Total Pageviews

Friday, August 12, 2016

வரலாற்றைத் திரிக்கும் "மொகஞ்சதாரோ": வலுக்கும் எதிர்ப்பு

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் அசுதோஷ் கோவரிகர் சிந்து சமவெளி நாகரீகத்தில் முக்கிய இடம் பிடித்த மொஹன்சாதாரோ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்து முடித்துள்ளார். நாளை (ஆகஸ்ட் 12-ஆம் தேதி) வெளிவரும் இந்த திரைப்படத்தில் சிந்து சமவெளி நாகரிகம் முழுக்க முழுக்க திராவிடப் பண்பாடே என்பதை மறைத்து வேதகாலத்தின் உச்சத்தில் இருந்த நகரமென்று நம்ப வைக்க, ஆரியக் கலாச்சாரமாக திரைப்படத்தில் திரித்துக் காண்பித்திருக்கின்றார்.
1996-ஆம் ஆண்டு பாஜக முதல் முதலாக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட அடையாளங்கள் முற்றிலும் சிதைக்கும் வேலையை தீவிரமாக நடத்திக் கொண்டு வந்தது, 1999 ஆம் ஆண்டு மத்தியில் வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியும், மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக ஆட்சியும் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகமான பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் (தற்போது சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம்) வைக்கப்பட்டிருந்த சிந்துசமவெளிப் பொருட்கள் அடங்கிய பகுதியில் திராவிட நாகரீகத்தின் எச்சங்கள் என்ற பெயரை நீக்கிவிட்டு அடையாளம் தெரியாத(unknown civilizations) நாகரீக மக்கள் வாழ்ந்த இடம் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது, இன்றுவரை அது அப்படியே உள்ளது.
ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டில்
தற்போது சிந்து சமவெளி நாகரீகம் குறித்து, அது ஆரியக்கலாச்சாரத்தின் தொட்டில் என்று திரித்துக் காண்பிக்கும் வேலை, திரைப்படங்கள் மூலம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு விமானம் என்பது வேதகாலத்தில் கண்டறியப்பட்ட ஒன்று என்று கூறி சில கட்டுகதைகளை வைத்து ஹவாய்ஜாதா என்ற திரைப்படமே எடுக்கப்பட்டுவிட்டது. அதில் ரைட் சகோதரர்களுக்கு முன்பே இந்தியாவில் விமான சாஸ்திரம் என்ற வேதகால நூல் ஒன்றை வைத்து மராட்டிய இளைஞன் ஒருவன் விமானத்தை தயாரித்தாகவும் அதை மும்பை கடற்கரையில் வெற்றிகரமாக பறக்கவிட்டார் என்றும் காட்டப்பட்டிருந்தது.
தற்போது பண்டைய திராவிடர் பண்பாட்டின் சின்னமாகத் திகழும் மொகன்சதாரோ என்னும் அழிந்து போன திராவிட நாகரீக நகரை ஆரியர்களின் நகரமாக காண்பித்துள்ளனர். "இந்த திரைப்படத்தின் பின்னனியில் மாடு பூட்டிய அலங்கார வண்டி, பருத்தியினால் செய்யப்பட்ட ஆடைகள், உலோக ஆயுதங்கள், உழவுக் கருவிகள் போன்றவை அன்றைய காலகட்டத்தில்  கி.மு3000) கிடைத்த புதைபொருட்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையாகும்" என்று கூறிய அசுதோஷ் கோவரிகர் "நாங்கள் வேதகால மொகஞ்சாதாரோவை மக்களின் கண்களுக்கு முன்பாக கொண்டு வந்துள்ளோம்" என்றும் கூறியிருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரிக எச்சங்களை ஆரிய கலாச்சாரக நாகரிகம் என்று காண்பிக்கும் பணிகளை பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக நடத்தி வந்தனர். தங்களது அடையாளங்களை திணிக்கமுடியாத இடங்களை அழித்து குடியிருப்புகளாக உருவாக்கிவிட்டனர். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக குஜராத்தில் உள்ள தொலவீரா என்ற இடத்தைக் கூறலாம். ஆங்கிலேயர் காலத்தில் மிகப்பெரிய அளவு அகழ்வாராய்ச்சிக்கு உட்பட்ட இந்த இடத்தை சுதந்திரத்திற்குப் பிறகு முற்றிலும் அழித்து தற்போது ஒரு சிறுபகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகள் அனைத்தையும் தனியாருக்கு சுண்ணாம்புப் பாறைகளைவெட்டி எடுக்க ஒப்பந்தத்தில் விட்டுவிட்டார்கள். இதன் மூலம் சுமார் 3000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் பகுதி 20 ஆண்டுகளுக்குள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.
சிந்துவெளியில் குதிரைகள் எங்கே வந்தன
இந்தப் படத்தில் குதிரைகள் காட்டப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரீகத்தில் எந்த இடத்திலும் குதிரைகள் இல்லை. அகழ்வாராச்சிகளில் சில இடங்களில் கட்ச் கழுதைகளின் எழும்புகள் கிடைத்துள்ளன. இவை விவசாயத்திற்கும் ஏற்றம் இறைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தை ஜெர்மானிய அகழ்வாராய்ச்சியாளர் Gustaf Kossinna (1858-1931) என்பவர் கூறியிருந்தார். ஆனால் அந்த கழுதை எழும்புகள் கிடைத்த காலம் குறித்து இன்றுவரை சரியான முடிவுகள் இல்லை. அப்படி இருக்க அந்தப் படத்தில் குதிரைகளைக் காண்பிப்பது ஏன் என்றால், ரிக்வேதத்தில் குதிரை முதன்மையான விலங்காக காட்டப்பட்டுள்ளது, முக்கியமாக அசுவமேத யாகத்தில் குதிரையின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாசகத்தை உண்மையாக்க இந்த திணிப்புகளை, திரிபுகளைத் திரைப்படத்தில் புகுத்தியுள்ளனர்.
திரைப்படத்தில் பல இடங்களில் சிவலிங்ககளை காண்பித்துள்ளனர். இந்த சிவலிங்கங்கள் அனைத்தும் சமலா நதிக்கரையில் (கர்னாடகா) நேர்த்திக்கடன் என்ற பெயரில் பக்தர்கள் செதுக்கிவைத்த சிவலிங்கங்களாகும். அவற்றைக் காட்டி அந்த பகுதி மொகஞ்சாதாரா மக்கள் அனைவரும் சிவபக்தர்கள் என்று காட்ட முனைகின்றனர்.

சிந்து சமவெளியில் சமஸ்கிருதமாம்
மிகவும் முக்கியாக அங்கு வாழ்ந்த மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று பதிவுசெய்யப்பட்டுளளது. சமஸ்கிருதம் இந்தோ-அய்ரோப்பியன் மொழி என்றும் திராவிட நாகரீகத்தில் சமஸ்கிருதமோ அல்லது இந்துமத வழிபாடோ எங்கும் காணப்படவில்லை என்றும் வரலாற்று உண்மைகள் இருக்கும் போது, மிகப்பெரும் பொருட் செலவில் திரைப்படம் எடுத்து சரஸ்வதி நதி, சமஸ்கிருதம், சனாதன மதம் என்று பல்வேறு புரட்டுக்களை திணித்து 'மொகஞ்சதாரோ' என்ற திரைப்படம் வாயிலாக, திராவிட நாகரீகச் சான்றை அழிக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள காவி அமைப்புகள் முன்வந்துள்ளன.
முக்கியமாக இந்த திரைப்படத்திற்கு சனாதன பிரச்சார அறக்கட்டளை என்ற வெளிநாட்டு அமைப்பு (Sanatan Trust) பல்வேறு வகையில் நிதி உதவி செய்ததாக திரைப்பட நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த இத்திரைப்பட இயக்குனர் அசுதோஷ் கோவரிகர் கூறியிருந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு 'ஜோதா அக்பர்' என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அக்பர் ஒரு இஸ்லாமிய மன்னராக இருந்தாலும், இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்றும், அவர் சைவ உணவுப் பிரியர் என்றும் காட்டி இருந்தார். மேலும் பசுவதை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பவராக இருந்தார் என்றும் படத்தில் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரலாற்றுப் புரட்டைச் செய்யும் மொகஞ்சதாரோ படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


.
 8

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: