Total Pageviews

Tuesday, December 15, 2015

அழகிய சென்னையை உருவாக்கலாம்



விடுதலை நாளிதழில்  2015 ஜூன் மாதம் உலக சுற்றுப்புறச்சூழல் நாள் குறித்த சிறப்புக் கட்டுரையில் எல்நினோ விளைவு பற்றி தெளிவாகக் குறிப்பிட்டு இந்திய நகரங்களுக்கு வரும் பாதிப்பு குறித்து அன்றே விரிவாக விளக்கப்பட்டு இருந்தது.    அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நல்ல மழை பெய்யும், 
வங்காள விரிகுடாக் கடலில் தொடர்ந்து ஏற்படும் காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் அதிக மழை பெறும், உள் மாவட்டங்களுக் கும் மழைப் பொழிவு இருக்கும். முக் கியமாக தலைநகர் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங் களான காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் போன்றவை எப்போதும் அதிக பாதிப்பைப் பெறும் மாவட்டங்களாகும். சென்னை மாநகரைப் பொறுத்த வரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து மழைவெள்ளப் பாதிப்பின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டு இருக்கிறது.
சென்னை நகரின் பதிவு களைக் காணும் போது, முதல் முதலாக  1943 ஆம் ஆண்டு கடுமையான வெள்ளப் பாதிப்புகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு, 1950, 1957, 1961, 1962, 1978, 1985, 2002,  2005, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் வெள்ள பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2012 நீலம் புயலின் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு இரண்டு ஆண்டுகள் சென்னை மழைப்பொழிவைப் பெறவில்லை. 2015-ஆம் ஆண்டு கோடையில் இந்தியா, இலங்கை, 
உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகளில் ஏற்பட்ட கடுமையான வெப்பமே மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்பிற்கு அச்சாரமிட்டு விட்டது, ஒன்று கடுமை யான வறட்சி அல்லது கடுமையான மழைவெள்ளம் இரண்டில் ஏதாவது ஒன்று நிகழ்வது உறுதியாகிவிட்டது. மழைக்காலத்தில் புயலுடன் கூடிய மழை ஏற்பட்டால் கோடைகாலத்தில் கடுமையான வறட்சி என்பது உறுதி யாகியுள்ளது.  சென்னையில் மழை பெய்து வெள்ளம் வரும் போதெல்லாம் செம் பரம்பாக்கம், புழல், 
வீராணம் உள் ளிட்ட  சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து தண்ணீர் வீணாக கடலில் கலப்பது ஆண் டாண்டு காலமாக சென்னை நகர மக்கள் பார்த்து வந்த தொடர் விளைவுகள். அதே போல் கோடைக் காலம் என்ற உடனேயே ஆந்திர மாநிலம், கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் கேட்டு கையேந்தி நிற்பதும் தொடர் கதையாக உள்ளது.  தீவுக்கூட்டங்கள் எப்படி மும்பை நகரமாகியதோ அதேபோல் நன்னீர் ஏரிகள் சூழ்ந்த நகரமாக சென்னை இருந்தது. 
இயற்கை எப்போதும் தன்னுடைய பாதையை சீராக அமைத்து முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அது படைப்புத்தூண் என்ற ஒளிர்முகில் கூட்டத்தில்  ஞாயிறு பிறந்தது முதல் இன்று பூமி என்ற ஒன்று உயிரோட்டம் நிறைந்து காணப்படுவது வரை தொடர்கிறது. இயற்கையின் ஆற்றல் முன்பு எந்த ஒரு செயற்கை ஆற்றலும் எதிர்த்து நிற்க முடியாது, அப்படி நிற்க முயன் றால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும். ஆனால் அந்த இயற் கையை, சிதைக்காமல் ஆக்கத்திற்குப் பயன்படுத்தலாம். இதைத்தான் அய்ரோப்பிய நாடுகளில் உள்ள பல நகரங்கள் மற்றும் தாய்லாந்தின் பாங்காக் நகரமும் செய்துள்ளது.
ஏரிகள்
சென்னையைச் சுற்றி 1800-ஆம் ஆண்டு வாக்கில் 700-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. மேலும் நூற்றுக்கணக் கான சிறிய குளம் மற்றும் கண்மாய்கள் (நீர்த்தேக்கங்கள்) இருந்தன. பருவ காலத் தில் கிடைக்கும். மழை நீர், ஏரிகள் மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களில் தங்கிவிடும். அதில் 1. செம்பரம்பாக்கம், 2.பூண்டி, 3. சோழவரம், 4. புழல், 5. வியாசர்பாடி ஏரி, 6. வேளச்சேரி ஏரி, 7.ஆதம்பாக்கம் ஏரி, 8. மாதவரம் ஏரி 9.விருகம்பாக்கம் ஏரி, 10.வில்லிவாக்கம் ஏரி போன்றவைகள் இன்றும் உள்ளன.  பெரிய ஆறுகள் 1.ஆந்திராவில் இருந்து வரும் கொசஸ் தலை ஆறு சென்னை நகருக்குள் 17 கிமீ தூரம் ஓடுகிறது. 2. திருவள்ளூர் மாவட்டம், கேசாவரம் ஏரியில் இருந்து புறப்படும் கூவம் ஆறு சென்னைக்குள் 60 கிமீ தூரம் பயணிக் கிறது,
3. மாகாணியம் மலையம்பட்டு ஏரியில் இருந்து துள்ளியோடும் அடையாறு சென் னைக்குள் 40 கிமீ தூரம் பயணிக்கிறது.
இந்த ஆற்றுநீரை கடலுக்கு எடுத்துச் செல்லவும், நகரில் பல்வேறு சிறிய குளம் மற்றும் கண்மாய்களுக்கு ஆற்று நீரை  கொண்டு சேர்க்கவும் பல்வேறு நீர்வழித் தடங்கள் சென்னையில் இருந்தன. அவற்றில் இன்று இருப்பவை கால்வாய்
1. வடக்கு பக்கிங்காம் கால்வாய் எண் ணூரில் இருந்து துவங்கி வடக்கு கூவம் ஆறுவரை 58 கி மீ பயணிக்கிறது.
2. மத்திய பக்கிங்காம் கால்வாய்  தெற்கு கூவத்தில் துவங்கி அடையாறு வரை 7 கிமீ தூரம் நகருக்குள் பாய்கிறது.
3. தெற்கு பக்கிங்காம் கால்வாய் அடையாற்றில் துவங்கி மரக்காணம் வரை 108 கிமீ தூரம் பயணிக்கிறது.
4. ஓட்டேரி நல்லான் கால்வாய் வில்லி வாக்கம் ஏரியில் இருந்து வடக்கு பக்கிங் காம் கால்வாய் வரை 11 கிமீ சென்னை நகருக்குள் பயணிக்கிறது.
5. விருகம்பாக்கம் கால்வாய் விருகம் பாக்கத்தில் துவங்கி மத்திய கூவம் வரை 7 கிமீ தூரம் பாய்கிறது.
6. கொடுங்கையூர் கால்வாய் மாத வரம் ஏரியில் துவங்கி வடக்கு பக்கிங்காம் வரை நகருக்குள் 7 கிமீ தூரம் பாய்கிறது.
7. வீராங்கல் கால்வாய் ஆதம்பாக் கத்தில் இருந்து பள்ளிக்கரணை வரை 3 கிமீ வரை செல்கிறது.
8. காட்டன் கால்வாய் வியாசர்பாடி ஏரியிலிருந்து தொடங்கி  தண்டையார் பேட்டையில் வடக்கு பக்கிங்காம்  கால் வாய்வரை 7 கிமீ தூரம் பயணிக்கிறது.
9. வேளச்சேரி கால்வாய், வேளச்சேரி ஏரியில் இருந்து பள்ளிக்கரணை வரை 2.30 கிமீ நகருக்குள் ஓடுகிறது.
இந்தக் கால்வாய்கள் அனைத்தும் சென்னை மற்றும் புறநகரை  முழுமையாக இணைத்து பாய்ந்துகொண்டு இருக்கின் றன. இந்தக் கால்வாய்களுடன் 500-க்கும் மேற்பட்ட சிறிய கால்வாய்கள் இணைந் துள்ளன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியின் மொத்த பரப்பளவு 1600 கி.மீ சுற்றளவு தற்போது சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்கள் புறநகர் மின் தொடர்வண்டி இணைப்பு ஏற்பட்டதால் எல்லை மாவட்டங்களும் சென்னையா கவே மாறிவிட்டன. ஒரு திரைப்படப் பாடலில் என்னவளம் இல்லை இந்த திருநாட்டில், 
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற வரிகளை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.  அய்ரோப்பாவில் பல்வேறு நகரங்கள் இதே நடைமுறையைப் பின்பற்றி தங்கள் நகரங்களுக்குள் செல்லும் கால்வாய்களை உள்ளூர் நீர்வழிப் பயணத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் அந்த நாட்டின் சுற்றுலாவும் சிறந்து விளங்குகிறது.
முக்கியமாக வியன்னா, பெல்கிரேட்ஸ், ஆம்ஸ்டர்டாம், மாட்ரீட், ரோஸ்வீக் போன்ற நகரங்களைக் கூற லாம். மேலும் நார்வே ஓஸ்லோவில் ஆண்டுக்கு 7 மாதங்கள் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கும் கால்வாய்களைக் கூட, கோடைக் காலத்தில் நீர்வழித்தடமாக பயன்படுத்துகின்றனர்.  மேலே சொன்ன நகரங்கள் எல்லாம் பெரும்பாலும் செயற்கையான கால்வாய் களை உருவாக்கி நகரங்களின் பல்வேறு பகுதிகளை இணைத்துள்ளனர்.
பாங்காக் நகரமும், சென்னை நகரமும் ஒரே பருவநிலையைக் கொண்டதுதான் பாங்காக் நகருக்குள் சாவோ பரையா நதி பாய்கிறது. அந்த நகர நிர்வாகம் அந்த நதியை நகரின் பல்வேறு சுற்றுலாத் தலங்களைச் சுற்றிச்செல்லும் கால்வாய் களாக மாற்றியதன் விளைவு, பாங்காக் நகர சுற்றுலாவில் அந்த நதிக்கால்வாய்ப் பயணமும் முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டாண்டு காலமாக ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தாய்லாந்து நல்ல மழையைப் பெறுகிறது.  பாங்காக் நகரத்தில் ஜூலை முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை கடுமையான மழை பொழிகிறது. ஆனால் அங்கு எந்த ஒரு இடத்திலும் மழைநீர் தேங்காது,
 காரணம் நகருக்குள் இருக்கும் கால்வாய்கள் அனைத்தும் மழை நீரை கொண்டுசென்று ஆற்றுடன் கலந்து விடுகின்றன. எளிமை யான தொழில்நுட்ப உதவியுடன் நகருக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் ஆற்று நீர் கடலில் கலந்துவிடுகிறது. சென்னை நகரில் உள்ள ஏரிகளை வலுப்படுத்தி சென்னை நகரத்தின் ரத்த நாளங்களைப் போல் இருக்கும் கால் வாய்களிலும் ஆற்றிலும் கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் கடை மடை மதகு முறையைப் பயன்படுத்தி மழைக்காலங்களில் எவ்வளவு பெரிய பயமுறுத்தும் மழை வந்தாலும் அந்த நீரை சில மணிநேரங்களில் கடலில் சென்று கலக்கும் வகையில் கால்வாய்களை சீர் செய்யலாம், அதன் பிறகு ஆண்டு முழு வதும் கால்வாய்களில் தண்ணீர் இருப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
பயன்கள்
இதன் பயன்களைப் பட்டியலிட் டால் சென்னை சந்திக்கும் பல்வேறு சிக்கல்களை எளிதாக தீர்த்துவிடலாம் முக்கியமாக நகரில் குடிநீருக்கும் பஞ்சம் வராது. கால்வாய்ப் போக்கு வரத்தின் மூலம் வாகன நெரிசலை அறவே தவிர்க்கலாம்.
அதுமட்டுமா சென்னை நகருக்கு சுற்றுலா வருப வர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும். இதன் மூலம் குறைந்த பட்சம் நேரடியாகவும், மறைமுகமாக வும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை கள் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். கால்வாய்க் கரைகளை தோட்டங் களாக்குவதன் மூலம் நகரின் கால நிலையில் இனிமையான மாற்றங்கள் வரும், நாம் குளுமையான பெங் களூரை எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்கும் காலம் மாறி பெங்களூரு மக்கள் சென்னையை எண்ணி ஏங்கும் நிலை வரும். 
பாஜக போன்ற கட்சிகள் எடுத்த எடுப்பிலேயே ஏழைகளை சென்னை நகரை விட்டு விரட்டவேண்டும் என்றும் அவர்கள் தான் சென்னை நகரின் வெள்ளபாதிப்பிறகு காரணம் என்று அறிக்கை விடுகிறது. சென்னை மட்டுமல்ல உலகின் பெரிய நகரங் களின் உருவாக்கத்திற்கு பின்புறம் அந்த ஏழைகளின் கடின உழைப்பு தான் உள்ளது என்பதை பணத் திமிரில் இருக்கும் கட்சிகள் மறந்து விடுகின் றன. இந்த ஏழைகளின் வாழ்வாதாரத் தையும் வசிப்பிடத்தையும் பல்வேறு வசதிகளுடன் மாற்றி சென்னை நகரை அழகான உயிரோட்டம் நிறைந்த சிங்காரச் சென்னையாக மாற்றும் திறன் இந்தக் கால்வாய்களுக்கு உண்டு.
இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யவோ, அல்லது அயல் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களுக்கு நமது வரிப்பணத்தை அள்ளித்தந்து யோசனை கேட்கவோ தேவை யில்லை. மெட்ரோ தொடர்வண்டிக் கான திட்டப்பணிகளுக்கு செலவழித்த தொகையில் சிறுபங்கை இந்தக் கால்வாய்சீரமைப்பிற்கு செலவழித் தால் போதும், மெட்ரோ தொடர் வண்டி திட்டப் பணியால் 90 விழுக் காடு வட இந்தியர்கள் தான் பயன் பெற்றனர், பெறுகின்றனர். 
ஆனால் இந்தக் கால்வாய் சீரமைப்புப் பணியை தொடங்கினால் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதனைச் சுற்றி யுள்ள மக்களின் உழைப்பைப் பயன் படுத்தி நமது மக்களின் பொருளா தாரத்தை மேம்படுத்தலாமே? இதோ தேர்தல் வருகிறது, கண்டிப்பாக மழைவெள்ள பாதிப்பும் வரும்தேர்தலில் எதிரொலிக்கும். கால்வாய்களைச் சீர்செய்யாமல் சென்னையை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியாது, கால்வாய்களைச் சீர் செய்து சென்னை நகர மேம்பாட்டிற்கு திட்டங்களைக் கொடுக்க வலியுறுத்துங்கள்.
வரும் நமது எதிர்காலத்தலைமுறையாவது அழகிய பசுமையான வாகனநெரிசல் இல்லாமல், விடுமுறைக்காலங்களில் நகரை சுற்றிவர குடும்பத்துடன் படகுச் சவாரி செய்ய வழிவகுப்போம். அதைவிட இனிமேல் மழை வெள் ளத்தால் அழிவில்லாமல் இதை விட அதிக மழை பொழிந்தாலும் அந்த மழைநீரை சேமித்து அழகிய சென்னை யின் பயன்பாட்டிற்குச் செலவழிப்போம். - சரவணா ராஜேந்திரன்

0 comments: