Total Pageviews

Wednesday, February 15, 2017

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு அடிபணியும் அணியைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறது மத்திய பி.ஜே.பி. அரசு


அமைச்சரவையை அமைக்க அழைப்பதில் கால தாமதம் ஏன்?

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு அடிபணியும் அணியைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறது மத்திய பி.ஜே.பி. அரசு

தமிழ்நாட்டோரே எச்சரிக்கை! எச்சரிக்கை!


தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள
முக்கிய அறிக்கை

உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நிலையில் பெரும்பான்மை உள்ள அணியினரை அழைத்து அமைச்சரவை அமைக்கச் செய்வதில் காலந்தாழ்த்துவது சரியா?  கால தாமதத்தின் பின்னணி என்ன? ஆர்.எஸ்.எஸ். குரலுக்குச் செவி சாய்க்கும் அணியினரைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவதே இந்தத் தாமதத்துக்குக் காரணம் என்றும், இதில் தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின்மீது  போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுத் தீர்ப்பு நேற்று (14.2.2017) காலை வெளியாகி விட்டது.

முதல் குற்றவாளி ஜெயலலிதா, இரண்டு, மூன்று, நான்காவது குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தனிக்கோர்ட் (கர்நாடகாவில்) நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பினை அப்படியே உறுதி செய்து உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பை வழங்கிவிட்டனர்!

ஜெயலலிதா ஏதோ குற்றமற்றவர்போல உலாவரும் செய்தியின் மாய்மாலம்!
இந்நிலையில், ஜெயலலிதா ஏதோ விடுதலை ஆகிவிட்டது போலவும், அல்லது மேல்முறையீட்டு வழக்கில் இல்லாததுபோலவும் செய்தியை (பார்ப்பன) ஊடகங்கள் பரப்பி வருகின்றன; குறிப்பாக மத்திய அரசின்கீழ் இயங்கும் டில்லி தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் உள்பட மற்றையோரின் தண்டனைகளை மட்டுமே கூறுவதும் எப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நரித்தந்திரம் என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெளிவாகவே புரியும்.
பெரும்பான்மை ஆதரவாளரை அழைக்காதது ஏன்?
அதன்பிறகு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்றத் தலைவராக திரு.எடப்பாடி பழனிச்சாமியை (அமைச்சராக ஏற்கெனவே உள்ளவரை) ஒருமனதாகத் தேர்வு செய்கிறார்கள். அவரும் சென்று தமிழக ஆளுநரைச் சந்திக்கின்றார், ஆட்சி அமைக்க அழைப்பு விடவும் கோரியுள்ளார்!
அதன் பிறகு திரு.ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்திக்கின்றனர்.

அதன்பிறகு திடீரென்று இரவு 9 மணிக்குக் காபந்து முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்கிறார்.

அதே இடத்தில் திடீரென்று தீபா என்பவர் (ஜெயலலிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே தகுதியினால்) சென்று சந்திக்கிறார். இவர் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதிதான் தனது திட்டத்தை அறிவிக்கப் போவதாகக் கூறியவர்.

ஏனோ திடீரென்று இப்படி ஒரு முடிவு - அய்க்கியம்? இது அவரின் முடிவு ; அதுகுறித்து ஏதும் சொல்ல வேண்டியதில்லை; அது ஒன்றும் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் போவதில்லை; என்றாலும், எப்படியெல்லாம் டில்லியால் அரசியல் பொம்மலாட்டங்கள் ஆளுநர் மூலமாக நகர்த்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள சரியான பின்னணியும், சாட்சியுமாகும்.

திருமதி சசிகலாமீதான வழக்கில் தீர்ப்பு வந்து, மற்றொரு சட்டமன்ற தலைவரை, சட்டமன்ற உறுப்பினர்கள் 127 பேர் தேர்வு செய்த பிறகு, இன்னமும் அமைச்சரவை அமைக்க, பெரும்பான்மைப் பலம் உள்ளதாக கையொப்பங்களுடன் கடிதம் கொடுத்த தரப்பினரை அழைக்க ஏன் காலதாமதம்? எவ்வகையில் இது அரசியல் சட்டத்தின் கடமைகளை நிறைவேற்றுவதாகும்?

ஏற்கெனவே எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, ஜெகதாம்பிகைபால் வழக்கு ஆகிய வழக்குகளில் நடந்ததுபோன்று (Floor Test) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து - பெரும்பான்மையோரை அழைக்கவேண்டாமா?

