Total Pageviews

Tuesday, December 15, 2015

இராணுவத்திலும் பார்ப்பன ஆதிக்கமா?


இராணுவத்தில் மதத்தைப் போதிக்கின்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான பணி நியமனம் குறித்து விளம்பரம் வெளியாகியுள்ளது.
இராணுவம் என்பது முற்போக்குச் சிந்தனைக்கும், தன்னம்பிக்கைக்கும், அறிவியல் பகுத்தறிவுச் சிந் தனைக்கும் அதிக இடம் அளிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான துறையாகும். அத்தகைய துறையில் மூடநம்பிக்கை வித்துகளை விதைக்கும் எல்லாம் ஆண்டவன் செயல், நம் கையில் என்ன இருக்கிறது? என்று திண்ணைத் தூங்கி வேதாந்தங்களைக் கற்பிக்கும் மதம்பற்றிய வகுப்புகள், பயிற்சிகள் தேவையா?
மூடநம்பிக்கைதான், நம் நாட்டு வளர்ச்சிக்குத் தடை என்று நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன் பேசியதாகச் செய்தி வெளி வந்துள்ள இதே நாளில் இப்படி ஒரு செய்தி வருவது மிகப் பெரிய கெட்ட வாய்ப்பே!
எதிரி இராணுவம் தாக்க வரும் பொழுது எதிர்த்துத் தாக்கும் நேரம் இராகு காலம் என்று யோசித்தால் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப் பார்க்க வேண்டாமா?
இன்னும் சொல்லப் போனால், இராணுவத்தில் பணியாற்றுவோர் யார்  எந்த மதம்? எந்த ஜாதி என்பது தெரியாமலிருப்பதே நல்லது, இல்லையென்றால் இராணுவ வீரர்களிடையே நிலவ வேண்டிய ஒற்றுமை கூட துப்பாக்கிக் குண்டுகள்போல வெடித்துச் சிதறி விடும்.  இந்த அடிப்படை  கூடத் தெரியாமலா இருக் கிறது இந்திய இராணுவத் துறை?
இதிலும் என்ன கொடுமை தெரியுமா? இராணுவத் துறை வெளியிட்டுள்ள பணிகளுக்கான விளம்பரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது. இராணுவத்தில் பாடப் பிரிவுகளாக உள்ள 80,81, மற்றும் 85 ஆகிய பிரிவு களின்கீழ் மதத்தைப் போதிக்கின்ற பயிற்சி மய்யங் களின்மூலமாக நடத்தப்படுகின்ற மத போதனைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அவர்களுக்கான பணியாக உயிரிழப்பவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது, மருத்துவமனைகளில் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, மற்றும் அவர்கள் குணமடைவதற்காக பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துவது, தண்டனைக்குள்ளாகிய இராணுவத்தினரை (சிப்பாய்களை) பார்வையிட்டு சிறப்பு பிரார்த்தனைசெய்து அவர்கள் குழந்தை களுடன் மதப்பயிற்சி மேற்கொள்ளும் பிற பையன் களையும் வழிநடத்துவது, இராணுவ அலுவலர்கள், இராணுவ சிப்பாய்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தினரின் நலனுக்காகவும் மத வழிபாடுகளை, சிறப்புப் பூஜைகளை செய்வது உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்திட வேண்டும்.
பணிவாய்ப்பு கோருபவர்கள் இணையத்தின் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும். 1.12.2015 தொடங்கி 31.12.2015 முடிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
பண்டிட்டுகள்-74, கிராந்தி-4, பாதிரி- 2, கூர்கா பகுதிக்கான பண்டிட்- 1, மவுல்வி (ஷியா) லடாக் பகுதி-1, மகாயான புத்த பிக்கு-3 ஆகிய எண்ணிக்கைகளில் மத ஆசிரியர்கள் பணிக்கு எடுக்கப்படுகிறார்கள்.
தகுதி நிலைகள்: 1.1.2016 அன்று 27 வயது முதல் 34 வயதுக்குள் இருக்கவேண்டும். (1.1.1982 முதல் 1.1.1989க்குள் பிறந்தவர்கள்)
இராணுவப் பணிகளில் இருப்பவர்கள் விண்ணப் பித்திட 25 வயதுமுதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். (1.1.1982 முதல் 1.1.1991க்குள் பிறந்தவர்கள்)
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டும். கூடுதலாக மதத்தின்படி இருக்க வேண்டிய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
பண்டிட் - இந்து விண்ணப்பதாரர்கள் சமஸ்கிருதத் தில் மத்யமா அல்லது இந்தியில் பூஷண் அல்லது அதற்கு சமமாக பகுதி மொழியில் தகுதி (அல்லது) சமஸ்கிருதத்தில் மத்யமா அல்லது இந்தியில் பூஷண் இல்லாமல் இருந்தால், சமஸ்கிருதம் அல்லது இந்தியை முக்கியப் பாடமாகக் கொண்டு பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதுதான் அந்த விளம்பரம்.
இந்து மதம் தொடர்பாக இராணுவ வீரர்களுக்கு பாடம் நடத்துபவர்கள் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துபவர்கள் யார்? பண்டிட்டுகள் - அதாவது பார்ப்பனர்; பார்ப்பனர் ஆதிக்கம் அங்கு இங்கு எனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதற்கு இந்த ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதுமே!
இவர்களுக்குச் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண் டுமாம். இந்தி  தெரிய வேண்டுமாம். ஆக சமஸ்கிருதம், இந்தி தெரியாதவர்களுக்கு இராணுவத்தில் இடம் இல்லை என்பது இதன் மூலம் விளங்கி விட்டதா இல்லையா?
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஒரு கால கட்டத்தில் இருந்ததை இங்கு நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகும்.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் தந்தை பெரியார் குரல் கொடுக்க, அன்றைய நீதிக்கட்சியைச் சார்ந்த முதல் அமைச்சர் பனகல் அரசர் தான் அந்தத் தடையை உடைத்தெறிந்தார்.
இந்திய இராணுவத்தில் இந்தி, சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் பணியாற்றுகிறார்களா? இவ்விரு மொழிகளையும் தெரியாதவர்களுக்கு மத போதனை தேவையில்லை என்று அரசு முடிவுக்கு வந்துவிட்டதா?
இன்னொன்று, இந்து மதம் என்றால் பார்ப்பனர்கள் மட்டும்தான் ஏகக் குத்தகைக்காரர்களா?
இந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் என்கிறார்களே, அந்த இந்து ராஜ்ஜியம் எப்படி இருக்கும் என்பதை இதன் மூலம் அறியலாமே -  இராணுவத்தினருக்கு விஞ்ஞான சிந்தனைகள், பகுத்தறிவு மனப்பான்மையை ஊட்டுவதற்கு ஏற்பாடு  இல்லாதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவார்களா? எங்கே பார்ப்போம்!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: