Total Pageviews

Thursday, August 11, 2016

நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போட்ட 'முரசொலி!'

நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போட்ட 'முரசொலி!'
புரட்சிக் கவிஞர் பரம்பரைபோல் கலைஞரின் முரசொலி பரம்பரை உருவாகியது
'முரசொலி' பவள விழாவில் தமிழர் தலைவர் வாழ்த்து
சென்னை, ஆக.11 - கவிதையில் புரட்சிக்கவிஞர் பரம்பரை உருவானதுபோல கலைஞர் அவர்கள் ‘முரசொலி’ மூலம் எழுத்தாளர் பரம்பரையை உருவாக்கியுள்ளார் என்று ‘முரசொலி’ பவள விழாவையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாழ்த்தியுள்ளார் வாழ்த்து வருமாறு:

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய மூத்தப் பிள்ளை, முதலாவது பிள்ளை என்று அவர்கள் பெருமையோடு கூறக்கூடிய, மகிழக் கூடிய ÔமுரசொலிÕ நாளேட்டிற்கு இவ்வாண்டு பவள விழா ஆண்டு என்பது நம்மையெல்லாம் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக ஆக்குகிறது. காரணம் ஜன நாயகத்தினுடைய நான்காவது தூண் என்ற பத் திரிகை உலகம், ஊடகம் பெரிதும் உயர்ஜாதியின ருடைய ஆதிக்க பீடமாகவும், வசதி மிகுந்த கார்ப் பரேட்டுகளுடைய கருவியாகவும் இன்றைக்குத் திகழ்ந்து கொண்டு, அதற்கேற்ப பல்வேறு பிற்போக் குத்தனங்களையெல்லாம் நியாயப்படுத்திக் கொண் டிருக்கக்கூடிய அவலங்கள் ஏடுகளிலே உண்டு.

இதற்கு முற்றிலும் மாறான ஏடுகள் தமிழ் நாட்டிலே நீண்ட வரலாற்றினை பின்னணியாகக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் ÔவிடுதலைÕ, ÔமுரசொலிÕ போன்ற ஏடுகளே ஆகும். மிகப்பெரிய அளவிற்கு இரண்டும், எப்படி திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் Ôஇரட்டைக் குழல் துப்பாக்கிகளோÕ அது போலவே இந்த இரண்டு நாளேடுகளும்கூட இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகும்.

கலைஞர் அவர்கள் மாணவப் பருவத்திலே, Ôஓடி வந்த இந்திப் பெண்ணே, கேள்! நீ தேடிவந்த நாடிதல்லவேÕ என்று முழங்கிய அந்தக் காலக் கட்டத்திலே கையேடாக நடத்தி, எத்தனையோ தொல்லைகளையெல்லாம் எதிர்கொண்டு அதை நிலைநிறுத்தி, பிறகு வார ஏடாக அதை உருவாக்கி, பிறகு நாளேடாக அதனை வளர்த்து, எதிர்நீச்சலைப் போட்டுக்கொண்டு அதிலே வெற்றிகரமாக மிகப் பெரிய ஓர் இலட்சிய ஏட்டை நிலைநிறுத்தி இருக்கிறார்.

கருத்துலக சிற்பியாக இருக்கக்கூடிய கலைஞர் அவர்களுடைய எழுதுகோல், என்றைக்கும் அவரது நிரந்தர சொத்துகளிலே பறிக்கப்பட முடியாத ஆயுதங்களிலே, சக்தி வாய்ந்த ஆயுதங் களிலே ஒன்றாகும்.

காரணம் என்னவென்றால், செங்கோல்கூட ஜனநாயகத்திலே மாறிமாறி வரும். ஆனால், எழுது கோல் என்பது அவருக்கு உடன்பிறந்த ஒன்று. அவருடைய எழுத்துகள் மூச்சுக்காற்று போன்றவை.

அதுமட்டுமல்ல, எந்த சூழ்நிலையிலும், எந்த பிரச்சினையிலும் அவருடைய எழுத்துகள் துவண்டவர்களைத் தூக்கி நிறுத்தும். அடிமைகளை மிகப்பெரிய அளவிற்கு சுதந்திர வீரர்களாக மாற்றும். எழுச்சியுரையை மிகப்பெரிய அளவிற்கு எல்லோருக்கும் பரப்பும்.

அப்படிப்பட்ட நாளேடு, நெருக்கடிக்காலம் என்ற அந்தக் காலத்தில் நெருப்பாற்றில் நீந்திய நாளேடு. அந்தக் காலக்கட்டத்திலே கலைஞர் அவர்கள் வெளியே இருந்துகொண்டு அதை நடத்துவதற்கு பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. அதுமட்டுமல்ல, சென்சார் என்ற பெயராலே  கருத்துகளை, குரல்வளை நெரிக்கப்பட்டு கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட நேரத்திலேகூட, கத்தரிக்காய், வெண்டைக்காய் என்றெல்லாம் சொல்லி,  தணிக்கை முறையைக் கேலி செய்து மிகப்பெரிய அளவிற்கு தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுக்காத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்.

