Saturday, January 28, 2017

ஜக்கி வாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியாருக்கு பத்ம விபூஷன் விருது எவ்வகையில் அவர் விருதுக்கு தகுதியானவர்? ....

ஜக்கிவாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியாருக்கு பத்ம விபூஷன் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது - எவ்வகையில் அவர் அந்த விருதுக்குத் தகுதியானவர் என்று தமிழர் தலைவர் வினா எழுப்பி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒவ்வொரு ஆண்டும், குடியரசு நாளில் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

அதனைப் பெரிதும் செல்வாக்கு, பரிந்துரை அழுத்தம் காரணமாகவே பலர் பெறுகிறார்கள் - தகுதி என்பதோ தேடிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்!
மிகப் பிரபலமான நோபல் பரிசு தேர்வு முறை - குழுகூட இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பதற்குப் பிரபல அமெரிக்கப் புதின எழுத்தாளரான இர்விங் வேலஸ் அவர்கள் எழுதிய The Prize என்ற புதினம் இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, துலாக்கோலைப் பிடித்து, சல்லடை போட்டு ஆராய்ந்து வழங்கப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு பத்ம விருதுக்குத் தேர்வாகியுள்ள - ஒரு விந்தையாளரான ஜக்கி வாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியார் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உயரிய விருதான பத்ம விபூஷன் எவ்வகையில் அவர் அதற்குத் தகுதி?

இவரது ஆன்மீகத் தொண்டுபற்றி கோவையில் சில மாதங்களுக்குமுன் பெற்றோர்கள் விட்ட கண்ணீர் கொஞ்ச நஞ்சமல்ல.
பிரபல நக்கீரன் வார ஏட்டில் பல்வேறு செய்திகள் ஆதாரங்களுடன் வெளிவந்தனவே!
இதுதான் பத்ம விபூஷன் விருதுக்குத் தகுதியா?

அதுபோல, தஞ்சை மாவட்டம் பாபநாசம் பார்ப்பனர் கோடி கோடியாக சம்பாதித்து, டில்லியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக, உச்சநீதிமன்றம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்த சிறீசிறீ ரவிசங்கர் கார்ப்பரேட் சாமியார் - இவ்வாட்சிக்கு வேண்டியவர். அபராதம் கட்டினாரா என்று தெரியவில்லை! பிறருக்கு அவர் அறிவுரை வழங்கும் நிலை சரியா?
இவ்வாண்டு என்.எல்.சி. நெய்வேலி நிறுவனத்தில் 26 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் மாசு குற்றவாளிக்கு சிறப்பு விருந்தினராக சிவப்பு கம்பள வரவேற்பு என்பது வெட்ககரமானது; கண்டனத்திற்குரியது.
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இதுதான் நம் சுதந்திரத்தின் லட்சணமா? என்று வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளும் ஏழை - விவசாயிகளின் குரலை எப்படி கேட்க முடியும் - அமிழ்ந்திப் போகிறதோ?
மத்திய அரசு இப்படி நடந்துகொள்வதுதான் தேசியம் போலும்!

- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

சென்னை,27.1.2017 .
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...