கோயில்களில் பதுங்கிக் கிடக்கும் விலை உயர்ந்த பொருள்களை ஒன்றுக்கும் பயன்படாமல் வெறுமனே பாதுகாப்பதால் என்ன பயன்? அவற்றை மக்கள் நலப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாதா?
எல்லாம் வல்ல கடவுள் என்று சொல்லிக் கொண்டு, அவருக்குப் பொன்னையும், பொருளையும் கொட்டிக் கொடுப்பது முரண்பாடு அல்லவா?
பேசும் மக்கள் இரவு உணவுக்கு வழியில்லாமல் கோடிக்கணக்கில் தூங்கச் செல்லுகின்றனர் என்று அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றனவே - இந்த நிலையில் பேசாக் கடவுள்களின் கோயில்களில் குவிந்து கிடக்கும் பொக்கிஷங்களைப் பொது மக்களுக்குப் பயன்படுத்தினால் என்ன என்று கேட்பது பகுத்தறிவுக்கும், மனிதநேயத்துக்கும் உகந்ததாகும்.
மனிதன் பட்டினி கிடப்பது வறுமையில் உழலுவது அவரவர்களின் கர்ம பலன் என்று கருதும் கூறும் கொடூர மனப்பான்மை கொண்ட பிற்போக்கு வாதிகள்தான் கோயிலில் குவிந்து கிடக்கும் சொத்துக்களை அப்படியே பாதுகாக்க வேண்டும்; மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று கூறக் கூடியவர்கள்; அந்தப் பட்டியலில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் (?) ஜெயேந்திரரும் தினமணியும் கூடிக் குலவுவது ஒன்றும் ஆச்சரிய மானதல்ல.
தினமணி தலையங்கமே தீட்டித் தள்ளியுள்ளது (7.7.2011) திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் சொத்துக்கள் மன்னர் குடும்பத்துக்கு உரியதாக இப்பொழுது கூற முடியாது; அரசுக்கு உரியதுதான்; திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைத்தபோதே அதன் அனைத்து வளங்களும், செல்வங்களும் இந்திய அரசுக்குச் சொந்தமாகி விட்டன என்று ஒப்புக் கொண்டு தலையங்கம் தீட்டும் அதே தினமணிதான், இந்தச் சொத்துக்களின் அளவை வைத்து, இவற்றை அப்படியே அரசின் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று சொல்லப்படும் கருத்துகள் சிறுபிள்ளைத்தனமானவை என்று கூறுகிறது.
உண்மையைச் சொல்லப் போனால் சிறுபிள்ளைகள் பொம்மைகளை வைத்து விளையாடும் தன்மைக்கு ஒப்பானதே பாதாள அறைகளில் பதுங்கிக் கிடக்கும் நகைகளை அப்படியே கண் குளிரப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று நினைப்பதும் - கூறுவதும்.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் - கோயில் சொத்துக்களை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்தான் அதற்கு எதிராக இப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற வேகத்தில் தினமணி தலையங்கம் தீட்டியுள்ளது.
ஒரு தகவல் தெரியுமா தினமணிக்கு? இதே பத்மநாபசாமி கோயில் அறைகள் 69 ஆண்டுகளுக்கு முன்பும் திறக்கப்பட்டு, இதே போன்ற நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை சமாளிக்க சில நகைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதுதான் அந்த உண்மை.
அப்படியிருக்கும்போது கோயிலுக்குள் வெறுமனே கிடக்கும் சொத்துக்களை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது எப்படி தவறாகும்? மக்களுக்காகத் தானே அரசும் பொருளும்?
கோயில்களுக்காக இந்த நகைகள் என்று கூடக் கூற முடியாது; நகைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அரசன் தேர்ந்தெடுத்த இடம்தான் கோயில்! நகைகளைப் பாதுகாக்கவே அக்கோயிலில் பாதாள அறைகள்.
கோவில் என்று சொன்னால் அரசன் அரண்மனை யையும் குறிக்கும்தானே! இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும்பொழுது மக்களிடமிருந்து அரசன் பெற்ற பொருள்கள்தான் கோயில்களில் நகைகளாக குவிந்து கிடக்கின்றன. அவற்றை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது குற்றமல்ல - மாறாக நேர்மையான மனிதநேயச் செயலே!
No comments:
Post a Comment