Monday, April 15, 2019

எட்டு வழிச்சாலை - 'நீட்', இரண்டிலும் தமிழகத்துக்கு எதிரான பி.ஜே.பி. - அ.தி.மு.க. அணியைத் தோற்கடிப்பீர்! திண்டிவனத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்


‘நீட்', எட்டுவழிச் சாலை என்ற தமிழ்நாட்டின் இரு முக்கிய பிரச்சினைகளிலும் தமிழர்களுக்கு எதிரான கருத்தைக் கொண்ட பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிப்பீர் என்று கேட்டுக்கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (15.4.2019) திண்டிவனத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தியா ளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று

தி.மு.க. - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
தெளிவாக இரண்டு அணிகளும் இரண்டு கொள்கைத் திட்டங்களை அறிவித்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், நம்முடைய பிள்ளைகள், கிராமத்துப் பிள்ளைகள் மருத்துவக் கல்லூரிக்கே போக முடியாத அளவிற்கு மிகப்பெரிய அளவிற்குத் தடையாக நீட் தேர்வு இருக்கிறது. அனிதாக்கள், சுபசிறீக்கள் போன்ற வர்களின் தற்கொலைகள் நடந்திருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், நீட் தேர்வை அறவே ரத்து செய்வோம் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை. அதையே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் மிகத் தெளிவாகவே பிரகடனப்படுத்தி விட்டார். ஆட்சியை அமைக்கக்கூடிய சூழ்நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு இது தெளிவான திட்டம்.
தமிழக ஆட்சியாளர்களின்

முகமூடியைக் கிழித்த பியூஸ் கோயல்!
அதேநேரத்தில், இப்பிரச்சினை குறித்து மோடியிடம் கேட்டதற்கு, அவர் தெளிவாக, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.
பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக தமிழ்நாட்டுத் தேர்தல் பொறுப்பாளராக இருக்கக்கூடிய பியூஸ் கோயல் அவர்களும் மிகத் தெளிவாகவே, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாதது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அ.தி.மு.க.காரர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று எங்களிடம் கேட்கவேயில்லை; தமிழில் நீட் தேர்வை நடத்தவேண்டும் என்றுதான் கேட்டார்கள் என்று சொல்லி, இவர்களுடைய முகமூடியை கழற்றிக் காட்டிவிட்டார்.
அதோடு, தமிழகத்தில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைப்பற்றி அவர் சொல்லாதது, அவர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்கள் என்பதைத் தெளிவாகக் காட்டக்கூடிய நிலை இருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் தரப்பினரை வைத்துக்கொண்டே இந்தத் தகவலை பியூஸ் கோயல் வெட்ட வெளிச்சமாக்கினார்.
எட்டுவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுமாம் - மத்திய அமைச்சரின் உறுதிமொழி!
மேலும், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. நிறுவனர் இராமதாசு அவர்களை வைத்துக்கொண்டே எட்டுவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி  சொல்லியிருக்கிறார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி அவர் இப்படி சொல்லியிருக்கிறார் என்றால், வாக்காளர்களே இவர்களின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வீர்!
எனவே, வாக்காளர்கள் இப்பொழுது சிந்திக்கவேண் டியது என்னவென்றால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற அத்துணை வாக்காளர்களும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டுமா? வேண்டாமா? என்பதைத்தான்.
நீட் தேர்வு நம்முடைய மாணவர்களை எந்த அளவிற்கு உயிரைப் பலிவாங்கியிருக்கிறது!
எந்த அளவிற்கு அது மருத்துவக் கல்லூரிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள் உள்ளே நுழைய முடியாத - கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கக்கூடிய பயிற்சி நிலையங்கள் பெயராலே இருக்கிறது என்பது எல்லோருக்கும் மிகத் தெளிவாகத் தெரியும்.
மத்திய - மாநில அரசுகளை

மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்!
இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து, கடைசியாக தஞ்சையில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கின்றோம். ஒன்றைச் சொல்லுகிறோம், எல்லா இடங்களிலும் மத்திய - மாநில அரசுகளையும் மே 23 ஆம் தேதிக்குப் பிறகு, மக்கள் - வாக்காளர்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் மட்டுமல்ல, வடபுலத்திலும் காஷ்மீர்முதல் இதே அலை அடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்.
தேர்தல் ஆணையம் மோடி அரசினுடைய ஓர் அங்கம்போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது!
பணத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டு, பண விநியோகம் செய்கிறார்கள். அதை கண்டும், காணாததுபோல தேர்தல் ஆணையமே, ஏதோ அ.தி.மு.க. - மோடி அரசினுடைய ஓர் அங்கம்போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
என்னதான் இவர்கள் பணம் கொடுத்தாலும், மக்களுடைய வெறுப்புணர்ச்சி அதையும் தாண்டி, உதயசூரியன் சின்னத்திலும், கை சின்னத்திலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சின்னத்திலும் வாக்களிப்பது உறுதி.
மக்கள் இந்த முறை ஏமாறுவதாக இல்லை
18 ஆம் தேதி தீர்ப்பு நாள் - அது தெளிவாக இருக்கும். மக்கள் இந்த முறை ஏமாறுவதாக இல்லை. எதைக் கண்டும் அவர்கள் ஏமாற மாட்டார்கள்.
வெற்றி, மாற்றம் என்பது அடுத்தபடியாக மத்தியில் ராகுல் காந்தி அவர்களுடைய தலைமையில் ஓர் ஆட்சி. மாநிலத்தில், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் ஆட்சி.
22 இடங்களில் நடைபெறவிருக்கக்கூடிய சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் உதயசூரியன் வெற்றி பெறும்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...