Total Pageviews

Saturday, August 20, 2016

2016 தேசிய கல்விக் கொள்கை ஆர்.எஸ்.எஸ். கொள்கையே தவிர வேறல்ல


- சீத்தாராம் யெச்சூரி
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இக்கூட்டத்தொடரின் நிறைவில், மாநிலங் களவையில் 2016ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை மீது குறுகிய கால விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் துவக்கி வைத்து சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. உரையின் சாராம்சங்கள் வருமாறு:
கல்விக் கொள்கை அல்லது கல்வி அமைப்பு என்பது ஒரு நாட்டின் குணத்தை வரையறுப்பதற்கான அடிப்படையாகும். தேசத்தின் குணத்தை அதுதான் வரையறுக்கிறது.
நாம், நமக்காக நாமே அமைத்துக் கொண்டுள்ள அரசமைப்புச் சட்டம், இந்தியக் குடியரசை ஒரு மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்றுதான் வரையறை செய்திருக்கிறது. அந்த மாண்பை, அந்த மதிப்பை, அந்த குணத்தை உயர்த்திப்பிடிக்கும் விதத்தில்தான் நம் கல்விஅமைப்பு பேணிப் பாதுகாத்து வலுப்படுத்தப்பட வேண்டும். இதுவே என் முதல் அம்சமாகும்.

54 சதவீதம் இளையோர்

இரண்டாவதாக, கல்விக் கொள்கை என்பது நம் நாட்டிலுள்ள நம் சக்தியை, நம் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய விதத்தில், அமைந்திட வேண்டும். நாட்டின் மக்கள் தொகையில் 54 சதவீதத்தினர் 25 வயதுக்குக் குறைந்தவர்களாவார்கள். இந்த இளைய சமுதாயம் முறையாகப் பேணி வளர்க்கப்பட்டால், முறையாகக் கல்வி அளிக்கப்பட்டால், முறையான சுகாதாரவாழ்க்கை அளிக்கப்பட்டால் மற்றும்முறையான வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டால், உலகில் எவரொரு வரும் இந்தியாவைநாம் இன்றைக்கிருப்பதிலிருந்து மேலும் உயரக்கூடிய விதத்தில் சிறந்ததோர் இந்தியாவாக மாறுவதைத் தடுத்திட முடியாது. இவ்வாறு நம் இளைய சமுதாயத்தின் ஆற்றலை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளும் விதத்தில் கல்விக் கொள்கை உரு வாக்கப்பட்டிருக்க வேண்டும்.

மூன்று ‘சி’கள்


ஆனால், அவ்வாறு உருவாக்கி, நம் அரசமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் குணத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு தேசிய கல்விக் கொள்கை மூன்று ‘சி’-களை உள்ளடக்கி இருக்கிறது. அவை மத்தியத்துவம் (Centralisation), õEèñò‹ (Commericialisation)
மற்றும் மதவெறிமயம் (சிஷீனீனீuஸீணீறீவீsணீtவீஷீஸீ) ஆகியவையாகும். இவை மூன்றும் தான் ஒட்டுமொத்த இந்த வரைவின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்றைய தினம் அனைவருக்குமான கல்வி முறையைக் கொண்டுவராமல், நம் இளைஞர்களிடையே பொதிந்து கிடக்கும் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
பொதுக் கல்விமுறை
வளர்ந்த நாடுகள் அனைத்தின் வரலாற்றையும் சற்றே ஆராய்ந்து பாருங்கள்.பள்ளிக் கல்விமுறையை அனைவருக்குமானதாக மாற்றாமல் எந்த ஒரு வளர்ந்த நாடும்கிடையாது, மாணவக் குழந்தைகள் அருகிலேயே அமைந்துள்ள பள்ளிக்கூடங்களுக்குச் செல்கிறமாதிரிதான் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இருக்கின்றன, அமெரிக் காவிற்குச் சென்றுள்ள இந்தியர்கள் அந்நாட்டின் சட்டத்தின்படி தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில்தான் சேர்த்திட வேண்டும். அமெரிக்காவின் அடித்தளங்கள் எவற்றால் அமைக்கப்பட்டிருக்கின்றன?
தாமஸ் ஜெஃபர்சன் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது, பொதுக் கல்விக்கு அரசாங்கம் ஏன் அதிகம் செலவழிக்கவேண்டும் என்ற விவாதம் நடை பெற்றது. அப்போது மேதகு வாஷிங்டன் என்பவர் (அதிபர் வாஷிங்டன் அல்ல) மிகவும் வலுவாக வாதிடு கையில், நாம் இப்போது படிக்காத இளைஞர்களை சட்டம்- ஒழுங்கு ரீதியாகக் கட்டுப்படுத்துவதற்கான சார்ஜெண்டுகளாகத் தெரிவுசெய்வதற்காக அதிகம் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்; அதற்குப் பதிலாக படிக்காத இளைஞர்களைப் படிக்க வையுங்கள், அது நாட்டை வளர்ப்பதற்கு மட்டும் அல்ல, அது சமூகக் கட்டுப்பாட்டையும் கொண்டுவரும், என்றார்.

அப்படித்தான் அங்கே பொதுக் கல்வி முறை உருவானது. இதேபோன்றுதான் இங்கிலாந்து,

பிரான்ஸ்,ஜப்பான் என அனைத்து நாடுகளிலும் கல்வி முறை இருக்கிறது. அனைவருக்குமான கல்வி முறையை நாம் பெற்றிராவிட்டால், நாட்டின் குழந்தைச் செல்வங்களை முறையாகப் பயிற்றுவித்து அவர்களின் ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாடு முன்னேறுவது என்பது சாத்தியமில்லை. இதற்காகத்தான் நாம் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக இங்கே விவாதம் நடைபெற்றபோது அருகமைப் பள்ளிகளை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது நம் நாட்டில் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பது குறித்து விவாதித்தோம், ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள் குறித்தும் விவாதித்தோம். பல பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லை, பல பள்ளிகளில் கரும்பலகைகள் கிடையாது; இவ்வாறிருந்தால் எப்படி நாம் நம் குழந்தைகளின் ஆற்றல் களை முழுமையாக வெளிக்கொணர முடியும்?

கல்வி உரிமைச் சட்டம் என்னாயிற்று? அது எப்படி அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது குறித்து ஏதேனும் பரிசீலனை செய்திருக்கிறோமா? எவ்விதத் திசையுமின்றி இன்றையதினம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் இப்போது புதிய தேசியக் கல்விக் கொள்கை வந்திருக்கிறது.

இன்றைய நம் நிலை என்ன?
உலக அளவில் எழுத்தறிவற்றோர் அதிகம்உள்ள நாடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறோம். நம் இளைஞர்களில், அதாவது 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், 86 சதவீதத் தினர் படித்தவர்கள். அதற்குக் கீழ் உள்ளவர்களில் 69.3 சதவீதத்தினர் படித்தவர்கள்.

குறைந்த வயதுள்ள குழந்தைகளின் படிப்பறிவு விகிதமும் குறைவாக இருக்கின்றன. அடுத்து படிப்பறிவின் தரம் எந்த நிலையில் இருக்கிறது? எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட
எளிய கணக்கைப் போட முடியவில்லை.

பள்ளித் தேர்வுகளில் மிகஉயர்ந்த அளவில் மதிப் பெண் எடுத்த மாணவர்கள் சிலர் கூட மோசமாக மதிப் பெண் எடுத்திருப்பதைப் பார்க்கிறோம்.
நாடு சுதந்திரம் பெற்ற பின், இந்த அவையின் (மாநிலங் களவையில்) முதல் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்தபோது,உயர் கல்வி குறித்து ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஒட்டு மொத்த பள்ளிக் கல்வி குறித்தும் கோத்தாரி ஆணையம் அமைக்கப்பட்டது. அது அளித்த பரிந்துரைகளை இதுநாள் வரையிலும் அமல்படுத்தவில்லை.
தொழில் கல்வி குறித்து முதலியார் ஆணையத்தைப் பெற்றிருந்தோம். சுயேட்சையாக வளர்ச்சி மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை உச்சத்திற்கு எடுத்து செல்லவேண்டும் என்ற முறையில் சுயசார்பு பொரு ளாதாரத்தை நிறுவுவதே நம் குறிக்கோளாக இருந்தது.
நாடு சுதந்திரம் அடைந்தபின் மூன்றுஆணையங்கள் அமைத்தும், அவை பரிந்துரைத்த எதையும் நாம் எய்திட வில்லை.

6 சதவீதம் நிதி ஒதுக்குக!

நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கவில்லை என்றால் இந்தப் பரிந்துரைகள் எதையும் நிறைவேற்றவும் முடியாது.

மேற்படி ஆணையங்கள் அளித்திட்ட பரிந்துரைகளில் பெரும்பாலானவை, தற்போதைய புதிய வரைவு கல்விக் கொள்கையில் பிரதிபலித்திடவில்லை.

இன்றைய இந்திய நிலைமைகளில் நம் கல்வி அமைப்புக்கு என்ன தேவை? தரம் - எண்ணிக்கை - நியாயம் (Quality - Quantity - Justice) என்னும் மூன்றின் மேல் நம் கல்வி அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. இம்மூன்றும் இன்றையதினம் எந்த நிலையில் இருக் கின்றன?

இம்மூன்றுக்கும் இடையேயுள்ள உறவுகளை ஆராய்வதற்கு முன், இன்றையதினம் எவ்விதக் கடிவாள முமின்றி அமலாகிக் கொண்டிருக்கும் தனியார்மயக் கல்வி ஆபத்தானது.

அரசுப்பள்ளிகள் மூடல்

அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு, அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது. இது ஏன்? ஏனெனில் அங்கே கல்வித் தரம் இல்லை. இதைக்காரணம் காட்டி, கல்வி என்ற பெயரில் வணிகக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இது அங்கிங்கெனாதபடி எங்கும் ஊடுருவியிருக்கிறது.

ஆர்எஸ்எஸ் ஆவணத்தின் நகல்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு என்பது, புதிய கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என ஜூலை 12, 13,14 தேதிகளில் அமர்கந்தக் என்னுமிடத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆவணத்தின் நகல்தான்.

நான் ஆரம்பத்திலேயே மத்தியத்துவம், வணிகமயம் மற்றும் மதவெறிமயம் என்று குறிப்பிட்டேன், அல்லவா? இது முழுக்க முழுக்க மதவெறிமயம்தான். இக்கல்விக் கொள்கையின் மேல் வேத உலகக் கண்ணோட்டம் Vedic World Vision) அல்லது வேதகல்வி (Vedic Education) எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது என்றும், இந்தியா உலக வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும், இந்தியா மிக உச்சத்திற்குச் சென்று கொண்டி ருக்கிறது என்றும் கூறும் அதே சமயத்தில், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இந்தியாவை நவீனப் படுத்துவதற்குப் பதிலாக, இந்த நாட்டை எங்கே எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?
மாணவர்களுக்கு என்ன சொல்லித்தர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

வரலாற்றுக் கல்வியை, இந்து புராணங்களின் கல்வியாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தியத் தத்துவ ஞானத்திற்கு ஒரு நீண்ட நெடிய வளமான பாரம்பரியம் உண்டு. அதனை வளர்த்து மேலெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, இந்தியத் தத்துவஞானத்தை இந்து வேதாந்த சாஸ்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

வரலாறு என்பது உங்களுடைய புராணமாக மாறு கிறது, தத்துவஞானம் என்பது உங்களுடைய வேதாந்த சாஸ்திரமாக மாறுகிறது. இவற்றைப் படிப்பதால் எதிர்காலம் எப்படி இருக்கும்?
நம் உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களில் மாற்றங்களைக் கொண்டுவர பரிந்துரைகள் அளிக்கப் பட்டிருக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். தலித் மாணவர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டார்கள். இதேபோன்று அலகாபாத் பல்கலைக் கழகம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், மும்பை டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆப் சோசியல் சயின்சஸ், சென்னை அய்.அய்.டி., புனேபிலிம் இன்ஸ்டிட்யூட் என அனைத்து நிறுவனங்களிலும் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம்.

இந் நிறுவனங்கள் அனைத்தையும் மதவெறிமயமாக மாற்ற அரசாங்கம் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்தபின் நம் உயர்கல்வி நிறுவனங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஜவஹர்லால் நேரு என்ன சொன்னார்?

“ஒரு பல்கலைக்கழகம் மனிதாபிமானம், சகிப்புத் தன்மை, பகுத்தறிவு, சிந்தனைப் புரட்சி, உண்மையைத் தேடும் பண்பு ஆகியவற்றை தங்கள் லட்சியங்களாகக் கொண்டிருக்க வேண்டும். மனித குலத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றிட வேண்டும்.பல்கலைக்கழகங்கள் தங்கள் கடமைகளை செவ்வனே ஆற்றுமானால், அது நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் நல்லவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்”.

ஆனால் இன்றைய தினம் பல்கலைக்கழகங்களை நாம் எப்படி நடத்திக்கொண்டிருக்கிறோம்? பல்கலைக் கழகங்களின் நிர்வாகம் எப்படி இருக்கின்றன?
பல்கலைக் கழக மானியக் குழு என்பது இப்போது கல்வி ஆணையம் என்று மாற்றிஅமைக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள சில நபர்கள் அரசாங்கத்திற்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் கல்வித்துறையை மத்தியத்துவப்படுத்தப்படுவதற்காக ஒட்டுமொத்த உயர் கல்வி, பள்ளிக் கல்வி மற்றும் தொழில்கல்வி அமைப்புகள் கலைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது என்பதை நாம் நினைவு கூர்வோம். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் அது மாநிலங்களின் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதற்கு முன்பு அது மாநிலங்களின் பட்டியலில்தான் இருந்தது.அனைத்துமாநிலஅரசுகளுடனும்கலந்தா லோசனை எதுவும் செய்யாமல், இவ்வாறு மத்தியத்துவப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஏற்கப்பட முடியாததாகும்.

வேத பாடம் என்றால் என்ன?

இப்போது நான் வேதக் கல்விக்கு வருகிறேன். நாம் ஆர்யபட்டாக்களைப் பெற்றிருக்கிறோம், நாம் நம்முடைய புரதான நாகரிக அறிவியல்களில் அளப்பரிய சாதனைகளைப் படைத்திருக்கிறோம். `பூஜ்யத்தின்’ மதிப்பை நாம்தான் கண்டுபிடித்தோம். இவற்றை நான் ஒரு பிரெஞ்சு அறிவுஜீவி முன்பு சொன்னேன். இது கண்டுபிடிக்கப்பட்டது ஆறாம் நூற்றாண்டில்.
அதன்பின் என்ன நிலை? ஆரியர்கள் வந்தார்கள். அதற்கு முன்புவரை அனைவருக்குமான கல்வி முறை இருந்தது. அதுதான் சிந்தனைகள் அனைவரிடமும் ஊற்றெடுக்க வழிவகுத்தது. ஆரியர்கள் வந்தபின் நிலை என்ன? அறிவு பெறுவோர் சாதி அடிப்படையில் வடிகட்டப்பட்டனர். இதற்கு ஏகலைவன் மிகச் சிறந்த உதாரணம். கீழ்சாதியில் எவரும்படிப்பாளிகள் வந்துவிடக்கூடாது. அதைத்தான் இப்புதிய கல்விக் கொள்கை முன் வைத்திருக்கிறது.

வேத அறிவு என்ற பெயரால், வேத கணிதம் என்ற பெயரால் மற்றும் வணிக மயம், தனியார்மயம் போன்றவற்றால், கல்வி அனைவருக்கும் கிடைப்பதைக் கட்டுப்படுத்துகிறீர்கள்.
இன்று நம் நாட்டில் 60 கோடிக்கும் மேல் இளைஞர்கள் இருக்கிறார்கள், 80 கோடிக்கும் மேல் வயது வந்த மக்கள்தொகையினர் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு அளிக் கப்பட்டால், உலகில் அறிவிற்சிறந்த சமுதாயமாக நம் சமுதாயம் மாறுவதை எவரும் தடுத்திட முடியாது. ஆனால் புதிய கல்விக் கொள்கை அதற்கான வாய்ப்பை மறுக்கிறது.

எனவே கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

தனியார்மயம், மத்தியத்துவப்படுத்துதல், வணிகமயம், மதவெறிமயம் ஆகியவற்றை ஏற்க முடியாது.

நன்றி: தீக்கதிர், 18.8.2016

0 comments: