Monday, June 5, 2017

மதவாத சக்தியை முறியடிப்போம்! பெரியாரை ஏற்றுக்கொண்டவர்களும் - மார்க்சியவாதிகளும் ஒன்று சேரவேண்டிய நேரம் இது! கலைஞர் பிறந்த நாள் விழாவில் தலைவர்கள் முழக்கம்

சென்னை, ஜூன் 4 மதவாத சக்திகள் ஒன்று திரண்டு முறியடிப்போம் என்றும், கலைஞர் அவர்கள் சிறந்த சமூகநீதியாளர், மதச்சார்பின்மையில் நம பிக்கை கொண்டவர் என்றும் அகில இந்திய தலைவர்கள் முரசறைந்தனர்.

பேராசிரியர் க.அன்பழகன் தலைமையுரை
கலைஞரை இங்கு பலரும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்தியுள்ளார்கள். அவர் பல ஆண்டுகள் வாழ்வார் என்று நான் நம்புகிறேன். கலைஞர் ஆட்சியினால் ஏற்பட்ட மகத்தான மாற்றங்கள் எல்லாம் கருத்தில் கொண்டு, தமிழர்களுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய கலைஞரைப்பற்றி அவர் மனதாரப் பாராட்டுகிறார். என்ன சொல்லி பாராட்டுகிறார் என்றால், நமது கலைஞர் ஆட்சியில் 13 அமைச்சர்களில் 13 பேரும் தமிழர்கள். 13 அமைச்சர்கள் இருந்தார்கள், அவர் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் 13 பேரும் தமிழர்கள். 18 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 16 பேர் தமிழர்கள். அரசியலில் ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தலைவர்கள் பணியாளர்கள் யாவரும் நூற்றுக்கு நூறு தமிழர்களாகவே விளங்குகிறார்கள். இதை அனுசரித்து மக்களின் மற்ற  நிலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளன. இதை அனுசரித்து வாழ்ப வர்கள் எல்லாம் தமிழர்களாகவே இருக்கிறார்கள்.  தமிழர் என்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது என்று அதற்காக பாராட்டுகிறார்.
இவ்வளவுக்கும் காரணம் கலைஞர் அவர்களின் திமுக ஆட்சி என்று புகழ்ந்து பாராட்டுகிறார். திமுக ஆட்சி என்று சொல்லாமல், நம்முடைய ஆட்சி என்று பாராட்டினார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பேசிய போது,  ‘’கலைஞரின் வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அளிக்கிறது.  கலைஞர் நெடுங்காலம் நீடுழி வாழ வேண்டும்.  கலைஞர் இன்னும் பல பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.  கோடிக்கணக்கான மக்களால் நேசிக்கப்படுபவர் கலைஞர்.  அதே போன்று தமிழக மக்களையும் நேசிப்பவர் கலைஞர்.  அதுவே அவருக்கு மாபெரும் சக்தியை, துணிவை அளிக்கிறது.  இந்த வலிமையும், துணிவும்தான் கலைஞரின் ஆற்றல்.   அனைத்து மக்களின் துயரங்களை புரிந்துகொள்பவர் கலைஞர்.
சட்டமன்ற தேர்தலில் தோல்வியே  அறியாதவர்.  அய்ந்து முறை முதலமைச்சராகவும் பணியாற்றியவர்.  மக்களை நேசித்தார் என்பதே அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்.   மக்களின் எண்ணங்களை, உணர்வு களை பிரதிபலிக்கும் தலைவர் கலைஞர்.   அனைத்து மக்களின் துயரங்களையும் புரிந்து கொள்பவர் கலைஞர்.
தமிழக மக்களின் குரலாக கலைஞரின் பேச்சு உள்ளது.  அனைத்து குரல்களும் ஒன்றிணைந்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும்.    மக்கள் பிரச்சினைகளுக்காகவே தினமும் கலைஞர் கடிதம் எழுதுகிறார். 70 ஆண்டுகள் தமிழ் மொழிக்காகவே பாடு பட்டார் கலைஞர். தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரம் இந்தியாவை வலிமையாக்கும். ஒரே கலாச்சாரம் நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.  இதனை ஒட்டு மொத்தமாக நிராகரிக்கிறோம். மக்களி டம் இருந்த பணம் ஒரேநாளில் செல்லாக்காசு ஆக்கப் பட்டு விட்டது.  நாம் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். நரேந்திரமோடியை அனுமதிக்க கூடாது’’என்று தெரிவித்தார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்றுப்பேசிய போது,  ‘‘திமுக மிகவும் சக்திவாய்ந்த கட்சியாக உள் ளது.  அனைத்துக்கட்சி தலைவர்களூம் கலைஞர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கலைஞருக்காகத்தான் இத்தனை தலைவர்களும் இங்கே கூடியிருக்கின்றனர்.  உடல்நலக்குறைவினால் லல்லு பிரதாத் யாதவ் வர இயலவில்லை.  ஆனாலும் அவர் கலைஞருக்கு வாழ்த்து அனுப்பியிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடு பட்ட மாபெரும் தலைவர் கலைஞர்.  சமூக நீதிக் காக அரும்பாடுபட்ட தலைவராக திகழ்கிறார் கலைஞர். தனது எழுத்தால் மக்களை சீரிய சிந்தனையில் அழைத்துச்சென்றவர் கலைஞர்.  சட்டமன்றத்தில் புதிய சரித்திரத்தை படைத்தவர் கலைஞர்.  கலைஞரின் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் இந்தியாவிலேயே யாருக்கும் இருக்காது.  அகில இந்திய அளவில் கலைஞர் படைத்த சரித்திரத்தை யாரும் தகர்க்க முடியாது.  இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பவர் கலைஞர்.  விதவைகள் மறுவாழ்வு திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்.
பீகாரில் நான் பூரண மதுவிலக்கை கொண்டுவந்தேன்.  மதுவிலக்கில் பீகார் அரசு முழு வெற்றியை பெற்றிருக்கிறது. பீகாரில் மதுவிலக்கு கொண்டு வந்ததை போலவே தமிழ்நாட்டிலும் கொண்டுவருவேன் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டவர் கலைஞர்’’ என்றார்.
சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி பேசும்போது குறிப்பிட்டதாவது:
“சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுத்தவர் கலைஞர். தனது எழுத்து, வசனத்தால் தமிழ் திரையுலகின் போக்கை மாற்றியவர். அவர் மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர். கடந்த 70 ஆண்டு காலமாக அவர் தொடர்ந்து “முரசொலி’யில் எழுதி வருவது சாதனை. பாஜக அரசில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது, இளைஞர்கள், விவசாயிகளின் பிரச்னைகள் தீரவில்லை. பல்வேறு நாடுகளில் பாசிச ஆட்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மாற்றத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம்; அந்த மாற்றத்தை விரைவில் ஏற்படுத்தி, வைரவிழா நாயகருக்கு பிறந்தநாள் பரிசாக அளிப்போம். மக்களை பிளவுபடுத்தும் ஆட்சி தற்போது மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த சவால்களை சமாளிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும். இதற்கு திமுக தலைவர் கலைஞரின் ஆலோசனைகள் தேவை’’ என்று கூறினார்.
உமர் அப்துல்லா
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பேசும்போது, “எங்களுக்கும் கலைஞருக்கும் இடையேயான உறவு கடந்த மூன்று தலைமுறைகளாக நீடிக்கிறது. நாட்டில் தற்போது மாற்றத்தை ஏற்படுத்த கலைஞரின் சமூகநீதி, மதச்சார்பின்மை கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
திமுக தலைவர் கலைஞருக்கும் எங்களது குடும்பத்திற்கும் நீண்ட கால உறவு உண்டு.  எனது தந்தை பரூக் அப்துல்லா திமுக தலைவர் கலைஞருடன் நட்பு வைத்திருந்தார். 60 ஆண்டுகள் கலைஞர் தொடர்ச்சியாக சட்டமன்றப்பணி ஆற்றியது சாதனை.   நாட்டில் பல சவால்கள், அச்சுறுத்தல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சவால்களை சமாளிக்க திமுக தலைமையில் வலுவான அமைப்பு உருவாக வேண்டும்.  மக்கள் விரோத ஆட்சியை அகற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் திரள வேண்டும்.  திமுகவின் அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் துணையாக இருப்போம்.
மத்திய அரசால் நாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்றனர். இப்போது எதிர்க்கட்சிகள் இல்லாத பாரதம் என்கின்றனர். காங்கிரஸ் மட்டுமல்ல எதிர்க்கட்சிகள் இல்லாத நாட்டை பாஜக உருவாக்க முடியாது. இதை நிரூபிக்கும் வகையில் இந்த மேடையில் அனைவரும் கூடியுள்ளோம். இந்திய அரசியலமைப்பு உரிமைகளை காப்பாற்ற நாம் ஒன்று கூடியுள்ளோம்’’ என்றார்.
