Wednesday, May 4, 2016

தாயுள்ளம் யாருக்கு? மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கொடுத்த கலைஞருக்கா? அவர்களை வீட்டுக்கு அனுப்பிய அம்மையாருக்கா?

வாக்காளர்களே எண்ணிப் பாரீர்!

அரூரில் தமிழர் தலைவர் தேர்தல் பிரச்சாரம்
அரூர், மே 3 - மக்கள் நலப் பணியாளர்கள்  13 ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுத்த கலைஞருக்குத் தாயுள்ளமா? அவர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதாவுக்குத் தாயுள்ளமா? சிந்தித்து வாக்களிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர்
கி. வீரமணி அவர்கள்.

அரூரில் நேற்று (2.5.2016) மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் கூறியதாவது:

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரூர் மாநகரில் பேசக்கூடிய சிறப்பான வாய்ப்பை தேர்தல் மூலம் அளித்து இருக்கிறீர்கள். இந்த அரூருக்கு நான் புதியவன் அல்ல. குறிப்பாக நான் என் மாணவப் பருவத்திலிருந்து வந்து கொண்டு இருக்கக் கூடியவன். இங்கு வரும்போது, எச்.எல்.முருகேசன் அவர்களை நினைத்துக் கொண்டு வந்தேன். அவர் பழைய மாவட்டக்கழக செயலாளர், எங்களுக்கு எப்போதும் வரவேற்பளிக்கக் கூடியவர். அப்போது இருந்த உணர்வை இப்போது மேடையில் நிற்கும் இளைஞர்களின் உள்ளத்தில் அந்த எழுச்சிமிகு உணர்வை கண்டேன் வியந்தேன்!

திராவிடன் - தமிழன் உணர்வு

இங்கு அந்த காலத்தில் பேரறிஞர் அண்ணாவால் நிறுத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெற்றவர், சுயமரியாதை வீரர், சுயமரியாதைச் சுடரொளி முத்து என்பவர் பெரியாருடைய கொள்கையாளர். அண்ணாவின் வழி நடந்தவர். கலைஞரால் மதிக்கப்பட்டவர். திமுகவும் திராவிடர் கழகமும் இரட்டைக் குழலாக இருந்தன என்பதற்கு எடுத்துக் காட்டானவர்.
அரூர் பகுதியில் திராவிடர் கழகம் என்றால், மிசா காலத்தில் எங்களோடு சிறைச்சாலைக்கு வந்த அரூர் தேசாய் வேணுகோபால், செல்லன், அவர்களுக்குப் பிறகு வீராசாமி என்று ஏராளமான தோழர்கள் இருந்தார்கள் என்ற நீண்ட பட்டியல் இருக்கிறது. அவர்களின் உழைப்புதான் இன்றைக்கும் கழகத்தை கட்டிக்காக்கிறது. இந்த இயக்கம் வெறும் பதவிக்காக வந்த இயக்கம் அல்ல. இதுவொரு  சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தும் புரட்சிகரமான இயக்கம். சமுதாயப் புரட்சி இயக்கம் என்பதனால் தான், நாம் அனைவரும் ஒரே மேடையில் இருக்கிறோம். நமக்கு ஜாதி தெரியாது, நமக்கு வேறு பிரிவுகள் தெரியாது. நாம் அனைவருக்கும் ஒரே உணர்வுதான் உண்டு. அதுதான் திராவிடன் - தமிழன் என்ற உணர்வு

உருவத்தால் மாறினாலும்
உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள்


திராவிட இயக்கமும், புலவர்கள் வட்டமும் அரூரிலே மிகச்சிறப்பாக இருக்கும். எங்கள் இயக்கத்தின் பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி அவர்களின் மகன் கண்ணிமை அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் பாவலர் மணிவேலன். பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். அவர் இரண்டொரு நாட்களுக்கு முன்னால் மறைந்த செய்தி கேட்ட நேரத்தில் மிகுந்த வேதனைப் பட்டோம். துயருற்றோம். அவர்களின் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு சோகமான நிலையில் தான் இங்கு வந்தோம்.
திராவிடர் கழகம் என்றைக்கும் பற்றோடு இருக்கக்கூடிய ஓர் இயக்கம். உருவத்தில் வேறு பட்டவர்களாக இருந்தாலும், உள்ளத்தால் ஒன்று பட்டவர்கள்.
கள்ளத்தால் நெருங் கொணாதே என புரட்சிக் கவிஞர் அவர்கள் சொல்வார். அப்படிப்பட்ட அற்புதமான இயக்கம்!

மீண்டும் சாதனை படைப்பது திமுகவே!
இந்த தொகுதியில் ஒரு சிறந்த இளைஞரை தகுதி வாய்ந்தவரை அடையாளம் கண்டு கலைஞர் அவர்கள் நிறுத்தியிருக்கிறார்கள். மக்களாகிய நீங்கள் இங்கு காட்டும் உணர்வை வரும் 16 ஆம் தேதி அதிகாலை வரை எடுத்துச்செல்லவும். அப்போது தான் இவர் போன்றோர் வெற்றி பெறுவர். நீங்கள் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. திமுக தோழர்கள் பலரும் போட்டியிடுவார்கள். ஆனால், போட்டி முடிந்து தலைவர் சொல்லி விட்டார் என்றால், யாரை அடையாளம் காட்டினாரோ, நாங்கள்தான் இருக்கிறோம் என்ற அளவில் பணியாற்றுவார்கள். அந்த உறவு முறைதான் திமுகவில் இருக்கும்.

கீரை விசுவநாதன் ஆனாலும், முல்லை செழியனானாலும் ஒரே தோட்டத்தில்தான் இருப்பார்கள். கீரையும், முல்லையும் திமுக என்ற ஒரே தோட்டத்தில் தான் இருப்பார்கள். ஒரு பக்கம் கீரை இருக்கிறது. இன்னொரு பக்கம் முல்லை இருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து இந்த தேர்தலில்  மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க வேண்டும்.
புதிய வாக்காளரே! இளைஞர்களே! சிந்தியுங்கள்!

தேர்தல் வருகிறது என்றால், யாரோ 5 ஆண்டுகள் வந்து போகட்டும் என்று அலட்சியமாக இருக்கலாமா? நன்றாக நினைத்துப் பாருங்கள். கடந்த தேர்தலில் மக்கள் காட்டிய அலட்சியத்தால் கடந்த 5 ஆண்டு காலம் எவ்வளவு பெரிய விலை கொடுக்க நேரிட்டது. திராவிடர் கழகத்தினர் தேர்தலுக்கு நிற்கிறார்களா? அல்ல. நாங்கள் ஒரு போதும் நிற்க மாட்டோம். அதே போன்று யார் வேண்டுமானாலும் வரட்டும் என்ற அலட்சிய போக்கு பெரியார் காலத்திலிருந்தே எங்களுக்குக் கிடையாது.
நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன். யார் வேண்டுமானாலும் திறந்த வீட்டில் நுழைவது போன்று வந்து விடக் கூடாது என்பதற்காக நாங்கள் காவலுக்கு நிற்கிறோம். நாங்கள் உங்கள் மத்தியில் எங்களுக்கு ஓட்டு கேட்டு வரவில்லை. வாக்காளர் பெரு மக்களே, புதிய இளைஞர்களே! சிங்கக் குட்டிகளே! நீங்கள் எல்லோரும் சிந்தித்து செயலாற்றும் தருணம் இது.

திராவிடர் கழகம், தி.மு.க. இருக்கின்ற காரணத்தினால்தான் இந்த இனத்தை, மொழியை காப்பாற்ற முடியாது. எப்போதும் காப்பாற்றிக் கொண்டு இருக்கக் கூடியவர்கள் நாங்கள்.
இங்கு மற்ற கூட்டங்களைவிட தாய்மார்கள் அதிக அளவில் வந்திருக்கின்றீர்கள் மகிழ்ச்சி! இங்கு பேசிய  மகளிர் புத்தமணி, வேலம்மாள் போன்றோர் சிறப்பாக இந்த கூட்டுக் குடும்பத்தின் உறவுக் குரல், உரிமைக் குரலை வெளிக் காட்டியது சிறப்பான தொன்று.

ஆணவ நாயகமா? ஜனநாயகமா?

நீங்கள் 5 ஆண்டுகளாக எத்தனை முறை முதலமைச்சரை சந்தித்து இருக்கிறீர்கள்? சந்தித்திருந்தால் காணொலிக் காட்சி மூலம் சந்தித்து இருப்பீர்கள். அதுவும் ஒரு 5 நிமிடம் கட்டடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வுகளில் பார்த்திருப்பீர்கள். கட்டடங்களில் அந்த அம்மையார் பெயர் மட்டும்தான் இருக்க வேண்டும். ஆனால், கலைஞர் அவர்கள் திறந்து வைக்கும் பணிமனைகள், மருத்துவமனைகள் போன்ற கட்டடங்களில், அந்த துறைக்கான அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் எல்லாம் இடம் பெற்றிருக்கும். அவர்களையெல்லாம் அழைத்து, உட்கார வைத்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். ஆனால் அம்மையார் திறந்த கல்வெட்டில் பார்த்தீர்கள் என்றால், அவர் பெயரைத் தவிர வேறு எவர் பெயரேனும் உண்டா? இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? ஆணவ நாயகமா? நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆணவக் கொலை நடக்கின்ற மாதிரி, இப்பொழுது ஜனநாயகப் படுகொலை நடக்கிறது.

ஜாதி அடுக்குமுறையும் - அதிமுக மேடை அடுக்கும்

ஜாதிய அடுக்குமுறை போல் அம்மையார் பேசும் மேடையும் அடுக்கு முறையில் இருக்கிறது. தளபதி ஸ்டாலின் போன்றோர் கேட்ட பிறகு, அந்த அடுக்குகள் குறைந்து இருக்கின்றன. காரணம் நாளாக, நாளாக பயம் வந்து விட்டது.  தாங்கள் வெற்றி பெறப் போவதில்லை என்ற உணர்வை உளவுத் துறையின் மூலம் கேட்கும் அவல நிலை அவர்களுக்கு வந்துவிட்டது. அதனால்தான் அவர்களின் போக்கு மாறிக் கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டு வாக்காளர் என்றால்
தனித் தன்மை உண்டு


தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்கள், எல்லாக் கட்சிகாரர்களை விட, தலைவர்களைவிட, வேட்பாளர்களைவிட புத்திசாலியானவர்கள் தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்களுக்கு ஒரு தனித் தன்மை உண்டு. என்ன தெரியுமா? யாரை ஆட்சிக்குக் கொண்டு வந்தாலும், பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், தோசையை திருப்பிப் போடுகின்ற மாதிரி தாய்மார்களுக்கு தெரியும். அதுபோல் ஆட்சியை மாற்றினால்கூட, அப்படியே மாற்றித்தான் பழக்கமே தவிர, இங்கொன்று, அங்கொன்று என்று ஒட்டுப் போடும் வேலையை செய்ய மாட்டார்கள். ஒட்டுப் போடும் வாய்ப்பும் வராது. எனவே நமக்கு வேண்டிதெல்லாம் நீதியான ஆட்சி, நியாயமான ஆட்சி. அந்தநீதியான ஆட்சியை தி.மு.க.தான் கொடுக்கும் என்பதற்கு அவர்களின் தேர்தல் அறிக்கையே சான்று.

கலையட்டும் காணொலி ஆட்சி


தி.மு.க. ஆட்சியில் நான்கு வழிச் சாலைகள் போட்டார்கள். அவர்கள் மட்டும் கடந்து  செல்லவா? கூட்டணி கட்சியினரும், பொது மக்களும் போக வேண்டிதானே. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் எல்லாவற்றிலும் காணொலிக் காட்சியை செய்து வைத்தார்கள். இப்போது அவர் நடத்தும் தேர்தல் பொதுக் கூட்டத்திலும் வைத்திருந்தால் 5,6, உயிரையாவது காப்பாற்றி இருக்க முடியும். சமுதாய மாற்றத்திற்கான பணிகளை தி.முக செய்யும் செய்தது.

மாற்றம் வேண்டுமா? ஏமாற்றம் வேண்டுமா?

நீங்கள் உதயசூரியன் சின்னத்தை எண்ணி வாக்களித்தால், அரசியல் மாற்றம் மட்டுமல்ல. சமுதாய மாற்றத்தையே திமுக ஆட்சி கொண்டு வரும். எல்லோருக்கும் எல்லாம், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி. எனவே நீங்கள் மாற்றத்தை உருவாக்க வேண்டும். மாற்றம் மாற்றம் என்று பல பேர் சொல்லுவார்கள். மாற்றம் வேண்டும் என்று சொல்லி டில்லிக்குப் போனவர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. இந்த மாற்றம்  ஏமாற்றமாக இல்லாமல் இருக்க அதற்கு ஒரே வழிதான் டாக்டர் கலைஞர் தலைமையிலான 6ஆம் தடவையாக அமையப் போகும் ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான்.

நாங்கள் பிரச்சாரம் செய்வதன் நோக்கம், ஜாதியற்ற சமுதாயம் அமையவும், காட்சியில் மட்டும் வரும் அம்மையாரின் ஆட்சியை மாற்றி இந்த இனத்தின் மீட்சியை  உருவாக்கத்தான். காட்சி ஆட்சிமாறி  நல்லாட்சியாக வேண்டும் என்ற உணர்வுடன் தான் சொல்லுகிறோம். காட்சி ஆட்சி மாறவில்லையென்றால் நமக்கு வீழ்ச்சிதான் ஏற்படும் மறவாதீர்!
இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்பட திமுக வை ஆதரிப்பீர்!

ஆளுங்கட்சி அம்மையார் சொன்னதையும் செய்தோம்! சொல்லாததையும் செய்தோம் என்கிறார்களே! செய்தார்களா?

அவர்களின்  கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னார்களே! தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக ஆக்குவோம் என்றார்களே! தமிழ்நாடு இப்போது மின்மிகை மாநிலமாகவா இருக்கிறது? ஒரு நாளாவது மின் வெட்டு இல்லாமல் இருக்கிறதா? ஏன் தலைநகர் சென்னையிலே மின்வெட்டு இருக்கிறதே!

ஒரு யூனிட் மின்சாரமாவது, இந்த ஆட்சியில் தயாரித்து இருப்பார்களா? தளபதி ஸ்டாலின் போன்றோர் கேட்கிறார்களே! இப்போதுதான் கூடுதல் மின்சாரத் தேவை ஏற்பட்டுள்ளது.   தனியாரிடம்  மின்சாரம் வாங்கி இருக்கிறார்கள்.  தனியாரிடம்  7 ரூபாய்க்கும் அதிகமாக வாங்குகிறார்கள்.

தாய்மார்களுக்கு தெரியுமே! கடைக்கு போய் ஒரு சாமானை 4 ரூபாய்க்கு வாங்குவார்களா? அல்லது 7 ரூபாய்க்கு வாங்குவார்களா? அவர்களுக்கு தெரியுமே! அது போல் மின்சாரத்தை குறைத்து வாங்க வேண்டியதுதானே. ஏன் 7 ரூபாய்க்கு வாங்க வேண்டும்?

மின்சாரத்தில் நல்ல மின்சாரம், கெட்ட மின்சாரம் உண்டோ!

அந்த 4 ரூபாயிலிருந்து 7 ரூபாய்க்கு வாங்குவதில் கமிஷன் (ஊழல்) இருக்கிறது. எல்லா இடத்திலும் இந்த வெட்டுகள் இருக்கின்றன. அதன் விளைவாகத்தான் இன்று அமைச்சர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். ஏன் அமைச்சர்களுக்கு முதலாவதாக டிக்கெட் கொடுக்கவில்லை? ஏன் தனியாக விசாரிக்க வேண்டும்? இன்றைக்கு அமைச்சர்களின் நிலை என்ன? முதலில் இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் திமுக தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

அதிமுக தேர்தல் அறிக்கை - சிதம்பர ரகசியமா?
அதிமுகவில் தேர்தல் அறிக்கை  இன்னும் வெளியிடபடவில்லை. ஏன் தேர்தல் அறிக்கை வரவில்லை? அது ஏன் சிதம்பர ரகசியமாக இருக்கிறது? நமக்குப் புரியவில்லை. தேர்தல் அறிக்கையை வைத்து சொன்னீர்களே, செய்தீர்களா? என்று கேட்போம் என்ற பயத்தால் கூட இருக்கலாம். அவர்கள் வெளியிடாமல் இருப்பது தேர்தல் உத்தியா? மின் திருட்டை ஒழித்தாரா? இந்த ஆட்சியில் மின்சாரம் வரவில்லை. மாறாக மெழுகுவர்த்திதான், டிமான்ட் பற்றாக்குறை வந்தது.

சொன்னதை செய்தாரா? அம்மையார்?

2012க்குள் 151 நகராட்சி, மாநகராட்சி, கழிவுகளைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதனால் தமிழக நகரங்கள் தூய கார்பன் நியூட்ரல் நகரங்களாக மாற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றார்கள்.

நான் தருமபுரியிலிருந்து காரில் வரும்போது வரும் வழியில் பெரிய அளவில் தீப் பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.  என்னவென்று உடனிருந்தவர்களை கேட்ட பொழுது நகராட்சிக் குப்பைகள் என்றார்கள். அதை சுவாசித்தால் நம் பிள்ளைகளின் நிலை என்னாவது? தூய கார்பன் நியூட்ரல் நகரமாக மாற்றப்படும் என்றாரே! மாற்றினாரா? அம்மையாரின் பேச்சு நீரில் எழுதிய எழுத்துக்களைப் போன்று அல்லவா இருக்கிறது!

டாக்டர் கலைஞர் ஆட்சியில் 2006 - 2011 இல் செய்த சாதனைகள் சாதாரணமானவை அல்ல; ரூபாய் 1200 கோடிக்கு சட்டமன்ற கட்டடம் கட்டினார். இந்த அம்மையார் சென்னாரே! மழை பெய்தால் கட்டடம் ஒழுகுகிறது என்றாரே! நிற்க முடியவில்லை என்றாரே! அதற்காகத் தானே சட்டமன்ற கட்டடத்தை கலைஞர் கட்டினர். ஆட்சி மாற்றம் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி வரும் ஆனால், அரசாங்கம் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கும். கலைஞர் கட்டினார் என்பதற்காக கட்டடத்தை மாற்றலாமா?
அண்ணா பெயரில் கட்சி - அண்ணா நூலகம் மாற்றமா?

அண்ணா பெயரில் கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம். ஆசியாவிலே மிகப்பெரிய அளவிலான நூலகம் ரூபாய் 130 கோடிக்கு மேல் செலவழித்து கட்டியிருக்கிறார்கள். அந்த நூலகத்தை மாற்ற வேண்டுமெனச் சொன்னார்.
நீதிமன்றம் தடை கொடுத்து காப்பாற்றியது. அந்த நூலகத்திற்குப் புத்தகம் வாங்கவில்லை. அதில் எல்லா ஜாதியினரும், பிரிவினரும் படிக்கிறார்கள். நூலகம் அண்ணா பெயரில் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் கூட்டம் முடியும்போது அம்மையார் அண்ணா நாமம் வாழ்க! எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க! என்கிறார். அண்ணாவுக்குப் போட்ட நாமம் இதோடு இருக்கட்டும். மறுபடியும் இன்னும் 5 ஆண்டு நாமம் போடவேண்டாம். உண்மையாகவே அண்ணாவைப் பற்றி சிந்திப்பவர்கள் யார்? அண்ணா பெயரில் உள்ள கட்சி அல்ல, அண்ணாவால் உருவாக்கப்பட்டது திமுகதான்; அதைத்தான் கலைஞர் செய்து கெண்டு இருக்கிறார். வளர்ச்சி என்பது கல்வித் துறையில் இருக்கவேண்டுமே தவிர, மதுபான உற்பத்தியில் அல்ல. ஜெயலலிதா ஆட்சி என்றால் டாஸ்மாக் மயம். எல்லோருக்கும் துன்ப மயம், கலைஞர் ஆட்சி என்றால் அனைவருக்கும் இன்ப மயம்!

தாயுள்ளம் யாருக்கு?

தாயுள்ளம் யாருக்கு இருக்கிறது? கலைஞர் ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை கொடுத்தார். அது தாயுள்ளமா? உச்சநீதிமன்றம் சொல்லியும் கூட மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பியது தாயுள்ளமா? இதுவரை 200க்கும் அதிகமானவர்கள் இறந்து இருக்கிறார்களே. அவர்களுடைய நிலை என்ன? அவருக்கு இருப்பது தாயுள்ளமா? இல்லை, அது வேறுவகை உள்ளம்.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
------------------------------
உதயசூரியன் பொத்தானை அழுத்துங்கள்
ஒளி கிடைக்கும் - இருளுக்கு விடை கிடைக்கும்


திமுக, அதிமுக  இரண்டு பேரும் மோசம் என்று சொல் கிறார்கள். மற்றவர்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்களே! வெண்ணெயும், சுண்ணாம்பும் ஒன்று என்று சொன்னால் அவர்களின் பார்வையில் ஏற்பட்ட பழுதே தவிர, தன்மையில் ஏற்பட்ட கோளாறு அல்ல. இந்த தேர்தல் என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தானே ஒழிய, வேறு கட்சிகளுக்கு இடம் கிடையாது. நீங்கள் மாற்றம் வேண்டும் என்று எண்ணி, மாற்று அணிக்கு போடும் ஓட்டு என்பது செல்லாத ஓட்டே! ஒவ்வொரு நாளும் ஜெயலலிதா அம்மையார், தோல்வி பயத்தால் திணறிக் கொண்டு இருக்கிறார். ஆளுங்கட்சி அமைச்சர்களை ஊருக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் விரட்டி அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அரூர் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் இராஜேந்திரன் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடையாது. எங்கு பார்த்தாலும் பணம் பறிமுதல் நடக்கிறது. அதிமுகவினர் நோட்டுக் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கிறார்கள். அதற்கு மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். கோடி கோடியாக பணம் எடுக்கிறார்கள். இதற்கு முன்பெல்லாம் ஆள் கடத்தல் தான் உண்டு. இந்த தேர்தலில் புதிதாக பணம் கடத்தல் நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டுக் கடத்தல் நடக்கிறது. இதுவரை ஆம்புலன்சில் நோயாளிகள் தான் இருந்தார்கள் இப்போது நோட்டு பணம் இருக்கிறது. திமுக ஏழைகளின் நண்பன், அவர்கள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. அவர்கள் உங்கள் குணத்தை நம்பி நிற்கிறார்கள் நீங்கள் அவர்களின் குணத்தை நம்பி ஓட்டு போடுங்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு சிறுபான்மை மக்களுக்கு நல்ல ஆட்சியாக, இனத்தின் மான மீட்பு ஆட்சியாக திமுகதான் இருக்கும். எனவே நீங்கள் 16ஆம் தேதி வாக்குச் சாவடிக்கு சென்று உதயசூரியன் என்று சின்னம் இருக்கும். அதில் பொத்தானை அழுத்தினால் விளக்கு எரியும். இருண்ட ஆட்சிக்கு விடை கொடுத்து விடியல் வரும். விடிவு சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என முடிக் கிறேன் நன்றி வணக்கம்.

- அரூர் கூட்டத்தில் தமிழர் தலைவர் 2.5.2016

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...