Thursday, August 11, 2016

வைரக்கல்லைப் பதியுங்கள்!

தேசியக் கல்விக் கொள்கை - 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்’’ - பிரச்சினை குறித்து திராவிடர் கழகம் கூட்டிய கலந்துரையாடல் கூட்டத்தில் (28.7.2016) எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த 8 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி  அவர்களின் தலை மையில் நடைபெற்ற மக்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப் பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்பட ஒத்தக் கருத்துள்ளவர்கள் கூடினர்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த ஆர்ப்பாட் டத்தில் முக்கியமாக வைக்கப்பட்ட கோரிக்கை - பல வகைகளிலும் பெரும்பான்மை மக்களைப் பாதிக்கச் செய்யும் (மாநில உரிமை, சிறுபான்மையினர் உரிமை, சமூகநீதி உரிமை போன்ற) மத்திய அரசின் தேசிய புதிய கல்வித் திட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு  வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

ஏற்கெனவே, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித் துள்ளார். அது குறித்தும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் (9.8.2016) சட்டப்பேரவையில் நினைவூட்டியபோது, அது பரிசீலனையில் உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே கல்வி மானியக் கோரிக்கையின்போது மேனாள் தமிழகக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சென்னையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தை நினைவூட்டி மத்திய அரசின் புதிய கல்வித் திட்டம் குறித்துப் பொருத்தமாகப் பேசியுள்ளார். அந்த நேரத்தில் தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் குறுக்கிட்டு தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைத் திணித்திட அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
அனைத்துத் தரப்பினரும் சட்டப் பேரவையில் மட்டுமல்ல; வெளியில் உள்ள அனைத்துத் தரப்புப் பொதுமக்களும் வரவேற்கவே செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.
மத்திய அரசு இப்பொழுது கொண்டுவரத் திட்ட மிடப்பட்டுள்ள கல்வித் திட்டம் என்பது வெறும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு மட்டுமல்ல; அவற்றையும் கடந்த பல்வேறு கேடுகள் கூர்மை யாகவே இருக்கின்றன.

அதிக மதிப்பெண்கள் பெறாதவர்களுக்குத் தொழிற்பயிற்சி என்ற பெயரால் குலக்கல்வி, மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், பெறாதவர்கள் என்று பிளவுபடுத்தித் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குதல், கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் சேருவதற்கு தேசிய நுழைவுத் தேர்வு, இருபால் மாணவர்கள் சேர்ந்து படிக்கக் கூடாது என்ற பிற்போக்குத்தனம், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசு செலவிடாது என்ற போக்கு  என்பது போன்ற ஏராள பிரச்சினைகள் இந்தக் கல்வி திட்டத்தில் தீயாய்ச் சுட்டெரிக்கின்றன.
கல்வித் திட்டமும், ஏகக் கலாச்சாரம் என்ற தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.சை பொருத்தவரையில் மாநிலங்களே இருக்கக்கூடாது என்பதுதான் அதன் கோட்பாடு - இந்தியா ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற மய்யப் புள்ளியில் சுழலக்கூடியதாகும். அந்த அடிப்படையில் பாடத் திட்டத்தைத் தயாரித்தால் நாம் எப்படி அவற்றை ஏற்றுக்கொள்ள முடியும்?

இப்பொழுதே பி.ஜே.பி. ஆளும் அரியானாவில் கீதை பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிறவியில் ஏற்ற தாழ்வு கூடாது என்கிற தன்மைக்கு விரோதமான தத்துவத்தைக் கொண்டது கீதை. ஆர்.எஸ்.எஸ். தன் இந்துத்துவா கண்ணோட்டத்தில் கீதையைத் திணிக்கலாம்? அதனை மற்றவர்கள் ஏற்க முடியுமா?

இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் விஞ்ஞானத் தைத் தேடிக் கொண்டிருக்கும் இந்துத்துவா சக்திகள் ஆட்சியிலே இருப்பதை மறந்துவிடக்கூடாது.

பள்ளிக்கூடங்களைப் பக்கத்தில் உள்ள குருகுலங் களோடு இணைக்கவேண்டும் என்கிறது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை. நாம் 2016 ஆம் ஆண்டில் வாழுகிறோமோ, கற்காலத்தில் வாழுகிறோமா என்பதை நமது உடலைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டு தான் சிந்திக்க வேண்டியுள்ளது.

எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டாட்சியின் இந்(து)தக் கல்வித் திட்டத்தை தமிழ்நாடே முற்றிலுமாக எதிர்க்கிறது என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கக் கூடிய இடம் தமிழ்நாடு சட்டப்பேரவையே!

அண்ணாவின் பெயரில் கட்சியை வைத்துக்கொண்டி ருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும்போது, இந்த வகையில் சட்டம் இயற்றப்படும் என்று எல்லோரும் எதிர்ப்பார்க்கக் கூடியதேயாகும்.

கல்வி மானியத்தின் மீது விவாதம் பொருத்தமாக நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசு சார்பிலேயே தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தால், அதனை சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக ஆதரிப்பர் என்பதில் அய்யமில்லை.

ஏற்கெனவே சுயமரியாதைத் திருமணச் சட்டம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டம், 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான (31-சி) சட்டம் போன்றவை இதே தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்ட வரலாற்றுப் பெருமை தமிழக சட்டப் பேரவைக்கு உண்டு.
அந்த மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல்லைப் பதிக்குமாறு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...