Saturday, September 23, 2017

சென்னையைச் சிறைப்பிடித்த விடுதலைச் சிறுத்தைகள் செழுமையான தீர்மானங்கள் நிறைவேற்றம் மாநில சுயாட்சித் திசையில் ஒரு மைல் கல்!




சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களி லிருந்தும் தோழர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு மேல் தலைநகரமான சென்னையின் போக்குவரத்து நிலை குலைந்தது.

ஒய்.எம்.சி.ஏ. திடலில் கூடிய மக்கள் வெள்ளத்துக்கு இணையாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநாட்டுக்காக வந்தவர்கள் தேங்கி நின்றனர். வாகனங்கள் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டது.

கேரள மாநில முதல் அமைச்சர் பினராய்விஜயன்

மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய கேரள மாநில முதல் அமைச்சர் பினராய்விஜயன் அவர்கள் தன் உரையில் வெளியிட்ட கருத்து முத்துக்கள்.

கூட்டாட்சித் தத்துவம் பற்றியெல்லாம் பெரிதாகப் பேசப்பட்டாலும் நடைமுறையில் ஒற்றை ஆட்சி முறையே நிலவுகிறது என்று முத்தாய்ப்பாகக் குற்றம் சாட்டினார்.

இந்திய அரசியலில் 1957ஆம் ஆண்டில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சி கலைக்கப்பட்டதை நினைவூட்டினார். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் ஜனநாயகப் படுகொலை அது என்று 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் கறுப்பு அத்தியாயத்தை நினைவூட்டினார்.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான கொள்கை உடையது ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் பிஜேபி. இவர்களிடமிருந்து கூட்டாட்சியை எதிர்ப்பார்க்க முடியாது என்று மிகச் சரியாகவே சொன்னார். (அதிபர் முறை ஆட்சிதானே அவர்கள் கொள்கை).

இந்து - இந்தி - இந்துஸ்தான் என்ற ஒற்றை இலக்கினை நோக்கிப் பயணிப்பதுதான் இவர்களின் நோக்கும், போக்கும் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் கேரள மாநில முதல் அமைச்சர்.

மத்தியிலும், மாநிலங்களிலும் பெரும்பாலும் ஒரு கட்சி ஆட்சி  அமைந்திருந்ததால் மாநில சுயாட்சிபற்றி அதிகமாகப் பேசப்படவில்லை. இப்பொழுது அந்த நிலை மாறி வரும் சூழலில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் இந்த மாநில சுயாட்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், அதன் தலைவர் திருமாவளவனையும் பாராட்டுகிறேன். மாநாட்டின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார் கேரள முதல் அமைச்சர்.

உரத்த குரலில் பேராசிரியர் ஜவாஹிருல்லா!

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தொடக்க முதல் கடைசி வரை உரத்தக் குரலில் முழங்கினார்.

எடுத்த எடுப்பிலேயே மதவாத சக்திகளை வீழ்த்தும் மிகப் பெரிய மாநாடு என்று கூறியபோது மிகப் பெரிய கரஒலி!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றால், அது ஏதோ தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக மட்டும் பாடுபடும் கட்சி என்று குறுகலாகப் பார்க்கக் கூடாது. அதையும் கடந்து மக்கள் பிரச்சினையில் அதற்கு அக்கறை உண்டு என்பதற்கு அடையாளம் தான் இந்த மாநாடு என்றும் குறிப்பிட்டார். முஸ்லிம் அமைப்புகளும், சிறுபான்மையினர் உரிமைகளையும் தாண்டி நாட்டின் ஒட்டு மொத்தமான பிரச்சினைகளில் அக்கறை கொண்டு பாடுபட்டு வருகின்றன என்றும் கூறினார்.

2007 ஆகஸ்டு 15ஆம் நாள் 'இந்து' ஏட்டில் திமுக தலைவர் கலைஞர் எழுதிய கட்டுரையை எடுத்துக் காட்டிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அக்கட்டுரையில் ஒற்றை ஆட்சி முறை  வரப் பார்க்கிறது என்று எச்சரித்திருந்ததை சரியாக நினைவூட்டினார்.

இரா. முத்தரசன் எழுச்சியுரை

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் வழக்கம்போல எளிமையாக கருத்துகளை எடுத்து வைத்தார்.
மாநிலங்கள் இப்பொழுது பெற்றுள்ள சிறிய உரிமைகள்கூட போராடிப் பெற்றவைதான். இனிப் பெற வேண்டியவைதான் அதிகம் - அந்த வகையில் சரியான கால கட்டத்தில் இந்த மாநாட்டைக் கூட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், அதன் தலைவர் திருமாவள வனுக்கும் தன் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

நிதி ஆயோக் என்ற ஒன்றைக் கொண்டு வந்துள்ளனர் - அதை நிதி அயோக்(கியத்தனம்) என்று கூற வேண்டும். பள்ளிகள் தனியார் மயம், மருத்துவம் தனியார்மயம்; இந்த இரண்டு முக்கிய அம்சங்களில்கூட மக்கள் தனியாரிடம் கையேந்த வேண்டிய நிலைதான்!

மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாயைக்கூட தரவில்லை. அதைக் கேட்கும் திராணியும் தமிழக அரசுக்கும் இல்லை என்று குற்றஞ் சாட்டினார் தோழர் முத்தரசன்.

இங்கு அனைவரும் கைகோத்து நின்றோம் - இது இன்றைய தேவை - மத்தியில் உள்ள மதவாத பிஜேபி அரசை வீழ்த்த இந்த ஒற்றுமை இக்கால கட்டத்தில் தேவை என்று முத்தாய்ப்பாக முழங்கினார் தோழர் இரா. முத்தரசன்.

பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன்

இந்திய யூனியன் முசுலிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்கள் மிகவும் சுருக்கமாக நேரம் கருதி முடித்துக் கொண்டார்.

மாநில சுயாட்சி என்ற உணர்வு தமிழ்நாட்டுத் தடாகத்தில் பூத்தமலர் என்று இலக்கிய நயமாகத் தன் உரையைத் தொடங்கினார் தேசிய தலைவர். இம்மாநாடு ஒரு திருப்பு முனையாக  அமையப் போகிறது என்பதை வெகு அழுத்தமாகவே பதிவு செய்தார்.

தோழர் ஜி. இராமகிருஷ்ணன்


இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு) தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தன் உரையில் முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தார்.

மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்ததாகவே அவர் பேச்சு அமைந்திருந்தது. ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்  என்ற தீர்மானம் இக்கால கட்டத்தில் அவசியமானது என்று அழுத்தமாகவே கூறினார்.

தமிழ்நாட்டில் இருக்கக் கூடியவர் பொறுப்பு ஆளுநர் - அவரை சென்னையில் பார்க்க முடியாது. ஆனால் ஓ.பி.எஸ்.  - இ.பி.எஸ். அணிகள் ஒன்று சேர்கின்றன என்றால் ஓடோடி வந்து விடுவார்.

அதிகாரப் பகிர்வு என்பது மாநில அளவோடு நின்று விடாமல் அது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வரை கொண்டு வரப்பட வேண்டும். அந்த வகையிலும் ஒரு தீர்மானம் இம்மாநாட்டில் தேவை என்றார் தோழர் ஜி.ஆர். (அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு உடனடியாக மாநாட்டின் தீர்மானங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்)
நிருவாக அதிகாரம், சட்டம் இயற்றும் அதிகாரம், நிதி உரிமைகளில் மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரம் தேவை என்ற மூன்று நிலைப்பாடுகளையும் அவர் முத்திரையாகப் பதித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி


மாநாட்டுக்கு முன்னிலை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரத்தின் நெருக்கடியைக் கருதி வேகவேகமாகத் தம் கருத்தினை முத்திரையாகப் பதித்தார்.

சரியான நேரத்தில் சரியானவர்களின் முயற்சியில் சரியான முடிவுகளைத் தீர்மானமாக நிறைவேற்றிய சரியான மாநாடு இது என்று தொடங்கினார் தன் உரையை (பலத்த கரஒலி!).

பாய்ச்சலுக்கு என்றும் தயங்காத சிறுத்தைகள் நடத்தும் மாநாடு அல்லவா - என்று சொன்ன போது மிகப் பெரிய ஆரவாரம்.

எப்பொழுதும் தென்னாடுதான் வடநாட்டுக்கும் வழிகாட்டும். இடஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்படுவதற்குக் காரணமே தமிழ்நாடு தானே! (தந்தை பெரியார் முயற்சியால் போராட்டத்தால் 1951இல் நடைபெற்ற முதல் திருத்தம்).

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ராமராஜ்ஜியத்தை உருவாக்க இருப்பதாகக் குறிப்பிட்டு வருகிறது. ராமராஜ்ஜியம் என்பது என்ன?

சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்பதற்காக ராமன் வாளால் வெட்டிக் கொன்றான் அல்லவா! வருணாசிரமத்துக்கு விரோதமாக சூத்திரன் தவம் இருந்த காரணத்தால் பார்ப்பனக்  குழந்தை செத்து விட்டது என்றும், அந்தச் சூத்திரனை ராமன் வெட்டிக் கொன்ற வுடனேயே செத்துப் போன அந்தப் பார்ப்பனக் குழந் தைக்கு உயிர் வந்து விட்டது என்பதன் தத்துவம் என்ன?

சூத்திரன் கற்றால் பார்ப்பானுக்கு ஆபத்து என்பது தானே அதன் தத்துவம். அன்றைக்கு 14 ஆண்டுகள் ராமன் காட்டுக்குச் சென்றான். அந்த ராமன் பெயரால் நடக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட இம்மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகப் பொருத்திக் காட்டினார் தமிழர் தலைவர்.

எந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பதைக்கூட முடிவு செய்வது ஓர் அரசின் வேலையல்ல. உழைப்பாளி மாட்டுக் கறி சாப்பிடுகிறான். உழைப்பு என்றால் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் இதுபற்றிப் பேசலாமா?

மாநில சுயாட்சி பற்றி மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா பேசிதையும் பொருத்தமாக நினைவூட்டினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்.

குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர, மற்றவற்றிற்கு எதற்காக மத்தியில் அமைச்சர்கள்? கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு எல்லாம் மத்திய அமைச்சர்கள் தேவையா என்று அண்ணா அவர்கள் பேசியதை எடுத்துக் காட்டினார்.

1969இல் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டிய மாநில சுயாட்சி மாநாட்டை நினை வூட்டிய தமிழர் தலைவர் அவர்கள் அம்மாநாட்டில் தந்தை பெரியார் கூறிய கருத்தையும் ஞாபகப்படுத்தினார்.

கணவன் - மனைவி என்றால் இயல்பாக அன்பாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பழக வேண்டும், வாழ வேண்டுமே தவிர  'என்னிடம் ஆசையாக இரு, ஆசை யாக இரு' என்று அடித்துத் துன்புறுத்தினால் ஆசையாக மனைவியால் இருக்க முடியுமா? என்று மத்திய - மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்குத் தந்தை பெரியார் கூறிய கருத்தை எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் காட்டினார் தமிழர் தலைவர்.

கடல் வற்றி மீன் கருவாடாகிக் கொத்தித் தின்ன குடல் வற்றிக் காத்திருந்ததாம் கொக்கு என்பதுபோல தமிழ்நாட்டிலே கால் ஊன்ற மதவாத சக்திகள் துடிக்கின்றன. கருப்புடை தரித்தோர் உண்டு, நறுக்கியே திரும்பும் வாட்கள் என்ற மானமிகு கலைஞர் அவர்களின் கவிதை வரியைச் சொல்லி உரையை நிறைவு செய்தார்.

சு. திருநாவுக்கரசர் கருத்து

தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக் கரசர் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிடத்தாவது:

அதிகாரப் பரவலாக்கப்படாமல் ஓரிடத்திலேயே குவிக்கப்பட்டால், அங்கு சர்வாதிகாரமும், பாசிசமும் தான் தலை தூக்கும் என்று கூறிய தமிழகக் காங்கிரஸ் தலைவர் இம்மாநாட்டைக் கூட்டிய திருமாவளவனும் - வளர்ந்து வரும் சிறந்த தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

புதுவை முதல் அமைச்சர் வி. நாராயணசாமி


இந்த மாநாடு ஒரு பொருத்தமான நேரத்தில் நடைபெறுவதற்காக தன் பாராட்டைப் பதிவு செய்த புதுவை முதல் அமைச்சர் - புதுச்சேரியில் ஒரு துணை நிலை ஆளுநருடன் அன்றாடம் போராட வேண்டிய நிலை இருப்பதை நிதர்சனமாகக் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் தேர்தல் நடந்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னதாக திடீரென்று துணை ஆளுநர் மாற்றப்பட்டு புதியவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் - தாழ்த்தப்பட்டோருக்கு தொழிற் கல்லூரி வரை இலவசக் கல்வி, ஏழை, எளிய மக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி என்ற மூன்று திட்டங்களையும் செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்த நிலையில், இந்த மூன்றுக்கும் முட்டுக் கட்டை போடும் துணை ஆளுநரின் தான் தோன்றித்தனத்தை அம்பலப்படுத்தினார் புதுச்சேரி முதல் அமைச்சர்.

மாநாட்டில் 7ஆம் தீர்மானமான - ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை இரங்கல் தீர்மானத்துக்கு அடுத்து இரண்டாவது தீர்மானமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

(அதன்படியே இரண்டாவது தீர்மானமாக அறிவித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்).

மத்திய அரசு சி.பி.அய்., ரா என்று எதை  அனுப்பி அச்சுறுத்தினாலும் நாங்கள் தன்மானத்தோடு கொள்கை வழி உறுதியாக நின்று பணி ஆற்றுவதில் பின் வாங்க மாட்டோம் என்று வீர உரை நிகழ்த்தினார் புதுவை முதல்வர்.

(தொடக்கத்தில் மாநாட்டில் பங்கேற்ற - மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் சால்வை அணிவித்தார் புதுச்சேரி முதல் அமைச்சர் மாண்புமிகு வி. நாராயணசாமி அவர்கள்).

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தன் உரையில் முக்கியமாக கூறியதாவது:

மாநில  சுயாட்சிக் குரலை முதன் முதலாக விடுதலைச் சிறுத்தைகள் தான் கொடுக்கிறது என்று நான் சொல்ல முன் வரவில்லை. அந்தக் குரலைக் கொடுத்தது திமுக - அறிஞர் அண்ணா, கலைஞர் அவர்கள் தான் என்றார்.

இங்கே பல்வேறு கட்சிகளின் தலைவர்களைப் பங்கேற்க அழைத்துள்ளோம். இது தேர்தல் கூட்டணியா என்று சிலர் கேட்கிறார்கள். இது தேர்தல் கூட்டணியல்ல - மக்கள்மீது அக்கறை உணர்வோடு கூட்டப்பட்ட மாநாடு.

இந்தியா வல்லரசாக இருக்க வேண்டும் என்றால் மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். அவர்கள் டிஜிட்டல் இந்தியா தேவை என்கிறார்கள்; நாமோ ஃபெடரல் இந்தியா வேண்டும் என்கிறோம்.

அவர்கள் இந்தி மொழிதான் ஆட்சி மொழியாக வர வேண்டும் என்கிறார்கள். நாங்கள் தமிழ் உட்பட மாநில  மொழிகள் அந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்கிறோம்.

கேந்திர வித்யாலயாக்களையும், நவோதயாக்களையும் கொண்டு வருவது இந்தியைக் கொல்லைப் புறமாகத் திணிக்கத்தான் என்று தீர்க்கமாகச் சொன்னார் தொல்.திருமாவளவன்..

இப்பொழுது நம் முன் இரு முக்கியப் பிரச்சினைகள் - ஒன்று நீட், இன்னொன்று ஜி.எஸ்.டி. இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியவையாகும்.
மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருப்பது பொலிட்டிக்கல் மெஜாரிட்டியல்ல. மாறாக கம்யூனல் மெஜாரிட்டி என்று கூறிய அவர் தமிழ்நாட்டில் மதவாத காவி சக்திகள் கால் ஊன்றக் கூடாது -

காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகம் இல்லாத தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல வகையிலும் சமத்துவ உணர்வு மேலோங்கி இருப்பதற்கே காரணம் திராவிடர் இயக்கம்தான். திராவிடர் கழகமும், திமுகவும் தான்! இதனை நன்றி உணர்ச்சியோடு தெரிவிக்கிறேன். (பலத்த கரஒலி)

தேர்தலில் ஈடுபட்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் வேட்கை யல்ல. வாய்ப்புக் கிடைத்தால் அந்தத் தளத்திலே நிற்போம். வாய்ப்புக் கிட்டவில்லையென்றால் அதற்காக முடங்கிவிட மாட்டோம். எங்கள் பணி மகிழ்ச்சியோடு தொடரத்தான் செய்யும் என்று .. கருத்துகளை வாரி வழங்கினார் எழுச்சித் தமிழர்.

தளபதி மு.க.ஸ்டாலின்


திமுக செயல் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநாட்டு நிறை வுரையை நிகழ்த்தினார்.

திமுகவின் கொள்கை முழக்கத்தை முக்கிய மாக எடுத்துக் கூறினார்.

1) அண்ணா வழியில் அயராதுழைப்போம்.
2) இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
3) ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்.
4) மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி.

அண்ணல் அம்பேத்கர் நெடு நேரம் கண் விழித்துக் கொண்டு செயல்படுபவர். செய்தியாளர்கள் அவரை ஒரு முறை கேட்டனர். மற்ற மற்ற தலைவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் மட்டும் வெகு நேரம் ஆகியும் விழித்துக் கொண்டு இருப்பது ஏன் என்று கேட்டபோது -

"அவர்களின் மக்கள் எல்லாம் விழிப்போடு இருக்கிறார்கள். நான் யாருக்காகப் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோனோ, அந்த மக்களோ விழிப்புடன் இல்லாமல் தூங்கிக் கொண்டுள்ளனர். அவர்களை விழிப்படையச் செய்யத் தான் நான் நள்ளிரவு நேரமானாலும் விழித்துக் கொண்டுள்ளேன்" என்றாராம்.

அம்பேத்கர் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் இப்பொழுது என்ன சொல்லுவார்? திருமாவளவன் இருக்கிறார், நான் தூங்கப் போகிறேன் என்பார் என்று தளபதி கூறியபோது கரஒலியும், ஆரவாரமும் அடங்க வெகு நேரமாயிற்று.

மத்திய அரசு என்பது அதிகாரக் குவியலின் மய்யமாகவே இருந்து வருகிறது. 1957இல் கேரளாவில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்தார்கள்; திமுக ஆட்சியை இரு முறை கவிழ்த்தார்கள்.

அந்த வகையில் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில முதல் அமைச்சரும், திமுக.வின் சார்பில் நானும் இம்மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமே!

இன்று மத்தியில் உள்ள பிஜேபி அரசைப் பொறுத்தவரை - தேர்தலில் கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாடாளுமன்றத்தில் நுழையும்போது அதன் படிகளைத் தொட்டுக் கும்பிட்டே உள்ளே சென்றார். அதனால் என்ன நல்ல பலன் நடந்து விட்டது? மத்திய அமைச்சர்களைக்கூட மதிப்பதில்லை. மாநில அரசுகளை -  ஏன் பிஜேபி ஆளும் மாநில அரசுகளைக்கூட மதிப்பதில்லை பிரதமர் நரேந்திர மோடி.

மத்தியில் உள்ள ஆட்சியும், மாநிலத்தில் உள்ள ஆட்சியும் அகற்றப்பட வேண்டியவைகளே!

ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல - இந்த அணி! நாட்டு மக்களுக்காகவே, நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே ஆட்சி என்பது எங்களுக்கு ஒரு கருவி அவ்வளவே!

இது ஒரு தொடக்கம் தான் - இதனை இந்தியா முழுமையும் சமூக நீதியாளர்களை ஒன்றிணைத்துச் செயல்படுவோம். அதனை திமுக முன்னின்று செயல் படுத்தும் என்றார் திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.

தொடக்கத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்புரை   (இணைப்புரையும்) ஆற்றினார். நோக்கவுரையைக் கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆற்றினார். மாநாட்டின் இறுதியில் கட்சியின் பொருளாளர் முகம்மது யூசுப் நன்றி கூற இரவு 12 மணிக்கு மாநாடு சிறப்புடன் நிறைவுற்றது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...