கம் கக்குவார், கை அசைப்பில் திருநீறு கொடுப்பார் - தங்கச் சங்கிலியை வரவழைத்துக் கொடுப்பார். பக்திப் போதையில் மூழ்கிய மக்கள் இந்தத் தந்திரக் காட்சிகளை கடவுள் சக்தியால் செய்து காட்டுவதாக நம்பி, அவரிடம் சரணடைந்தனர், பொருள்களைக் கொட்டிக் கொடுத்தனர். வீட்டுக்கு வீடு அவர் படத்தை மாட்டிப் பூஜை செய்யவும் ஆரம்பித்தனர்.

அவரை எதிர்த்துப் பகுத்தறிவாளர்கள் சவால் விட்டனர். பெங்களூர் நரசிம்மையா (துணைவேந்தர்) சாயிபாபாவை சந்திக்க விரும்பினார். குறிப்பிட்ட சிலரின் முன் அதிசயங்களைச் செய்து காட்ட முடியுமா என்று சவால் விட்டார்.

உரிய பதில் இல்லை; மாறாக நாய்கள் குரைப்பதற் கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று கூறி, தனது தகுதியை வெளிப்படுத்தினார் சாயிபாபா.

பிரபல தந்திரக் கலை நிபுணர் பி.சி. சர்க்கார் சாயிபாபாவை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கடிதம் எழுதினார். பதில் இல்லை. உடனே அஸ்ஸாம் வியாபாரி என்று சொல்லிக் கொண்டு, புட்டபர்த்தி சென்று சாயிபாபாவைச் சந்தித்து, நேருக்கு நேர் சாயிபாபா செய்து காட்டிய அதே வித்தையைச் செய்துகாட்டி பாபாவைப் பதற வைத்தார்.

அதற்குப் பின்னால் படிப்படியாக இந்த மேஜிக்கு களைச் செய்வதைக் குறைத்துக் கொண்டார்.

பிரபல மனநல மருத்துவர் ஆப்ரகாம் டி. கோவூர் அவர்களும், கோவை பிரேமானந்தா அவர்களும் சாயிபாபாவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தனர்.

இப்பொழுது நித்யானந்தா என்னும் இளம் சாமியார் கிளம்பி இருக்கிறார். பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

பெங்களூர் நீதிமன்றத்தில் மன்றாடி பிணை வாங்கி வெளியே வந்த இந்த ஆசாமி தமிழ்நாட்டுக்குள் வந்து நடிகை ரஞ்சிதாவுடன் பேட்டி கொடுக்கிறார், சவால் விடுகிறார்.

பிணையில் வெளியில் வந்த ஓர் ஆசாமி வழக்கு நீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கும் பொழுது எப்படி பேட்டி கொடுக்கலாம் என்ற சர்ச்சை வெடித்துக் கிளம்பி விட்டது. பிணை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் சிறைக்கு அவர் அனுப்பப்பட்டால் ஆச்சரியப்படுவ தற்கில்லை.

இரண்டு நாள்களுக்கு முன்பு மலிவான விளம்பரம் பெறும் ஒரு ஏற்பாடு செய்தார்.

தன் பக்தர்கள், வெளிநாட்டுக்காரர்கள், பத்திரி கையாளர்களை அழைத்து ஒரு ஜால வித்தையைச் செய்வதாக அறிவித்தார். குண்டலி சக்தி மூலம் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை எல்லாம் அந்தரங்கத்தில் மிதக்க வைக்கப் போகிறேன் என்றார். மிகுந்த ஆர்வத்துடன் பொது மக்களும் அந்தக் காட்சியைக் கண்டு களிக்கக் கூடியிருந்தனர்.
அபிமான நடிகை ரஞ்சிதா உட்பட பக்தர்களை குதித்துக் குதித்து எழச் சொன்னார் அவ்வாறே தவளைகள் மாதிரி தத்தித் தத்திக் குதித்தனர்.

குறிப்பிட்ட ஆக்ஞையை செய்து பக்தர்களை அந்தரங்கத்தில் மிதக்கச் செய்ய சைகையைக் காட்டினார். அந்தோ பரிதாபம், தன் அபிமான நடிகை உட்பட யாரும் அந்தரங்கத்தில் மிதக்கவில்லை; கீழே விழுந்ததுதான் மிச்சம்!

வெளிநாட்டுக்காரர்கள், பக்தர்கள், பொது மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்! நித்யானந்தா மிகுந்த அவமானகரமான முறையில் மூக்கறுந்தது தான் மிச்சம்.

மக்களைக் கூட்டி இப்படி ஏமாற்றியதற்காகக்கூட அவர்மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கலாம் - எடுக்கவும் வேண்டும்.

சாமியார்களின் சக்தி என்பது வெறும் பூஜ்ஜியம் தான் என்பதை இதன் பிறகாவது பொது மக்கள் உணர வேண்டும். பாமரத்தனமான பக்திப் போதையி லிருந்து விடுபட வேண்டும். ஏமாற்றுக்காரர்களான, சுரண்டல் பேர் வழிகளான சாமியார்களிடம் ஏமாறக் கூடாது என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.

பக்தி வந்தால் புத்தி போய் விடும் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் உண்மை மொழி களையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...