Total Pageviews

Wednesday, December 28, 2016

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் மீன்பிடிக்கக் காத்திருக்கும் கொக்குகள் - எச்சரிக்கை!

அ.இ.அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் உள்நோக்கத்தோடு ஆரிய ஏடுகள் அம்புகளை ஏவுவது ஏன்?
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் மீன்பிடிக்கக் காத்திருக்கும் கொக்குகள் - எச்சரிக்கை!
இந்தசந்தர்ப்பத்தில் தி.மு.க.வின் அணுகுமுறை மிக கண்ணியமிக்கதே!
இராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியையும் - ஆட்சியையும் காப்பாற்றட்டும் அ.இ.அ.தி.மு.க.!
தாய்க்கழகம் என்ற முறையில் தமிழர் தலைவர் ஆசிரியர்  விடுத்துள்ள முக்கிய அறிக்கை

Image result for ஆசிரியர் அறிக்கை
அ.இ.அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்திட முயலும் சக்திகளிடம் எச் சரிக்கை தேவை - இந்த சந்தர்ப்பத்தில் அ.இ.அ.தி.மு.க. இராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவேண்டும் என்று  தாய்க்கழகம்  என்ற முறை யில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:
அ.இ.அ.தி.மு.க.வில், அதன் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு காரணமாக அப்பொறுப்புக்கு அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க - அந்த அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு வருகின்ற 29.12.2016 அன்று சென்னையில் கூடவிருக்கிறது!
வெறும் உள்கட்சிப் பிரச்சினைதானா?
பல்வேறு வகையிலும் மக்களின் ஈர்ப்பும், செல்வாக்கும் பெற்று இருந்த தலைவரான ஜெயலலிதா அவர்களது தலைமைக்குப் பிறகு - அக்கட்சியை - கழகத்தை வழி நடத்திச் செல்லவேண்டிய தலைமையைத் தேர்ந் தெடுப்பதற்கு ஆயத்தங்கள் சட்டப்படி நடைபெறுகின்றன.
இது அக்கட்சியைச் சார்ந்த ஒரு முக்கியப் பணி - அவர்களுக்குக் கடமையும்கூட!
இதைப்பற்றி மற்றவர்கள் கவனம் செலுத்துவதோ, விமர்சிப்பதோ தேவையா என்ற கேள்வி எழலாம்.
தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் எதிர்காலத்தைப் பொறுத்து மிக முக்கிய பிரச்சினை இதில் அடங்கியுள்ளது என்பதால், பலரும் இதில் ஆர்வம் காட்டுவது தவிர்க்க முடியாதது.
சபலங்களுக்கு ஆளாகவில்லையே!
ஆனால், திட்டமிட்டே அவர்களில் யார் பிரதான பாத்திரம் வகிக்க வற்புறுத்தப்படுகிறாரோ அவர்மீது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்த டிசம்பர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி இன்றுவரை சுமார் 20 நாள்களுக்குமேலாக - ஜெயலலிதாவின் நிழலாக அவரது தாழ்விலும், வாழ்விலும், சோதனையான காலகட்டத்திலும் முகம் கொடுத்து, அவருக்கு உற்ற துணையாக, அவருக்கு எதிராக  இருந்தவர்கள் உங்களுக்கு லாபம் - வாய்ப்பு வசதிகள் எல்லாம் உண்டு என்று ஆசை காட்டிய நேரத்திலும், அத்தகைய சபலங்களுக்கு இரையாகாமல், நட்புறுதியோடு, ‘வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் அவருடன்தான்’ என்று இருந்த திருமதி சசிகலா அவர்கள்மீது திட்டமிட்டே உள்நோக்கத்தோடு காகித அம்புகள், எதிர்மறைச் செய்திகள், எல்லாவற்றையும் தமிழ்நாட்டின் நடுநிலை என்று தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக் கொண்ட நாளேடுகள் - ‘தினமலர்’, சில ஆங்கில நாளேடுகள்,  ‘துக்ளக்‘, ஆர்.எஸ்.எஸ். ஏடுகளான ‘விஜயபாரதம்‘, ஆங்கில வார ஏடான ‘ஆர்கனைசர்’ (Organiser) போன்றவற்றில் கடந்த 20 நாள்களாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தொடர் ‘அர்ச்சனைகள்’ ஆதாரமில்லா அதீதக் கற்பனைகள், சிண்டு முடியும் சிறுநரித்தன ‘திருப்பணிகள்’ நடத்தப்பட்டு வருகின்றன!
இனப் போராட்டமே!
தந்தை பெரியார் என்ற பதவி நாடா பகுத்தறிவுப் பகலவன் சொல்வார்:
‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை; அரசியல் பெயரில் - போர் வைக்குள் நடைபெற்றவை அத்துணையும் ஆரிய - திராவிட இனப் போராட்டமே’’ என்று.
அதை அப்பட்டமாக  ஆரிய ஏடுகளும், மற்ற மக்கள் ஆதரவைப் பெற்று இந்தப் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் காலூன்றிட முடியாத, குறுக்கு வழி அரசி யலில்,  லாட்டரியில் பரிசு விழாதா என்று கனவு காணும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கட்சிகளும் காட்டுகின்றன; பிரச்சி னையாக்க  முயலுகின்றன!
சூன்யம் ஏற்பட்டுள்ளதா?
இங்கு ஏதோ ‘சூன்யம்‘ ஏற்பட்டு விட்டதாகவும், அதை நிரப்பத் தங்களால்தான் முடியும்; அதற்காகவே ‘புது அவதாரம்‘ எடுத்துள்ளவர்கள் போலும் நித்தம் நித்தம் சிலர் உளறுவதும், அதை ஏதோ பிரகடனம் போல் ஆசைக் கனவுகளை பகலிலே கண்டு அறிவித்து மகிழுவதுமாக உள்ளனர்!
தந்தை பெரியாரின் நுண்ணாடியைப் போட்டுப் பார்த் தால்தான் இந்தக் கிருமிகளின் ஊடுருவல்பற்றி சரியாக அறிய முடியும்!
சகோதரி திருமதி சசிகலா அவர்களை எதிர்க்க வன்மையான ஆயுதமோ, எதிர்ப்போரோ யாரும் வலிமையாக இல்லாத நிலையிலும், உறவு என்ற பெயரால் சில ‘‘சோளக்கொல்லை பொம்மைகளைக்‘’ காட்டி அக் கட்சியினர் சிலரைக் குழப்பலாமா என்னும் பணியில் ஊடகங்கள் - சில தொல்லைக்காட்சிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன!
ஜெயலலிதா வாழ்விலும் - தாழ்விலும் உடனிருந்தவர் யார்?
யார் அக்கட்சியின் பொதுச்செயலாளாரைத் தேர்வு செய்ய தகுதியும்,  அதிகாரமும், பொறுப்பும் உள்ளவர்களோ, அவர்கள் ஓரணியில் திரண்டு, ஒரே குரலில் தங்களது வேண்டுகோளை அந்த அம்மையார் முன் வைக்கின்றனர்!
காரணம், திருமதி சசிகலா கடந்த பல ஆண்டுகளாக வெற்றி - தோல்விகளில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் எப்படிப்பட்ட வியூகங்களை வகுத்தார்; எந்தெந்த ‘அஸ்திரங்களை' எவ்வப்போது, யார் யார்மீது ஏவினார் என்பதையெல்லாம் நீக்கமற அவருடன் இருந்து புரிந்தவர் மட்டுமல்ல; அச்செயல் வடிவம் எடுக்கப் பெரும் பங்காற்றியவர் சசிகலா என்பதை எவரே மறுக்க முடியும்?
பொறாமைக்காரர்களும், கலக மூட்டிகளும் பொங்கி - திராவிட இன வெறுப்பினை மூச்சுக்காற்றாய் சுவாசிப் போரையும், தவிர வேறு எவரும் நாம் கூறுவதை அறிவு நாணயமிருந்தால் மறைக்கவோ, மறுக்கவோ முடியுமா?
ஒதுக்கினார் - பின் இணைத்தார்
இந்த அம்மையாரை சில காலம் ஜெயலலிதா ஒதுக்கியதையே ஊதி ஊதித் திரும்பத் திரும்பச் சொல்லு வோருக்கு அதன் பிறகு அவரை அழைத்து தன்னுடன் கடைசிவரை வைத்து அவரது நிர்வாகப் பொறுப்பு, ஆலோசனை முதற்கொண்டு எல்லாவற்றிலும் பங்கேற்கச்  செய்தார் என்பதை ஏனோ வசதியாக  மறந்துவிடுகின்றனர்?
திருமதி சசிகலா இன்னமும் தனது ஒப்புதலை அளிக்க வில்லை என்பதையும்கூட நல்லெண்ணத்தோடு இந்த இன எதிரிகள் பார்ப்பதற்குத் தயாராக இல்லையே!
இடையில் ஜாதியை நுழைத்தனர்; அந்தப் ‘பலூன்’ அவர்கள் யாரை நம்பினார்களோ அவர்களாலேயே கிழிக்கப்பட்டு விட்டது! பயனற்றுப் போய்விட்டது!
‘அரசியல் மீன்’ பிடிக்கக் காத்திருக்கும் கொக்குகள்!
இதில் ‘அரசியல் மீன்’ பிடிக்க வாடி நிற்கும் கொக்குகள் தங்களிடம் உள்ள அதிகாரப் பலங்களையும், ஒரு கட்டத்தில் காட்டி அச்சுறுத்தக் கூடும்! எம்.ஜி.ஆர். காலத்திலேயே நடந்த பழைய முறைதானே இது?
ஆனால், அ.தி.மு.க.வின் பலம் என்பது தமிழ்நாடு சட்டமன்றத்தில் மட்டுமல்ல; நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள 50 உறுப்பினர்களின் கட்டுப்பாடு என்ற ‘விஸ்வரூபத்தின்முன்’ எந்த அதிகாரமும், அச் சுறுத்தலும் சாதாரணம் என்பதை, ஜெயலலிதா அம்மையாரின்  வீரஞ்செறிந்த  நிலைப்பாட்டை  எண்ணிக்கொண்டால், தாமே தம் பலத்தை அ.தி.மு.க.வினர் உணர முடியும்!
தேவை இராணுவக் கட்டுப்பாடு
இது மணல் வீடு அல்ல; கோட்டை என்பதைக் காட்ட அந்த சகோதரர்கள் எழுச்சியுடனும், நம்பிக்கையுடனும், அய்யா - அண்ணா கூறிய கட்டுப்பாட்டுடன் - ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்தால்,  இரும்பை விழுங்க எறும்புகளால் முடியாது என்று உணர்த்த முடியும்!
தி.மு.க.வின் கண்ணிய அரசியல்!
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான தி.மு.க. மிகுந்த முதிர்ச்சியுடன் - குறுக்கு வழிகளில் எதற்கும் ஆசைப்படாமல், கண்ணியத்துடன் அரசியல் நடத்துவது பாராட்டுக்குரியது!
எதிர்க்கட்சி என்ற முறையில் உரிய அளவு, தன் கருத்துகளை வெளியிட்டு வருகிறது.
‘கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்;
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்,
மானம் மழுங்க வரின்’  (நாலடியார்)
என்ற பழையப் பாட்டு நியதிப்படி - இடப்பக்கம் வேட்டையில் வீழ்ந்தால் புலி அதனை உண்ணாதாம்; வலப்பக்கம் வீழ்ந்தால்தான் உண்ணும் என்பது எப்படியோ - வேட்டையில்கூட ஒரு நியதி உண்டு.
குறுக்கு வழியில் எந்த முயற்சியும் தேவை என்று எண்ணாத திண்மைதான் உண்மையான ஜனநாயக வாதிகள் என்பதை உலகுக்கு அவர்களை அடையாளம் காட்டும்.
ஆக்கபூர்வ எதிர்க்கட்சிப் பணியைச் செய்யும் அந்த இயக்கம் - தனது கடமை வழுவாது - அதன் பண்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறது!
கடல் வற்றிக் கருவாடு தின்னக்
காத்திருக்கும் சில கொக்குகள்தான்
குடல்வற்றி சாகும் பரிதாபம்-
தமிழ்நாடு அரசியலில் ஏற்படுவது உறுதி.
தாய்க்கழகம் என்ற முறையில்...
எனவே, திராவிடர் இயக்கங்களின் தாய்க்கழகம் என்ற உரிமையோடும், உறவோடும் கூறுகிறோம் - அ.தி.மு.க. பொறுப்பாளர்களே!
‘இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்பது குறள் மொழி அறிவுரை. (இவன் என்பது இருபால் உரிமையுள்ளதே).
மறைந்த ஜெயலிதாவை அறிந்தவர், அளந்தவர் - அவருடன் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து பக்குவப்பட்டவர் என்ற கனிந்த நிலையில் முதிர்ச்சி யுடன் உள்ள ஒருவர் - அ.தி.மு.க.வின் சோதனையான இந்த காலகட்டத்தில் திருமதி சசிகலா அவர்களைத் தேர்வு செய்வது, அடுத்தடுத்து வரவிருக்கும் சோதனை களையெல்லாம் சந்திக்கும் சித்தத்துடன் இருக்க ஒரே வழி - தடுமாற்றமோ, குழப்பமோ உங்களுக்கு இல்லை; உருவாக்க முயலும் இனப் பகைவர்களை, அரசியல் எதிரிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அடையாளம் கண்டு நடந்துகொள்வதுதான் முக்கியம்.
இதுவரை சசிகலா வெறும்  கேடயம் மட்டும்தான் - இனி....!
திருமதி சசிகலா இதுவரை கேடயமாய் பயன் பட்டவர்; இனி வாளும் - கேடயமாய் நின்று அந்த இயக்கத்திற்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டம்! போகப் போக இது மற்றவர்களுக்குப் புரியும்.
இயற்கை நடப்புகளை எப்போதும் எதிர்கொள்ளப் போதிய பக்குவமும் அவரிடத்தில் அபரிமிதமாய் உண்டு என்பதை இனிதான் அகிலம் காணும் வாய்ப்பு ஏற்படும் - வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா?
நமக்குத் தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை; இந்தக் காலகட்டத்தில் தாய்க்கழகம் ஆற்றவேண்டிய கடமை இது.

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.
சென்னை
27.12.2016


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: