Monday, January 9, 2017

சுயமரியாதையே பெண் விடுதலையின் முதல்படி! ஷெரிஃபா கானம் பேட்டி


என் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஆண்களைச் சார்ந்து நிற்க ஒருபோதும் நான் தயாரில்லை. பெண்களைச் சிறுமைப்படுத்தும் காரியம் எங்கே நிகழ்ந்தாலும் நான் குரல் எழுப்புவேன்.
பெண்கள் முகத்தை மூடி, முக்காடிட்டுக் கொண்டுதான் வெளியே போகவேண்டும். வீட்டுக்கு வெளியே ஆண்கள் வரும்போது, அவர்கள் பார்வையில் படுவது மாதிரி நடமாடக் கூடாது. வாசலில் நிற்கக் கூடாது... இப்படிப் பல கட்டுப்பாடுகள் உள்ள, ஒரு பாரம்பரிய முஸ்லீம் குடும்பம்தான் எங்களுடையதும். அய்ந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகளுக்குப் பிறகு பத்தாவதாக நான் பிறந்தேன். அம்மா மணப்பாறைப் பள்ளியில் ஆசிரியை. அப்பா, நான் பிறந்ததும் அம்மாவைப் பிரிந்து சென்றுவிட்டார். பத்து குழந்தை களுடன் தனி மனுஷியாக அம்மா நின்றார்கள். அவர்கள் முன்னால், எந்த நம்பிக்கைக் கீற்றுகளுமற்று வாழ்க்கை தொலை தூரத்துக்கு நீண்டு கிடந்தது. வறுமை வாசல் படியில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தது. பல்வேறு சிரமங்களும் அவமானங்களும் பட்டுதான் அம்மா எங்களை வளர்த்தார்கள். படிக்க வைத்தார்கள்.
எனக்கு எங்கம்மா முன்மாதிரி
அம்மா, மிகவும் உறுதியானவர்கள், முற்போக்கானவர், அந்தக் காலத்திலேயே அவர்கள் தாலி அணிந்தது இல்லை.
மணப்பாறையில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு, டில்லி பக்கத்திலுள்ள அலிகான் முஸ்லீம் பெண்கள் பல்கலைக்கழகம் சென்று ஆபீஸ் மேனேஜ்மென்ட் படித்தேன். நான் சென்று பதினைந்தாவது நாள்... அம்மாவிடம் இருந்து ஒரு கடிதம்... ‘எப்படியிருக்கிறாய்? பத்திரமாகப் போய்ச் சேர்ந்தாயா? அடிக்கடி கடிதம் எழுது...’ இப்படியே சென்று கொண்டிருந்த கடிதத்தில் பத்தோடு பதினொன்றாக... ‘உன் அப்பா இறந்துவிட்டார். பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது. நீ வரவேண்டாம்’ என ஒரு வரி. அம்மா, மிகவும் உறுதியானவர்கள். சமூக அவலங்களுக்கு எதிராகக் கோபம்கொண்டு எழும் என் இயல்பில் அம்மாவின் பங்களிப்பு நிறைய உண்டு.
படிப்பை முடித்துவிட்டு மணப்பாறை திரும்பினேன். ஏதாவது ஒரு நல்ல வேலையில் சேரவேண்டும் என்பதுதான் அப்போதைய என் ஒரே எண்ணமாக இருந்தது. மணப்பாறையில் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்துக்கொண்டு, பேப்பர் பார்த்து வேலைகளுக்கு விண்ணப் பங்கள் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அப்போது, ‘பாட்னாவில் நடைபெறும் பெண்கள் மாநாட்டுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களுக்கு இந்தி மொழிபெயர்ப்பாளராய்  பாட்னா போனேன். என் வாழ்க்கைப் பாதையையே மாற்றும் பயணமாக அது இருந்தது.
மாநாட்டில் பெண்கள் தங்களது பிரச்சினைகளை எல்லாம் சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. முதலில், ஒரு பொது இடத்தில் பெண்களால் இவ்வளவு தைரியமாக, வெளிப்படையாகப் பேச முடியும் என்பதே எனக்கு வியப்பைத் தந்தது. பாட்னாவில் இருந்து திரும்பும்போது, பெண்களுக்கு சமூக அங்கீகாரம் வேண்டும்; பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. புதுக்கோட்டைக்குத் திரும்பினேன்.
ஒரு பெண், அவளது உடல் முழுக்க இருந்த சிகரெட் தீயால் சுட்ட தழும்புகளைக் காட்டினாள். வெளிநாட்டில் இருந்து வந்த கணவன்... ‘நான் அங்கே இருக்கிறேன். நீ இங்கே எவன்கூட சந்தோஷமா இருக்க’ எனக் கேட்டு சுட்டிருக்கிறான். இதுமாதிரி பல கதைகள்... வரதட்சணைக் கொடுமைகள், விவாகரத்து வழக்குகள்.
யாரிடம் சொல்லி அழுவது, யாரிடம் நியாயம் கேட்பது... என மனம் புழுங்கி, தங்களுக்குள்ளேயே அந்த ரகசியங்களைப் புதைத்திருக்கிறார்கள் அவர்கள். பெண்ணாகப் பிறந்தாலே கஷ்டம்தான் என்று ஏற்று வாழ்பவர்கள்தான் அதிகம் பேர். இது மாறவேண்டும். இவர்களுக்காக நாம் ஏன் போராடக் கூடாது? ஒரு உதவி, இடம் கிடைத்தால் அவர்கள் வெளியே வருவார்கள் எனத் தோன்றியது.
ஒவ்வொரு பிரச்சினையையும் எடுத்துக் கொண்டு, சட்டரீதியாக அதற்கான நியாயங் களைத் தேடி என் பயணத்தைத் தொடங்கினேன்.
வேலைகளைச் செய்யத் தொடங்கிய பிறகு ஏகப்பட்ட அனுபவங்கள். தடைகள், வலிகள், அவமானங்கள், அதிகாரிகளின் அருவருக்கத் தக்கப் பார்வைகள்... சில நேரங்களில் அவசர வேலையாக ராத்திரி புறப்பட்டுப் போகவேண்டி இருக்கும். வெளியூர்களில் கடைசிப் பேருந்தை தவறவிட்டு நள்ளிரவில் தனி ஆளாக பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கிறேன். அப்போது, பலமுனைகளில் இருந்தும் ஊடுறுவிப் பார்க்கும் கண்கள் உடலைக் கூசச்செய்யும். இதற்காக லாட்ஜில் ரூம் எடுக்கச் சென்றால் அங்கே நூறு கேள்விகள்.
இதனால், பக்கத்து கிராமங்களில் இருந்து புதுக்கோட்டை வந்து, கடைசிப் பேருந்தை தவறவிட்டு பஸ் ஸ்டாண்டில் காத்துக் கிடக்கும் பெண்கள் தங்க ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என விரும்பினேன். அப்போது, ஷீலாராணி சுங்கத் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார். அவரிடம் சென்று இதற்காக இடம்தர முடியுமா எனக் கேட்டோம். ‘தனி மனிதர்களுக்குத் தர முடியாது; நீங்கள் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதிலிருந்து கடிதம் எழுதுங்கள், கட்டாயம் ஆவன செய்கிறேன் என்றார். அப்படித்தான் 1991இல் ‘ஸ்டெப்ஸ்’ பெண்கள் மேம்பாட்டு மய்யத்தைத் தொடங்கினோம்.
கனவு
மாநில அளவில் பெண்களை ஒருங் கிணைக்கும் பெண்கள் மய்யம் ஒன்றை அமைத்தல், வயதான காலத்தில் பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க ஒரு தொகை வைத்துக்கொள்ள பெண்கள் வங்கி அமைத்தல்.. எனப் பல கனவுகள்.
