Monday, June 13, 2016

வெள்ளையம்பட்டு சுந்தரனாரைப் பாரீர்!

இந்தச் செய்தியைக் கொஞ்சம் படியுங்கள்!

இவர் கருஞ்சட்டை அணிபவர் அல்லர்; திராவிடர் கழக உறுப்பினருமல்லர்; ஆனாலும், அன்றாடம் ‘விடுதலை’ படிக்கத் தவறாதவர்! ‘விடுதலை’யைப் படிக்காத நாள் எல்லாம் பிறவாத நாளாகக் கருதக்கூடிய கருத்தாளர் - எழுத்தாளர் - பதிப்பக உரிமையாளர்!

வாரம் ஒருமுறையாவது பெரியார் திடலுக்கு வரத் தவறாதவர்!

‘உங்கள் கழகத்தில் எத்தனை உறுப்பினர்கள்?’ என்று வெளிந £ட்டுச் செய்தியாளர்கள் உள்பட பலரும் கேட்கும்பொழுது கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒரு பதிலைப் பளிச்சென்று சொல்லுவார்.

இருவகை உறுப்பினர்கள் உள்ளனர். ஒருவகையினர் கண் ணுக்குத் தெரிந்தவர்கள் - Visible Members

இன்னொரு வகை கண்ணுக்குத் தெரியாதவர்கள் - Invisible Members

இந்த இரண்டாவது வகையினர் எங்கள் இயக்கத்தின் ஆணிவேர் போன்றவர்கள் என்று கூறுவார்.

அந்த இரண்டாவது வகை செம்மல்தான் வெள்ளையம்பட்டு மானமிகு சுந்தரம் அவர்கள்.

‘விடுதலை’ 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று ‘விடுதலை’ ஆசிரியர் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார் (ஜூன் முதல் தேதி).

‘‘வருமானத்தை நோக்காது, தமிழர்களின் தன்மானத்துக்காகப் பாடுபடும் - 82 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை’ யின் சந்தாதாரர் ஆகுங்கள்!

‘விடுதலை’யை வாழ்த்துங்கள் - நம்மை அழிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துங்கள்!’’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் - 82 ஆண்டு ‘விடுதலை’க்கு  54 ஆண்டு ஆசிரியராக இருந்துவரும் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்த அறிக்கையினை ஆயிரக்கணக்கானோர் படித்திருப்பார்கள். அதில் ஒன்றும் அட்டியில்லை. ஆனால், நமது வெள்ளையம்பட்டு சுந்தரம் அவர்களுக்கு ஏற்பட்ட அந்த உணர்வு ஏன் மற்றையோருக்கு ஏற்படவில்லை? என்று நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.

ஆசிரியர் அவர்களின் அந்த அறிக்கையை நகல் எடுத்து தமது நண்பர்கள், நெருக்கமான உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார்.

அதன் விளைவு - 17 ‘விடுதலை’ சந்தாக்கள், 17 ‘உண்மை’ சந்தாக்களைச் சேர்த்து, அதன் மொத்த தொகையான 36,550 ரூபாயை ‘விடுதலை’ அலுவலகத்துக்கு நேரில் வந்து ‘விடுதலை’ பொறுப்பாசிரியரிடம் அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத் தினார்.

‘விடுதலை’யின் அருமையை இன்னும் நம் மக்கள் உணர வேண்டிய அளவுக்கு உணரவில்லையே என்ற, தம் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
கண்ணுக்குத் தெரிந்த தந்தை பெரியார் அவர்களின் சீடர்களே, தொண்டர்களே, இந்தக் கண்ணுக்குத் தெரியாத சீலர்களைத் தேடிப் பிடியுங்கள்! அவர்கள் எப்பொழுதும், தம் கறைபடியா உதவிக் கரங்களை நீட்டத் தயாராகவே இருக்கிறார்கள்.

‘‘தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல் ‘விடுதலை’ தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்‘’ என்று ‘விடுதலை’ பணிமனைத் திறப்பு விழாவில் (பெரியார் திடலில்) கூறினார்களே (‘விடுதலை’, 2.11.1965) நமது தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

அதனை மெய்ப்பித்துக் காட்டிய நமது உண்மைத் தோழர் சுந்தரனார் அவர்களைப் பின்பற்றுங்கள் தோழர்களே!

‘விடுதலை’ வாழ்ந்தால் நாம் வாழ்வோம்!

வீழ்ந்து படின் வாழ்வார் யாரே?

- கருஞ்சட்டை


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...