Wednesday, July 17, 2019

இன்னும் ஏன் 124-ஏ?

வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப் பட்ட தேசத்துரோகச் சட்டம் 124-ஏ வெள்ளையன் விடை பெற்றுச் சென்றதற்குப் பிறகும் கோலோச்சுகிறது என்றால், இதுதான் சுதந்திரமா என்ற கேள்வி தானாகவே எழத்தான் செய்யும்.
1933ஆவது ஆண்டு 29 நாளிட்ட "குடிஅரசு" இதழில் "இந்த ஆட்சி  முறை ஏன் ஒழிய வேண்டும்?" என்று எழுதியதற்காக தந்தை பெரியார் மீது பாய்ந்த சட்டம்தான் இந்த 124ஏ. சுதந்திர இந்தியாவில் இன்னும் மேலும் கால் முளைத்து நர்த்தனம் ஆடுகிறது என்றால் இது அவமானம் அல்லவா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏதோ அவசர கால ஆட்சி போல  மனித உரிமைகள், பேச்சுரிமைகள் கடுமை யாக ஒடுக்கப்படுகின்றன.
பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி பெறுவதில் கூட பல தடங்கல்கள் - சங்கடங்கள். கூட்டத்தில் என்னென்ன வெல்லாம் பேசலாம் - பேசக் கூடாது என்பதற்குக் கூட ஒரு பட்டியலை வைத்துள்ளது காவல்துறை.
நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் - அதன் கோட் பாடுகள்  - கொள்கைகளை யாரும்  கற்றுத் தர வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் காவல் துறையினரிடம் "இப்படி எல்லாம் பேசமாட்டோம்" என்று எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது எந்தவகையில் சரி? அத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். சில இடங்களில் மத்திய - மாநில அரசுகளைப் பற்றிப் பேசக்கூடாது என்று சொல்லுகிற அளவுக்கு அவர்களின் எல்லை மீறுகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் உரிமைகள் எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாதா? காவல் துறையிடம் அனுமதிக் கேட்பது, ஒலிப் பெருக்கி அமைத்துக் கொள்ளத் தானே தவிர, கூட்டம் நடத்துவதற்கல்ல. சிறிது சிறிதாக அது வளர்ந்து பொதுக் கூட்டங்களை நடத்துவது காவல்துறையின் கைகளில் இருக்கிறது என்கிற அளவுக்குப் போய் விட்டது.
பெரிய அரசியல் கட்சிகள் என்றால் அதற்கொரு அணுகுமுறை. சிறிய அமைப்புகள், கட்சிகள் கூட்டம் நடத்துவது என்றால் அவ்வளவு எளிதல்ல, நீதிமன்றத்துக்குச் சென்றுதான் அனுமதி பெற வேண்டும் என்றால் எல்லோராலும் முடியக்கூடிய காரியமா?
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்தும் பொதுக்கூட்டம் நடத்திடக் கேட்டவர்களுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட்டை மூடக்கோரி துண்டறிக்கை கொடுத் தவர்கள் கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கருநாடக மாநிலம் கோலாரில் அணுக் கழிவைப் புதைக்கக் கூடாது என்று காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி, அதைத் தடுக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில்  என்ன நிலைமை? கூடங்குளத்தில் அணுக்கழிவைப் புதைக்காதே என்று கருத்துச் சொல் வதற்குக்கூடத் தடை.
அய்ட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று ஒரு முதலமைச்சரால் புதுவையில் மார்தட்டி சொல்ல முடியும். அதே கருத்தை வலியுறுத்தி துண்டறிக்கை கொடுத்த மாணவர்களுக்குத் தமிழ்நாட்டில் சிறையா? குஜராத்திலும், மகாராட்டிரத்திலும் புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலங்களைக் கொடுக்க முடியாது என்று விவசாயிகள் போராட முடிகிறது. அதன் காரணமாக அந்தத் திட்டம் கைவிடவும்படுகிறது.
அந்த மாநிலங்களில் பிஜேபி ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலங்களில் மக்கள் குரலுக்குச் செவி சாய்க்கிறது. அதே பிஜேபி மத்திய அரசு மற்ற மாநிலங்களில் எப்படி நடந்து கொள்கிறது என்பது முக்கியம்.
தமிழ்நாட்டில், சேலத்தில் எட்டுவழிச் சாலையை எதிர்த்துப் போராடினாலும் பயனில்லை.
சில ஊர்களில் ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாகக் காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர். எதிர்க் கட்சிகள், சமுக அமைப்புகள் சுவர் எழுத்து எழுதினால் காவல்துறையினர் தடுக்கின்றனர். எழுதியவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டு கின்றனர்.
பொது இடங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் கட்சிக் கொடிகளையும், அதனையொட்டிய கல்வெட்டுகளையும் இடிக்கிறார்கள். அதே நேரத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள கோயில்கள் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.
நடைபாதைக் கோயில்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் ஆணை இருக்கிறது. (G.O. MS No. 1052 நாள் 28.5.1973) 2006 மே 4ஆம் நாள் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகவே தீர்ப்புக் கூறியது. பொது இடத்தில் கட்டப்பட்ட கோயில் அகற்றப்படாவிட்டால் அந்த இடத்திற்கு தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்ற ஆணை.
உச்சநீதிமன்ற ஆணையையே துச்சமாக மதிக்கும் அதிகாரிகள் குறிப்பாக காவல்துறையினர் அடிப்படைப் பேச்சுரிமை, கருத்துரிமைக்குக் குறுக்காக நிற்கின்றனர் - இதில் மாற்றம் தேவை என்று வலியுறுத்துகிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...