Saturday, July 27, 2019

பள்ளிகளில் ஜாதி கொடுமையா?

புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரியிடம்    ஒரு புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா, வாழைக்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியைகள்  ஜாதி ரீதியாக பள்ளிக் குழந்தைகள் மீது தொடர்ந்து தீண்டாமைக் கொடுமைகளை செய்து வருவதாகவும், பள்ளிக் குழந்தைகளுக்கு ஜாதி ரீதியான பாகுபாடு பார்த்து தாழ்த்தப்பட்ட குழந்தைகளை பள்ளியின் கழிப்பறையை ஆசிரியர்கள்  தொடர்ந்து சுத்தம் செய்ய வைப்பதாகவும், பள்ளித் தலைமையாசிரியர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த  குழந்தைகளை ஜாதி ரீதியாக பிரித்து கழிப்பறையில் அடைப்பை சரிபடுத்தச் செய்தும்,  மனித மலத்தை அகற்ற செய்தும்  கொடுமையை தொடர்ந்து செய்து வருவதாகவும், பள்ளிக் குழந்தைகளுக்கு அடையாள அட்டையில் ஊரில் ஜாதிஅடிப்படையில் தெருக்களின் பெயர்கள் இல்லாத நிலையில் முகவரியில் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளதாகவும், பாடம் நடத்தும் போதெல்லாம் இந்த  குழந்தைகளை பார்த்து 'படிப்பதற்கு லாயக்கு இல்லாத நீங்கள் எல்லாம் கக்கூஸ் கழுவ தான் லாயக்கு' என ஏளனமாகப் பேசி வருவதாகவும் பரபரப்புப் புகாரை மாவட்ட கல்வி அதிகாரியிடம்  15க்கும் மேற்பட்டவர்கள்  புகார் மனு வழங்கியுள்ளனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட முதன்மை கல்வி அலுவலர் இதுபோன்ற செயலில் ஆசிரியர்கள் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனடியாக அவர்களை பணியிடை நீக்கம் செய்வது தவிர வேறு வழி இல்லை என்றும், இந்த புகார்பற்றி  உடனடியாக  விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகளை துறைரீதியாக வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், எனவே இந்த புகார் மீது தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது மிக மோசமான நிலையாகும். பண்பாட்டையும், சமத்துவத்தையும் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, ஜாதி வெறியுடன் நடந்து கொள்வது வெட்கக் கேடானதாகும்.
தென் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் ஜாதி அடிப்படையில் வண்ண வண்ணமான கயிறுகளைக் கட்டி வருவதாகத் தகவல் வந்தது. அது குறித்து திராவிடர் கழகம் சார்பில் கல்வித்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதப்பட்டது. அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைப்பற்றி தகவல்கள் என்ன என்றே தெரியாத நிலையில், இப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலியே பயிரை மேய்வது போல ஆசிரியர்களே ஜாதி வெறியோடு நடந்து கொண்டு இருப்பது சகிக்கப்படவே முடியாததாகும்.
இன்னொரு பக்கத்தில் ஜாதி ஆணவக் கொலைகள்! தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? பா.ஜ.க.வுக்குத் தொண்டூழியம் செய்வது தவிர வேறு அரசு ஆற்ற வேண்டிய பணிகள் மறந்தே போயிற்றா? ஜாதி கொடுமைகளுக்கு முடிவு கட்டா விட்டால், அதன் விபரீதம் இந்த ஆட்சிக்கே ஆபத்தாக முடியுமே, எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...