Friday, August 25, 2017

தமிழ்நாடு வழிகாட்டும்


தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றில் ஒரு சவாலான சூழல்களை நாம் சந்திப்பது இது முதல்முறையல்ல.
1950ஆம் ஆண்டு, செண்பகம் துரைராசன் என்கிற பார்ப்பனப்பெண்மணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினால், தமிழகத்தில் அதுவரை நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற நூறு விழுக்காடு இடஒதுக்கீடு முறை செல்லாது என்று ஆக்கப்பட்டது. தந்தை பெரியார் அதை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். தந்தைபெரியாரின் கர்ஜனை நாடாளுமன்றத்தை அசைத்தது,  அதன் விளைவாக நேரு தலைமையில் அமைந்த மத்திய அரசினால் முதலாவதாக இந்திய அரசமைப்புச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியா முழுமைக்கும் இன்று பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் கல்வியில் பயன்பெறும் இடஒதுக்கீடு என்பது சாத்தியமானது!
1979ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். தவறான ஆலோசனையின் காரணமாக ஒரு தீயமுடிவினை எடுத்தார். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை பெறுவதற்கு ரூ.9000 வருமான உச்சவரம்பு என்கிற பொருளாதார அளவுகோலை கொண்டுவந்தார். திராவிடர் கழகமும், திமுகவும், ஒத்த கருத்துள்ள கட்சிகளும் அதைக் கண்டித்து தமிழகம் முழுக்க மக்களைத் திரட்டினார்கள். அதன் விளைவு 1980ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. தன் தவறை உணர்ந்த எம்.ஜி.ஆர். தான் கொண்டுவந்த சட்டத்தை பின்வாங்கியதோடு மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அதுதான் இன்றுவரை நீடிக்கிறது!
1993ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு சட்டம் இயற்றி அதை அரசமைப்பு சட்டத்தின் 9ஆவது அட்டவணை என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து, தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான சமூகநீதியைக் காப்பாற்றினார். இந்தப்பெருமை முழுக்க முழுக்க திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சாரும். இதை எடுத்துக்காட்டாகக் கொண்டே பாஜக ஆட்சி செய்கின்ற இராஜஸ்தான் உட்பட பல மாநிலங்கள், தமிழகம் காட்டிய வழி யினைப் பின்பற்ற முயற்சி செய்துகொண்டிருக்கின்றன.
இப்போது 'நீட்' கொம்பை நீட்டிக் கொண்டு கிளம்பியுள்ளது.
குறைந்தபட்ச நியாய உணர்வு கொண்ட ஒரு மத்திய அரசு இருந்திருந்தால்கூட, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கு விலக்கு அளித்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை எழுப்பிய மிகச்சரியான கேள்விகளை ஏற்றுக்கொண்டு, தமிழகத்திற்கு நீதி வழங்கியிருக்க வேண்டும்! தற்போதைய சூழலைப்பார்க்கும்போது, நீட் சிக்கலின் பேரபாயத்தை தமிழக மக்கள் பெரிதும் உணர்ந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. கெட்டவாய்ப்பாக, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடந்த நிலையில், தமிழகம் இப்போது இருப்பதுபோலவே எப்போதும் தூங்கிக்கொண்டிருக்காது என்பது உறுதி.
பாதிப்பு ஏற்படும் நிலையில் பதைபதைப்பார்கள் - பாய்ந்தும் எழுவார்கள் என்பதில் அய்யமில்லை.
மண்டல் குழுப் பரிந்துரையை எடுத்துக் கொண்டாலும், "பத்தாண்டு ஆகிவிட்டது. இனிமேல் அதற்கு உயிர் இல்லை. குழிதோண்டிப் புதைத்தாகி விட்டது" என்று ஆணவமாகப் பார்ப்பனர்கள் மற்றும் அவர்களின் ஏடுகள் ஊளையிட்டன.
""Burry the mandal Report" என்று ஓர் ஆங்கில ஏடு தலையங்கம் தீட்டியது. "Hurry the Mandal report" என்று பதிலடி கொடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அதில் வெற்றி கொண்டோமா இல்லையா? 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் அகில இந்திய அளவில் திராவிடர் கழகம் நடத்தியது அல்லவா?
திராவிடர் கழகத்தின் பங்களிப்பை அந்நாள் பிரதமர் வி.பி.சிங் அங்கீகரித்தாரே!
27 சதவிகித இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் அவர் பிரகடனப்படுத்தியபோது, மறவாமல் தந்தை பெரியாரை நினைவு கூர்ந்தாரே!

எந்த இன்னல் வந்தாலும் சமூக நீதியில் தமிழ்நாடு முகம் கொடுத்து வெற்றி பெறும் - காரணம் இது பெரியார் பிறந்த மண்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...