Tuesday, June 27, 2017

சுயமரியாதைக்குச் சவால்!

பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தானில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மாநில அரசு சார்பில் உணவு பொருள்கள் மானியமாக வழங் கப்படுகின்றன. இவ்வாறு உணவுப் பொருள்களை பெறுவோர் ‘‘நான் ஏழை’’ என்று அவரவர் வீட்டு வெளிப்புறச் சுவரில் பெயிண்ட் மூலம் எழுதி வைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற இந்த உத்தரவை தொடர்ந்து சிக்ரை மற்றும் பந்திகுய் தாலுகாக்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இது போன்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை வசதி படைத்தவர்கள் பெற்று விடக்கூடாது என்ற காரணத்தால் இது போன்று எழுத உத்தரவிட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யின, சிறுபான்மை மக்கள் தான் பெரும்பாலும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளனர்.
இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘10 கிலோ கோதுமை வாங்குவதற்காக நாங்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியாத நிலையை இந்த புதிய உத்தரவு ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த வாசகத்தை அழித்துவிட்டு தங்களுக்கு மானிய விலையில் கோதுமை வேண்டாம் என்று தெரிவித்துவிட்டனர்’’ என்றார். இது தவிர இவ்வாறு நான் ஏழை என்று பிரகடனப்படுத்திக் கொண்டால், ரூ.750 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில், ‘‘இது ஒரு மோசமான செயலாகும். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேசன் பொருள்கள் வழங்கப்பட்டால் அது மக்களின் சட்டப்பூர்வ உரிமையாகும். அது அரசின் சலுகை கிடையாது. இதன்மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு ஏழைகள் விரோத போக்கைக் கடைப்பிடிக்கிறது’’ என்றார்.
இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2016 ஆம் ஆண்டு பில்வாரா நகரில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் பயனாளிகளின் வீடுகளில் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசி பயனாளிகள் பெயர், அவரது அடையாள எண் ஆகியவற்றை எழுதி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
பாரதீய ஜனதா என்றாலும் சரி, அதன் ஆணி வேர்களான ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களானாலும் சரி - இவை எல்லாமே இந்து மதத்தின்படி சிந்திக்கக் கடமைப்பட்டவைகள். இந்து மதத்தில் மனிதாபிமானத்துக்கும், தன்மானத்துக்கும் இடம் இல்லை.
அப்படி இடம் இருந்தால், தாழ்ந்த ஜாதி என்ப தும், வறுமை என்பதும் கர்மப் பலனின் விளைவு என்று கூறுவார்களா? இந்த ஏற்பாடுகளைக் கடவுளே செய்து வைத்துள்ளார் என்றுதான் பசப்புவார்களா?
‘‘மாட்டுக்காகக் கசிந்துருகுபவர்கள், மனிதனின் பசியைப்பற்றி சிந்திக்க மறுக்கிறார்கள்’’ என்று விவேகானந்தரே கூட வெட்கப்படவில்லையா?
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்றான் திருவள்ளுவர். பிச்சை எடுத்துதான் உண்ணவேண்டும் என்று ஒரு கடவுள் ஏற்பாடு செய்திருப்பானேயானால், அந்தக் கடவுள் ஒழியட்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்த சிந்தனையாளர் அவர்.
ஓர் அரசு என்றால் குடிமக்களின் சுயமரியா தையை மதிக்கவேண்டாமா? அரசே குடிமக்களின் சுவரில் ஏழை என்று எழுதி வைப்பது எவ்வளவுக் கேவலம் - மனிதாபிமானற்ற மானக்கேடு!
இன்னும் என்னென்ன கேவலங்களை எல் லாம் பி.ஜே.பி. ஆட்சியில் குடிமக்கள் சுமக்க வேண்டுமோ!
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை - வள்ளுவன் வாக்குப் பொய்க்காது! மக்களின் சுயமரியாதை யைக் காலில் போட்டு மிதிக்கும் பி.ஜே.பி. அரசின் நாள்கள் எண்ணப்படும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...