Friday, June 3, 2016

மருத்துவத் துறையினர் உயிருடன் விளையாடுவதா?



இந்தியாவில் உள்ள பல்வேறு இரத்த வங்கிகளில் சரிவர பரிசோதனை செய்யப்படாமல் வாங்கப்பட்ட  இரத்தம் நோயாளிகளுக்கு செலுத்தப் பட்டதால் இதுவரை 2234-பேர்களுக்கு எச்.அய்.வி நோய் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு இரத்தவங்கிகள் இரத்தத்தை வாங்கும் போது சரியாக பரிசோதனை செய்வதில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பல்வேறு புகார்கள் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சென்ற அப்பாவிகள் எச்.அய்.வி. நோயாளிகளாக மாறும் கொடுமை நடந்துள்ளது.

23.5.2016 அன்று நடந்த விபத்து ஒன்றில் சிக்கிய அஸ்ஸாமைச் சேர்ந்த சவ்ரவ் குலாட்டி என்ற சிறுவனுக்கு கவுகாத்தி அரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவனுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.அய்.வி. கிருமி இருந்த காரணத்தால் அந்த சிறுவனுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து மும்பையைச் சேர்ந்த சேதன் கதாரி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில விவரங்களைக் கேட்டிருந்தார். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சரியாக பரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்டதன் காரணமாக 2234-அப்பாவிகள் எயிட்ஸ் நோய் பாதிப்பிற்குள்ளானார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதில் உத்தரப் பிரதேசத்தில் 361 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படாத இரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.அய்.வி தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், குஜராத் மாநிலத்தில் இதே போல் 292 பேரும், பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து கேதன் கதாரி கூறும் போது 2015-ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும் போது சுகாதாரத்துறைக்கு பெருமளவு நிதி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் முற்றிலும் நின்றுபோய் விட்டன. மேலும் நோய்த் தொற்றுள்ள இரத்தம் மற்றும் பல முறை பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு பெருகியுள்ளது. தற்போது தனியார் மருத்துவ மனைகளில் மாத்திரம் ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன.
பொதுவாக நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மய்யங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி இன்மையின் காரணமாக அவர்கள் நோயாளிகளைத் தவறாக வழி நடத்துகின்றனர்.
இதனால் தொற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகமாகிறது. இரத்த வங்கிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க அரசு மருத்துவமனைகளில் போதுமான நிதியில்லாத காரணத்தால் இது போன்ற ஆபத்தான நோய்த் தொற்று ஏற்படுவது சாதாரண நிகழ்வாகி விட்டது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (என்.ஏ.சிஏ)  இணை இயக்குநர் மருத்துவர் நரேஷ் கோயல்  இந்த தவறுக்குப் பொறுப்பேற்றுள்ளார். இந்த தகவல் அறிக்கை மற்றும் இது தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய்த் தொற்று இல்லாத இரத்தம் கொடையாகப் பெறப்படுவதில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக மலேரியா, எச்.அய்.வி. மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களைப் பரப்பும் கிருமிகளைக் கொண்ட இரத்தம் பல்வேறு அரசு மருத்துவமனைகளைச் சென்றடைந்து விடுகிறது, அங்கிருந்து நோயாளிகளுக்குச் செலுத்தும் போது பிறருக்கும் பரவி விடுகிறது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

கிருமித் தொற்று உள்ள இரத்தம் செலுத்தப்பட்டதால் எய்ட்ஸ் நோய் அதிகம் பரவுவது தொடர்பாக எழுந்த இந்த குற்றச்சாட்டிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு எச் அய் வி நோய்த் தொற்று உள்ளவர்கள் 8 முதல் 10 விழுக்காடு இருந்தனர். இன்று 2 விழுக்காடாக குறைந்துள்ளது. சில பரிசோதனை மய்யங்களில் தவறுகள் ஏற்பட்டுள்ளன. அதை விரைவில் சரிசெய்து விடுவோம். ஆகவே நிதிக்குறைப்பிற்கும், நோய்கிருமி தொற்றுள்ள இரத்த பரிசோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் சமாதானம் கூறுகிறது.

எது எப்படியாக இருந்தாலும் இந்த அபாயகரமான நிலைக்குக் காரணம் அரசுத்துறை என்பது மட்டும் உறுதியாகி விட்டது. சரியான பரிசோதனை இல்லாமல் இரத்தம் செலுத்தப்படுவது யார் குற்றம்? அரசுப் பணியாளர்மீதுதானே? அப்படி என்றால் அரசு தானே அதற்குப் பொறுப்பு. மத்திய பிஜேபி ஆட்சியின் ஈராண்டு கால சாதனைப் பட்டியலில் இதனையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். உயிருடன்  விளையாடும் விபரீதத்தை  ஓர் அரசே அரங்கேற்றலாமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...