Monday, July 11, 2011

மனித சமுதாயம் ஒன்றாக வேண்டுமானால்...


இங்கு திருமணத்தைப்பற்றி மாத்திரமல்லாமல் பொதுவாகவே சில பேச எண்ணியுள்ளேன். ஏனெ னில், நான் திருமணத்தைப்பற்றிப் பேசுவது திருமண சீர்திருத்தத்திற்காக அல்ல. திருமணத்திற்கு சீர்திருத்தம் என்கின்ற ஒரு முடிவான திட்டம் இல்லை. அது காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடி மாறிக் கொண்டேவரும். திருமணம் என்பதே மாறியும், இல் லாமல் போகும்படியான காலமும் வரலாம், திருமணம் என்பதாக ஒன்று 5000, 10,000 வருஷங் களுக்கு முன்பு சிறப்பாக ஆரியர் வரவு காலத்திற்கு முன்பு இந்தப்படி யாக நிபந்தனை வாழ்க்கை முறை இருந்ததா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

மேல் உலகம், மோட்சம், சூட்சமசரீரம், ஆத்மா என்கின்றதான உணர்ச்சிகள் இல்லாத காலத்திலும் தனி உடைமை, சேர்த்து வைத்தல் உரிமை ஆகியவை இல்லாத காலத்திலும், இன்றைய கூட்டுவாழ்க்கையும் கட்டுப்பாடும் இருந்தி ருக்குமா என்றும், இந்தத் தன்மைகள் அதாவது மேலோகம், பிதுர்தேவதைகள், பிதுர்லோகங்கள், திதி, திவசம் முறை ஆகியவைகள் சம்பந்தமான எண்ணங் களும் தனி உடைமை முறைகளும் அழிக்கப்பட்டுவிட்ட காலத்திலும் இன்றைய அதாவது வாழ்க்கைத்துணை முறையாவது இருக்குமா என்று பார்த்தால் இருக்காது என்றுதான் பெரிதும் தோன்றும். ஒரு சமயம் இயற்கை உணர்ச்சிக்கு, அதாவது பசிக்கு ஆகாரம் வேண்டியிருப்பது போலும், நித்தி ரைக்கு ஓய்வு நேரம் வேண்டியிருப்பது போலும், சேர்க்கை உணர்ச்சிக்குச் சிறிது நேரக் கூட்டுக்கு மாத்திரம் கூட்டு வாழ்க்கைக்கு யாராவது தேவை இருக்கும்படியான தன்மை ஏற்படலாம். பிள்ளை வேண்டும் என்கின்ற ஆசைகூட இன்றுபோல் இல்லாமல் போகலாம். பிள்ளை பெறும் முறையும்கூட மாற்றமடையலாம். இவைகளும் இவை போன்றவை களும் இங்கு, இன்று, இன்றைய அனுபவங்களைப் பார்த்து முடிவு செய்யக்கூடியவைகள் அல்ல. ஆதலால்தான் நான் திருமணச் சீர்திருத்தத்தை மாத்திரமே குறிவைத்து நாங்கள் இந்தத் துறையில் வேலை செய்யவில்லை என்று சொன்னேன். மற்றென்னவென்றால், நம் சமுதாய வாழ்வில் நாம் ஒரு பெரிய புரட்சியைச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம் - அப்புரட்சிக்கு மக்களைத் திருப்பவே சிறு சிறு மனமாறுதலாவது முதலில் ஏற்படவேண்டும் என்பதற்கு ஆக திருமணத்திற்கு அது வேண்டிய தில்லை, இது வேண்டியதில்லை. உன் மானத்தைப் பற்றி எண்ணிப் பார், உன் பகுத்தறிவை உபயோகித்துப் பார் என்றெல்லாம் சொல்கிறோம். இதில் மக்கள் தங்கள் அறிவைச் செலுத்தி மானத்தைக் கவனித்து மனமாற்றம் கொண்டார்களானால் அதை மற்ற அதாவது பெரும் புரட்சிக்குப் பயன்படுத்தலாம் என்கின்ற ஆசையே யாகும். ஆதலால், எங்கள் திருமண சீர்திருத்த லட்சியம் என்பது திருமணத் திற்கே அல்லவென்றும், இன்று நடக்கும் மாறுதலே தான் முடிந்த முடிவு அல்லவென்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். புரட்சியின் அவசியம் நாம் செய்ய வேண்டிய புரட்சி என்ன என்பது நீங்கள் அடுத்தாற்போல் சிந்திக்க வேண்டும். இங்கு கூடியுள்ளவர்களில் பெரும்பான்மை மக்களா கிய உங்களையே எடுத்துக்கொண்டு பேசுகிறேன். நீங்கள் யார் ?

சமுதாயத்தில் கீழான ஜாதி (அதாவது பறையன், சக்கிலி முதலிய தீண்டக்கூடத்தகாத) வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

உங்கள் வாழ்வு - சராசரி மனிதத் தன்மைக்கும் கீழான ஈனவாழ்வு, ஏழ்மை ஜீவிதம். உங்கள் உழைப்பு சரீர (உடல்) உழைப்பு.

இவை மூன்றும் இழிவுக்கும் பரிதாபத்துக்கும் மானக்கேட்டிற்கும் உரிய தன்மையாகும். 6-அறிவுள்ள மனிதன் இப்படி இருக்கக் காரணமேன்? நமது பஞ்சேந் திரியங்களில் இருக்கும் குறைபாடு என்ன? மற்றவர்கள் இருக்கும் மேன்மையான நிலைக்கு என்ன காரணம்? அவர்கள் பஞ்சேந்திரியம் நம்முடையதைவிட எப்படி மேம்பட்டது?

இந்தச் சிந்தனைதான் நமக்கு இப்போது வேண்டிய தாகும். ஏன் தாழ்மையும் ஏழ்மையும்? மனிதன் ஏன் சமுதாயத்தில் தாழ்மையாய் இருக் கிறான் என்றால் மதத்தினால் இழி ஜாதியாய் இழி பிறப்பாய் இருக்கிறான்; அதாவது ஜாதி என்றால் பிறப்பு என்றுதான் அருத்தம் (ஜாதி என்பதெல்லாம் பிறப்பு என்பதைப் பொறுத்தேயாகும்). பிறப்பினால் ஜாதிக்கு, உயர்வு தாழ்வுக்கு ஆதாரம் மதமேயாகும். எந்த மதம் என்று கேட்பீர்கள். ஜாதியினால் (பிறப்பால்) கீழ் ஜாதியாய் இருக்கிற மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற மதம் எதுவோ அந்த மதம்தான். இன்று நீங்கள் கீழ்ஜாதியாய் இருக் கிறீர்கள் என்றால் எதனால்? நீங்கள் எற்றுக் கொண்டி ருக்கிற மதமாகிய இந்துமதம் என்பதுதான் உங்கள் இழிவுக்கு ஆதாரமாய் இருக்கிறது. எனவே இந்துமதம் ஒழியாமல், இந்து மதம் ஒழிக்கப்படக்கூடிய மதம் அல்ல, அது மிகவும் பலமும், பாதுகாப்பும் பெற்ற மதம் என்றால், அம்மதத்தைவிட்டு நீங்கள் வெளிப்பட்டால் அல்லாமல் உங்கள் இழிவு நீங்காது. மத உணர்ச்சியோடு நீங்கள் எவ் வளவுதான் பாடுபட்டாலும் எத்தனை நாளைக்குப் பாடுபட் டாலும் உங்கள் இழிவு நீங்கவே நீங்காது. இதுவரை வெகு பேர் பாடுபட்டு படுதோல்வி அடைந்து இருக்கிறார்கள். இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை எமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய், ரிஷியாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் பறையனாய்ப் பிறந்து பிராமணனாய்ச் செத்தவரோ, பிராமணனாய்ப் பிறந்து பறையனாய்ச் செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய்ச் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய்ச் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.

ஆதலால்தான் நான் மனிதபேதம் ஒழியவேண்டு மானால் மதம் ஒழிய வேண்டும், என்கின்றேன்? அன்றியும் மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதன் பிறப்பு பேதம் புதைக்கப்படுகின்றது. அதுபோலவேதான், பொருளாதார ஏழ்மை, செல்வம் பேதம் ஒழிய வேண்டுமானால் அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்றுமிடமும், காப்பு இடமும் ஒழிக்கப்படவேண்டும். ஏழ்மைக்கும் செல்வத்திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது. அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக்கொண்டு அல்லது அக்கடவுள் ஆணைக்கு அடங்கினவனாய் இருந்துகொண்டு கடவுள் தன்மையை - செயலை - கட்டளையை நீ எப்படி மீற - சமாளிக்க - தாண்ட முடியும் என்று சிந்தித்துப் பார். அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கு மதம் ஒழிக்கப்படவேண்டியது எப்படி அவசியமோ அதுபோல் பொருளாதார சமத்துவத்திற்கும், அதாவது பொருளாதார சமத்துவம் வேண்டுமானால் பொருளாதார பேதத்துக்கும், பேதத்தன்மை காப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்ற கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இது சமுதாய பொருளாதார சமத்துவக்காரருக்கு A,B,C,D படிப்பாகும். இதை எந்தச் சமுதாய சமத்துவ வாதியாவது பொருளாதார சமத்துவவாதியாவது பேசு கிறார்களா, சிந்திக்கிறார்களா என்று பாருங்கள். ஏன் சிந்திப்பதில்லை என்றால், இந்தத் துறையில் இன்று பாடு படுகிறவர்களாய்க் காண்பவர்கள் பெரிதும் பொருளா தாரத்திலும் சமுதாயத்திலும் நல்ல நிலையில், நல்வாழ்க் கையில் இருக்கும் ஆண்களேயாகும். எலிகள் நலத்துக்குப் பூனைகள் பாடுபடுவது போல் சமுதாயத்தில் உயர் நிலையில் இருக்கும் பார்ப்பனர்களும், பொருளா தாரத்தில் சவுக்கியமாக இருக்கும் பிள்ளைகளும் அவர்கள் வாழ்வு நலத்திற்கும் சுகத்திற்கும் உங்கள் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வாழ்கிறார்கள்.

கடவுளையும், மதத்தையும் ஒழிக்கத் தயாரா யில்லாதவனை உங்கள் கூட்டத்திற்குள் விடாதீர்கள். உங்கள் இளிச்சவாய்த்தனத்தினால் பொருளாதார சமுதாய பெயர்களைச் சொல்லிக்கொண்டு உங்களை ஏய்த்து வாழ்க்கை நடத்துகிறார்கள். கடவுள் ஓழிக! திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்: உலகத்தில், இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகி யற்றி யான் - என்று

இதற்கு என்ன அருத்தம்? உலகத்திலே மனிதன் இரந்து (மற்றவர்களின் உதவியால் மற்றவர்களைக் கெஞ்சி) வாழவேண்டிய நிலை இருக்குமானால் கடவுள் ஒழியவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், ஒரு பார்ப்பனர் (உங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைத்த பாரதி என்கிறவர்) சொன்னதைக் கவனியுங்கள்: தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்துவிடுவோம் என்று பாடி இருக்கிறார். இதை A,B,C,D கூட அறியாத பொருளாதார சமதர்மவாதிகள் தங்கள் லட்சியச் சொல்லாக வைத்துக்கொண்டு பாரதி பொதுவுடைமைவாதி என்றும், தாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லித் திரிந்து கொண்டு, உங்களை, ஏமாற்றி உங்கள் முயற்சியையும் தப்பான வழியில் திருத்தி நல்ல தேவையான கொள்கையை பாழாக்குகிறார்கள். இந்தக் கூட்டம் காந்தியாரைவிட, காங்கிரசாரைவிட, பிர்லா கூட்டத்தாரைவிட, தேசிய பார்ப்பனர்களைவிட பொருளாதார சமுதாய சமத்துவத் துக்கு விரோதிகளாவார்கள்.

மற்றொரு கூட்டம் புராணக் கதைகளைச் சொல்லி இராமாயணத்தில், பெரிய புராணத் தில், நடராஜ தாண்டவத்தில் சமதர்மம் பொதுஉடைமை இருக்கிறது என்ற கூறி உங்களை ஏமாற்றி புராணப் பிரசாரம் செய்கிறார்கள். இவர்கள் யார் தெரியுமா? இவர்கள் செல்வவான்களுடையவும், மேல்ஜாதிக்காரர் களுடையவும், மதத்தலைவர்களுடையவும் லைசென்சு பெற்ற நிபந்தனை அற்ற அடிமைக் கூலிகளாவார்கள். இவர்களை ஒழியுங்கள் முதலில்.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் உலகத்தை எதற்கு ஆக அழிப்பது? எப்படி அழிக்க முடியும்? உலகத்தில் உணவு இல்லையா? உலகத்தை அழிப்பது என்றால் துறவி ஆகிவிடுவதா? உலகம் அழிக்கப்படுவது என்றால் தானும் அழிந்து தானே ஆக வேண்டும்? எனவே இதில் பித்தலாட் டமோ, முட்டாள்தனமோ இல்லாமல் அறிவுடை மையோ, நாணயமோ இருக்கிறதா?

நாணயமோ, அறிவோ இருந்திருந்தால் வள்ளுவர் சொன்னது போல், தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் (இரந்தோ மானத்தைவிட்டோ பிழைக்கவேண்டு மானால்) கடவுளை அழித்திடுவோம்என்றல்லவா பாடி இருக்கவேண்டும்? நாஸ்திகன் என்று பிறர் சொன்னால்தான் சொல்லிவிட்டுப் போகட்டுமே! திருவள்ளுவர் நாஸ்திகனானால் இவரும் நாஸ்தி கனாகட்டுமே. நாஸ்திகத்திற்குப் பயந்த மனிதன் மற்ற எந்தக் காரியத்திற்குப் பயன்படமுடியும்? தோழர்களே, உங்களுக்கு அதாவது ஜாதியில் கீழ்ஜாதி, வாழ்வில் கஷ்ட ஜீவனம், அதோடு நித்திய தரித்திரம் (ஏழ்மை), உங்களுக்கு மதம் என்ன? கடவுள் என்ன? மதம், கடவுள் எல்லாம் வயிறு நிறைந்த வனுக்கும், பித்தலாட்டக்காரனுக்கும், பேராசைச் சோம்பேறிக்குமல்லவா வேண்டும்? உங்களுக்குக் கண்டிப்பாக இப்படிப்பட்ட மதமும், கடவுளும் வேண்டவே வேண்டாம். அப்பொழுதுதான் அன்பு மதமும், சமத்துவக் கடவுளும் இருந்தால் தோன்றும். அது இன்று வேறு யாருக்கு இருந்தாலும் உங்களைப் பொறுத்தவரை இல்லை. இல்லாததைக் கட்டிக்கொண்டு அழுது ஈனநிலைக்கு ஆளாகாதீர்கள்.

எல்லாம் கடவுள்செயல், எங்கும் கடவுள் ஆணை நடக்கிறது என்பவர்களிடத்தில் நமக்குப் பேச்சில்லை. ஆனால் அதையும் சொல்லிக்கொண்டு உங்களையும் ஈடேற்றுவதாக வருகிறார்களே, அந்தப் புரட்டர் களுக்கு ஏமாந்து விடாதீர்கள் என்பதற்கு ஆகத்தான் இதைச் சொல்லுகிறேன். ஆகவே, உங்களுடைய லட்சியச் சொல்லாக இதைக் கொள்ளுங்கள். என்னவென்றால், மனித சமுதாயம் ஒன்றாக வேண்டுமானால், மதம் ஒழிய வேண்டும்! பொருளாதாரம் ஒன்றாக வேண்டு மானால், கடவுள் ஒழிய வேண்டும்!

(04.03.1945ஆம் தேதி காலை 9 மணிக்குச் சென்னை பெரம்பூர் சிறுவள்ளூர்புரம் வீதியில் பெரம்பூர் ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் முக்கிய அங்கத்தினரான தோழர் எஸ்.வி.கணேசனுக்கும், தோழர் கே.டி.பி. செண்பகவல்லியம்மைக்கும் நிகழ்ந்த திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)

குடிஅரசு - சொற்பொழிவு - 10-03-1945

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...