போர்களிலேயே எழுத்துரிமைப் போர் என்பது சாதாரணமான போர் அல்ல. அந்த எழுத்துரிமைப் போரை மிகத் தெளிவாக சந்தித்திருக்கிறது முரசொலி. அதுமட்டுமல்ல, செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனை என்பதைப்போல, ஓர் அரசியல் கொலை எங்கேயோ நடந்திருக்கிறது என்பதற்காக முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டது. அப்படிப்பட்ட பல்வேறு சோதனைகளை எல்லாம் சந்தித்தும், இன்றைக்கும் முரசொலி 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் ஓர் இருபத்தைந்து ஆண்டு இளைஞன் எப்படி கருத்து வளத்தோடு, உழைப்போடு இருப்பார்களோ, அதுபோலவே, கலைஞரைப் போலவே, அவருடைய உழைப்பைப் போலவே அது வளர்ந்து கொண்டிருக்கிறது.
இன்னமும் முரசொலியில் எழுதாத நாளில்லை. அவர் எழுதிய கடிதங்களெல்லாம், அண்ணா எழுதிய கடிதங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய இலக்கியங்களாக வருகிறதென்றால், அதற்கு முரசொலிதான் மிகப்பெரிய பீடம், தளம்.

அப்படிப்பட்ட முரசொலி 75 ஆண்டு காலத்திலே ஓங்கி வளர்ந்திருக்கக் கூடிய ஒரு பகுத்தறிவு நாளேடு. அதில் சோதிட மூட நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கைக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு, பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு, சோதிட குப்பைகளையெல்லாம் தாங்கி அதை வியாபாரப் பொருளாக்கிக்கொண்டு வாழ வேண்டும் என்று நினைக்காத ஓர் இலட்சிய ஏடு.

நாளேடு நடத்துவதே எளிதான பணியல்ல. அதே நேரத்திலே ஓர் இலட்சியத்தோடு, கொள்கையோடு நடத்தக்கூடிய நாளேடு என்று சொன்னால்,  இந்தியத் துணைக் கண்டத்திலேயே விரலை விட்டு எண்ணி விடலாம்.

அப்படிப்பட்ட இடத்திலே நிற்கக்கூடியவைதான் விடுதலை, முரசொலி என்ற இந்த இரட்டைக்குழல் துப்பாக்கிகள்.

இதிலே அவர்கள் உழைத்த உழைப்பு வெற்றி பெற்று முரசொலியின் சார்பாக ஒவ்வோர் ஆண்டும் விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய அளவிற்கு முரசொலி முத்தாய்ப்பு செய்து வருகிறது.

எத்தனையோ எழுத்தாளர்களை உருவாக்கி இருக்கிறது. அதனுடைய பாரம்பர்யத்திலே முரசொலி மாறன், முரசொலி செல்வம் அதேபோல முரசொலி சொர்ணம், முரசொலி அடியார் என்று முரசொலி முத்திரையோடு இணைந்து வந்திருக்கக்கூடிய வாய்ப்புகளை அருமையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பரம்பரை என்று உருவாக்கினார்களோ, அதுபோல கலைஞர் அவர்கள் Ôமுரசொலி பரம்பரைÕ என்றே ஒரு மிகப்பெரிய பரம்பரையை ஒரு நாளேடு உருவாக்கியிருக்கிறது. இன்றைக்கும் முரசொலிக்கிறது.

அந்த முரசு ஒலி கேட்டுதான் தூங்கியவர்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். விழிப்படைய வேண்டியவர்களை இன்னும் முரசொலித்து, முரசொலித்து எழுப்பவேண்டிய கடமை உண்டு.
எனவே, பவள விழா காணக்கூடிய அது இளமையினுடைய பாலாக இருக்க வேண்டும். அதேபோல வளமை இருக்கிறதா, இல்லையா என்பதைவிட, துடிப்பு இருக்கிறது. கொள்கை இருக்கிறது. இலட்சிய வெற்றிக்கு அதுதான் மிகப்பெரிய ஆயுதமாக, இன்றைக்கும் போர்க்கருவியாக இருக்கிறது.

எனவே, ஒரு நாளேட்டைக் கருத்துப் போர்க்கருவியாக மாற்றி, அதன்மூலம் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்குவதிலே தந்தை பெரியாரின் ஈரோட்டுக் குருகுல மாணவரான கலைஞர் அவர்கள் உழைப்பிலும், கருத்திலும் அவர்களைப் போலவே, பல்லாண்டு காலம் வாழ்வதைப்போல, இன்னும் பல கருத்து வளமுள்ள கட்டுரைகளையும், அறிக்கைகளையும் தருவதைப்போல  முரசொலியினுடைய தளம் மிகவும் விரிவாக வேண்டும். முரசொலி இன்னும் பல்வேறு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.
வாழ்க முரசொலி! வளர்க அதனுடைய சீரிய பகுத்தறிவு இலட்சியத் தொண்டு!!அந்த பத்து நாள்கள்...

நாள் ஏட்டை நடத்துவது என்பது சாதாரணமானதல்ல. முரசொலி 75ஆம் ஆண்டைத் தொட்டது ஒரு இமாலய சாதனையே! இடையில் சோதனைகள் பற்பல! 'முரசொலியின் முழக்கம் நின்றது' என்று சொல்லி கலைஞர் அவர்கள் முரசொலியை ஒரு பத்து நாட்கள் (ஜனவரி (1986) நிறுத்தும் நிலை ஏற்பட்டது. தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி! அந்த உணர்வின் உந்துதலால் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலைஞரைச் சந்தித்து உரிமையுடன் 'சண்டை' போட்டதுண்டு. அன்பில் தருமலிங்கம் அவர்களும், ஆசிரியருடன் இருந்து அதில் பங்கு கொண்டார். 'முரசொலி' இல்லாமல், எழுதாமல் மானமிகு கலைஞர் அவர்களால்தான் இருக்க முடியுமா? அதன் விளைவு மீண்டும் 'முரசொலி' ஒலிக்க ஆரம்பித்தது.

0 comments: