Total Pageviews

Thursday, March 3, 2016

மூளையைப் பாதுகாக்க தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் (2)
5. சதா தூங்கிக் கொண்டே இருக்கும் ‘தூங்கு மூஞ்சிகள்’ பலரை நாம் பார்த்துள்ளோம்; ஓய்வுதானே - விடுமுறைதானே என்று சமாதானம் கூறி, படுக்கையையே இருப்பாகக் கொண்டு தூங்கிடும் நபர்களும் இந்த மூளை பாதிப்புக்கு ஆளாகக் கூடும்!
பலர் ஓய்வு - “இளைப்பாறுதல்” (Relaxation) என்பதை சதா தூங்குவது என்று தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது.
‘நல்ல பொழுதையெல்லாம் நாளும் தூங்கிக் கழித்த சோம்பேறிகளைப்’ பற்றிதான் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாண சுந்தரம் பாடி எச்சரித்தாரே அது நினைவிற்கு வருகிறதா?
6. சாப்பிடும்போது, தொலைக் காட்சியில் படம் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, கணினியில்  வேலை செய்து கொண்டே சாப்பிடுவது என்பது மிகப் பெரிய கேடு. இது கட்டாயம் தவிர்க்கப்பட்டாக வேண்டும்!
உணவை நாம் உட்கொள்வது அடிப்படை உடல் நலப் பாதுகாப்பு - இன்றியாமையாக் கடமை. மற்ற வேலைகளை உணவினை முடித்து விட்டு செய்தால் என்ன குடியா மூழ்கிப் போகும்! எனவே இந்தத் தவறை செய்வதை நாம் அனைவருமே தவிர்த்தல் அவசியம்! அவசியம்!!
7. தூங்கும்போது தலைக்குல்லாயுடன் தூங்குவது, காலில் (உறை) சாக்ஸ் Socks) அணிந்து கொண்டே தூங்குவதும் மூளையின் இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இயங்கும் சக்தியையும் பாதிக்கும் என்பது மற்றொரு முக்கிய எச்சரிக்கையாகும்.
8. எட்டாவது எச்சரிக்கை - கவனத்தில் கொள்ள வேண்டியது. (மூளையின் ரத்த ஒட்ட பாதிப்பைத் தடுக்க)
பல்வேறு காரணங்களால் நாம் உடல் நலக் குறைவுடன் உள்ளபோது, (படுக்கையில் இருந்து கொண்டே) மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் பணிகளில் ஈடுபடுதல் கூடாது. இழுக்க முடியாத சுமையை என்ஜினுக்கு அளிப்பதுபோல.
9.  அதிகம் - சதா பேசிக்  கொண்டே இருப்பது , சிலர்  சளசளவென்று சதா - Non Stop  எஞ்ஜின் மாதிரி பேசிக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களைப் பேசவிடாமலும், மற்றவர்கள் நாம் பேசுவதை விரும்புகிறார்களா? கேட்கிறார்களா? கவனிக்கிறார்களா? முகச் சுளிப்பை மிக நாசூக்காக வெளிப்படுத்துகின்றனரா? என்பது பற்றியெல்லாம்கூட சிறிதும் கவலைப்படாமல் பொத்தானை அழுத்திய டேப்ரிக்கார்டரைப்போல் பேசிக் கொண்டே இருப்பது மூளைக்குக் கேடு செய்வதாகும்! (அதற்காக எல்லோரும் மவுன சாமியாராக மாறி விட வேண்டும் என்பது பொருளல்ல - அளவுக்கு அதிகமாகப் பேசுவோர் தேவைக்கு அதிகமாகப் பேசும் ‘தொணதொணப்பை’ நிறுத்துவது நல்லது. சிலர் தொலைபேசியையே இப்படிப்பட்ட பேச்சுகள் மூலம் ‘தொல்லைப் பேசியாகவும்’  ஆக்கி விடுகிறார்கள். அது தவிர்க்கப்படல் நன்று.
10. ‘சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும்போது, அதனை தவிர்த்தலோ, தள்ளிப் போடுதலோ கூடாது’
சில நேரங்களில், சில சூழ்நிலைகளில் இது பலருக்கும் ஏற்படும் அனுபவம் தான் மறுப்பதிற்கில்லை. அதிலும் வயதானவர்கள் சர்க்கரை நோயாளிகள் மூத்திரத்தை அடக்கக் கூடாது; அது விரும்பத்தக்கதல்ல. பலரால் அடக்க முடியாது அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்படுவது உண்டு. இது சிறுநீரகத்தில் கற்களை (Stones) உருவாக்கக்கூடும், இதற்குக் காரணம் இப்படி மூத்திரத்தை அடக்குவது என்றுதான் பலரும் - மருத்துவர்கள்கூட - கூறக் கேட்டதுண்டு.
ஆனால், இப்போது மூளைப் பாதுகாப்பு சம்பந்தமாக வந்துள்ள எச்சரிக்கைகளில், இப்படி அடக்கி வைப்பது, தள்ளிப் போடுவது மற்ற உறுப்புகளைவிட மூளையை  - அதன் சக்தியளித்தலை - அதன் பணிகளை வெகுவாகப் பாதிக்கும் என்றும் பத்தாவது கட்டளையாகக் கூறப்பட்டுள்ளது!
சாதாரண நமது வெகு மக்கள் எளிய பழமொழியைக் கூறுவார்களே, “ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் ஆனால் மூத்திரத்தை அடக்கக் கூடாது’ என்று அது எவ்வளவு நூற்றுக்கு நூறு பெரிய மருத்துவ உண்மை அடங்கியுள்ள அனுபவக் கருத்து பார்த்தீர்களா?
எனவே, நாம் அனைவரும் கவனத்துடன் இந்த 10 தவறுகளையும் தவிர்த்து நல்வாழ்வு வாழ முயலுவோமாக!
- கி.வீரமணி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: