Saturday, July 13, 2019

தமிழ்நாட்டில் அஞ்சல் அலுவலகங்களில் இந்திக்காரர்களைத் திணிக்கும் சதி

அஞ்சல் துறைப் பணிக்கான  தேர்வை தமிழில் எழுதுவதைத் திடீரென்று தடை செய்தது ஏன்?

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தவேண்டும்
நாளைய தினம் அஞ்சல் துறைப் பணிகளுக்குத் தேர்வு நடைபெறும் நிலையில், திடீரென்று தமிழில் தேர்வு எழுத முடியாது - இந்தி, இங்கிலீஷில்தான் எழுதவேண்டும் என்று அறிவித்திருப்ப தன் பின்னணியில் சதி இருக்கிறது. தமிழ்நாடு அஞ்சல் அலுவலகங்களில் தமிழர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்து, இந்திக்காரர்களைத் திணிக் கும் இந்த சதியை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங் களில் இருக்கக்கூடிய அஞ்சல்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் மத்திய தொலைத்தொடர்புத் துறை நிரப்பி வருகிறது. இந்நிலையில் அஞ்சலகப் பணியிடங்களில் சேருவதற்காக தேர்வு எழுதும் முறையில் தற்போது புதிய மாற்றங்களை மத்திய தொலைத்தொடர்புத் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறக்கூடிய தேர்வில் மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முதன்மைப் பணியிடங்களை நிரப்பு வதற்கான முதல் தாள் தேர்வை இதற்கு முன்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநில மொழிகளில் எழுதலாம். இந்நிலை யில் இந்தத் தேர்வு இனி முழுவதும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் தாள் தேர்வானது ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொ ழிகளில் நடைபெறும் என்றும், உடனடியாக இப்புதிய தேர்வு முறை அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-2017 தேர்வில் நடந்த மோசடி

2016-2017 வரை இந்தி, இங்கிலீஷ் மற்றும் 15 மாநில மொழிகளில் அஞ்சல் துறையால் நடத்தப்பட்ட தேர்வுகளை எழுதலாம் என்ற நிலை இருந்தது.
நாளை (14 ஆம் தேதி) அஞ்சல் துறைப் பணிகளுக்கான தேர்வு  நடைபெறும் நிலையில், திடீரென்று இந்தி, இங்கிலீஷ் மொழிகளில் மட்டும் தேர்வு எழுதலாம் என்று அஞ்சல் துறை அறிவித்திருப்பது - கண்டிக்கத்தக்கது. தாய்மொழியில் தேர்வு எழுதத் தயாராக இருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடநாட்டவர்களைத் திணிப்பதா?

2016-2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத மகாராட்டிரா, அரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கணத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றனர் என்ற தகவல், தேர்வில் மிகப் பெரிய மோசடி நடந்திருக்கிறது என்ற கருத்தை உருவாக்கியது.
தமிழ்த் தெரியாதவர்கள் தமிழ்நாட்டு அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றுவது எப்படி சாத்தியம் என்றெல்லாம் பிரச்சினை எழுந்தது. அதுகுறித்து சி.பி.அய். விசாரணை ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
தவறு நடந்திருந்தால், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும். அது மாதிரியான தவறுகள் மறுபடியும் நடக்காத வண்ணம் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் - மாறாக மாநில மொழிகளில் தேர்வு எழுதுவதையே தடை செய்வது எப்படிப் பரிகாரமாகும்?

தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்

மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் கதையாக இருக்கிறதே!  எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும் சமுகநீதியை ஒழிப்பதுதான் இவர்களின் வேலையா! ஏதோ ஒரு காரணம் கிடைத்துவிட்டது; அதை வைத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள் தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் பணியாற்றுவதைத் தடை செய்து, இந்தி பேசுபவர்களைக் கொண்டு வந்து திணிக்கும் சூழ்ச்சிதான் இதன் பின்னணியில் இருக்கிறது.
ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்து, குவிந்துகொண்டே இருப்பது போதாது என்று, அரசு அலுவல கங்களில் தமிழ்நாட்டவர்களை வெளியில் தள்ளி, வடநாட்டுக்காரர்களைப் புகுத்தும் சதியைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். கொந்தளிப்புப் பெரும் போராட்டமாக வெடித்துவிடும் என்று எச்சரிக்கிறோம்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு...

நாளை தேர்வு நடக்கும் ஒரு நிலையில், திடீரென்று தமிழில் எழுதக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழிலும் எழுத வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்; உடனடி யாக முடிய வாய்ப்பு இல்லை என்றால், தேர்வைத் தள்ளிப் போடவேண்டும்; நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும் - அவசரம், அவசியம்!

கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
13.7.2019

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...