அல்லது தற்போது தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறும் ஓ.பி.எஸ். அணியினரை அழைத்து, பலத்தை நிரூபிக்க ஆணை பிறப்பிப்பதுதானே அரசியல் கடமை!

இதில் ஒரே கட்சியில் இதுவரை மூன்று பேர் முதல்வர்கள் என்று மாறி மாறி கூறியுள்ளதால், அரசியல் சட்ட விதிப்படி (164) மாற்று எதிர்க்கட்சியை (தி.மு.க.வை) அழைப்பதுதான் சரியான வழி என்பதும் புறந்தள்ளப்பட முடியாத கருத்தாகும்!

தங்களின் அடிமைகளைத் தேடும்

மத்திய பி.ஜே.பி. அரசு

இப்படி காலதாமதம் செய்வதற்கு உள்ள காரணம்தான் என்ன? ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள டில்லி பா.ஜ.க. அரசு தனக்கு சலாம் போடும், தலையாட்டிகளைக் கொண்ட நல்ல அடிமைகளை இந்த இரு அணிகளில் யார் இருப்பார்கள் - யாருக்கு ஆர்.எஸ்.எஸ்.சுடன் நெருக்கம் - மறைமுக ஆதரவு தரும் மனப்போக்கு உள்ளதோ,
யார் தமிழ்நாட்டின் உரிமைகளை நிபந்தனையின்றி டில்லி துரைத்தனத்திற்கு அடகு வைப்பார்களோ,
யார் தமிழர் எனும் இன உணர்வு, மொழி உணர்வு இல்லாத வர்களோ, மாநிலத்தின் உரிமைகள் - இவைகளை முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா போன்று வற்புறுத்தாமல், டில்லியின் குரலுக்குச் செவி சாய்த்து ஒத்துழைக்க நாங்கள் தயார், தயார் என்கிறார்களோ, அவர்களை எடை போட்டு - அடையாளம் காண்பதில்தான் மத்திய பி.ஜே.பி. அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.
விழித்துக் கொள்வீர் தமிழ்நாட்டோரே!
எதிர்க்கட்சியாகவோ, எதிர் அணியாகவோ நின்று உண்மையாக உரிமைக்குக் குரல் கொடுத்தால், அவர்களை ஆட்சிப் பொறுப்பேற்க அனுமதிக்கமாட்டோம்  என்று கூறாமல் கூறுவதுதானே - தாமதத்தின் பின்னணி? நிடுநிலையாளர்கள் - ‘வாட்ஸ் அப்’ வகையறாக்கள் எப்படிப்பட்ட  ‘ஆஷாடபூதி’த்தனத்திற்குரிய அரசியல் நிலை புதைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

‘‘எல்லாவற்றிற்கும் முழுக்காரணம், சொத்துக்குவிப்பு - ஊழல் வழக்கில் ஜெயலலிதா ஈட்டியது  211 சதவிகிதம் அதிகம் என்றும், அவர் தனக்குப் பாதுகாப்பாளராக சசிகலா, மற்றையோரையும் வீட்டில் ஒன்றாக வைத்து, ஒன்றாகவே கூட்டுச் சதியைச் செய்தார் என்றும் நேற்று வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறிவிட்டது!

இதன் பிறகு அம்மாவின் ஆன்மா எங்களை வழிநடத்தும் என்பது அத்தீர்ப்பினை வரவேற்று, பட்டாசு கொளுத்திக் கொண்டே கூறுவது எத்தகைய கேலிக்கூத்து!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு ஏற்கெனவே பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தபோது, ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தை யார் ஏற்படுத்திக் கொண்டாரோ அவரைத்தான் இறுதியில் ஆளுநர் அழைப்பார் என்னும் பேச்சுகள் அரசியல், ஊடக வட்டாரங்களில் அடிபடுகின்றன என்பதும் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே, டில்லியின் கண்ஜாடை எப்பக்கம் என்கிற அடி நீரோட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
355, 356 ஆயுதங்கள் கூர்தீட்டி தயார் நிலையில் வைக்கப்பட்ட தாக டில்லி வட்டாரத்தில் பேச்சுகளும் அடிபடுகின்றன - தமிழ்நாட்டோரே புரிந்துகொள்வீர்!


கி.வீரமணி  
தலைவர் , திராவிடர் கழகம்.


15.2.2017  
சென்னை

0 comments: