Total Pageviews

Saturday, July 2, 2016

'விஜயபாரதத்தின்' பார்ப்பனப் புத்தி

சமஸ்கிருதத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் போர்க் குரல் எழுவது கண்டு ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்' இதழ் (1.7.2016) இரத்தக் கொதிப்பேறி தன் எழுத்தாணியால் இடக்கு முடக்காக தலையங்கம் தீட்டுகிறது.

முதற் கேள்வி - சமஸ்கிருதம் தான் முக்கியம் என்று கருதினால் விஜயபாரதத்தை தமிழில் வெளியிடுவதற்குப் பதிலாக சமஸ்கிருதத்திலேயே வெளியில் கொண்டு வரலாமே!
சமஸ்கிருதத்தை எதிர்ப்பவர்களின் பெயர்களில் சமஸ்கிருதம் வரலாமா என்று மேதாவித்தனமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு நீட்டி முழங்குகிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்.
தமிழில் சமஸ்கிருதத்தை ஊடுருவச் செய்து, தமிழையே பல கூறுகளாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்று பிரிப்பதற்குக் காரணமாக இருந்தவர்களே நடைமுறையில் தமிழில் சமஸ்கிருத சொற்கள் கலந்து வரும்போது அதனைக் குறை சொல்லும் போக்கிரித்தனத்தை என்னவென்று சொல்லுவது?

பார்ப்பனரான கோ. சூரிய நாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர் என்று தன் பெயரை தமிழாக்கிக் கொண்டவர்) தமிழில் ஆரிய சமஸ்கிருதம் ஊருடுவிய வரலாற்றை 'தமிழ்மொழியின் வரலாறு' எனும் நூலிலே தெளிவுபடுத்தியுள்ளார். தமிழிலிருந்து பல கிளைமொழிகள் தோன்றுவதற்கு வடமொழியான சமஸ்கிருதமே காரணம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

"மணிப்பிரவாளம்" என்றதோர் புதிய பாஷையை வடமொழியாளர்கள் ஏற்படுத்தினர். அதாவது தென் மொழியும், வட மொழியும் சரிக்குச் சரி கலந்து எழுதுவதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டனர். மணியும் பவளமும் கலந்து கோர்த்ததோர் மாலை காட்சிக்கின்பம் பயத்தல் போல தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாஷை கேள்விக்கின்பம் பயக்குமென்ற போலி யெண்ணமே இத்தகைய ஆபாச பாஷையொன்று வகுக்குமாறு துண்டிற்று.. . ஸ்ரீபுராணம் என்னும் சைவ நூல் முழுவதும் மணிப் பிரவாளமென்னும் இவ்வாபாச நடையின் இயன்றதாமாறு காண்க"
- என்று பரிதிமாற் கலைஞர் என்ற பார்ப்பனரே வருந்திக் கூறியுள்ளார். தமிழில் சமஸ்கிருதம் கலந்து எழுதுவதை ஆபாச நடை என்றே சாடுகிறார்.

ஆரியர்களே கைபர் 'கணவாய்' வழியாக இந்தியாவினுள் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ அன்றித் தீமைக்கோ? இதனையறிவுடையோர் எளிதினுணர்ந்து கொள்வார்கள்" என்றும் குறிப்பிடத் தவறவில்லை பரிதிமாற் கலைஞர்.

தங்களைப் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்ததாக எழுதி வைத்துக் கொள்பவர்கள், நால்வருண பிளவை ஏற்படுத்தியவர்கள், தமிழ் மொழியிலும் தங்களின் ஆபாச நச்சு எத்து வேலையைக் காட்டிப் பிளவுபடுத்தினர்.

வச்சணந்தி மாலை என்னும் இலக்கண நூலை வகுத்த ஆரியம் உயர் மெய்யெழுத்துக்களைக்கூட வருண வாரியாகப் பிரித்தது என்றால், இந்த அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்லுவது!

பாட்டியலில் பன்னீருயிரும், முதலாறு மெய்யும் பிராமண வருணம் என்றும் அடுத்த ஆறு மெய்கள் சத்திரிய வருணமென்றும் அடுத்து நான்கு மெய்கள் வைசிய வருணமென்றும், பிற இரண்டும் சூத்திர வருணமென்றும் பிரித்தனரே!

இப்படியெல்லாம் தமிழில் ஊடுருவிய கொலை பாதகர்கள்தாம் வழக்கில் தமிழில் சமஸ்கிருதம் கலந்திருப்பதைக் கேலி செய்கின்றனர். கருணாநிதி என்ற பெயர் ஏன் என்று ஏகடியம் செய்கின்றனர்.

பார்ப்பனர்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் கலவாத பெயர்களைச் சூட்ட வேண்டும். அதற்கான மறுமலர்ச்சியைத் தந்தை பெரியார் கொடுத்ததுண்டு. அதன் விளைவுதான் நாராயணசாமி, நெடுஞ்செழியன் ஆனதும், இராமையன்  அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம் மதியழகன் ஆனதுமாகும்.

பார்ப்பனர்கள் தங்கள் நச்சுக் கொடுக்கை நீட்ட நீட்ட வடமொழி மீதான வெறுப்பு மேம்படுமேயன்றிக் குறையப் போவதில்லை. தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழை வெறுத்துச் சமஸ்கிருதத்தைத்  தூக்கியும், நம்மீது திணித்தும் ஆட்டம் போடும் அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டியது தன்மானம் உள்ள தமிழர்களின் கடமையாகும்.

முதற் கட்டமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. இது முதற் கட்டம்தான்; அடுத்து வெடிக்க இருக்கிறது பெரும் போராட்டங்கள்.


.
 

0 comments: