Total Pageviews

Tuesday, November 15, 2016

கோவில்களைக் கவனிக்க உகந்த நேரம்?

“கோவில்களை கவனிக்க உகந்த நேரம்‘’ என்ற தலைப்பில் ‘தினமலர்’ தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள் ளது. எப்போதும்போல் எழுத வேறு செய்தி இல்லாத நிலையில் எதையாவது எழுதி வைப்பது என்ற பாங்கை மிகவும் அருமையாக கடைபிடித்து வருகிறது ‘தினமலர்’.  சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தற்போது அதிகம் வெளிவரும் ‘பேய்’ப்படங்கள் குறித்து ஒரு திரைப்பட இயக்குநரிடம் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை ‘பேய்’ப்படம் எடுப்பதற்கும், ‘சாமி’ப்படம் எடுப்பதற்கும் கதையோ அதன் உண்மைத்தன்மையோ தேவையில்லை; படத்திற் கான கதைகளைத் திட்டமிடும்போது தேநீர் கொண்டு வருபவர் கூறும் கதைகளைக் கூட நாங்கள் சேர்த்துக் கொள்வோம் என்று கூறினார்.
இதையே பிரபல வடநாட்டுத் துறவி பெயரில் எடுத்த படத்தில் அந்தத் துறவியின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சம்பவமாக சேர்த்து விட்டோம் என்றும் போகிற போக்கில் ஒரு உண்மையைக் கூறிவிட்டுச் சென்றார்.
சாயிபாபா பற்றி நூல் எழுதவேண்டுமென்றால் எந்த கதையையும் எடுத்து ஆங்காங்கே சாயி சாயி என்று சேர்த்து எழுதினால் போதும்; சிறீடி சாயிபாபா கோவில் டிரஸ்ட் அதை தனது செலவில் அச்சிட்டு வெளியிடும். இதிலிருந்து என்ன தெரிகிறது? கடவுள் கதைகளைப் பரப்ப  கற்பனைக்கதைகள் போதும் என்றுதானே தெரி கிறது.
முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது பக்திப் பரவசம் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது என்று கூறியுள்ள ‘தினமலர்’ முதல்வருக்காக பால்குடம் எடுத்து நாமக்கல், சேலம் போன்ற ஊர்களில்  3 பேர் செத்துப் போனார்களே - அதற்கு யாரைக் குறை சொல்லும் என்று தெரியவில்லை.
திராவிடக் கட்சிகள் பார்ப்பனரை பழிக்கும் செய லைத் தொடர்ந்து செய்து வருகின்றன என்று எழுது பவர்கள், அந்த ஜாதி - பார்ப்பன ஜாதி என்று நேரடியாக எழுதலாமே; பார்ப்பனர் என்றால் உயர்ந்தவன் என்றும் அதன் அடையாளமாக பூணூலை தோளில் தொங்க விடுவதும்தான் உயர்ந்தவன்; பிறர் எல்லாம் கீழ்ஜாதி என்ற திமிருக்கான அடையாளத்தை வெளிப்படுத்தத் தானே!
மாண்டூக்ய உபநிடதம் கலியுக பிறப்பைக் குறித்து கூறும் போது கலியுகத்தில் பார்ப்பனர், சூத்திரன் என்று இரண்டு வர்ணம் மட்டும் தான் இருக்கும் என்றும், இதர சத்திரியர் மற்றும் வைசியர் பிரிவுகள் இல்லாமல் போகும் என்றும் எழுதியுள்ளது. இதை ஆதாரமாக வைத்துதான் வாரிசு இல்லாத தஞ்சை மன்னரின் சொத்துகளை பார்ப்பனர்கள் கைப்பற்றினர்.  நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோது பிரதமராக இருந்த பானகல் அரசரால் டிசம்பர் 18, 1922 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, 1925 இல் நிறைவேற்றப்பட்ட சென்னை இந்து சமய அறநிலையத் துறை சட்டம் பல இந்துக் கோவில்களை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது ஏன் என்று தினமலருக்கு நன்கு தெரிந்திருக்கும், இன்றும் திருவண்ணாமலைக் கோவில்களுக்குச் சென்றால் உண்டியலில் பணத்தைப் போடும் முன்பே பார்ப்பனப் பூசாரிகள் தட்டை தூக்கிக்கொண்டு நீட்டி தட்டில் பணத்தைப் போட்டால் பிரசாதம் என்று மிரட்டும் தொனியில் கூறும்போது அக்காலத்தில் கோவில்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மையால் - எவ்வளவு கொள்ளை நடந்திருக்கும் என்று சொல்லியா தெரியவேண்டும்.
இறுதியாக மும்பைக் கோவிலைப் பற்றியும் ‘தினமலர்’ குறிப்பிட்டுள்ளது.
மும்பையில் பிரசித்தி பெற்ற மும்பை சித்திவிநாயகர் கோவில் அதன் டிரஸ்ட்டிகளால் ஊழல் மலிந்து கோவி லின் புனிதம் கெட்டுவிட்டதாக திராவிடர் கழகமோ அல்லது மும்பையில் உள்ள நாத்திக அமைப்புகளோ வழக்குத் தொடுக்கவில்லை.  இந்து மதத்தின் புனிதத்தைப் பாதுகாக்கத் துவங்கிய அமைப்பான ‘இந்து ஜன ஜாகுரிதி சமீதி’ என்ற அமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தது.
அதில் மும்பை சித்திவிநாயகர் கோவில் டிரஸ்ட்டிகள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர் என்று வழக்குத் தொடுத்திருந்தது,   இந்த வழக்கில் சில ஆதாரங்களைக் கொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் டிரஸ்ட்டிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது, அந்தவழக்கு விசா ரணை நடந்துகொண்டு இருக்கிறது,
டி.என்.ஏ. என்ற ஆங்கில நாளிதழ் 26 ஜூனில் எழுதிய செய்தியில் மும்பையில் சித்தி விநாயகர் கோவில் உள்பட பல கோவில்களின் டிரஸ்ட்டிகள் கோவில் நிலங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியது தொடர்பாக 7 நபர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.  கோவில்களில் என்ன நடக்கிறது என்று 2009 ஆம்  ஆண்டு வெளி யான காஞ்சீபுரம் மச்சேந்திர நாதர் கோவில் புகழ் தேவநாதன் என்னும் பார்ப்பன பூசாரி நடத்திய காமக் களியாட்டங்கள் குறித்துக் கேட்டால் தினமலர்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஏன் காஞ்சி ஜெயேந்திரர் கதைதான் என்ன?
இறுதியாக அதே தேவநாதன் கூறிய கருத்து ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம்,  ‘நான் சிக்கிக் கொண்டேன்; சிக்காதவர்கள் பலர் உள்ளனர்’ என்று கூறியிருந்ததை நினைவு படுத்துகிறோம்.
கோவில்களைப் புனருத்தாரணம் செய்யும்போது பழைமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ‘தினமலரின்’ கவலை.
எத்தனைப் பவுத்த கோவில்கள் இந்துக் கோவில்களாக உருமாற்றம் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் ஏகம்பரநாதர் கோவிலில் இருந்த புத்தர் சிலைகள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் வந்தது எப்படி?
‘தினமலர்’ கூட்டத்திடமிருந்து இதற்கெல்லாம் பதில் வராது.

0 comments: