Monday, March 7, 2016

பெண்கள் விடுதலை அடைய கற்பு என்ற ஏமாற்று ஒழிக்கப்படவேண்டும்

- தந்தை பெரியார்

பெருமைக்குரிய தலைவர் அம்மையார் அவர்களே! தாய்மார்களே, பெரியோர்களே!
இந்த மாநாடு பெண்கள் விடுதலை மாநாடு. நான் பேசப் போகும் கருத்து உங்கள் மனதுக்குக் கசப்பாக இருக்கக்கூடும். புரட்சியாகவும் தோன்றலாம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் வெறுப்பு விருப்பு இன்றி எதையும் சொல்லக் கூடி யவன். உங்களுக்குச் சரியில்லை என்றால் தள்ளிவிடுங்கள்.
பெண்கள் பிறந்ததிலிருந்து அடிமைப் பிறவிகள். பெண்ணாகப் பிறப்பதே பாவம் என்று கருதப்பட்டவர்கள். பிறந்த உடனேயே கழுத்தைத் திருகி விடுவார்கள். சின்ன வயதிலேயே கல்யாணம் செய்து விடுவார்கள். புருஷன் செத்தால் உடன் வைத்துக் கொளுத்தி விடுவார்கள். சமீப காலம் வரை பெண்ணை ஓர் ஆடவன் அடித்தால் எந்தவிதத் தண்டனையும் கிடையாது.
70 வயது கிழவனைக் கட்டிக்கொண்ட 18 வயது பெண், புருஷன் செத்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை கிடையாது. ஆனால், ஓர் ஆண் எத்தனை பெண்டாட்டி களை வேண்டுமானாலும் இஷ்டத்துக்குக் கட்டிக் கொள்ளலாம் என்ற நிலை தானே சமீப காலம் வரை இருந்தது.
சொல்வார்கள் - வசிஷ்டன் மனைவி அருந்ததியைப் பற்றி. அவள் சொல்லி இருக்கிறாள், உலகத்தில் ஆண்கள் இல்லா விட்டால் தான் பெண் கற்புள்ள வளாக இருக்கமுடியும் என்று.
பாரதம் என்ன பத்தினித் தன்மையைக் கூறுகிறது என்றால், சந்து என்று ஒன்று இருந்தால் பெண் விபச்சாரியாகத் தான் ஆகித் தீருவாள் என்று கூறுகிறது. இவை எல்லாம் தான் பத்தினித் தன்மைக்கு அடையாளமா?
பெண்கள் நிலை ஏன் உயரவில்லை என்றால், பெண்களுக்கு மானம் இல்லை - ரோஷம் இல்லை - அறிவு இல்லை! எப்படியோ தன்னை அடக்கியாள - உதை கொடுக்க ஓர் ஆண் வேண்டும் என்ற எண்ணம் தான் பெண்களுக்கு இருக்கிறது.
பெண்கள் விடுதலை பெற வேண்டுமா னால் இந்தக் கற்பு, பதிவிரதாத்தன்மை என்ற தன்மைகள் ஒழிக்கப்படவேண்டும். அதனால் பெண் கற்புள்ளவளாகவோ, பதிவிரதையாகவோ இருக்கக் கூடாது என்பது என் கருத்தல்ல. ஆணுக்கும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.
நான் கொஞ்ச நாட்களாகவே கூறி வருகிறேன். இந்தக் கல்யாண சுமையே ஒழியவேண்டும் என்று. இந்நாகரிகம் மேல்நாடுகளில் வளர்ந்து வருகிறது.
நமது இலக்கியங்களும், புராணங்களும் எவ்வளவு கேவலமான நிலையில் பெண் களைப் பற்றிக் கூறுகின்றன.  இந்த வள்ளு வனைத் தான் எடுத்துக் கொள்ளுங்களேன்,
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்ன அக்கிரமம்?
கூடி இருக்கிறீர்களே உங்களைத்தான் கேட்கிறேன். யாராவது பொய் என்று சொல்லி மழையைத் தருவியுங்களேன் பார்ப்போம்.
அப்படி மழை பெய்யவில்லை என்றால் வள்ளுவன் கருத்துப்படி நீங்கள் எல்லாம் என்ன?
இந்தச் சிலப்பதிகாரத்தை தான் எடுத்துக் கொள்ளுங்களேன்! கண்ணகி ஒருத்தி தான் கற்புள்ளவள் என்பதைக் காட்டத்தானே அந்தக் கதை. உங்களுக்கு எல்லாம் மானம் வேண்டாமா? அந்தச் சிலையை இடிக்க வேண்டாமா? யாராவது கேட்டால் சொல்ல வேண்டியது தானே.
இந்தக் கண்ணகி தான் கற்புள்ளவள் என்றால், நான் என்ன கற்பற்றவளா என்று கேட்கவேண்டியதுதானே!
எவ்வளவு நாளைக்குத்தான் இந்தப் பெண்கள் கல்யாணம் செய்து கொள்வது - ஒழிந்த நேரத்தில் குட்டி போட்டுக் கொள்வது என்ற செக்கு மாட்டு வாழ்க்கையையே மேற் கொள்ளுவது?
இந்த நிலைமைகள் மாறவேண்டாமா? கற்பு என்ற வார்த்தையும் பதிவிரதை என்ற வார்த்தையும் நமக்குச் சம்பந்த மானதல்ல.
இன்றைக்குக் கூட மலையாளத்தில் பெரும்பாலான குடும்பங்களில் திருமணம் கிடையாது. அதனால் என்ன கெட்டுப் போய்விட்டது?
அப்படியே திருமணம் செய்து கொள்வது என்றால், 25 வயதுக்குப் பிறகு உன்னோடு ஒத்துப் போகிறவனாகப் பார்த்துச் செய்து கொள்ள வேண்டும். அப்படித் திருமணம் செய்து கொள்ளும்போது பொருளாதாரத்தில் ஆம்பளை ஆளை நம்பிப் பெண் இருக்கக் கூடாது. தானே சம்பாதிக்கக் கூடிய அள விற்குத் தன்னை ஆளாக்கிக் கொள்ள வேண் டும்.
உன்னுடைய கடவுளைத் தான் எடுத்துக் கொள்ளேன். யாரிடம் பதிவிரதத்தன்மை காணப்படுகிறது? என்னடா என்றால், அவன் குதிரைக்குப் பிறந்தான், மானுக்குப் பிறந்தான் என்றுதானே காணப்படுகிறது. இவை எல்லாம் உங்களுக்கு வழிகாட்டிகளா? இவற்றையெல்லாம் பக்தி என்ற பெயரால் ஏற்றுக்கொள்ளும் வரை நமக்கு மாற்றம் ஏது? இழிவு ஒழிவது ஏது?
பெண்களைப் பொறுத்த வரை எவ்வளவு அதிகம் படிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாகப் படிக்க வேண்டும். மூட நம்பிக்கை சிறிதும் அற்றவர்களாகத் திகழ வேண்டும். சிங்காரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கக் கூடாது. துணிச்சல் இருந்தால் கல்யாணம் செய்து கொள்வதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்களால் தொல்லை வரும் என்றால், ஆளுக்கு ஒரு கத்தியை இடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே!
மற்றப்படி துணி மணி அணிவதில் மாறுதல் வேண்டும். சிக்கனமான லுங்கி அணியும் பழக்கம் வேண்டும். எதற்காக 16 முழம் 20 முழம் என்று உடலைச் சுற்றிக் கொள்ளவேண்டும்? இந்த அதிகப்படியான காரியத்தாலே எவ்வளவு செலவழிக்க வேண்டி இருக்கிறது? என்ன அவசியம்?
பதிவிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்கிறாய். அதே நேரத்தில் பார்க்கிறவர்கள் ஆசைப் படுகிற அளவிற்கு ஏன் சிங்காரித்துக் கொள்கிறாய்?
அதுவும் யாரைப் பார்த்துச் சிங்காரித்துக் கொள்கிறாய்? சினிமாக்காரியைப் பார்த்துத் தானே காப்பி அடிக்கிறாய்? சினிமாக் காரிகளின் யோக்கியதை என்ன? - நமக்குத் தெரியாதா?
இந்தக் காரியங்களால் எல்லாம் என்னவாயிற்று என்றால், நூற்றுக்கு அய்ம் பது பேராக இருக்கக் கூடிய பெண்கள் சமு தாயம் நாட்டிற்குப் பயன்படாத - கேடான கூட்டமாக அல்லவா போய்விட்டது!
நாம் கடவுள் சக்தி என்ற கற்ப னையை நம்பிப் பாழாய்ப் போய்க் கொண்டி ருக்கிறோம். மற்றவன் எல்லாம் மனித சக்தியை நம்பி நாள்தோறும் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறான்.
நமக்குத் தான், புத்தி இல்லை என்றால் மற்றவர்களைப் பார்த்தாவது திருந்த வேண்டாமா? இன்னும் எத்தனை நாளைக்கு நான் இப்படிக் கத்திக் கொண்டிருப்பது? எனக்குப் பின்னால் எவன் இந்தக் கருத்து களை எல்லாம் எடுத்துச் சொல்லப் போகி றான்? எனவே தாய்மார்களே! நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து பட்டம் பெற்ற ஆண்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்களல்ல என்பதைச் செயல்கள் மூலம் காட்டவேண்டும்.
- 12-3-1972 அன்று திருச்சியில் நடைபெற்ற பெண்கள் விடுதலை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் உரை, விடுதலை, 14-3-1972


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...