புதுக்கோட்டைப் பேருந்து நிலையம் பக்கத்தி லேயே ‘ஸ்டெப்ஸ்’ அமைப்புக்கு நிலம் ஒதுக்கினார் ஷீலாராணி. நிலம் கிடைத்து விட்டாலும் கட்டடம் கட்ட, எங்களிடம் எந்த பொருளாதாரப் பின்புலமும் இல்லை. எனவே நாங்களே மணல், செங்கல் சுமந்து கட்டிடத்தைக் கட்டினோம். அந்த இடத்தில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதைவிட, பேருந்து நிலையம் பக்கத்து இடம் என்பதால் நிலத்தின் மதிப்புதான் பலரது கண்களையும் உறுத்தியது. அங்கே இருந்து எங்களை விரட்ட பல்வேறு வகையிலும் தொந்தரவுகளைத் தந்தார்கள். சாயங்காலம் வேலைகளை முடித்து, வீட்டுக்குச் சென்று, மறுநாள் காலையில் வந்து பார்த்தால்... அந்த இடம் முழுக்க மலம் கழித்து வைத்திருப் பார்கள். ஆணுறைகளைப் பரப்பிப் போட்டிருப் பார்கள். அதனை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு அன்றைய வேலைகளைத் தொடங்குவோம். மறுநாள் காலையிலும் இதேமாதிரி இருக்கும். அவர்களே போட்ட ஆணுறைகளைக் காட்டி அங்கே விபச்சாரம் நடக்கிறது எனப் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.
ஒரு பெண்ணை செயல்படாமல் வைக்க, அவளது ஒழுக்கத்தின் மீது கைவைத்தால் போதும். வெளியே இருந்து இந்தப் பிரச்சினைகள் என்றால், வீட்டுக்குள் வேறு மாதிரியான பிரச்சினைகள்... வெளியே போகக்கூடாது எனக் கட்டுப்பாடுகள், அடி, உதை.
எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். பிரேமானந்தா வழக்கில் பாதிக்கப்பட்ட 17 பெண்களுக்கு வழக்கு முடியும்வரை இரண்டு ஆண்டுகள் தங்க இடம் கொடுத்தோம். மனரீதியாக அவர்களைத் தயார்படுத்தி, தைரியம் ஊட்டினோம்.
தனக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்கள் எனத் தெரிந்தால் பல பெண்கள் தைரியத்துடன் வெளியே வருவார்கள் என்பதுதான் எங்கள் அனுபவம். இப்போது எங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு பாதிக்கப் பட்ட பெண்கள் அவர்களாகவே தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போராடுவதற்கான தன்னம்பிக்கையை ஊட்டுவதைத்தான் எங்களது முக்கிய செயல்பாடாக நான் நினைக்கிறேன்.
ஜெயித்தது எப்படி?
அடிபட்டு விழுந்தால் அதனைவிட வேகமாக எழுந்திருப்பேன். எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டேன். சோர்ந்து போகமாட்டேன். அப்புறம் கமிட்மெண்ட். ஒரு சமூக சேவையாக இல்லை. என்னுடைய கடமையாகவே நினைத்து எல்லாவற்றையும் செய்கிறேன்.
ஏறத்தாழ 26 ஆண்டுகள்... 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குள். நாங்கள் பிரச்சினைகளுடன் செல்லும்போது சில அதிகாரிகள் உதவுவார்கள், சிலர் எதிர்ப்பார்கள். முஸ்லிம் பெண்கள் பிரச்சினை என்றால் உங்கள் ஜமாத் பார்த்துக்கொள்ளும் எனத் திருப்பி அனுப்பி விடுவார்கள். தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசும்போதுகூட ஜமாத்துக்குப் பெண்களால் போக முடியாது. அவர்கள் இல்லாமலே, அவர்களிடம் கேட்காமலே அவர்கள் மீது தீர்ப்பு கூறுவார்கள். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
எனவே, ஜமாத்தில் பெண்களைப் பற்றி பேசி முடிவு எடுக்கும்போது, நாங்களும் இருக்க வேண்டும் எனச் சொன்னோம். அதற்கு சம்மதிக்கவில்லை. அப்போது நாமே ஏன் ஒரு ஜமாத்தைத் தொடங்கக் கூடாது எனத் தோன்றியது. இப்படித்தான் ‘தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்’தைத் தொடங்கினோம். பெண்களால் பெண்களுக் காக நடத்தப்படுவதே பெண்கள் ஜமாத். அப்போது, ‘பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா’ என சிலர் ஊடகங்களில் வெளிப் படையாகவே எழுதினார்கள். அவர்கள் கணிப்பு எல்லாம் பொய்த்துப் போனதற்கு இன்று வரலாறு சாட்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் நாங்கள் எதையும் புதிதாகப் புகுத்தவில்லை. ஏற்கெனவே இருப்பதையே நடைமுறைப் படுத்துகிறோம்; அவ்வளவுதான்.
சையது அம்மாள் என்பவர், 10 வயதில் திருமணம் ஆனவர். புளியங்கொட்டை வியாபாரம் செய்கிறார். முதல் கூட்டத்தில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தார். அடுத்த கூட்டத்தில் கடைசிக்கு முந்தின வரிசைக்கு வந்தார். இப்படி கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறி முதல் வரிசைக்கு வந்து உட்கார்ந்தார். அவரே முன்னின்று 70 வயது ஆணுக்கும் 30 வயது பெண்ணுக்கும் நடக்க இருந்த ஒரு திருமணத்தை நிறுத்தினார். இதுதான் எங்கள் வெற்றி.
தமிழ்நாடு முழுக்க 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் என் நேரடி கவனிப்பில் இருக்கிறார்கள். மறைமுகமாக, எங்கள் உறுப்பினர்களையும் சேர்த்தால் பல லட்சம் பேர். இப்போது ஆண்கள் ஜமாத்தில் இருந்தே சில பிரச்சினைகளை எங்களிடம் அனுப்புகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை?
மனிதம்தான் என்னுடைய மதம். பெண்களை சக மனுஷியாகப் பார்ப்பவர்கள், அவர்களது துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் எல்லோருமே எனக்குக் கடவுள்தான். அவர்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன்.
பெண்களுக்கு எனத் தனி மசூதி கட்டும் பணியில் ஈடுபட்டோம். உடனே நேரிலும் போனிலும் பல கொலை மிரட்டல்கள், ‘ஷெரிஃபா வந்தால் செருப்பு எடுத்து அடியுங்கள்’ என திண்டுக்கல்லில் சொல்லியிருக்கிறார்கள். அடித்தார்கள், அடிபட்டிருக்கிறேன்.
அடிப்பதன் மூலமும், கொலை மிரட்டல் களாலும் ஷெரிஃபாவை பணிய வைக்க முடியாது. பெண்கள் நிறைய காலங்கள் பெருந்தன்மையோடு பொறுமையாக இருந்து விட்டோம். இனிமேலும் அப்படி இருக்க முடியாது.
‘பிரச்சினை என்றால் ஷெரிஃபாவிடம் போகலாம்’ என்ற நம்பிக்கையைப் பெண்கள் மத்தியில் விதைத்திருக்கிறேன். இதைத்தான் என் வெற்றியாகப் பார்க்கிறேன். பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருதல், அதற்காகப் போராடுதல் என்பதை உணர்வுப்பூர்வமாகச் செய்கிறேன். இதை ஒரு வேலை என்றோ, சமூக சேவை என்றோ ஒருபோதும் நான் நினைத்ததில்லை. சுயமரியாதையே பெண் விடுதலையின் முதல்படி. அதை நோக்கியே என் பயணம்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...