Tuesday, May 30, 2017

திருச்சி மாநாடு

திருச்சிராப்பள்ளியில் கடந்த சனியன்று (27.5.2017) திரா விடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட மாநாடு - இயக்க வரலாற்றில் என்றென்றும் நங்கூரம் பாய்ச்சி நிற்கக் கூடிய அளவிற்கு சிறப்புகளைக் கொண்டதாகும்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 36 தீர்மானங்களும் முத்து முத்தானவை. பெண்களின் சகலப் பரிமாணங்களிலும் கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றியும் பேசுகின்றன - எந்தெந்த வகைகளில் எல்லாம் பெண்கள் ஆண்களின் உடைமைகளாகக் கருதப்பட்டு நசுக்கப்படுகின்றனர் என்னும் உண்மைகளை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் பெண்கள் கிளர்ந்தெழ வேண்டிய ஆவேசத்தையும், ஆழத்தையும் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்கிற அமைப்புகள் திராவிடர் இயக்கம் என்னும் பொதுப் பெயரில் சுட்டப்படுகின்றன. இந்த அமைப்புகள் நடத்திய மாநாடுகள்  எல்லாம் குறிக்கோளோடு நடத்தப் பட்டவையாகும். அவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் காலத்தின் கலங்கரை விளக்கமே! இதனைப் பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டிலும் திராவிடர் கழகத் தலைவர் சுட்டியும் காட்டியுள்ளார்.
அத்தீர்மானங்கள் பிற்காலத்தில் அரசின் சட்டங்களாகவே வழங்கப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாகப் பெண்கள் குறித்து தீர்மானங்கள் சுட்டிக் காட்டத் தகுந்தவையே! கல்வி உரிமை, உத்தியோக உரிமை, திருமண வயது நிர்ணயம், சொத்துரிமை, மக்கள் பேறு, திருமண உரிமை, விவாகரத்து உரிமை, விதவைப் பெண்களுக்கு மறுமணம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இராணுவத் துறைகளிலும்கூட பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று 1929களில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்குத் துணிவும், தொலைநோக்கும், அந்தத் தத்துவத்தின் மீதான அடக்க முடியாத ஆளுமையும் தேவை.
இராணுவத் துறையில் பெரிய அதிகாரிகள் நிலைக்குப் பெண்கள் கம்பீரமாக உயர்ந்து நிற்பதை ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
என்றாலும் இந்தக் கால கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர்ந்து எழுந்து விட்டார்களா - தடையில்லா சுதந்திரம் கிடைத்துதான் விட்டதா என்னும் கேள்வி அறிவுக்கு விருந்தே!
சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதைக் கவனித்தால் கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும் உள்ள ஆண்களிடத்தில் குடி கொண்டிருக்கும் - தான் என்னும் ஆண்மைதான் அதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டையைப் போட்டு வருகிறது. 
நாடாளுமன்ற இரு அவைகளில் மாநிலங்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் நிறை வேற்றப்படவில்லை. இது எதைக் காட்டுகிறது? ஆண்களின் சுயநலம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? நாடாளுமன்றத்திலேயே கட்சிகளைக் கடந்து கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?
சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண் உறுப் பினர்களின் விழுக்காடு இன்னும் 12 சதவீதத்தைத் தாண் டவில்லை என்பது நியாயந்தானா?
தங்களுக்குரிய பிரச்சினைகள்பற்றி அவர்கள் தானே சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் குரல் எழுப் பிட வேண்டும்; ஆண்கள் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லதே!
பொதுவாக முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு உரிமை கள் மறுக்கப்படுகின்றன என்று பரவலான ஒரு கருத்து உண்டு; ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்த விடயத்தில் முசுலிம் நாடுகளைவிட இந்தியாபின் தங்கி உள்ளது என்பதுதான் அப்பட்டமான உண்மை.
இந்தியாவில் ஏதோ பிரதமராகவும், குடியரசு தலைவ ராகவும் ஒரு பெண் வந்து விட்டார் என்பதற்காக இந்தியாவில் பெண்ணுரிமை கொடி கட்டிப் பறக்கிறது என்று தவறான ஒரு முடிவுக்கு வரக் கூடாது.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அமைச்சரவைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களின் எண்ணிக்கை இருப்பதே அறிவு நாணயம் ஆகும்.
33 விழுக்காடு இடங்கள் பெறுவதற்கே இவ்வளவு முட்டுக்கட்டை - இவ்வளவு தாமதம் என்றால் 50 விழுக்காடு என்பதை நினைத்துத்தான் பார்க்கத்தான் முடியுமா? குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள பெண்களாவது இந்தப் பிரச்சினை குறித்து வாய்த் திறக்காதது ஏன்? கட்சிக் கட்டுப்பாட்டுக் கட்டளைக்குள் பதுங்கிவிட்டார்களா?
மாநிலங்களிலும் சரி, மத்தியிலும் சரி அமைச்சரவையில் பெண்களுக்கென்று சில துறைகளை ஒதுக்கி வைத்துள்ளது பரிதாபமே. இது குறித்துக்கூட திருச்சி மாநாடு ஒரு தீர்மான வடிவத்திலே பேசுகிறது.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மட்டுமல்ல, இவற்றிற்கு மேலே மிகப் பெரிய அதிகாரங்களைத் தம் வசம் வைத்துள்ள நீதிமன்றங்களில் பெண்களின் நிலை என்ன? இந்தியத் துணைக் கண்டத்தில் 10 மாநிலங்களில் உள்ள நீதிமன்றத்தில் ஒரே ஒரு இடம்கூடப் பெண்ணுக்குக் கிடையாது - இவ்வளவுக்கும் இந்தியாவைப் பாரத மாதா என்று பீற்றிக் கொள்கிறோம்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தந்தையின் ஜாதியைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல் லுவதில் என்ன நீதி இருக்கிறது? பாலியல் வேறுபாட்டு அடிப்படையில் நீதி இருக்கக் கூடாது என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்த்தானா?
ஒரு பெண் நீதிபதியாக இருந்தால் இப்படியொரு தீர்ப்புக் கிடைத்திருக்குமா? திருச்சி மகளிர் மாநாட்டில் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் சிறப்பானதே! மாநில மத்திய அரசுகள் திருச்சி - பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்மீது கவனம் செலுத்தி கருத்தூன்றிப் பார்க்கட்டும். அப்படிப் பார்க்கப்பட்டால் பெண்களுக்கு தேவையானது என்ன என்ற வெளிச்ச மின்னல் தென்படும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...