மஜீத் மேமன்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஜித் மேமன் விழாவில் பேசியபோது, ‘’இந்த மாபெரும் விழாவில் இந்தியாவே ஒன்றிணைந்துள்ளது.  விவசாயிகள் பிரச்சனை காரணமாக சரத்பவார் வரவில்லை.  ஆகவே, இந்த முக்கிய விழாவில் கலந்துகொள்ள என்னை அனுப்பினார்.  94வது பிறந்த நாளை கொண்டாடும் கலைஞருக்கு சரத்பவார் வாழ்த்து அனுப்பியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.  40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களுக்கு பாடுபட்டு வருகிறார் கலைஞர்.  தேசிய நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்த தலைவர்களில் கலைஞரும் ஒருவர்.   நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியை கலைஞரால்தான் தடுக்க முடியும்.  அடுத்த தேர்தலில் திமுகதான் தமிழத்தில் ஆட்சிக்கு வரும்.  தேசிய அரசியலில் திமுக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  இந்தியா முழுவதும் அறிவிக்கப்படாத அவசர நிலையை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
டெரிக் ஓ பிரையன்
திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பேசுமபோது, கலைஞர் எழுப்பிய பல பிரச்சினைகளை மேற்கு வங்கமும் எழுப்பியுள்ளது. பிராந்திய மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கலைஞர் வழியில் மம்தாவும் போராடுகிறார். மொழி விவகாரங்களில் கலைஞர், மம்தா பானர்ஜி ஒருமித்த கருத்துள்ளவர்கள். சமூகநீதிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட கலைஞர், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரையை நாட்டில் அமல்படுத்த பாடுபட்டார்; தமிழக உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார்; மாநில சுயாட்சி முழக்கத்தை வலுவாக எழுப்பினார்; மதச்சார்பின்மைக் கொள்கையை உறுதியுடன் பின்பற்றினார்’’ என்றார்.
சிபிஅய் தேசிய செயலாளர் து.ராஜா
கலைஞர் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றில் பன்முக ஆளுமைமிக்கவர். இன்றைக்கு இந்திய நாடு பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. இன்றைக்கு மத வெறி அரசியல் இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது.
சேது கால்வாய் பாலம் என்பதில் ராமன் பாலம் என்கிறார்களே, ராமன் எந்த தொழில்நுட்கப்பலைஞனாக இருந்தான் என்று கேட்கின்ற துணிச்சல் கலைஞருடையது.
சமூகநீதிக்காக சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சமத்துவத்துக்காக கோபக்கனல் அவரிடம் நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது.
1967ஆம் ஆண்டு மெட்ராஸ் ஸ்டேட் அண்ணா முதல்வராக இருந்த போது தமிழ்நாடு ஆனது. 1996இல் மெட்ராஸ் என்பதை சென்னை என்று பெயர் மாற்றம் செய்தார்.
கலைஞர் அடிப்படையில் ஒரு சமூகப்போராளி. மூடப்பழக்க வழக்கங்கள் தகர்த்து எறியப்பட வேண்டும். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடைபெறுகின்ற கொடுமைகள் அகற்றப்பட வேண்டும். அதை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டும். ஒரு சமுதாய மாற்றம் ஏற்பட வேண்டும் என்று போராடிக்கொண்டு இருப்பவர் கலைஞர். அவர் அடிக்கடி சொல்வார். நான் பெரியாரை சந்திக்கவில்லையானால், கம்யூனிஸ்ட்டாகி இருப்பேன் என்பார்.
ஆனால் நான் சொல்கிறேன், நீங்கள் பெரியாரை சந்தித்ததனால், நீங்கள் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு இயக்கத்தின் பகலவனால் ஒரு சூரியனால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்
பெரியாருக்கும் காரல் மார்க்சுக்கும் பெரிய இடைவெளி இல்லை. இன்றைக்கு பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களும், மார்க்சு கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களும் இன்றைக்கு ஒன்று பட்டு செயல்படவேண்டிய அவசியம் வரலாற்றில் ஏற்பட்டிருக்கிறது.
அந்த ஒன்றுபட்ட முயற்சிகளுக்கு இன்றைக்கு திமுகவினுடைய சகோதரர் ஸ்டாலின் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளுவார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு து.ராஜா பேசும்போது குறிப்பிட்டார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...