Saturday, June 3, 2017

மோடியும் - டிரம்ப்பும் ஓர் ஒப்பாய்வு

- ஆகார் படேல் -
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டொனால்டு டிரம்ப் பல வாக்குறுதிகளை வாரிவிட்டார். அவற்றில் மிகவும் ஆர்வம் அளிப்பதாக இருந்தது, வாஷிங்டனில் உள்ள சதுப்பு நிலத்தை நான்  தூய்மைப்படுத்துவேன் என்று கூறியதுதான். வாஷிங்டன் அப்போது சதுப்பு நிலக் காடாக இருந்தது என்பது அவரது கருத்து. 
இவ்வாறு இன்று கூறுவது மிகவும் கேலிக்கிடமானது. அரசாட்சி செய்வதற்கோ, அரசியலிலோ  எந்த வித தகுதியும் பெற்றவராக டிரம்ப் இருப்பதாகத் தோன்ற வில்லை என்பதே இதன் காரணம். ஒரு வகையான பேரறிவாளர் என்ற தோற்றத்தில் விற்பனை செய்யப் பட்டவர் அவர். ஆனால் அவர் ஆட்சி பீடம் ஏறிய தொடக்க மாத நிகழ்வுகள், அவரை பயனற்ற, கோபம் மிகுந்த, தனது ஆட்சியின் மீது கட்டுப்பாடு கொள்ள இயலாத  ஒரு கோமாளியாகவே   காட்டின.
அவர் எதுவும் செய்யாமல் இருந்திருந்தால், அவரது கோமாளித்தனம் எல்லாம் எவருக்கும் வெளியே தெரிந்தே இருக்காது.  டிவிட்டரில் அனைத்து செய்திகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதே, அவரது முன்னுக்குப் பின் முரணான அவரது நடவடிக்கைகளை பெரிது படுத்திக் காட்டியது. ஆச்சரியக் குறிகளைப் பயன்படுத்துவது அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், அவரது தோற்றத்தை உலக அளவில் கட்டிக் காக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அது பெரும் தொல்லையை ஏற்படுத்தியது.
மோடியும் டிவிட்டரைப் பயன்படுத்துவதில் விருப்பம் கொண்டவர்தான்.  ஆனால், டிரம்பை விட மாறுபட்ட முறையில் செயல்படுபவர் மோடி என்பதால்,  இந்த விஷயத்தில் டிரம்ப் மோடிக்கு மாறு பட்டவராகவே திகழ்ந்தார்.
இரண்டு பேருக்கும் டிவிட்டரில் பின்பற்றும் 3 கோடி மக்கள் உள்ளனர். இருவருமே பத்திரிகையாளர்களை நம்புவதில்லை என்பதால்,  தங்களது வாக்காளர்களை நேரடியாக அணுகுவதற்கு அவர்கள் இருவருமே சமூக வலைதளத்தைப் பயன்படுத்தினர். தான் நியாயமாக நடத்தப்படவில்லை என்றும், தனது பேரறிவை எதிர்கட்சியினரும், ஊடகத்தினரும் அங்கீகரித்து பாராட்டவில்லை என்றும் டிரம்ப் நம்புகிறார். அவரைப் பொறுத்தவரை அவர் எந்த வித தவறுமே செய்யவில்லை என்ற போதிலும்,  மதக்கலவரங்களில் தனக்குள்ள தொடர்பு பற்றிய வரலாறு தனக்கு எதிராகப் பயன் படுத்தப்படுவதாக மோடி கருதுகிறார். குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றதற்குப் பின் ஏற்பட்ட சமூக ஊடகத்தின் வளர்ச்சி, ஊடகங்களைத் தவிர்ப்பதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது; அதனை அவர் மிகவும் திறம்படச் செய்தார். டிவிட்டர் வந்து சேரும் வரை,  பத்திரிகையாளர்களுடன் பல பிரச்சினைகளில் மோடி தொடர்ந்து சச்சரவுகளை செய்து கொண்டிருந்தார். நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த கரண்தாபர் மேற்கொண்ட  மோடியின் நேர்காணல் முடிவதற்கு முன்பே மோடி வெளியேறியதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். டிரம்பைப் போலவே கோபமும், எரிச்சலும் மோடிக்கும் வருகிறது என்பதை இது காட்டுகிறது. ஆனால், அதனை இப்போது ஒரு மாறுபட்ட முறையில் கையாள்கிறார். இருவரும் டிவிட்டரைப் பயன்படுத்தும்  வழியில் உள்ளவேறுபாடுகளில்முதலில்குறிப்பிடவேண்டி யது பொருள்அடக்கத்தைப் பற்றியே ஆகும்.  விஷயங்களைப் பற்றி டிரம்ப் அடிக்கடி தனது கருத்தினைப் பதிவு செய்வார்; ஆனால்,  தனது கோபத்தையே, எரிச்சலையோ காட்டிக் கொள்ள அவர் அஞ்சியதில்லை.  அதிபர் தேர்தல் பிரச்சாரத் தின்போது, ரஷ்யர்களுடன் டிரம்ப் கொண்டிருந்த தொடர்புகளைப் பற்றிய விசாரணை ஒன்றை மேற் கொள்ள அவரது நீதித்துறையே ஆணை பிறப்பித்தது. இதுபற்றி டிரம்ப், அமெரிக்க வரலாற்றிலேயே, ஓர் அரசியல்வாதி மீது பழி தீர்த்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரே பெரிய செயல் இது என்று பதிவு செய்தார். கடந்த கால அதிபர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசிய டிரம்ப், தான் நியாயமாக நடத்தப்படவில்லை என்று கூறினார். கிளிண்டன் பிரச்சாரத்திலும், ஒபாமா நிர்வாகத்திலும் நடைபெற்ற அனைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் பற்றி விசாரணை செய்ய ஒரு குழு அமைக்கப்படவே இல்லை என்றும் பதிவு செய்தார்.
நாகரிகமற்றவன்முறையாளராக இருக்கும் டிரம்ப் பத்திரிகையாளர்களையோ,மற்றவர்களையோ தாக்குவதற்கும் தயங்குவதில்லை. மே ள12 அன்று தனது டிவிட்டர் செய்தியில், போலி ஊடகம் இன்று காலம் கடந்தும் வேலை செய்கிறது என்று பதிவு செய்துள்ளார்.
டிரம்ப் நேர்மையானவராக இருக்கிறார் என்றும் கூடக் கூறலாம். ஆனால், இத்தகைய குழந்தைத் தனமான செயல்பாடுகள் உண்மையில் அவருக்கு எந்த விதத்தில் உதவும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. 
இந்த இடத்தில்தான் மோடி மாறுபட்டவராக இருக்கிறார். ஊடகத்தைப் பற்றி இவர்கள் இருவருமே ஒரே மாதிரியாகத்தான் உணர்கிறார்கள் என்று நான் கூறினேன். ஆனால் அதிகாரபூர்வமான சந்திப்புகளில் தன்னை மோடி மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருப்பார். அவரது டிவிட்டர் செய்தி பொதுவாக அன்றாடம் அவர் செய்த பணிகளை மட்டுமே குறிப்பதாக இருக்கும். 
எடுத்துக் காட்டாக மே 19 அன்று, நாகாலாந்து ஆதிவாசிகள் பிரதிநிதிக் குழுவை சந்தித்துப் பேசினேன் என்ற பதிவைக் கூறலாம். அல்லது மற்ற வர்களின், குறிப்பாக அரசியல்வாதிகளின் பிறந்த நாள்களின்போது வாழ்த்து தெரிவிப்பார். மே 17 அன்றும் இது போன்ற ஒரு வாழ்த்துச் செய்தியில், ‘‘முன்னாள் பிரதமரும், விவசாயிகளின் தலைவருமான உயர்திரு எச்.டி.தேவகவுடா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் எல்லாம் வல்ல இறைவன் அளித்து ஆசிர்வதிக்கட்டும்’’ என்று பதிவு செய்திருந்தார்.
கொள்கை முடிவு  அறிவுப்புகள் பற்றியும் மோடி தனது டிவிட்டரில் விளம்பரப்படுத்துவார்.  அவரது அதிகாரபூர்வமான வலைதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுப்புகளையே தனது டிவிட்டருடன் வழக்கமாக தொடர்பு படுத்துவாரே அன்றி, செய்தியிதழ்களுடன் தொடர்பு படுத்தமாட்டார். டிவிட்டரில் பதிவு செய்த செய்தியின் பின்னணியில் இந்திய பிரதமர் என்ன நினைக்கிறார் என்பதை மதிப்பிடுவது இயலாத ஒன்றாகும். ஆனால் அமெரிக்க அதிபரின் விஷயம் அப்படிப்பட்டதல்ல. டிரம்ப் வழக்கமாகப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பதைக் கண்டுபிடிப்பது கூட செய்தியாளர்களுக்கு எளிதாகப் போன ஒரு செய்தியாகும். இதன் காரணம் அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகு, அது தொடர்பான தனது கருத்துகளை தனது டிவிட்டரில் டிரம்ப் பதிவு செய்வார் என்பதுதான்.
தற்போது உள்ள நடைமுறையைத் தூய்மைப்படுத் துவோம் என்று கூறிக் கொண்டு அரசியலுக்கு வந்த வெளியாட்கள்தான் டிரம்பும், மோடியும். ஒருவர் இப்பணியில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக இருக் கிறார்; மற்றவரோ மூன்று மாதங்களை மட்டுமே கடந்துள்ளார். ஆனால், அதற்குள்ளாகவே,  தோல்வி அடைந்தவராகவும், பலராலும், குறிப்பாக அவரது சொந்த ஆதரவாளர்களாலேயே, திறமை அற்றவராகவும் டிரம்ப் பார்க்கப்படுகிறார். மோடியும் பல தவறுகளை செய்துள்ளார்; அளவுக்கு அதிகமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். ஆனால், எச்சரிக்கையும், கவனமும் மிகுந்த அவரது அணுகு முறைகள், விமர்சனங்களில் இருந்தும் கண்டனங்களில் இருந்தும் அவரைப் பாதுகாத்து வருகின்றன.
எவ்வாறெல்லாம் தான் தவறாக நடத்தப்படுகிறேன் என்ற குழந்தைத்தனமான குமுறல்களுடன் டிரம்ப் மார்தட்டிக் கொண்டு அன்றாடம் அழுவதே, அவருக்கு எதிராகவே வேலை செய்கிறது. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் இவ்வாறு நடந்து கொள்வது பலருக்கும் மனசங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, 21.5.2017
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...