Tuesday, June 27, 2017

‘நீட்’ தேர்வு கூடாது என்று சொல்லுவது எங்களுக்காக அல்ல! இது ஒரு கட்சிப் பிரச்சினையும் அல்ல! - கி.வீரமணி

அ.தி.மு.க. - பா.ஜ.க.வில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்!

ஜல்லிக்கட்டுக்குக் கையெழுத்துப் போட வைத்ததுபோல
தமிழக அரசின் இரு சட்டங்களுக்கும் ஒப்புதல் பெற்றாகவேண்டும்
குன்னூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கொள்கை முழக்கம்
குன்னூர், ஜூன் 26 ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு கட்டாயப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றதுபோல, ‘நீட்’ தேர்வு தொடர்பான தமிழக அரசின் இரு மசோதாக்களுக்கும் மத்திய அரசின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் - ஆளும் அ.இ.அ.தி.மு.க. இதில் முனைப்புக் காட்டவேண்டும்.குடியரசுத்தலைவர்தேர்த லுக்கு இதனை நிபந்தனையாக வைக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (25.6.2017) குன்னூரில் நடைபெற்ற தந்தை பெரியார் அவர்களின் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப் புரையாற்றினார். அவரது உரை வருமாறு:
எழுச்சியோடு ஏறத்தாழ ஓராண்டிற்குப் பிறகு நடைபெறக்கூடிய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா - கழகக் கொள்கை விளக்கப் பிரச் சாரக்கூட்டமாகியஇந்நிகழ்வில்பங்கேற்றுள்ளசான் றோர்களே, நண்பர்களே, பெரியோர்களே,தாய்மார் களே உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகப்பெரிய அவலங்களையெல்லாம்....
நான் பேசுகின்ற நேரத்திற்குள் சொல்லவேண்டிய செய்திகள் ஏராளம் இருக்கின்றன. என்றாலும், எவ்வளவு வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்பிலே தமிழ் மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய அவலங்களையெல்லாம் தமிழ்நாடும், இந்தமக்களும்எப்படிஎதிர்கொள்வது,எப்படி துய்ப்பது என்பதைப்பற்றிய திராவிடர் கழகத் தின் நிலைப்பாட்டை இங்கே ஓரளவிற்கு உங்களுக் கெல்லாம் விளங்கும்படியாக, விளக்கப்படுத்த இருக்கிறோம்.
இந்த 50 மணித்துளிகளில் எல்லாவற்றையும்
 சொல்லிவிட முடியாது என்கிற காரணத்திற்காகத்தான் சிறப்பாக இங்கே பல நூல்களையெல்லாம் வழக்கம்போல வெளியிட்டு கொண்டு வந்திருக்கின்றோம். அவற்றை நீங்கள் வாங்கவேண் டும்; படிக்கவேண்டும்; கருத்துகளைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அனைவரும் அனைத்தும் பெறவேண்டும்
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கக்கூடிய ‘நீட்’ நுழைவுத் தேர்வு பிரச்சினை. பல பெற்றோர்கள்,  லட்சக்கணக்கில் செலவு செய்து தங்களுடைய பிள்ளைகளையெல்லாம் மிகப்பெரிய அளவில் படிக்க வைத்து, கனவு கண்டு, இதுவரையில் படிக்க முடியாத ஒரு சமுதாயம் - படிக்கக் கூடாத சமுதாயம் - படிப்பிற்கும் - உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று, சூத்திரர்கள், பஞ்சமர்கள், பெண்கள் என்று கொச்சைப்படுத்தி, ஜாதியால், வருணாசிரம தருமத்தால், நம்மை கீழ்மைப்படுத்தி இருந்த நிலைகளையெல்லாம், அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், நூறாண்டுகளுக்கு முன்பாக உருவாக்கி திராவிடர் இயக்கத் தலைவர்கள், நீதிக்கட்சியை உருவாக்கி - அனைவரும் அனைத்தும் பெறவேண்டும் என்று சொன்னார்கள்.
நீண்ட காலமாக நடைபெறக்கூடிய போராட்டம்
இந்த நாட்டில் நீண்ட காலமாக நடைபெறக்கூடிய போராட்டம் - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்கிற குரல் எழும்புவதற்கு முன், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக்கூடாது - இன்னாருக்குத்தான் படிப்பு - இவர்கள் படித்த காரணத்தினால்தான் உத்தியோகம் - எங்கும் இவர்கள் மயமாகத்தான் இருக்கவேண்டும்.
இவர்கள் வெறும் கூலிகளாக, உழைப்பாளிகளாக, மூட்டைத் தூக்குபவர்களாக, தற்குறிகளாக இருக்கவேண்டும். இதுதான் இந்த நாட்டினுடைய மத தர்மம் - இதுதான் இந்த நாட்டினுடைய ஆட்சியாளர்களுக்கு விதிக்கப்பட்ட கடமை என்று இருந்தது.
காலங்காலமாக - நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்கி றோமே, சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்று பழைய வரலாற்றை சொல்லுகிறோமே, அந்த அரசர்களின் ஆட்சிகளில் கூட, மனுதர்மம்தான் அவர்களை வழிநடத்தியது. இதோ என் கையில் இருக்கக்கூடிய அசல் தர்மம் நூல்.
மூன்று சதவிகிதமாக இருக்கின்ற பார்ப்பனர்கள்தான்...
இந்த மனுதர்மத்தில், சூத்திரன் படிக்கக்கூடாது; மனிதனை மனிதன் தொடக்கூடாது. படித்த நம்முடைய ஆட்கள் உத்தியோ கத்திற்குவர முடியாது. அடிமைகளாக இருக்கவேண்டும். சூத்திர னுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்கக்கூடாது என்ற அளவிலே வைத்துவிட்டு, தங்கள் விருப்பம்போல, மூன்று சதவிகிதமாக இருக்கின்ற பார்ப்பனர்கள்தான், ராஜகுருக்களாக, ஆலோசகர்களாக, உத்தரவு போடக்கூடியவர்களாக இருந்தார் கள்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சாரும்!
இன்றைய போராட்டம் - மீண்டும் பெரியார் அவர்கள் என்ன செய்தார்? திராவிடர் இயக்கம் என்ன செய்தது? அண்ணா அவர்கள் என்ன செய்தார்? கலைஞருடைய ஆட்சி எப்படி நடந்தது? ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சிகூட சமூகநீதியைப் பொறுத்தவரையில் எப்படி நடந்தது? இவை களையெல்லாம்பற்றி நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமானால், அவைகளை இன்றைக்குத் தலைகீழாக்கி, பழைய கருப்பனாக இந்த நாடு ஆகவேண்டும். பழைய வருணாசிரம தருமத்திற்கே செல்லவேண்டும். அன்றைக்கு எப்படி நாம் முழங்காலுக்குக்கீழே வேட்டிக் கட்ட முடியாதா - தோளிலே துண்டுபோட முடியாதோ - துண்டை இடுப்புக் கக்கத்திலே வைத்துக்கொண்டு, அய்யா, சாமி, எஜமானன் என்று சொல்லவேண்டுமோ - நம்மிடத்திலே கூலிகளாக இருக்கக்கூடிய ஒருவன் - உணவகத்திற்குச் சென்றால்கூட, ‘‘சாமி, இரண்டு இட்லி கொடுங்கள்’’ என்று இவன் காசு கொடுக்கின்ற எஜமானன், சப்ளை செய்கிறவனைப் பார்த்து, அடிபணிந்து வாங்கக்கூடிய நிலை.
எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், கோவில் கட்டிய தர்மகர்த்தாவாக இருந்தாலும், அரசனாக இருந்தாலும், ஏன் இன்றைய குடியரசுத் தலைவர் நிலையில், பெரிய நிலையில் இருக்கின்றவரானாலும், கோவிலுக்கு என்று செல்கிற நேரத்தில், அவர் சட்டையைக் கழற்றி, இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு,  அங்கே இருக்கிற ஒரு அனாமதேய பார்ப்பன அர்ச்சகனி டம்தான் கையை கீழே தாங்கியிருக்கக்கூடிய நிலை இருக்கிறதே, அதனை மாற்றிக் காட்டிய பெருமை, தந்தை பெரியாரின் சுயமரி யாதை இயக்கத்தைச் சாரும்!
மனிதனுக்கும், மிருகத்திற்கும் இருக்கிற வேறுபாடு
இந்த இயக்கம் பிறந்திருக்காவிட்டால், பெரியார் பிறந்திருக்கா விட்டால், நம்மிலே எத்தனை பேர் - நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள், நீங்கள் எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருங்கள். ஆனால், தன்மானத்தோடு இருக்கவேண்டாமா? நமக்கெல்லாம் மான வாழ்வு தேவையில்லையா? மனிதனுக்கும், மிருகத்திற்கும் இருக்கிற வேறுபாடு பகுத்தறிவு என்கிற பேதமட்டுமல்ல - பகுத்தறிவின் பயன் என்பது இருக்கிறதே - ஆகவே, ஒரு காலத்தில் நம்மையெல்லாம் அடக்கி ஆண்டவர்கள், இந்த மனுதர்மத்தை அடக்கி வைத்திருந்தார்கள். இந்தக் காலகட்டம் தாண்டி, ஒரு பெரிய சமுதாய மாற்றம் ஏற்பட்டு,  ஒரு நூற்றாண்டு காலம் தாண்டிய பிறகு - பல்வேறு மாறுதல்கள் - அவை களையெல்லாம் விளக்கவேண்டிய அவசியமில்லை - நீங்கள் புரிந்துகொண்டவர்கள். அதற்குப் பிறகுதான்,  அரசாங்கங்கள் நடைபெற்றன - இந்திய அரசியல் சட்டத்தின்படி.
தந்தை பெரியார் அவர்களுடைய சமூகப்புரட்சிக் கருத்துகளை...
வெள்ளைக்காரர்கள் நமக்கு சுதந்திரத்தைக் கொடுத்து விட்டுப் போனார்கள் என்று சொல்வதற்குமுன்னால், இந்துச் சட்டம் - மனுதர்மம் - இப்பொழுது நடைமுறையில் 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்தது இந்திய அரசியல் சட்டம். பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தந்தை பெரியார் அவர்களுடைய சமூகப்புரட்சிக் கருத்துகளில், ஜோதிபாபுலே என்ற மகாராட்டிரத்தின் மிகப்பெரிய சமுதாய புரட்சியாளரின் வழியிலே வந்து சிந்தித்தவர். அப்படி சிந்தித்த காரணத்தினால் தான் நண்பர்களே, மிகப்பெரிய அளவில் அரசியல் சட்டத்தை அவர் உருவாக்கினார்.
அந்த அரசியல் சட்டத்தின் பீடிகையிலேயே அவர்கள் பல்வேறு எதிர்ப்புகள் - உள்ளுக்குள்ளேயே - ஏனென்றால், அந்தக் குழுவில் ஆறு பேரில், நான்கு பேர் பார்ப்பனர்கள். மெஜாரிட்டி கருத்துகளுக்கு இவர் உடன்படவேண்டும். என்றா லும், அந்த காலகட்டத்தில், வரக்கூடிய சூழல் வந்தது என்று சொன்னால், அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
வலியுறுத்த முடியாத நிலையில்கூட, அவர்கள் புகுத்தினார் கள். அதிலே புகுத்திய கருத்துதான், இந்த ஆட்சி வருகிறபோது, நடக்கிற ஆட்சிக்கு, போர்ப்பாடுகள் வழிமுறைகளைக் காட்டினார்கள். எந்தக் கட்சி ஜனநாயகத்தில் வெற்றி பெறுகிறதோ - ஏது ஆளுங்கட்சியாக வருகிறது - யார் குடியரசுத் தலைவராக வருகிறார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். யார் வந்தாலும், இந்த அரசியல் சட்டத்தின்மீதுதான் பிரமாணம் செய்து பதவி யேற்றுக் கொள்வார்கள். பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து, பாராளுமன்ற உறுப்பினர் வரையில்.
இதனை தெளிவாக மிக ஆழமாக இங்கே சுட்டிக்காட்டினார் கள். இது ஒரு சமதர்ம நாடாக இருக்கவேண்டும். இது ஒரு இறையாண்மை மிக்க சுதந்திர நாடு. அந்த இறையாண்மைக்கு அடுத்தபடியாக போட்டிருக்கிற சொல் - சோசலிசம் - இரண்டா வது செக்குலர் - மதச்சார்பின்மை. மூன்றாவது ஜனநாயகம் - டெமாக்ராக்டிக். நான்காவது - குடியரசு - ரிபப்ளிக்.
விவசாயி சேற்றில்
காலை வைக்காவிட்டால்....
இந்த அடிப்படையில் இது வந்தது சாதாரணமானதல்ல. சுதந்திரம் வந்ததும், வெள்ளைக்காரனை வெளியேற்றி இருப் பார்கள் - ஆனால், அதைவிட இந்த நாட்டில் உள்ளவர்கள் கொள்ளைக்காரர்கள். வெள்ளைக்காரனாவது நம்மை உணர்ந்து விட்டான். எந்தத் தாழ்த்தப்பட்டவனை, இவர்கள் தொடாதே என்று சொன்னார்களோ, அவனையே தன்னுடைய சமையற் காரனாக வைத்துக்கொண்ட பெருமை வெள்ளைக்காரர்களுக்கு உண்டு. ஆனால், இந்தப் பார்ப்பன கொள்ளைக்காரர்களுக்கு மனிதநேயத்தோடு கூட, நமக்காக உழைக்கின்றவன் - அவன் சேற்றில் காலை வைக்காவிட்டால், அவன் சேற்றில் காலை வைத்து, அந்த நெல்லை அறுவை செய்து, பச்சை அரிசியாகக் கொடுக்காவிட்டால், நாம் பச்சரிசியை வேக வைத்து, வறுத்த முந்திரியோடு, நெய்யைச் சேர்த்து நோகாமல் சாப்பிடுகிறோமே அதற்காக அவன்தான் காரணம் என்பதைக்கூட - நன்றி உணர்ச்சியை மறந்த கூட்டம்.
நாம் நூறாண்டுக் காலம் பாடுபட்ட பிறகு - ரத்தம் கொதிக் கிறது நண்பர்களே -  நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
எத்தனை டாக்டர்களுக்கு
இந்த உண்மை தெரியும்?
இங்கே சொன்னார்களே, சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் டாக்டராக முடியும் என்று. இந்தத் தகவல் இன்றைய டாக்டர் களாக இருக்கக்கூடிய நிறைய பேருக்குத் தெரியாதே!
மருத்துவப் படிப்பு படிக்கும்பொழுது, பாடத்தைத்தான் படித்தார்கள். சமுதாயத்தில் இவர்கள் எப்படி படிக்க முடிந்தது? சமஸ்கிருதம் தேவையில்லை என்று நீதிக்கட்சி ஆணை போட்டதினால்தானே மருத்துவப் படிப்பை நம்மவர்கள் படிக்க முடிந்தது. ஏன் பார்ப்பானில் பல பேருக்கு சமஸ்கிருதம் தெரியாதே!
சுக்லம், பரதம் என்று மந்திரம் சொல்வானே தவிர, வேறு ஒன்றும் தெரியாதே. கருமாதி மந்திரத்தை கல்யாணத்தைச சொல்லி அடி வாங்கிய பார்ப்பான் எல்லாம் இருக்கானே! அதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஆகவே, இப்பொழுதான் நாம் தலையெடுக்கிறோம். அதுவும் திராவிட இயக்க ஆட்சியின் காரணத்தினால். வேறு யாரும் செய்யாத சாதனை தமிழ்நாட்டில்.
விசுவாசிகள் படையெடுக்கிறார்கள் டில்லிக்கு...
காலே இல்லாத ஒரு கட்சி - மிஸ்டு கால் கட்சி. நம்முடைய கட்சியெல்லாம் சொந்தக் கால் கட்சி- இது பந்தக் கால் கட்சிகூட அல்ல - சொந்தக்கால் கட்சி. ஆனால், மிஸ்டு காலில் கட்சியை நடத்துகிறவர்கள் சொல்கிறார்கள், கழகமே இல்லாத தமிழகம் என்று. அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் தமிழ்நாட்டில் நுழைந்துவிட்டோம் - நல்ல சர்வ அடிமைகளை நாங்கள் தேடிக் கண்டுபிடித்துவிட்டோம். நாங்கள் விழுங்கள் என்று சொல்வ தற்கு முன்பே, போட்டிப் போட்டுக்கொண்டு விழுகிறார்கள். அவர்களில் எத்தனை பிரிவு என்று பார்க்கவேண்டும் - எந்தப் பிரிவு என்றாலும், அவரை நான் விசுவாசம் காட்டுகிறேன்- இவரைவிட நான் விசுவாசம் காட்டுகிறேன் என்று இப்பொழுது விசுவாசிகள் படையெடுக்கிறார்கள் டில்லிக்கு.
‘‘கழகங்களே இல்லாத தமிழ்நாடாம்!’’
அப்படிப்பட்ட ஒரு சூழல் இன்றைக்கு - பெரியார், நம்முடைய திராவிடர் இயக்கங்கள் இருக்கின்ற தமிழ்நாட்டில், பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள்,‘‘கழகங்களே இல்லாத தமிழ்நாடு’’ என்று. கழகங்களே இல்லாத தமிழ்நாட்டை நீங்கள் உருவாக் கினால், அடுத்து தமிழ்நாடு எப்படி இருக்கும் தெரியுமா? ‘‘கல கங்களே உள்ள தமிழ்நாடாகத்தான் இருக்கும்.’’
ஜாதிக் கலவரம், மதக் கலவரம், இனக் கலவரம் எல்லா கலவரமும் வரும். உங்களுக்கு யாராவது சந்தேகம் இருந்தால், வடநாட்டைப் பாருங்கள். இங்கே நாமெல்லாம் நிம்மதியாக அமர்ந்திருக்கின்றோமே! நீங்கள் கிறித்துவராக இருந்தால் என்ன? முஸ்லிமாக இருந்தால் என்ன? சீக்கியராக இருந்தால் என்ன? நாமெல்லாம் அண்ணன், தம்பிகள் - சகோதரர்கள்.
நாம் எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல - கட்சியால் நாம் பிரியக்கூடாது. பி.ஜே.பி.யில் இருந்து, இந்து முன்னணியில் இருந்து நம்மை எதிர்க்கிறவர்களும்கூட, அவர்களும் எங்களு டைய சகோதரர்கள்தான். அவர்கள் நாளைக்குத் திருத்தப்பட வேண்டியவர்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்கும் சேர்த்து தான் நாங்கள் பாடுபடுகிறோம்.
திராவிடர் கழகம் என்பது...
எங்களுக்கொன்றும் பேதம் கிடையாது. ஒரு மருத்துவமனை என்றால், எல்லோருக்கும் சிகிச்சை அளிக்கவேண்டும். ஒரு காவல் நிலையம் என்றால், எல்லோருடைய பிரச்சினைகளையும் தீர்க்கவேண்டும்; ஒரு தீயணைப்பு நிலையம் என்றால், எங்கே தீப்பற்றினாலும் அணைக்கவேண்டும். ஒரு பள்ளிக்கூடம் என்றால், எல்லா பிள்ளைகளும் படிக்கவேண்டும். எனவேதான், திராவிடர் கழகம் என்பது ஒரு பள்ளிக்கூடம்; ஒரு தீயணைப்பு நிலையம்; ஒரு காவல் நிலையம். எல்லோருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் விடுதலை கொடுக்கக்கூடிய, எல்லோருக்கும் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தீர்க்கக் கூடியது பெரியாருடைய இயக்கம்.
சுருக்கமாக நான் விஷயத்திற்கு வருகிறேன் - நீட் தேர்வு பற்றி இங்கே புத்தகம் இருக்கிறது. அதனை வாங்கி நீங்கள் படியுங்கள்!
நம்மவர்கள் மருத்துவர்களாக வருவதற்கு நாம் எவ்வளவு போராடினோம் தெரியுமா? கலைஞர் அவர்களுடைய ஆட்சி யில், எத்தனை மருத்துவக் கல்லூரிகள் வந்திருக்கிறது.
வாசிக்கப்பட்ட ராகத்திற்குப்
பெயர்தான் ‘நீட்’
நீதிக்கட்சி ஆரம்பித்ததிலிருந்து இன்றைய வரையில், இந்தியாவில், கழகங்களே இல்லாத ஒரு நாட்டை உருவாக்கு வோம் என்று சொல்கிறார்களே, அவர்கள் ஆளுகின்ற எந்த மாநிலத்திலாவது - நாங்கள் அறைகூவல் விட்டு கேட்கிறோம் - தமிழ்நாட்டில் மட்டும்தான் 22 மருத்துவக் கல்லூரிகள் இருக் கின்றன. இங்கே இருக்கிற அளவுக்கு மருத்துவக் கல்லூரியில் இடங்கள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அதில் நோகா மல் நுழையவதற்கு வழி தேடுகிறார்கள். கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது என்பதுபோல, கருநாகத்திற்கு மகுடி வாசிப்பார்கள் பாருங்கள், அதுதான் இப்பொழுது மோடி வாசித்துக் கொண்டிருக்கிறார். அப்படி வாசிக்கப்பட்ட ராகத் திற்குப் பெயர்தான் ‘நீட்’ என்று பெயர்.
இங்கே காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்களே அவர் களைப் பார்க்கும்பொழுது எங்களுக்கு மகிழ்ச்சி. நூறாண்டு களுக்கு முன்பு போராட்டம் நடத்துகிற நம்மவர்களை கைது செய்வார்கள்; தடியால் அடிப்பார்கள்; சிறைச்சாலையில் அடைப்பார்கள். அப்பொழுதுகூட, தந்தை பெரியார் அவர்கள் சொல்வார், இதைப் பார்த்து நாம் சந்தோசப்படவேண்டும்; இதற்கு முன் நாம் அதிகாரிகளாக இருந்த பார்ப்பானிடம் அடிவாங்கினோம் - இப்பொழுது தமிழனிடம் அடி வாங்குகி றோம். கருப்பாக இருக்கிறவர்கள் எல்லாம் இப்பொழுது அதி காரிகளாக வந்திருக்கிறார்கள் என்பார்.
நாங்கள் கற்பாகவும் இருப்போம் - கருப்பாகவும் இருப்போம்
வடநாட்டில் இருந்த ஒரு ஆள் வருகிறான் - திருவள்ளுவர் முகமூடியை அணிந்துகொண்டு வருகிறான். திருக்குறளை கையில் ஏந்திக்கொண்டு வருகிறான். நான் அங்குபோய் ஏற்று மதி செய்யப் போகிறேன் என்கிறான். ஆனால், சுய புத்தி, சுய உருவத்தை அவனால் விட முடியவில்லை - பி.ஜே.பி.யைச் சேர்ந்த அவன் என்ன சொல்கிறான்  - நீங்கள் எல்லாம் கருப் பர்கள் - நாங்கள் எல்லாம் பியூர் ஒயிட். நாங்கள் எல்லாம் வெள்ளை - ஏனென்றால், வெள்ளைக்காரர்களுக்கும், அவர் களுக்கும் சம்மந்தம் உண்டு.
நாங்கள் வெயிலிலேயே நின்ற கூட்டம் - நாங்கள் கருப்பாகத் தான் இருப்போம். நாங்கள் கற்பாகவும் இருப்போம் - கருப் பாகவும் இருப்போம் என்பதுதான் மிக முக்கியம்.
கருப்பாக இருக்கின்றவர்களிடம் நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறான். உன்னை யார் சகித்துக் கொண்டிருக்கச் சொன்னது?
இட ஒதுக்கீட்டை, பெரியார் கேட்டார், அண்ணா கேட்டார், கலைஞர் கேட்டார் என்றார்கள்; இப்பொழுது நாம் கேட்க வில்லை. வடக்கே இருக்கிறவர்கள் கேட்கிறார்கள். நாம் எல் லோரும் கேட்டு, மண்டல் கமிசன் வந்த பிறகு, பிற்படுத்தப்பட்ட வர்களை ஒதுக்கவேண்டும் என்கிறார்கள் - அம்பேத்கர் அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டு, நாம் எல்லோரும் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் எந்த மூலையில் இருந்தாலும் வந்துவிடவேண்டும் என்கிறார்கள்.
பெரியார் இணைக்கிறார்;
திராவிடர் கழகம் இணைக்கிறது!
கடவுள்கள் பிரிக்கின்றன; கட்சிகள் பிரிக்கின்றன; மதங்கள் பிரிக்கின்றன - பெரியார் இணைக்கிறார்; திராவிடர் கழகம் இணைக்கிறது!
அந்த அடிப்படையில் வருகின்றபொழுது, இன்றைக்குத் தமிழ்நாட்டில் 22 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இங்கே அசாமில் இருக்கிறவர்களுக்கோ, உத்தரப்பிரதேசத்தில் இருக்கிற வர்களோ இங்கே இடம் கிடையாது. உத்தரப்பிரதேசத்தில் சாமி யார்கள் எல்லாம் முதலைமைச்சராக ஆகிறார்கள். குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒரு தாழ்த்தப்பட்டவரை நிறுத்துகிறோம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
மேலே இந்த முகமூடி - அங்கே கலவரம் நடக்கிறது - மாட்டைப்பற்றி கவலைப்படுகிறார்கள் - மனிதர்களைப்பற்றி கவலைப்படுவது கிடையாது. தாழ்த்தப்பட்ட சகோதரர்களை அடிக்கிறார்கள், வெட்டுகிறார்கள், கொல்லுகிறார்கள் - அவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருக்கின்ற ஆதித்தியநாத் யோகி என்கிற சாமியார் வித்தை காட்டுகிறார். பிரதமர் மோடி வித்தை காட்டினால், இவர் ஒரு வித்தை காட்டுகிறார். வித்தைகளிலேயே வாழ்கிறார்கள் அவர்கள்.
தாழ்த்தப்பட்டவர் முதலமைச்சரை தொட்டுவிடக்கூடாது என்பதற்காக....
அப்படி அவர் வித்தை காட்டும்பொழுது என்ன சொன்னார் தெரியுமா? பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை நான் பார்க்க வேண்டும் என்கிறார். குடிமக்களை முதலமைச்சர் பார்ப்பது என்பது வழமைதான். ஆனால், அங்கே அவர் செல்லும்பொழுது, காவல்துறையினரை அழைத்து, அவர்களிடம் சோப்புகளை கொடுத்து, தாழ்த்தப்பட்டவர்களை குளிக்க வைத்து அழைத்து வாருங்கள் என்று சொல்லி, அவர்களை குளிக்க வைத்து அழைத்து வந்து அமரச் சொல்லி, ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவரின் பின்னாலும் ஒரு காவல்துறையினரை நிற்க வைத்து, அவர்க ளுடைய தோளைப் பிடித்து அழுத்திக் கொண்டு நிற்கிறார்கள். ஏனென்றால், அந்தத் தாழ்த்தப்பட்டவர் முதலமைச்சரை தொட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் - தீண்டாமை. இதுதான் அங்கே!
கழகங்களே இல்லாத தமிழ்நாடு வந்தால், அதுபோன்ற நிலைதான். காவல்துறையினருக்கு என்ன வேலை வரும் என்றால், தாழ்த்தப்பட்டவரின் தோளை அழுத்திப் பிடித்துக் கொண்டு, தொட்டுவிடக்கூடாது என்று பழைய தீண்டாமையைக் கொண்டு வருவார்கள். இதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது.
குஜராத்திற்கு ஒரு கேள்வித் தாள்; தமிழகத்திற்கு வேறொரு கேள்வித்தாள்!
கிராமப்புறத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இனிமேல் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியாது. சமச்சீர் கல்வி வந்து நம்முடைய பிள்ளைகள் எவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு ஒன்றும் அறிவு குறைவு கிடையாது. தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் மாணவர்கள் எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு 200 வாங்குகிறார்கள். இதைவிட மதிப்பெண் வாங்கமுடியுமா? ஆனால், அவர்களுக்கு இடம் கிடைக்குமா மருத்துவக் கல்லூரியில் என்றால், கிடைக்காது.
நாங்கள் டில்லியிலிருந்து ஒரு நுழைவுத் தேர்வு வைப்போம். அந்தத் தேர்வை நீங்கள் எழுதவேண்டும். குஜராத் மாநிலத்திற்கு ஒரு கேள்வித் தாள்; தமிழகத்திற்கு வேறொரு கேள்வித்தாள். அங்கே பார்த்து எழுதலாம் - இங்கே பார்க்காமல் எழுதவேண்டும்.
தேர்வு எழுதச் செல்லும்பொழுது நண்பர்கள் சொல்வார்கள், ‘‘பார்த்து எழுதுப்பா’’ என்று. அங்கே பார்த்து எழுதுகிறார்கள் - இங்கே பார்க்காமல் எழுதினார்கள்.
உங்களுடைய சந்ததிகளுக்காக நாங்கள் எங்கள் ரத்தத்தை சிந்துகிறோம்
அப்படி ஒரு சூழ்நிலையில், பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள்கூட மருத்துவக் கல்லூரியில் சேருவது மிகவும் கடினம். இதைத்தான் நாங்கள் கேட்டோம். எங்களுக்கு என்ன வேலை? எங்களுடைய பேரப் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதற்காகவா? அல்லது பெரியாருடைய பேரப் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதற்காகவா? அல்லது இங்கே யாருடைய பேரப் பிள்ளைகளுக்காகவாவது கேட்கிறோமோ? அட, முண்டங்களே, புரியாத முண்டங்களே! உங்களுடைய சந்ததிகளுக்காக நாங்கள் எங்கள் ரத்தத்தை சிந்துகிறோம் - அதனை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்!
இந்தத் திராவிடர் இயக்கங்களை இன்றைக்குப் பிரிக்கிறார்கள் - நரி வலமும் போகவேண்டாம் - இடமும் போகவேண்டாம் - மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல, இன்றைக்கு நம்மிடம் இருப்பதும் பறிபோகிறதே -
காவிரி ஆணையம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது. காவிரி ஆணையமா? கிடையாது. அதில் கருநாடகத்திற்குச் சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்கிறது.
மனுநீதி - ஒரு குலத்துக்கொரு நீதி
ஆனால், நீட் பிரச்சினையில் என்ன சொல்கிறார்கள்? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு  - அதனை மீற முடியாது என்று சொல்கிறார்கள். சரி, அதே உச்சநீதிமன்றத் தீர்ப்புதானே காவிரி நதிநீர் ஆணை யம் அமைக்கவேண்டும் என்பது. ஏன் மோடி செய்யவில்லை? ஏன் மத்திய பி.ஜே.பி. அரசு செய்யவில்லை? தலைக்கு ஒரு சீயக்கா? தாடிக்கு ஒரு சீயக்காவா? என்று பெரியார் கேட்பார். அதுபோன்று, அதற்கு ஒரு நீதி - இதற்கு ஒரு நீதி. ஆம்! அதுதான் மனுநீதி - ஒரு குலத்துக்கொரு நீதி. அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும் தோழர்களே!
எவ்வளவு பெரிய கொடுமை - காவிரி நதிநீர் ஆணையம் கிடையாது. ஆனால், இது மட்டும் உண்டு.
அரசியல் சட்டத்தில், மாநில அரசுக்கு அதிகாரம் சில சட்டங்கள். மத்திய அரசுக்கு அதிகாரம் - சில சட்டங்கள்.
இரண்டு அரசுகளும் பொதுவாக செய்யலாம் - பொதுப் பட்டியலில் சில சட்டங்கள்.
இந்தப் பொதுப் பட்டியல் என்பதில், எந்தச் சட்டம் செய்யவேண்டும் என்றாலும், மத்திய அரசு செய்யவேண்டும் என்றாலும், அரசியல் சட்டத்தில் இருக்கிற முறைப்படி, மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து, பிறகு ஒப்புதல் பெற்று செய்யவேண்டும். இது அரசியல் சட்டம் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
பழைய மாதிரி பஞ்சகச்சம் கட்டிக் கொள்ளவேண்டும் என்பார்கள்
திடீரென்று நீட் தேர்வு வைப்போம் என்கிறார்கள். நீ என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில், அரிசியை தடை செய்தாலும் செய்வார்கள் - கோதுமையைத்தான் சாப்பிட வேண்டும் என்பார்கள். ஏனென்றால், இந்தியா ஒருமைப்பாடு நிறைந்த நாடு என்பார்கள். எல்லோரும் பழைய மாதிரி பஞ்சகச்சம் கட்டிக் கொள்ளவேண்டும் என்பார்கள். இன்னும் கொஞ்ச நாளில், உச்சிக்குடுமி வைத்துக்கொள்ளவேண்டும் என் பார்கள் - ஏனென்றால், இந்தியா ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்பார்கள்.
உண்ணுதலும், எண்ணுதலும் அடிப்படை உரிமை - இதைத் தடுக்க எந்த அரசாங்கத்திற்கும் உரிமையில்லை என்று மக்கள் கிளர்ந்தெழக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு அடக்குமுறை தர்பார் - இன்றைக்கு ஒரு பெரிய விசேசமான நாள் - இந்திய வரலாற்றில்.
இந்திரா காந்தி அம்மையார் - நெருக்கடி காலத்தை இன் றைக்கு ராத்திரிதான் அன்று பிரகடனப்படுத்தினார். அதனை எதிர்த்த ஒரே முதுகெலும்பு உள்ள முதலமைச்சர் கலைஞர் அவர்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி போனால் போகட்டும் என்று.
இந்த இனத்தின் மீட்சிக்காக வந்த
இயக்கம் திராவிடர் இயக்கம்
இன்றைக்குக்கூட தி.மு.க.விற்கு சிலர் புதிதாக வருகின்ற வர்கள் பதவி, பதவி என்று. பதவிக்காக வந்ததல்ல நண்பர்களே, இந்த இனத்தின் உதவிக்காக வந்தது. ஆட்சிக்காக வந்ததல்ல திராவிடர் இயக்கம் - இந்த இனத்தின் மீட்சிக்காக வந்த இயக்கம் திராவிடர் இயக்கம்.
இன்றைக்கு சில பேர் கட்சி மாறுகிறார்கள் பாருங்கள் - முன் பெல்லாம் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறினார் கள். ஆனால், இன்றைக்கு ஒரு கட்சிக்குள்ளேயே மாறிக் கொள்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை. இது தமிழ்நாட்டில்தான் மிகவும் விசித்திரம்.
ஒரு கட்சியில் இருக்கிறவன், இன்னொரு கட்சிக்காரனைக் கேட்பான், ஏங்க நீங்கள் அந்தக் கட்சிக்குப் போய்விட்டீர்களா? என்று கேட்பார்கள் முன்பு.
இப்பொழுது என்ன கேட்கிறார்கள், நீங்கள் அந்த அணிக்குப் போய்விட்டீர்களா? என்று கேட்கிறார்கள்.
நாங்கள் எஜமானர் போன்று இருக்கிறோம்
இந்தப் பிரிவு - அணி என்றால் என்ன அர்த்தம்? நல்ல வாய்ப்பாக எங்களையெல்லாம் பெரியார் அரசியலுக்கே போகாதே என்று சொன்னார். நாங்கள் எஜமானர் போன்று இருக்கிறோம். போனவர்கள் எல்லாம் திணறிக் கொண்டிருக் கிறார்கள். ராமசாமி தவறாக நினைக்கமாட்டார் - அவருக்கும் இது தெரியும்.
எதற்காக இதனை நான் சொல்கிறேன் என்றால், அவ்வளவு கொடுமை நடைபெறுகிறது அங்கே.
காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னால், அதனை மத்திய அரசு தூக்கிப் போடுகிறது - ஏனென்றால், கருநாடகத்தில் அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக.
நம்முடைய விவசாயிகள் டில்லியில், கோவணம் கட்டிக் கொண்டு போராடினார்கள்; பிறகு கோவணத்தை அவிழ்த்து விட்டுப் போராடினார்கள். உலகம் முழுவதும் அந்தச் செய்தி பரவியது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்கள் இங்கே - மத்தியில் அவன் ‘நை’ என்கிறான். அடுத்த பெரிய துரோகம் என்னவென்றால், நம்முடைய பிள்ளைகள் படிக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.
காமராசர் ஆட்சி - திராவிடர் இயக்கத்தினால் நம்முடைய பிள்ளைகள் படித்தார்கள். தகுதி - திறமை என்றார்கள் அப் பொழுது - தந்தை பெரியாரால் பாதுகாக்கப்பட்டு, முதலமைச் சராக ஆக்கப்பட்ட பச்சைத் தமிழர் காமராசர் கேட்டார், அவருடைய வார்த்தையில் நான் சொல்கிறேன், யாரும் தவறாக நினைக்கவேண்டாம்.
‘‘நான் பறையனை டாக்டராக்கினேன்; அவன் ஊசி போட்டான் - எந்த நோயாளி செத்துப் போனான்?’’
‘‘பள்ளனை நான் இன்ஜினியராக்கினேன் - அவன் பாலம் கட்டினான், எந்தப் பாலம் இடிந்து போனது சொல்?’’ என்று கேட்டார். என்ன தகுதி திறமை? உன்னுடைய தகுதியும் எனக்குத் தெரியும் - உனக்குச் சொல்லிக் கொடுத்தானே, அவனுடைய தகுதியும் தெரியும் என்று கேட்ட காமராசர் - அவரைப் பாதுகாத்தது திராவிடர் இயக்கம். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தது திராவிடர் இயக்கம்.
கலைஞரின் பெருந்தன்மை!
இன்றைக்குக் கலைஞர் அவர்கள் இருந்து, கருத்துகளை சொல்லவில்லை என்கிறபொழுது, எங்களுடைய நெஞ்ச மெல்லாம் வெடிப்பதைப் போல இருக்கிறது. ஆனால், அந்தக் கலைஞர் அவர்கள் எவ்வளவு பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். அந்தப் பெருந்தன்மை திராவிட இயக்கத்தைத் தவிர, வேறு எந்த இயக்கத்திலாவது வருமா? என்று எண்ணிப் பாருங்கள்.
என்ன செய்தார்? ஜூலை 15 - காமராசர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளை கல்வி நாளாக ஆக்கி, அரசாணையும் போட்டது திராவிட முன்னேற்றக் கழகம். இன்னொரு கட்சித் தலைவருடைய பிறந்த நாளை ஆணையாகப் போடுவார்களா? பெரியாருக்குப் போடவில்லை - அண்ணாவிற்குப் போட வில்லை. காமராசருக்குப் போட்டார் என்றால், மாற்றான் தோட் டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பது வெறும் தத்துவம் அல்ல - நடைமுறையில் காட்டினார்கள். பெருந்தன்மை அது தான்.
அப்படிப்பட்ட அந்தக் காமராசர் - கல்விக் கண்களைத் திறந்தார். அதனை அகலப்படுத்திக் கொண்ட போனார்கள் திராவிட இயக்கத்தினர். நீதிக்கட்சி தொடங்கியது. அப்படிப்பட்ட இடத்தில், இன்றைக்கு ‘நீட்’ தேர்வு என்று சொல்கிறார்கள்.
மெட்ரிகுலேசன் பள்ளி என்று வந்தால், தமிழகத்தில் இருக்கிற சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவரிடம் சட்டமன்றத்தில் கேள்வி கேட்டிருக்கிறார்கள் - பதிலும் சொல்லியிருக்கிறார்.
நீட் தேர்வு முடிவு எப்படி வந்தாலும் பரவாயில்லை. அரசியல் சட்டத்தின் பொதுப்பட்டியல்படி, பிச்சையல்ல - சலுகையல்ல - நமக்கு இருக்கிற உரிமை. அந்த உரிமையின் அடிப்படையில், தெளிவாக நாம் சட்டம் இயற்றியிருக்கிறோம். எங்களுக்கு விதி விலக்குக் கொடுங்கள் நீட் தேர்விலிருந்து என்பது இருக்கிறதே - மோடியோ - அங்கே இருக்கிற குடியரசுத் தலைவரோ போடுகிற பிச்சையல்ல -
அதற்குப் பதிலாக நமக்கு இருக்கிற உரிமை - அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம் என்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்களோ, அந்த அரசியல் சட்டப்படி இருக்கிற உரிமை.
தமிழ்நாட்டின் நலன் இது என்று தி.மு.க.வும் ஆதரிக்கிறது
இங்கே சட்டம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் நாங்கள், உங்களுக்கு நல்ல பெயர் வந்துவிடும் - அதனால் நாங்கள் அதனை எதிர்ப்போம் என்றா எதிர்த்தார்கள் - இல்லையே! தமிழ்நாட்டின் நலன் இது என்று தி.மு.க.வும் ஆதரிக்கிறது என்றார்.
ஆகவே, ஒரு மனதாக அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது, பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கிறபோது. இப்பொழுது பன்னீரு, செந்நீரு, வெந்நீரு எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டீர்களே!
நீங்கள் என்ன கேட்கவேண்டும்?  அய்யா நீட் தேர்வுக்கு நாங்கள் இருக்கும்போது மசோதா நிறைவேற்றி உங்களுக்கு அனுப்பி வைத்தோம். அதனை நீங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருந்தால் என்ன நியாயம்? என்று டில்லிக்குப் போனவர்கள் கேட்டிருக்கவேண்டாமா?
அதைவிட்டுவிட்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று போட்டி போட்டுக்கொண்டு சொல்கிறார்கள். ஓட்டுப் போடுங்கள் - அது உங்கள் உரிமை. ஆனால், இந்த நாட்டினுடைய நலனைக் காக்க வேண்டாமா? கோடானகோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பெண்களுடைய கல்வி வாய்ப்புகள் - மருத்துவக் கல்வி வாய்ப்புகளை நீங்கள் காப்பாற்றவேண்டாமா? அதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டாமா?
பா.ஜ.க. சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நாமிநேசன் போடுவதற்காக இங்கே இருந்து இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் எல்லாம் சென்றார்கள். அப்பொழுது அவர்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும்? நீங்கள் மூன்று அணிகளாகப் பிரிந்திருக்கிறீர்கள்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் சொன்ன தகவல்
தமிழக சட்டமன்றத்தில் ஒரு முக்கியமான தகவலைச் சொன்னார்கள்.
நம்முடைய சட்டமன்றத்தில் ஏற்கெனவே இரண்டு மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனையில் இருந்துகொண்டு இருக்கின்றன.
மத்திய அரசில் இரண்டு மசோதாக்கள் அங்கே இன்னும் நிலுவையில் இருக்கிற காரணத்தினால், தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு எழுதியவர்கள் நான்கு லட்சத்து இருபதாயிரம் மாண வர்கள்.  மெட்ரிகுலேசன் பள்ளி, சமச்சீர் கல்வி வழி படித்தவர்கள் இவர்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள் 4,675 மாணவர்கள். இதனை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.
95 சதவிகிதம் மெட்ரிகுலேசன், சமச்சீர் கல்வி வழி படிக் கிறார்கள். இவர்கள் படித்த பாடத் திட்டத்திலிருந்து கேள்விகளை தயாரிக்கவில்லை. மீதி அய்ந்து சதவிகிதம் இருக்கிறத - சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து கேள்விகளைத் தயாரிக் கிறார்கள். பாடத் திட்டத்தில் இல்லாத கேள்விகளை கேட்டால், நம்முடைய பிள்ளைகள் பாஸ் ஆக முடியுமா?
85 சதவிகிதம் நம்முடைய மாணவர்களுக்குக் கொடுக் கிறார்களாம். 15 சதவிகிதம் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித் தவர்களுக்குக் கொடுக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள்.
என்ன பாதுகாப்பு செய்யப் போகிறீர்கள்?
இது சட்டபூர்வமாக நல்ல திட்டம் என்று நீங்கள் அறிவிக்கிறீர்கள். மற்றவர்கள் சும்மா இருப்பார்களா? நீதிமன்றம் செல்லமாட்டார்களா? அதற்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா? அதற்கு என்ன பாதுகாப்பு செய்யப் போகிறீர்கள் என்கிற கேள்வி இருக்கிறது.
எனவே நண்பர்களே, இந்த நீட் தேர்வு என்பது இருக்கிறதே - அதனை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்தே ஆகவேண்டும். அதற்காக அத்தனை கட்சிகளும் ஒன்று சேரவேண்டும். நுழைவுத் தேர்வை எதிர்த்து 21 ஆண்டுகளாக போராடினோம். திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் போராடியது. அதில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
அடுத்தபடியாகஇன்னொரு பெரிய கொடுமை என்ன வென்றால், மாட்டுக்கறிப் பிரச்சினை. யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதைப்பற்றி நீ என்ன தீர்மானிப்பது.
மாட்டுக்கறியில்தான் அதிக சத்து உண்டு
மாட்டுக்கறியை சிறுபான்மை சமுதாயமாக இருக்கின்ற இஸ்லாமியர்கள் மட்டுமா சாப்பிடுகிறார்கள்? உழைப்பாளிகளாக இருக்கிற அத்துணைப் பேரும் - அதுவும் இந்தப் பகுதியில் இருக்கின்றவர்களுக்கு சொல்லவேண்டிய அவசியமேயில்லை. ஆட்டுக்கறி என்ன விலை? கோழிக்கறி என்ன விலை? மாட்டுக்கறி என்ன விலை? என்று பார்த்தால், இதைவிட மக்களுக்கு மலிவான கறி வேறு உண்டா? அதுமட்டுமல்ல, சத்து என்று எடுத்துக்கொண்டாலும், மாட்டுக்கறியில்தான் அதிக சத்து உண்டு என்று எல்லா நிபுணர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
இரண்டாவது உணவு பழக்க வழக்கம் - காய்கறி சாப்பிடுகிறவர்களிலேயே, ஒருவருக்குக் கத்திரிக்காய் பிடிக்கும் - பாகற்காய் பிடிக்காது. இன்னொருவருக்கு பாகற்காய் பிடிக்கும் - கத்திரிக்காய் பிடிக்காது.
பெரும்பாலோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது - அப்படி அவர்கள் திருமண விருந்தில், பந்தியில் அமர்ந்திருக்கும்போது, மூன்று இனிப்புகளைப் போடுகிறார்கள் - மூன்றாவது இனிப்பை எடுத்துப் பார்த்து, சிறிய லட்டாகப் போட்டுவிட்டார்களே, பெரிய லட்டாகப் போட்டிருக்கலாமே என்பார்கள்.
ஒரு நாட்டினுடைய பிரதமர் சொல்வதற்கு உரிமை உண்டா?
எனக்கு சர்க்கரை வியாதி என்றால், எனக்கு இனிப்புப் பிடிக்காது என்றால், நான் என்ன செய்யவேண்டும் - அந்த இனிப்பை ஒதுக்கிவிட்டு, மீதியை சாப்பிடவேண்டும். அப்படியில்லாமல், பந்தியில் அமர்ந்திருக்கும் அனைவரும் லட்டு சாப்பிடக்கூடாது என்று சொன்னால், என்னைப்பற்றி என்ன நினைப்பீர்கள்? அப்படி சொல்வதற்கு எனக்கு உரிமை உண்டா?
தனிப்பட்ட விருந்திலேயே அந்த உரிமை இல்லை என்னும்பொழுது, ஒரு நாட்டினுடைய பிரதமர் சொல்வதற்கு உரிமை உண்டா? கோமாதா - குலமாதா - விவேகானந்தரிடம் போய் கேட்டார்கள். மாட்டைப் போய் பாதுகாக்கிறீர்களே, மனிதர்களைப் பாதுகாருங்கள் என்று சொன்னார். ‘‘பார்ப்பனரை தோலுரிக்கிறார்’’ என்கிற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் மிகத் தெளிவாக உங்களுக்குப் புரியும்.
முதன்முதலில், மாட்டுக்கறி சாப்பிடுகின்ற பழக்கத்தை உண்டாக்கியவர்கள் ஆரியர்கள்தான் - பார்ப்பனர்கள்தான். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், பா.ஜ.க. நண்பர்களுக்கு இப்பொழுது அம்பேத்கர்மேல் மிகவும் பிரியம் வந்துவிட்டது. அம்பேத்கர் எங்கெங்கே சென்றாரோ, அந்த இடத்தையெல்லாம் நான் சுற்றுலா தளமாக்குகிறேன் என்கிறார் மோடி அவர்கள்.
அம்பேத்கர் எழுதிய ‘‘இந்து மதத்தின் புதிர்கள்!’’
நண்பர்களே, நேரமின்மை காரணத்தினால், ஏன் இந்து மதத்தை மட்டும் தாக்கிப் பேசுகிறீர்கள் என்று கேட்பார்கள் - அந்த நண்பர்கள் - அம்பேத்கர் எழுதிய புத்தகம் - ‘‘இந்து மதத்தின் புதிர்கள்’’ அந்த நூலில், தெளிவாக இராமாயணத்தில் வரக்கூடிய, இவர்கள் வணங்கக்கூடிய, ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் மாமிசம் கறி சாப்பிட்டார்கள் காட்டிலிருக்கும்போது வேட்டையாடி. மது சாப்பிட்டார்கள். வால்மீகி ராமாயணத்தி லேயே அதற்கு ஆதாரம் இருக்கிறது என்று, நாங்கள் சொல்ல வில்லை, பெரியார் சொல்லவில்லை, கலைஞர் சொல்லவில்லை - முழுக்கமுழுக்க அம்பேத்கர் அவர்கள் ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
ஆகவே, புராண காலத்திலிருந்து மாட்டுக்கறியை சாப்பிட்டவர்கள் யார் என்றால், அவர்கள்தான். புத்தர் வந்த பிறகு, அவர்கள் எல்லாம் வந்து மாற்றிய பிறகு, புத்த மதத்திற்கு செல்வாக்கு வந்த பிறகு, இவர்கள் மாறினார்கள்.
அதுமட்டுமல்ல, மனுதர்மத்திலே இருக்கிறது - ஏனென்றால், இந்து முன்னணிக்காரர்கள் நாங்கள் இப்படி பேசுகிறோமே என்று எங்களை கோபித்துக் கொள்வார்கள். உங்களைப் புண்படுத்துவதற்காக அல்ல நண்பர்களே - உங்களையும் பண்படுத்துவதற்காக இதனை நாங்கள் சொல்கிறோம்.
இது அசல் மனுதர்ம சாஸ்திரம் - அதனை நாங்கள் அப்படியே போட்டோ காப்பி எடுத்துப் போட்டிருக்கிறோம்.
அய்ந்தாவது அத்தியாயத்தில்,
மந்திரம் அல்லாது கொல்லப்பட்ட பசுக்களை பித்திரன் ஒருபோதும் புசிக்கக்கூடாது. பசுமாட்டை சாப்பிடலாம் - மந்திரம் சொல்லிவிட்டு சாப்பிடலாம்.
மனுதர்மம் அய்ந்தாவது அத்தியாயம்; 39 ஆவது சுலோகம்:
‘‘எக்கியத்திற்காகவே பசுக்கள் பிரம்மனால் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன. அந்த எக்கியஞ்செய்தால் உலகமெல்லாம் க்ஷேமத்தையடைகின்றது. ஆகையால், எக்கியத்தில் செய்யும் பசு ஹிம்சை ஹம்சையல்ல.’’
யக்ஞத்திற்காகவே பசுக்கள்  பிரம்மனால் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன. அந்த யக்ஞம் செய்தால், உலகமெல்லாம் க்ஷேமமடைகின்றது. அந்த யக்ஞம் செய்யும் பசு இம்சை இம்சை அல்ல. மதுவர்க்கம், யக்ஞம் சிரார்த்தம் இவைகளுக்கு மாத்திரம் ஜந்து இம்சை செய்யலாம்.  மந்திரங்களைச் சொல்லி வெட்டலாம் என்கிறது மனுதர்மம். முஸ்லிம்கள் ‘ஹலால்’ சொல்லுவதுகூட இவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டார்களோ!
(ஹலால் என்ற அரபிச் சொல் சட்டத்தைக் குறிப்பதாகும். இதிலிருந்துதான் லா என்ற ஆங்கிலச் சொல் உருவானது. உணவுக்காக விலங்குகளை அறுக்கும்போது ‘‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’’ என்று கூறுவார். இதுதான் இறைச்சிக்காக விலங்குகளை அறுக்கும்போது கூறுவேண்டிய இஸ்லாமியச் சட்டம் - இந்த  சட்டப்படி அறுக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ‘ஹலால்’ என்று உணவகங்களில் குறிப்பிடுவார்கள்).
மற்ற விஷயத்திற்குக் கூடாது. சராசரி விஷயத்தில் வேதத்தில் சொல்லப்பட்ட இம்சையை இம்சை என்று நினைக்கக் கூடாது. வேதத்தினின்றே தர்மம் விளங்குகிறது அல்லவா! மந்திரமில்லாது கொல்லப்பட்ட பசுக்களை ஒருபோதும் உண்ணக்கூடாது!
பெரிய சிக்கல் என்னவென்றால், இதையெல்லாம் நாங்கள் தான் படித்துத் தொலைக்கிறோம். மற்றவர்களுக்கு எடுத்து எடுத்து எத்தனை கூட்டத்தில் சொல்வது. மறுபடியும் மறுபடியும் வருகிறதே!
திராவிடர் கழகத்தில் சேருங்கள்!
எனவே, நண்பர்களே! உங்கள் உணவுக்கு ஆபத்து
உங்கள் உரிமைக்கு ஆபத்து
உங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு ஆபத்து. இதையெல்லாம் போக்கவேண்டுமானால், ஒரே வழி - திராவிடர் கழகத்தில் சேருங்கள்!
திராவிடர் இயக்கத்தைப் பலப்படுத்துங்கள்!
யார் ஆள வரவேண்டுமோ - அவர்களுக்கு உரிமை கொடுத்து ஆள வையுங்கள்!
யாரை வீட்டுக்கு அனுப்ப முடியுமோ - அவர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்புங்கள்!
நீங்கள் அனுப்பாவிட்டாலும், அவர்கள் செல்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இதுதான் உண்மை!
நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-------------
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று 
சொல்லவேண்டாமா?
அருமை அ.தி.மு.க. சகோதரர்களே, உங்களு டைய பிள்ளைகளும் படிக்கவேண்டும்; நாம் யாருக்கும் விரோதிகள் அல்ல. கட்சியினால் நாம் பிரிந்திருக்கக்கூடாது. பா.ஜ.க. நண்பர்களுக்கும் சேர்த்து சொல்கிறேன். அவர்களுடைய பிள்ளை களும் படித்து டாக்டராக வேண்டும்.
இவர்கள் என்ன சொல்லியிருக்கவேண்டும்? எங்களுடைய தமிழ்நாட்டில் உள்ள உறுப்பினர்களின் ஓட்டை கேட்கிறீர்கள் - நிலுவையில் இருக்கும் இரு மசோதாக்களை இப்பொழுது குடியரசுத் தலைவராக இருக்கிறவரிடம் வையுங்கள் - வருகிறவர் படிப்ப தற்கு கொஞ்ச நாள்களாகும்.
சட்டப்படி நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம் - எதிர்க்கட்சியும் எதிர்க்கவில்லை - ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்.
நாடாளுமன்றத்தின்
உறுதிமொழி கமிட்டி!
ஏற்கெனவே இந்த நீட் தேர்வு பற்றி நாடாளு மன்றத்தில் அளித்த உறுதிமொழி நிறைய பேருக்கு தெரியாது.
எந்த மாநிலம் விலக்குக் கேட்கிறதோ - அந்த மாநிலத்திற்கு விலக்கு உண்டு - அதனை நாங்கள் கொடுப்போம். இது நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழி.
சட்டமன்றத்திற்குச்சென்றவர்களுக்குத் தெரியும்-அசுரன்ஸ் கமிட்டி என்ற ஒன்று உண்டு. நாடாளுமன்றத்திலும் அது உண்டு. உறுதிமொழி கமிட்டி - கொடுக்கப்பட்ட என்ன உறுதிமொழிகள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது - செயல்படுத்தப் படவில்லை என்று.
அதனை கேட்கவேண்டாமா?
அ.தி.மு.க. மூன்று அணிகளாக இருந்தாலும், நாங்கள் எல்லோரும் ஓட்டுப்போடுவது நிஜம். பா.ஜ.க.விற்கு அடுத்தபடியாக அதிக ஓட்டு - சக்தி அ.தி.மு.க.விடம்தான் இருக்கிறது.
கழகமே இல்லாத ஆட்சி என்று இப்பொழுது சொல்லுங்களேன். ஒரு பக்கம் இந்த முகம் - இன் னொரு பக்கம் அந்த முகம். கேட்டால், ஆறுமுகம்.
கழகங்களே இல்லாத ஆட்சி என்று முண்டா தட்டுகிறீர்கள் - பிறகு ஏன் கழகத்துக்காரர்களிடம் காலில் விழுகிறீர்கள்? இல்லை நாங்கள் காலில் விழமாட்டோம் - அவர்களை மிரட்டி எங்களுடைய காலில் விழ வைப்போம் என்கிற நிலை வந்தால்,
நீங்கள் என்ன செய்யவேண்டும்? இங்கே செய்தியாளர்நண்பர்கள்இருக்கிறீர்கள்- அரசாங்கத்தினுடைய காதுகள் கேட்டுக்கொண்டி ருக்கின்றன என்னுடைய உரையை - இந்த வாய்ப்பை வைத்து சொல்கிறேன்,
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.விற்கு இது ஒரு நல்லவாய்ப்பு. குறைந்த பட்சம் நீங்கள் என்ன கேட்கவேண்டும்?- இந்த நீட் தேர்வுக்கு விலக்குக் கொடுங்கள் - அடுத்த நாள் உங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம்- இல்லையானால், குடியரசுத் தலை வர் தேர்தலை புறக்கணிப்போம் என்று சொல்ல வேண்டுமா இல்லையா? அதற்குப் பெயர்தானே முதுகெலும்பு.
இப்படி நீங்கள் சொன்னீர்களானால், இந்தப் பிரச்சினையில் உங்களை தி.மு.க. ஆதரிக்கும். எல்லாக் கட்சிக்காரர்களும் ஆதரிப்பார்கள். தமிழ் நாட்டிலுள்ள பெற்றோர்களின் நெஞ்சில் பால் வார்த்ததைப்போல் இருக்கும். எதிர்காலத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இன்னும் நாள்கள் இருக்கிறது.
எனவே,அ.தி.மு.க.நண்பர்களுக்கு,ஆளும் அணிகளுக்கு,ஆளாதஅணிகளுக்கு,ஆள ஆசைப்படுகிற அணிகளுக்கு  எல்லா அணி களுக்கும் சேர்த்து - நம்முடைய சகோதரர்கள்தானே - நாங்கள் தாய்க்கழகம்தானே - அதனால்தான், தாய்க்கழகத்தைச் சேர்ந்தவன் என்கிற உரிமை யில் சொல்கிறேன் - சில பேர் சரியாகப் புரிந்து கொள்வதில்லை - அந்த உரிமையோடு நான் தெளிவாகச் சொல்கிறேன் - இதைவிட உங்களுக்கு நல்ல வாய்ப்பு வேறு கிடையாது.
எனவே, நீட் தேர்வில் எங்கள் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து, ஜல்லிக் கட்டுக்கு எப்படி நீங்கள் மெரீனா கூட்டத்தைப் பார்த்தவுடன் கையெழுத்துப் போட்டீர்களோ, அதேபோல, இதிலும் கையெழுத்துப் போடுங்கள் என்று சொல்லுங்கள்.
அவர்களுக்கும் சேர்த்து நன்றி! அவர்களுக்கும் சேர்த்து நன்றி தெரிவிப்போம்.
- குன்னூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...