சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் (புதிய தலைமைச் செயலகம்) ஓர் ஆலமரம் - அதன் அடியில் விநாயகர் அய்ம்பதாண்டு காலமாக இருந்து வருகிறதாம்.
இப்பொழுது அதற்குப் புதியதோர் தல புராணம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆலமரத்தின் வேரிலிருந்து இயற்கையாக அந்தப் பிள்ளையார் தோன்றியதாம். அதனால் அதற்கு இயற்கை விநாயகர் என்று பெயராம்.
இதுபோல பொய்க் கதைகள் எல்லாம் கேட்டு கேட்டுப் புளித்துப் போன சமாச்சாரமே! இங்குத் தோன்றியது இயற்கை விநாயகர் என்றால், மற்ற மற்ற இடங்களில் உள்ளது எல்லாம் செயற்கை விநாயகர் என்பதை ஒப்புக் கொள்வார்களா?
சென்னை தியாகராயர் நகரில் திடீர்ப் பிள்ளையார் என்று ஒரு கதை கட்டவில்லையா? அந்தச் சதிக்கு அன்றைய காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியார் வக்காலத்து வாங்கி சுயம்பு (தானாகத் தோன்றக் கூடியது) என்று சாதிக்க வில்லையா?
சென்னை தியாகராயர் நகரில் திடீர்ப் பிள்ளையார் என்று ஒரு கதை கட்டவில்லையா? அந்தச் சதிக்கு அன்றைய காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியார் வக்காலத்து வாங்கி சுயம்பு (தானாகத் தோன்றக் கூடியது) என்று சாதிக்க வில்லையா?
தோட்டத்தில் காய்களோ பூக்களோ வித்தியாச மாகத் தெரியும் பட்சத்தில், அதனைக் கடவுள் என்று சாதித்து அரசன் வரி வசூல் செய்யலாம்; பாழுங் கிணற்றில் பத்து தலைப்பாம்பு என்று கூறி பணம் பறிக்கலாம் என்று சொல்லிக் கொடுத்தவன் கவுடில்யன் எனும் சாணக்கியன் ஆவான்.
அந்தப் பொய்க்குச் சாவு இல்லை என்பதற்கு அடையாளம்தான் ஓமாந்தூரார் தோட்டத்தில் உள்ள இயற்கை விநாயகர் சோடனைக் கதையும்.
இப்பொழுது அதற்கு என்ன வந்தது? புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டபோது அந்த மரத் தின் கிளைகளை வெட்டி இயற்கை விநாயகருக்குரிய முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாம்.
இப்பொழுது விரிவாக்கிக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதினெட்டரை லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளதாம்.
என்ன கொடுமை இது! குந்தக் குடிசையின்றி லட்சோப லட்ச மக்கள் இன்னும் சாலை ஓரங்களில் ஒண்டிக் கிடக்கின்றனர். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது, மரத்துக்கு அடியில் உள்ள ஒரு பொம்மைக்குக் கோயில் கேட்குதாம்; அதற்கு மக்கள் வரிப் பணம் பதினெட்டரை லட்சம் ரூபாயாம். ஒரு மதச் சார்பற்ற அரசின் வேலையா இது?
அண்ணா முதல் அமைச்சரான கால கட்டத்தில் அரசு அலுவலகங்களுக்குள்ளேயோ, வளாகங்களுக் குள்ளேயோ எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார். அண்ணாவைக் கட்சியில் முன்னொட்டாக வைத்துள்ள இந்த அரசோ அரசுக்குச் சொந்தமான வளாகத்தில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து குட முழுக்கு நடத்துகிறதாம். இது சட்ட விரோதம் - அண்ணா ஏற்றுக்கொண்ட கொள்கைக்கும் விரோதமாகும்.
விநாயகனுக்கு இவ்வளவு மகத்துவம் இந்த ஆட்சியில் என்றால், மற்ற மற்ற மதக்காரர்களும் தங்கள் தங்கள் வழிபாட்டு அடையாளங்களை அங்கே உண்டாக்கினால் அதன் நிலை என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
முதல் அமைச்சருக்கோ, மற்றவர்களுக்கோ பக்தி வெள்ளம் கரை புரண்டு ஓடுமானால் அந்த உணர்வுகளை வீட்டுக்குள் உள்ள பூஜை அறைக்குள் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொள்ளட்டும்! அரசுக்குச் சொந்தமான இடத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமாக இப்படி நடந்து கொள்ளலாமா?
எனக்கொரு வீடு வேண்டும் என்று விநாயகர் கனவில் வந்து கையேந்தினாரா? ஆட்சி அமைத்து இரு மாதங்களில், ஒன்றுமே நடக்கவில்லை என்று கூட்டணிக் கட்சியினரே வெளிப்படையாகச் சொல்லும் நிலையில், ஆல மரத்தடி பிள்ளையாருக்கு அவசர அவசரமாக வீடு கட்டுவது தான் அரசின் முக்கியப் பணியா?
சமச்சீர் கல்வியைக் கிடப்பில் போடலாம் என்ற நினைப்பில் இவ்வரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து நிற்கும் இக்கால கட்டத்தில், அதனைத் திசை திருப்ப இதுமாதிரியான கோயில் திருப்பணிகளா?
பிஜேபி; ஆர்.எஸ்.எஸ்.,காரர்களைத் திருப்திப் படுத்த இத்தியாதி செயல்கள் என்றால், தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண், இதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும், கணிக்கும் என்பதை மறக்க வேண்டாம்; அரசு இந்த முயற்சியை உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
விடுதலை தலையங்கம் - 12/07/2011
No comments:
Post a Comment