Total Pageviews

Saturday, November 5, 2016

‘‘ஜெய் ஸ்ரீராம்!’’ ‘‘ஜெய் பெரியார் ராமசாமி!’’

‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் ஸ்ரீராம்’ இப்படி ஒரு கோஷம்! தெருவில் போகும் குப்பனும், சுப்பனும் போட்ட கோஷமல்ல இது. ஒரு பிரதமர்தான் - ஆம்! நரேந்திர மோடிதான் தோள்களைத் தூக்கி தொண் டையைக் கனைத்து மிகப்பெரியதோர் முழக்கத்தைப் போட்டுத் தள்ளியுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்திய பிரமாணம் எடுத்து பிரதமர் நாற்காலியில் சட்டமாக அமர்ந்தவர் இவர்.
அந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிலேயே அனைவர் கண்களிலும் படும்வண்ணம் பட்டுத் தெறித்ததுபோல, சில வாசகங்கள் பிரகாசித்துக் கொண் டுள்ளன.
இந்தியா ‘‘செக்குலர்’’, ‘‘சோசலிஸ்ட்’’ நாடு என்ற சொற்கள் மகத்தானவை - அரசமைப்புச் சட்டத்தில் இது கண்கள் போன்று ஜொலிப்பவை.
சமதர்ம, மதச்சார்பற்ற தன்மை கொண் டது என்பதே இதன் பொருள்.
பிரதமர் மோடிக்கு இது தெரியாதா? ஏன் தெரியாது? தெரியும், நன்றாகவே தெரியும்.
தெரிந்திருந்தும் இவற்றிற்கு எதிராக ஒரு பிரதமரால் எப்படி கோஷம் போட முடிந்தது?
ஆம்! அவர் இந்தியாவுக்கான பிரத மரல்ல; இந்து ராஜ்ஜியத்துக்கான பிரதமர்; இதோ பேசுகிறார் கேண்மின்! கேண்மின்!
11.10.2016, செவ்வாய்க்கிழமை லக் னோவில் நடை பெற்ற தசரா விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் தனது உரையின் தொடக்கத்திலும், பேச்சை முடிக்கும் போதும், ‘‘ஜெய் ஸ்ரீ ராம்’’ என்று முழக்கமிட்டார். அத்துடன் நில்லாமல் அவர், அந்த முழக்கம் ஒவ்வொரு வீட் டிற்கும் சென்றடையும் வகையில் உரக்கக் குரல் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் தனது உரையிலே ராமரின் சிறப்புப்பற்றியெல்லாம் எடுத்து ரைத்தார்.  அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராமரின் வில் அம்பு, அனுமனின் கதாயுதம் மற்றும் விஷ்ணு வின் சின்னமான சுதர்சனச் சக்கரமும் நினைவுப் பரிசுகளாக அளிக்கப்பட்டுள் ளன. மொத்தத்தில் ‘‘இந்து சாம்ராஜ்யம்’’ என்ற கற்பனையில் அனைத்தும் அன்று நடந்தேறின. இவையெல்லாம் உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதிலே வைத்து, பிரதமர் நடத்திய அரசியல்
தேர்தல் பிரச்சாரம் என்றே கருதப்படுகிறது.
இந்தத் தகவல்கள் எல்லாம் மறுநாள் ஏடுகளில் முக்கிய இடம்பெற்றுச் சிரித்தன.
உண்மையைத்தான் உரக்கக் கூவி இருக்கிறார் இந்த உதாரண புருடர். பா.ஜ.க. வின் கொள்கை என்ன? சங் பரிவார்களின் எழுதப்படாத சட்டம் என்ன?
ராமராஜ்ஜியத்தை அமைப்பதுதானே - அதனை மக்களவையின் தேர்தல்போது உத்தரப்பிரதேச வாரணாசியில் வக்கணை யாகப் பேசியவர்தானே இந்த நரேந்திர மோடி.
‘‘நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டது உத்தரப்பிரதேசம். ‘‘நீங்கள் ஒரு நாள் சரியான அரசை தேர்வு செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி தேர்வு செய்வீர்கள் என்றால், அன்றுதான் ராமராஜ்ஜியம் நடைமுறைக்கு வரும்’’ (20.2.2013) என்று பேசினாரே!
சூத்திரனான சம்பூகன் தவமிருந்தான் என்பதனால் அவனை வாள் கொண்டு வெட்டி ஆனந்தப் பண் பாடியவன்தானே அந்த அயோத்தி ராமன்.
அன்றைக்குக் கல்வி என்பது தவம் தான். அந்தத் தவத்தைச் சூத்திரன் செய் யக்கூடாதே - அது வருண தருமத்துக்கு வைரியாயிற்றே!
வருணக்கலப்போ - வருண தருமத்தை மீறிய தொழிலையோ செய்தால் தண்டத் தைக் கொண்டு தலையையும் சீவலாம் என்பதுதானே மனுதர்மம் - கீதாசிரியரின் உபதேசத்தின் சாரமும் அதுதானே!
வருண தருமத்தைப் படைத்தவன்தான் நான். படைத்தவனாகிய நானே நினைத் தாலும் அதனை மாற்றி அமைக்க முடியாது என்று ஆரிய தாசனான கிருஷ்ணன் கிறுக்கி வைத்ததுதானே கீதை!
அன்றைக்குக் கல்வி என்பது தவமாக இருந்தது; அதனை ஒரு சூத்திரன் செய்த போது மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் வாளால் வெட்டினான்.
இன்றைக்குச் சூத்திரர்களும், பஞ்சமர் களும் கல்வி பயில  ஆரம்பித்துவிட்டனர். இன்று வாள் கொண்டு வெட்ட முடியுமா மோடியால்? (குஜராத்தில் சிறுபான்மை இன மக்களை அவ்வாறு செய்யவில்லையா என்று கேட்கலாம், அது வேறு செய்தி).
வேறு வழியில் வீழ்த்தலாம்; அதுதான் புதிய கல்வி - சமஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்ற சட்டம், இந்தியைப் பயில வேண்டும் என்ற வீம்பு.
குருகுலக் கல்வி என்னும் குலக்கல்வித் திட்டத் திணிப்பு.
நுழைவுத் தேர்வு என்னும் நுட்பமான தடைச் சுவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரோகித் வெமுலாவைத் தற் கொலைக்குத் தூண்டியது யார்? டில்லிப் பல்கலைக் கழகத்தின் கன்னையா குமார் விரட்டி விரட்டி நோகடிக்கப்படுவது எதைக் காட்டுகிறது?
அய்.அய்.டி.,களில் சேரும் தாழ்த் தப்பட்ட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களும் இடை நிறுத்தங் களின் பின்னணி என்ன? அவர்களின் தற்கொலை எண்ணிக்கை பெருகிக் கொண்டிருப்பதன் மர்ம முடிச்சு எது?
மாட்டுக்கறி தடை செய்யப்பட்டது எதன் அடிப்படையில்? பசுவதைத் தடை சட்டம் எதைக் காட்டுகிறது?
செத்த பசு மாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்படுவது - அன்றைய சம்பூக வதையின் தொடர்ச்சி தானே!
‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோஷத்துக்குள் பொதிந்து கிடக்கும் உட்கூறுகள் வெவ்வேறு வடி வங்களில் செயல்பாட்டுக்கு வர ஆரம் பித்துவிட்டனவே! அவற்றைப் புரிந்து கொள்ளாததுதான் நம்முடைய தவறே தவிர, அவர்கள்  அவர்களின் சம்பூக வதை வேலையை ஆரம்பித்துவிட்டார்களே!
முஸ்லிம் பெரியவர் வீட்டில் மாட்டுக் கறி இருந்தது என்று பொய்யாகக் கூறி, அவர் அடித்துக் கொல்லப்படவில்லையா? கொன்ற குற்றவாளி சிறையில் செத்தான் - அவனுக்குத் தேசியக் கொடி போர்த்தி யல்லவா இறுதி ஊர்வலத்தை நடத்தி இருக்கின்றனர்.
இந்தியாவின் இந்தக் கோணல் குரூரப் புத்தி - உலகெல்லாம் சிரிப்பாய் சிரிக்கிறதே!
அமெரிக்க அதிபர் இடித்துச் சொல்லவில்லையா?
இந்தியாவில் அமெரிக்க அதிபர் மூன்று நாள் சுற்றுப்பயணம் ஒன்றைச் சிறப்பாக மேற்கொண்டார். நிறைவாக மூன்றாம் நாள் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பேசினார். டில்லி சிரிபோர்ட் ஆடிட் டோரியத்தில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அப்பொழுது அமெரிக்க அதிபர் அழுத்த மாக ஒன்றைப் பதிவு செய்தார்.
மத ரீதியாகப் பிளவுபடாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும் என்றார். இதைவிட நாகரிகமாக எப்படி ‘இடித்துக்’ காட்ட முடியும்? அதுவும் இந்தி யாவின் தலைநகரிலேயே இந்தியாவின் தற்கால நிலையைத் தலையில் குட்டி அல்லவா சொல்லியிருக்கிறார் (28.1.2015).
அமெரிக்கத் தலைநகரமான வாசிங் டனில் இந்திய நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் தன் வாழ்விணையர் மிச்சேலுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார். அப்பொழுது இந்தியாவில் அவர் மேற் கொண்ட சுற்றுப்பயணம் பற்றிப் பேசியது என்ன? (5.2.2015).
‘‘இந்தியா ஓர் ஆச்சரியப்படத்தக்க மிகவும் அழகான நாடு. அங்கு பல்வேறு வேற்றுமைகள் காணப்படுகின்றன. இந்தி யாவில் அனைத்து வகையான மத நம்பிக் கைகள், சடங்குகள், விழாக்கள் உள்ளிட் டவை நீண்ட காலமாக நடந்து வருகின்றன. இவற்றின்மீதுள்ள தங்களது நம்பிக்கை, மரபு காரணமாக ஒரு சாரார் மற்றவர் களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால், இந்தியாவில் மத சகிப்புத் தன்மை இல் லாததைக் காண நேரிட்டால், அந்நாட் டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தியே அதிர்ச்சி அடைந்திருப்பார்’’ என்றாரே - இதுதான் இந்தியா - உலக நாடுகளில் ‘பாரதப் புண்ணிய பூமியின்’ அழுக்குப் படிந்த அருவருப்பான முகம்.
துணைக் குடியரசுத் தலைவரின் துடிப்பு
‘‘நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் நமது புனித நூல் போன்றதாகும். தனி மனித உரிமைக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட் டுள்ளது. ஆனால், தற்போது நடந்துவரும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியதாக மாறி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு மனநோயாளி ஒருவரை பாகிஸ்தான் தீவிரவாதி என்று கூறி, ஊரே சேர்ந்து அடித்துக் கொன்றனர். இந்தப் பரபரப்பு அடங்குமுன் தாதரி நிகழ்வு நடந்துள்ளது. மிகவும் துயரமான நிகழ்வு. நமது மனதைக் கேளுங்கள் - இதுபோன்ற நிகழ்வுகளை நாம் அனுமதிக்கலாமா? இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போது நமது ஒற்றுமை மற்றும் சகிப்புத் தன்மை கேள்விக்குறி யாகிறது’’ என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலம் தாதரியில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் வீட்டில் பசு மாட்டுக்கறி இருந்தது என்று கற்பித்து, ஊர்க் கோவில் மணியை அடித்து, ஊர் மக்களை ஒன்றுகூட்டிப் படுகொலை செய்தனரே பாதகர்கள்.
அந்தக் கொடூரத்தைக் குறித்து இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன் சாரி அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் நாகரியைச் சேர்ந்த மூத்த மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் அகர்வால் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி யில் குறிப்பிட்ட மேலே கண்ட கருத்து முக்கியமானது அல்லவா (2.10.2015).
குடியரசுத் தலைவர்  வைத்த குட்டு!
இதே கருத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் குறிப்பிட் டது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் தம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக, ‘‘தேசிய வாத குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி’’ என்ற நூல் குடியரசுத் தலைவர் மாளிகை யில் வெளியிடப்பட்டது (7.10.2015). அந் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,
‘‘நாட்டின் பன்முகத் தன்மை, அமைதி, சகிப்புத் தன்மைக்கு இழுக்கு ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுக்கும் அரசு இடம் தரக்கூடாது’’ என்று இடித்துக் கூறினாரே!
அமெரிக்க குடியரசுத் தலைவரும், இந்தியக் குடியரசுத் தலைவரும் இந்திய ஆட்சியின் போக்கை விமர்சித்திருக் கிறார்கள் - விசனப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது எந்த முத்திரையைக் குத்த உத்தேசம்?
அய்யய்யோ, ராம ராஜ்ஜியமா என்று அலறுவதில் அர்த்தம் இல்லை. இந்த ராம ராஜ்ஜியம் என்ற கோட்பாட்டை வீழ்த்தும் ஒரே வாள்தான் உண்டு. அதுதான், அந்த ராமனுக்கே சாமியான பெரியார் ராமசாமி என்னும் தத்துவப் போர்வாள்!
ஜெய் ஸ்ரீராமுக்குப் பதிலடி ‘‘ஜெய் பெரியார் ராமசாமி!’’ என்பதே!

0 comments: