Total Pageviews

Monday, March 7, 2016

பெண்ணுரிமையை ஆண்கள் எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

இந்த மாதிரியான மாறுதல் திருமண முறையானது நீண்ட நாளாக சமுதாயத்தில் இரந்து வந்த கன்னிகாதானம், பாணிக் கிரகணம், விவாகம், கலியாணம் என்கின்ற முறை களுக்கும், நடப்புகளுக்கும் மாறுதல் ஆனதாகும்.
பெண்களை ஆணுக்கு அடிமைப் படுத்துவதே கல்யாணம் என்று ஆயிரம் 2000-ம் ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது; எவரும் பெண் ஏன் அடிமை? ஆண் ஏன் எஜமானன்? என்று கேட்க முன்வரவில்லை. சுயமரியாதைக் காரர் களாகிய நாங்கள்தான் இதுபற்றி சிந்தித்தோம், பரிகாரம் காண மாறுதல் திருமணத்தை ஏற்படுத்தினோம். தொடக்கத்தில் இதற்கு இருந்து வந்த எதிர்ப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. அரசாங்கமும் இதற்கு விரோதமாகவே இருந்ததும் அல்லாமல், இது சட்டப்படி செல்லாது என்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கச் செய்து விட்டது என்றாலும், நமது உணர்ச்சி உள்ள சுயமரியாதைக் காரர்கள் துணிந்து பதினாயிரக்கணக்கில் செய்து கொண்டு தான் வந்தார்கள்.
நல்ல வாய்ப்பாக பார்ப்பன ஆதிக்க ஆட்சியானது ஒழிந்து அசல் தனித் தமிழர்கள் ஆட்சியானது ஏற்பட்டதன் காரணமாக இந்த சுயமரியாதை திருமணம் செல்லு படியாகும் என்று சட்டம் செய்யப்பட்டது.
தாய்மார்களே! தோழர்களே! கொஞ்ச காலத்திற்குத்தான் இப்படி அழைப்பேன். ஒரு மாநாட்டுக்குப் பிறகு இப்படி கூறமாட்டேன். பெண்களை எல்லாம், பார்ப்பானுக்கு வைப்பாட்டி களாக, தாசிகளாக ஆக்கப்பட்டவர்களே என்று பெண்களைக் கூப்பிடப் போகின்றேன்!
ஆண்களை எல்லாம் பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்களே, ஈனப் பிறவிகளே என்றுதன் அழைக்கப் போகின்றேன். இஷ்டப்பட்டவர்கள் அழைக்கட்டும், இஷ்டம் இல்லாதவர்கள் கூப்பிட வேண்டாம் என்று வெளிப்படுத்தி விடப் போகின்றேன்.
நம் மக்களுடைய மானம், ரோசத்தைத் தூண்ட இப்படி சொன்னாலாவது புத்தி வராதா என்ற எண்ணம் காரணமாகவேயாகும்.
பெண்கள் எதற்காக ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதுபற்றி எவனும் கவலைப்பட வில்லையே. நமது புலவர்கள் படித்தவன்கள் எல்லாம் பழைமையைப்பற்றியும், தாம் படித்ததை வாந்தி எடுத்தும் பேசுகின்றார்களே ஒழிய மனித சமுதாயத்தை திருத்த ஒன்றும் கூறுவது இல்லையே.
தமிழர்களுக்குத் திருமண முறை என்று ஒன்று இருந்ததா என்று எந்தப் புலவர்களாவது கூற வேண்டுமே தமிழர் களிடையே காதலர்கள் வாழ்வுதான் இருந்ததே ஒழிய புருசன், மனைவி வாழ்க்கை இருந்ததாக ஆதாரமே இல்லையே!
மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை உள்ள பெண்களுக்கு 100-க்கு 50 பதவிகள் உத்தியோகம் முதலியன கிடைக்க வேண்டாமா? 15 மந்திரிகள் என்றால், அதில் ஒருவர்தானே பெண் மந்திரி; கிரமத்துக்கு 7 மந்திரிகள் கொடுக்கப்ட வேண்டாமா? 100 கலெக்டர்கள் என்றால், மூன்று பேரோ, நான்கு பேரோதானே பெண்கள் கலெக்டராக இருக்கிறார்கள். சரி பகுதி உத்தியோகம் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டாமா? பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட முன்வரவேண்டும். பெண்கள் பலர் திருமணம் செய்துகொள்ளாமல் பெண்கள் சமுதாய நலனுக்காகப் பாடுபட முன்வரவேண்டும்.
என்றைக்குமே ஆண்கள் பெண்களுடைய உரிமைக்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள்; அடக்கி ஒடுக்கவே முற்படுவார்கள்.
கல்யாணம் என்கின்ற பேரால் ஆணுக்குப் பெண்ணை அடிமையாக்குவதை கிரிமினல் ஆக்க வேண்டும். எப்படி தாசி முறை கிரிமினல் ஆக்கப் பட்டுவிடவில்லையா? அதுபோல அடிமை முறை யையும் கிரிமினல் ஆக்கவேண்டும். ஆணுக்கு உள்ள அத்துணை உரிமையும் பெண் களுக்கு வரவேண்டும். பெற்றோர்கள் பெண்களை 22 வயதுவரை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும். பிறகு அவர் களுக்கு ஒரு தொழிலும் கற்றுக் கொண்டு ஒரு வேலைக்கு லாயக்கு உள்ளவர்களாகச் செய்யவேண்டும். பிறகு அவர்களாகப் பார்த்து தங்களுக்கு ஏற்றவனை தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்களாகப் பார்த்து பிடித்துப் பிணைக்கக் கூடாது.
மேலும் பேசுகையில், மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவு உணர்வுடனும் வாழ வேண்டிய அவசியம்பற்றியும் தெளிவுபடுத்தி உரை நிகழ்த்தினார்.
29.8.1973 அன்று  சிதம்பரத்திற்கு அடுத்த குமராட்சியில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு  (`விடுதலை, 20.9.1973)


.

0 comments: