Tuesday, December 15, 2015

எதற்கும் எல்லைக் கோடு தேவை!


சுதந்திரம் வேண்டுமென்று விரும்பு கிறோம். நியாயந்தான், தேவைதான். ஆனால் அச்சுதந்திரம் ஓர் எல்லை யுடன் இருந்தால்தானே, மக்களுக்கும் சரி, தனி மனிதர்களுக்கும்  சரி அது பயன்படும்?
வறட்சி பற்றி வருத்தப்பட்டோம் சில வாரங்களுக்குமுன்.
மழை வராதா என்று ஏங்கினோம்! இன்று தமிழ்நாட்டில் பல மாவட் டங்கள், சென்னை துவங்கி குமரி வரை, மழை பெய்து பயிர்களையும், உயிர் களையும் நாசப்படுத்தும் கொடுமை கண்டு குமுறாத நெஞ்சங்களே இல்லை. காரணம்  என்ன? பல மடங்கு அதிகமான மழை - அதன் காரணமாக வெள்ளக்காடு - அதனால் ஏற்பட்ட சொல்லொணா இழப்பும் துயரமும், துன்பமும் - விளைவுகள்!
அளவோடு பெய்திருந்தால் வளமோடு பயிர்கள் செழிக்குமே. இது, ஓர் உதாரணத் திற்காகத்தான்! சாலைகளில் கார் ஓட்டும் நாம், எவ்வளவுதான் சாலைவரி கட்டினாலும், கார் புதிய கார் என்றாலும், சாலை சிமெண்ட் சாலை என்றாலும், அதி வேகமாக எல்லா இடங்களிலும் கார் ஓட்டும் சுதந்திரத்தை, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாமல் பயன்படுத்த முடியுமா?
உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிற்சில நேரங்களில் அவதிப்படுவோர், நோய் வந்தவுடன் அந்நோய் பற்றி அரைகுறை அறிவுடன் இனிமேல் நமக்கு வாழ்வே இல்லை என்று அச்சத்தின் உச்சிக்குச் சென்று, அதீதக் கற்பனையை, தம் இஷ்டம்போல் - எல்லையின்றி செலுத் தினால் அதுவே இறப்பில்கூட பல நோயாளிகளைக் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடுமே - இல்லையா?
அண்டை நாடுகளுக்கு இடையே போர் மேகம் குவிவதற்கு ஒருகாரணம் எல்லை தாண்டுவதுதானே!
எதற்கும் எல்லை வேண்டும் - கட்டுப்பாடுகள் தேவை.
காட்டாற்று வெள்ளத்தால் யாருக்கு, ஊருக்கு என்ன பயன்?
அதையே அணைக்கட்டித் தேக்கி, வெள்ளத்தடுப்பு காரணமாக (தடுப்பணை) பயனுறு வகையில் செய்தால் பொது நலம் - குடி மக்கள் வாழ்வு வசதிகள் பெருகுமே!
மனித வாழ்வில்கூட மனிதர்களுக்கு இயல்பாக உள்ள சுயநலம், ஓர் எல்லைக் குட்பட்டு இருந்தால் தனி மனிதர்கள்கூட நல்ல வகையில் ஒளி வீசும் பல நற்பணிகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆக முடியும்!
ஆனால் 100-க்கு 90 பேர்கள் எல்லை யற்ற சுயநலத்துடன்தான் தங்கள் வாழ்வை மட்டுமே கணக்குப் போட்டு காய் நகர்த்தும் எப்போதும் எதையோ எதிர்பார்த்த வாழ்வாகவே ஆக்கிக் கொண்டு எல்லை தெரியாத தொல்லைக்கு ஆளாகித் திண்டாடுகிறார்கள்!
தந்தை பெரியார் அவர்கள் குடும்ப வாழ்வின் சங்கிலித் தொடர் விலங்கு களை நாமே எப்படி மாட்டிக் கொள் ளுகிறோம் என்பதை நன்கு விளக்குவார்.
முதலில் திருமணம் - பிறகு பிள்ளை குட்டிபெறல், அதை வளர்க் கக் கவலை - அதற்கு படிப்பு, வேலை கவலை, (சுயநலத்தின் வெளிப் பாடுகள்) அதன்பின் அவர்களுக்குத் திருமணம் - குழந்தைப் பேறு என்று எல்லையற்ற தீய வட்டம் சுழன்று கொண்டே உள்ளதால் மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தையும், சுயமரியாதை யையும் இழந்து மாறி மாறி ஒரு சுழற்சி - சைக்கிள்போல நடப்பதால் அதில் சிக்கிச் சீரழிகிறார்கள்.
பறவைகளை ஒப்பிடுகையில் தாய்ப் பறவைகள் குஞ்சுகள் இறக்கை முளைக்கும் வரைதானே காப்பாற்று கின்றன. பிறகு அதற்காக சிபாரிசுக்காக  செல்லுகின்றனவா? ஆனால் மனிதர் கள்  அப்படியா? யோசியுங்கள்.
- கி.வீரமணி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...