Total Pageviews

Thursday, March 3, 2016

வேலை வாய்ப்பு எங்கே?

மோடி பிரச்சாரத்தின்போது அள்ளிவீசிய பல்வேறு பொய்கள் ஒவ்வொரு வரவு - செலவுத் திட்டத்திலும் மெய்யாக மாறாதா! என்று அவரை நம்பிய கோடானு கோடி மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழிந்தும், தான் அள்ளி வீசிய மாயாஜால வாக்குறுதிகளில் ஒன்றையாவது அவர் நிறைவேற்றி இருக்கிறாரா? என்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆட்சி பீடம் ஏறிய உடன் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதை இங்கே நினைவு கூரவேண்டும். நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் என்பது எங்களின் முதன்மையான கடமை என்றார். அவர் கூறிய இந்தச் செய்தியோடு தேசிய கலாச்சாரம் என்ற பெயரால் வரலாற்றுக் கழகத்தின் அத்தனை உறுப் பினர்களும் விலக்கப்பட்டு, சுதர்சன் ராவ் தலைமையில் காவிகளின் குழு அமர்ந்தது, பள்ளிகல்லூரிகளில் மாற்றம் கொண்டுவரும் முக்கிய பொறுப்பில் உள்ள இந்தக் குழு முழுமையாக காவிமயமானது. அப்போதே புரிந்து விட்டது, வளர்ச்சி, பொருளாதாரம் வேலைவாய்ப்பு எல்லாம் வெறும் பேச்சுதான். உண்மையில் காவிகளின் ஆட்சியே இவர்களின் உயிர்மூச்சு என்று உறுதியானது.
அடுத்த கட்டமாக சிறுபான்மையினரின் வழிபாட்டு இடங்களின் மீதான தாக்குதல் தொடங்கி, இன்று கன்னையா குமார் விவகாரம் வரை தொடர்கிறது. நாட்டில்  பொருளாதார வளர்ச்சி அபாயகட்டத்தில் சிக்குண்டுள்ளது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஆலையின் கரும்பு போல் அவர்களின் உழைப்பு பிழியப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அனைத்து மாநிலங் களிலும் வேலைவாய்ப்பு என்பது கிட்டத்தட்ட இல்லாத நிலை, 20 முதல் 40 வயதுவரை உள்ள இளைஞர்களில் வேலை யில்லாதவர்கள் எண்ணிக்கை 21 கோடியைத் தாண்டிவிட்டது.
மீதமுள்ள பலர் கார்பரேட் நிறுவனங்களில் கொத்தடிமை களைவிட கேவலமாக நடத்தப்படுகின்றனர். பிரபல தனியார் எரிவாயு நிறுவனத்தில் இந்தியா முழுவதிலுமுள்ள கிளை நிறுவனங்களில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்களிடம் நேரடியாக மாதச் சம்பளம் பெறுபவர்கள் வெறும் 7 ஆயிரம் பேர்தான். இதில் 2 ஆயிரம் பேர் பயிற்சிப் பணியாளர்கள். அதாவது வெறும் அய்ந்தாயிரம் பேர்தான் அந்த தனியார் நிறுவனத்தின் நேரடிப் பணியாளர்கள், இவர்கள் அனைவரும் பெரும் பதவியில் இருப்பவர்கள். மற்றவர்கள் அனைவரும் மூன்றாம், நான்காம் நிறுவனங்களின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், அதாவது ஒருதனியார் நிறுவனத்தில் மட்டும் வேலை உத்திரவாதமின்றியும், எதிர்காலத்தில் எந்த ஒரு சேமிப்பும் இல்லாமல் நம்பிக்கை இழந்த நிலையில்
3 லட்சத்து 10 ஆயிரம் பேர்  உள்ளனர். மோடிக்கு மிகவும் நெருக்கமான 47 தனியார் நிறுவனங்களில் சுமார் ஒரு கோடி பேர் இதே போன்று எதிர்காலமற்ற நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் எதிர்ப்பிலிருந்து தப்பிக்கத் தான் பிரதம மந்திரி பென்சன் யோஜனா போன்றவைகளைக் காட்டி வாயைக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளார். இப்படிப் பட்ட ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவதைத்தான், நான் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன், என்று முழங்கினாரோ, ஒப்பந்த தொழிலாளர் முறை முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இப்படி ஓர் அறிவிப்பா?
விவசாயிகளுக்கு பல்வேறு நலன்களை அள்ளி வீசியுள் ளார். எப்படி தேர்தல் காலத்தில் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றினாரோ, அதேபோல் ஒவ்வொரு வரவு - செலவு அறிக்கையிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.
முக்கியமாக விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்கு உயர்த்துவதாக கூறியிருக் கிறார். முதல் நாள் உத்தரப்பிரதேசத்தில் கூறினார். மறுநாள் நாடாளுமன்றத்தில் அப்படியே நகலெடுத்து அருண்ஜெட்லி கூறினார்.
உண்மையில் விவசாயிகள் இவ்வளவு ஏமாளிகளா? இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மை விவசாயிகளின் வருவாய் ஆண்டிற்கு ரூ.20,000 மட்டுமே! இது நபார்டு வங்கி எடுத்த சர்வேயில் வெளிவந்த உண்மை. அதாவது மாதம் ரூ.1600 வருமானம் வாங்கும் ஒரு விவசாயி, மோடியின் வாக் குறுதிப்படி 2022 ஆம் ஆண்டு ரூ.3200 வருவாய் ஈட்டுவார்.  (ஆனாலும் ரூபாயின் மதிப்பைக் கணக்கிட வேண்டாமா?) இதைக் கணக்கு போட்டு பார்த்த ஏழை விவசாயி கண்ணீர் விடுகிறார். மோடியோ தனது அடுத்த பிரம்மாண்ட அறிவிப்பாக எதை அறிவிக்கலாம் என்று தனது கார்ப்பரேட் முத லாளிகளிடம் ஆலோசனைகேட்க புறப்பட்டுவிடுவார்.
தூய்மை இந்தியாவிற்கு  ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்தி ருக்கிறார்கள். தூய்மை இந்தியா திட்டம் துவங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. முழு தோல்வியில் முடிந்த இந்த திட்டத்திற்கு ஏற்கெனவே தூய்மை இந்தியா சேவை வரி என்றபெயரில் தொகை வசூலிக்கப்படுகிறது, இப்போது மேலும் நமது பணத்தில் இருந்து ரூ.5000 கோடியைப் பிடுங்கி தூய்மை இந்தியாவில் கொட்டப்போகிறார்கள்.  பலன் கேள்விக்குறியே!
வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச எரிவாயு உருளை என்பதும் ஏமாற்று வேலைதான்; இந்தியாவில் கிராமப்புறத்தில் ரூ.27. நகரங்களில் ரூ.33 வருவாய் வறுமைக் கோட்டின் எல்லையாக நிதி ஆயோக் உறுதிசெய்துள்ளது. இன்றைய கணக்குப்படி மன்ரேகா திட்டத்தின் மூலம் கிராம மக்கள் நாளொன்று ரூ.100 வருவாய் ஈட்டுகின்றனர். நகரமக்களின் தினசரி வருவாய் 400-அய் எட்டியுள்ளது. இந்நிலையில் எந்த ஏழைக்கு இலவசமாம்?
வருவாய்க்கான எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டாமல் தேர்தல் அறிக்கை போல் வரவு- செலவு திட்ட அறிக்கையை வெளியிட்டு மக்களை தந்திரமாக ஏமாற்றும் செயலில் மோடி-அருண் ஜெட்லி குழு திறம்பட வேலைசெய்துள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டியதுபோல ஒப்பனை ஜிகினாதான் இதில் மினுக்குகிறது.

0 comments: