சென்னையில் திமுக சார்பில் நேற்று மாலை நடைபெற்ற முரசொலி பவள விழா வெகு நேர்த்தியுடன் நடத்தப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 10 அன்று சென்னை
தேனாம்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடைபெறவிருந்த இந்த விழா
கடுமழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.
ஒத்தி வைக்கப்பட்ட ஒரு விழா இவ்வளவு சிறப்பாக நேர்த்தியாக, எழில் குலுங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதே!
மேனாள் சென்னை மேயரும், தென் சென்னை
மாவட்ட திமுக செயலாளருமான, மா.சு. என்று அழைக்கப்படும் மா.சுப்பிரமணியம்
அவர்கள் தலைமையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர்களும்
திறன்பட இந்தச் சிறப்பான பணியைச் செய்து முடித்துள்ளனர். அவர்களைத் திமுக
செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பாராட்டியது வெகு பொருத்தமே!
பல்வேறு அரசியல் கட்சிகளைச்
சேர்ந்தவர்கள், சமூக அமைப்பினர் 27 பேர் உரையாற்றினர். நாலரை மணிநேரம் ஒரு
பொதுக்கூட்டம் நடைபெறுவது என்பது அசாதாரணமானது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மானமிகு வைகோ
அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது கூடுதல் சிறப்பாகும். அவர் தம்
உரையும் நெகிழ்ச்சி மிக்கதாக - குற்றால அருவியாகக் கொட்டியது.
தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர்,
ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், வைகோ அவர்களின் வருகையை வரவேற்று, எது
நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்த வேண்டும் என்றும், எது நம்மைப்
பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்த வேண்டும் என்றும் தந்தை பெரியார் கூறிய
கருத்தினை பொருத்தமாகச் சுட்டிக்காட்டினார். அவரின் அந்தக் கருத்து,
வெள்ளம் போல திரண்டிருந்த மக்கள் மத்தியில் பெரும் ஆரவார அலையைத் தட்டி
எழுப்பியது.
அதுவும் தாய்க் கழகத்தின் சார்பில் இதனைச்
சுட்டிக்காட்ட தமக்குக் கடமை இருக்கிறது - உரிமையும் இருக்கிறது என்று
அழுத்தமாகச் சொன்ன போது அந்த வார்த்தைக்குக் கூடுதல் முக்கியத்துவமும்,
மதிப்பும் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
சமூக நீதிக்கு எதிரான -
மதச்சார்பின்மைக்கு விரோதமான ஓர் ஆட்சி மத்தியில் அமைந்திருக்கும்
நிலையில், மதச்சார்பற்ற சக்திகளும், சமூக நீதி சக்திகளும் ஒருங்கிணைவது
அவசியமான ஒன்றுதானே! விழாவில் பேசிய பல்வேறு தலைவர்களின் உரையில்
இந்தக்கருத்து முக்கியமாக மய்யம் கொண்டிருந்ததை அறிய முடிந்தது.
கழகமில்லாத ஆட்சியை தமிழ்நாட்டில்
ஏற்படுத்துவோம் என்று காற்றில் சிலம்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் பிஜேபி -
சங்பரிவார்க் கும்பலுக்கும் நேற்று திமுக நடத்திய விழா சரியான மரண அடியைக்
கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.
அரியலூர் அனிதா ‘நீட்’ தேர்வு காரணமாக,
தமது மருத்துவக் கனவு சிதைந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதானது -
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட மிகப் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தாக்கம் என்பது ‘நீட்’ என்னும்
மாநிலக் கல்விக்கு சற்றுமே தொடர்பில்லாத, பொருத்தமில்லாத, நுழைவுத் தேர்வை
திணித்ததில் உயர் ஜாதி ஆதிக்கச் சக்திகளின் கை இருக்கிறது என்ற கருத்து
பெரும்பாலும் மக்கள் மத்தியில் உறுதியாகி விட்டது.
பிஜேபி என்னும் உயர்ஜாதி வர்க்கத்தின்
அமைப்பும், உயர் ஜாதியினர் கரங்களில் வகையாகச் சிக்கியிருக்கும் ஊடகங்களும்
நீட்டுக்கு ஆதரவாக உரத்த முறையில் முரட்டுத்தனமாக ஆதரித்து கூச்சல்
போடுவதிலிருந்தே, நீட் அவர்களுக்குச்சாதகமாகவே இருக்கும் ஒன்று என்பது
தெளிவாகப் புரிந்து விட்டது.
அரியலூர் அனிதாவின் தற்கொலை - பிஜேபி -
சங்பரிவார் கூட்டத்தினர் மீது மிகப்பெரிய எரிச்சலையும், கடும் வெறுப்பையும்
வேகமாகத் தூண்டிவிட்டது. தமிழ்நாட்டுக்கு பிஜேபி தலைவர்களும்,
அமைச்சர்களும் வருவதைத் தவிர்த்து விட்டனர். உள்ளூர் பிஜேபியினரும் மக்கள்
முகத்தில் விழிக்க முடியாதவர்களாக முடங்கிக் கிடக்கிறார்கள்.
இணையதளத்தில் திமிர்த் தனத்துடன், உயர்
ஜாதி மமதையுடன், செய்திகளையும், கருத்துகளையும், வெளியிட்டவர்கள் சரியாக
வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர்.
மாணவர்களும் அனைத்து மாவட்டங்களிலும்
தன்னிச்சையாகவே வகுப்புகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்து போராட
ஆரம்பித்து விட்டனர்; இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல காட்டுத்தீயாக
மாணவர் மத்தியில் கொந்தளித்து எழுவது தொடரும் என்றும் தெரிகிறது. ஏனெனில்
இந்த ‘நீட்’ தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும்
சவாலானதாகும்.
நன்றியுரையாற்றிய திமுக செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின், நறுக்குத் தெறித்தது போல முரசொலி பவள விழா தரும்
செய்தியாகக் சொன்னக் கருத்து முத்தாய்ப்பானது.
சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு எதிராக
மத்திய அரசு - அதற்கு நிபந்தனையின்றித் தண்டனிட்டுத் துணை போகும் மாநில
அ.இ.அ.தி.மு.க அரசு இரண்டுமே மக்கள் விரோதமானவை என்றும், விரைவில் மாற்றம்
நிகழும் என்றும் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து விழாவின்
முத்தாய்ப்பான செய்தியாக அசைபோட்டு மக்கள் வெள்ளம் விழாப் பந்தலிலிருந்து
விடைபெற்றுச் சென்றது.
எட்டாத கனிக்குக் கொட்டாவி விட வேண்டாம் என்று பாஜகவினருக்கு திமுக செயல் தலைவர் சொன்னது சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்தது!.
No comments:
Post a Comment