Total Pageviews

Friday, May 26, 2017

பெரியாருக்கும்- அண்ணாவுக்கும் குத்தகைக்கு விடப்பட்ட பூமிதான்

‘தமிழகத்தில் பா.ஜ.க.வை கால் ஊன்ற அனுமதிக்கமாட்டோம் என்று ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், வீரமணி, செஞ்சட்டைத் தலைவர்கள் போன்றோர் மேடைக்கு மேடை முழங்கி வருகிறார்கள். ‘இது ஈ.வெ.ரா., அண்ணா பிறந்த பூமி’ என்றெல்லாம் சொல்லி, ஏதோ தமிழகம் இவர்களுக்குக் குத்தகை விடப்பட்டிருப்பதுபோல் பேசி வருகிறார்கள்.
தமிழகம் ஆழ்வார்களும், நாயன்மார்களும், ராமானுஜரும், வள்ளலாரும், ரமணரும், திருவள்ளுவரும், கம்பரும் ஆதரித்து நடமாடிய தெய்வீக பூமி என்பதே சத்தியம். தமிழ் என்று சொன்னாலே அதன் அழகும், ஆழமும், கம்பராமாயணமும், தேவாரமும், திருவாசகமும், திவ்யபிரபந்தமும்தானே!’’
- என்று தலையங்கம் தீட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதம்.
ஆர்.எஸ்.எஸ். இதழ் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது என்பது மேலே கண்ட எழுத்துக்களால் உணரப்படும்.
இவ்விதழ் குறிப்பிடும் தலைவர்கள், அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் தமிழ்நாட்டிற்கு அளித்த பணிகள், தொண்டுகள் எத்தகையவை என்பதைப் பட்டியலிட முடியும். அதே தன்மையில் ஆர்.எஸ்.எஸோ, அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பி.யோ தமிழ்நாட்டுக்குச் செய்த தொண்டினை, சாதனை களைப் பட்டியலிட்டால் அதற்குப் பெயர்தான் விவாத முறை.
அந்த வகையில் தன்னால் எடுத்துக்காட்ட முடியாத நிலையில், பழைய கந்தாயங்களை அவிழ்த்துக் கொட்டுகிறது. அப்படியே பார்க்கப் போனாலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆழ்வார்களையும், நந்தன்களையும் இவர்களின் பார்ப்பன ஆதிபத்திய இந்து மதம் எப்படியெல்லாம் நடத்தியது, பழி வாங்கியது என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்கலாமா?
நந்தனையே தான் எடுத்துக்கொள்வோமே, நாயன்மார் பட்டியலில் சேர்த்து விட்டால் மட்டும் போதுமா? அவன் சிலையைக் கோவிலில் எந்த இடத்தில் வைத்துள்ளது அவர் களின் வைதீகம்?
தில்லை நடராஜனைத் தரிசிக்க வந்த நந்தனை - அவ்வளவு எளிதில் அனுமதித்து விட்டார்களா? எல்லோரும் பரமாத்மாவின் சொரூபம் தானே - அவர்களின் கூற்றுப்படி! அப்படியிருக்கும் பொழுது நந்தனைத் தீயில் குளித்து எழச் செய்தது ஏன்? நந்தன் தீண்டத்தகாதவன் - இழிந்தவன் - அவன் கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டுப்பட்டு விடும், தோஷம் ஏற்பட்டுவிடும் என்பதால்தானே அந்த நிபந்தனை?
தீயில் குளித்து எழவேண்டும் என்று நடராஜன் ஏன் பார்ப்பனர் கனவில் வந்து சொல்லவேண்டும்? நந்தன் கன விலும் வந்து சொல்லியிருக்க வேண்டியதுதானே?
தீயில் குளித்து எழுந்ததும், அந்தணன் கோலத்தில் வந்தான் என்றால், அதன் பொருள் என்ன? நந்தன் என்பவன் தாழ்த்தப் பட்டவன்; ஆண்டவன் கிருபையால் தீக்குளித்து உயிரோடு அந்தணன் கோலத்தில் எழுந்தான் என்பது அந்தணன் என்று அவர்கள் கூறும் பார்ப்பான்தான் உயர்ந்தவன், மேலானவன்  என்று காட்டத்தானே - உறுதிப்படுத்தத்தானே!
தமிழ் என்று சொன்னாலே அதன் அழகும், ஆழமும்தான் எத்தகையது என்று ஏற்றிப் போற்றிப் பாடும் விஜயபாரதம் அந்தத் தமிழைக் கோவிலுக்குள், கருவறைக்குள் நுழையாமல் தடுப்பது ஏன்?
சிதம்பரம் நடராஜன் கோவில் சிற்றம்பலத்தில் தேவாரம் பாடிய ஓதுவார், முதியவர் ஆறுமுகசாமி அவர்களை அக் கோவில் தீட்சதர்ப் பார்ப்பனர்கள் அடித்துத் துவைத்ததேன்? அதனைக் கண்டித்து ‘விஜயபாரதங்கள்’ எழுதியதுண்டா?
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தால்தான் அருள் இருக்கும்; தமிழில் பாடினால் பொருள் இருக்கும் - அருள் இருக் காது என்று திருவாளர் சோ.ராமசாமி ‘துக்ளக்‘கில் தலையங்கமாக எழுதியபோது விஜயபாரதங்கள் தலையணைக்கும் கீழ் பதுங்கிக் கொண்டனவா?
சீர்திருத்தம் செய்ததாக ராமானுஜரைப் போற்றுவோரை நோக்கி ஒரு கேள்வி இருக்கிறது. அவரைக் கோவில் கோபுரத்திலிருந்து கீழே உருட்டி விட்டது யார்? அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? தாழ்த்தப்பட்டோருக்கும் அவர் பூணூல் போட்டாரே! அந்தக் காரியத்தை ஆர்.எஸ்.எஸ். வகை யறாக்கள், விஜயபாரதக் கூட்டங்கள் இப்பொழுது தொடர்ந்து செய்யாதது ஏன்? அப்பிரச்சினையில் ராமானுஜர் வெற்றி பெறாதது ஏன்?
தாழ்த்தப்பட்டவர்களை ராமானுஜர் மதித்தது உண்மை யென்றால், அந்த ராமானுஜர் மதித்த தாழ்த்தப்பட்டவர்களைக் குறைந்த பட்சம் வைணவக் கோவிலிலாவது அர்ச்சகர் ஆக்கவேண்டியதுதானே!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தமிழக சட்டத்தை எதிர்த்து சிறீபெரும்புதூர் ஜீயர் ஏன் உச்சநீதிமன்றம் சென்றார்? அறிவு நாணயமாகப் பதில் கூறட்டும் அக்கிரகாரத்தின் அடியார்கள்?
திருவள்ளுவரை இழுத்துப் பேச இந்தக் கூட்டத்துக்குச் சற்றேனும் தகுதி உண்டா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவர் எங்கே?
பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் கீதையைத் தேசிய நூலாக ஆக்கத் துடிக்கும் இந்த சங்பரிவார்க் கும்பல் எங்கே?
தந்தை பெரியாரும், அண்ணாவும் பிறந்த பூமி என்று தமிழ்நாட்டைக் கூறுகிறார்களாம் - இவர்கள் என்ன குத்தகை எடுத்து விட்டார்களா தமிழ்நாட்டை என்று கேட்கும் ‘விஜயபாரத’த்தை நோக்கி ஒரு கேள்வி.
பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்று சொன்னதோடு அந்த நிலையை உருவாக்க வாழ்நாள் எல்லாம் ஓயாது உழைத்தவர்கள் இவர்கள்.
உயர்ஜாதி - தாழ்ந்த ஜாதி என்ற பேதத்தைப் படைத்தது பகவான் கிருஷ்ணன் - கடந்த ஜென்மத்தில் அவரவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இந்த ஜென்மத்தில் வெவ்வேறு தகுதியில் பிறக்கிறார்கள் என்று கூறும் இந்தக் கூட்டம் தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணா வையும் எந்த வகையில் எடைப் போடுகிறார்கள்?
பிறப்பின் அடிப்படையில் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வைதீகப் பார்ப்பனீயத்தை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தி சமத்துவப் பூமியைப் படைக்கப் பாடுபட்டவர்களால் குத்த கைக்கு எடுக்கப்பட்ட பூமிதான் தமிழ்நாடு என்பதை விஜயபாரதங்கள் உணர்ந்து கொள்ளட்டும்!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


0 comments: