Total Pageviews

Friday, June 10, 2016

கவுரவக் கொலையும் நீதிமன்றத்தின் கருத்தும்அத்தீர்ப்பில் “ஜாதி முறை என்பது நாட்டின் மீதான ஒரு சாபக் கேடாகும். சாதிமுறையை எவ்வளவு சீக்கிரம் அழிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நல்லது. உண்மையிலேயே, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நாட்டின் முன்னுள்ள எல்லா சவால்களையும் சந்திக்க வேண்டிய வேளையில், ஜாதி நாட்டைக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறது. ஜாதிக் கலப்புத் திருமணம் என்பது ஜாதி முறையை ஒழிக்க வழிவகுக்கும் என்பதால், அவை நாட்டு நலனுக்கானவை. ஜாதிக் கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களையும் பெண்களையும் வன்முறைகளால் பயமுறுத்தவதாகவும், வன்முறைகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுவதுமான அமைதி குலைக்கும் செய்திகள் நாட்டின் பலபகுதிகளிலிருந்து எங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன.”

“தாங்களாகவே விரும்பி ஜாதிக் கலப்பு மற்றும் மதக் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை கொல்லும் கொலைகளில் கவுரவம் ஏதுமில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமாயின் அச்செயல்கள் கடும்தண்டனைக்குரிய கொடிய பிரபுத்துவமனங் கொண்டவர்களால் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித் தனமான, வெட்கக் கேடான கொலைகள் தானே தவிர, வேறொன்றுமில்லை” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஆணவக் கொலைகள் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் சில அறிவுரைகளை அரசுக்கு வழங்கியது. அதில் ஜாதிமறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு காவல்துறை வழங்கவேண்டிய பாதுகாப்பு, அச்சுறுத்தலுக்கு ஆளாகும் தம்பதியினருக்கு வழங்கவேண்டிய பாதுகாப்பு, அச்சுறுத்தல் செய்பவர்கள் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அரசு ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அவர்களை அச்சுறுத்துபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை பற்றி எல்லாம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இந்திய மக்கள் மன்றம் என்ற சமூக அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் நீதிமன்றத்தில் ஆணவக் கொலைகள் தொடர்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் இந்த 2 கட்சிகளும் இதுவரை ஆணவக் கொலைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2003-ல் கலப்புத் திருமணம் செய்த விருத்தாச்சலம் தம்பதி முருகேசன்- கண்ணகி முதல், திருச்செங்கோடு கோகுல்ராஜ், மன்னார்குடி அமிர்தவள்ளி-பழனியப்பன், சமீபத்தில் உடுமலைப்பேட்டை சங்கர் என தொடர்ச்சியாக ஆணவக் கொலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் கலப்புத் திருமணம் செய்த 81 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆணவக் கொலைகள் நடந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரும், காவல்துறைக் கண்காணிப்பாளரும்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கலாம் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உத்தரவிட வேண்டும். அதுபோல வன்கொடுமை அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தற்காப்பு ஆயுதம் வழங்க வேண்டும். என்று மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் இதுகுறித்து தமிழக அரசு, எதிர்கட்சியான திமுக மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 27-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

திமுக ஆட்சிதான் ஜாதி மறுப்புத் தம்பதிகளுக்குத் தங்கப் பதக்கம், பெரியார் நினைவு சமத்துவபுரம் என்பது போன்ற ஜாதி ஒழிப்புக்கான ஆக்க ரீதியான திட்டங்களைச் செயல்படுத்தியது. இது போன்ற சமூகப் பிரச்சினைகளில் தி.மு.க.வையும் - அ.இ.அ.தி.மு.க.வையும் சமதளத்தில் வைத்துப் பார்க்கக் கூடாது.

அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் கவுரவக் கொலை என்ற பெயரால் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் உயிருக்குக் குறி வைக்கப்பட்டு வருகிறது. ஓராண்டில் மட்டும் 81 கவுரவக் கொலைகள் நடந்துள்ளன. இந்தக் குற்றவாளிகள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை அவசர கதியில் தொடர்ந்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

கவுரவக் கொலைகள் மட்டுமின்றி, பாலியல் வன்கொலைகளும் தமிழ்நாட்டில்  அதிகரித்து வருகின்றன. பெண் ஒருவர் முதல் அமைச்சராக உள்ள ஒரு மாநிலத்தில் இப்படி நடப்பது வருந்தத்தக்கது.
இது போன்ற பிரச்சினைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஜாதி, மத அடிப்படையில் தேர்தல் களத்தை சந்தித்தவர்களுக்கு தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டு மக்கள் தக்கதோர் பாடத்தைப் புகட்டியுள்ளார்கள். இனி மேலாவது அத்தகையவர்கள் புத்தி கொள்முதல் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.


.

0 comments: