Total Pageviews

Saturday, November 21, 2015

சுடர்மிகு சுயமரியாதை இயக்கம்!


சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டது என்றாலும் - தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் கணித்தாரே - கட்டுரை வடித்தாரே அதுதான் உண்மை.
ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக் கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்ன? அஃதுஅக உணர்வு வளர்ந்து செல்லும் பேறு; இப்பேறு பலருக்கு வாய்ப்பதில்லை; மிகச் சிலர்க்கே வாய்க்கும். இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில் இதுகாறும் செய்த ஆராய்ச்சி களுள் அகப்படாத பல பெரியார் கருத்துகளும், அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கையறிவில் உதித்திடக் காண்கிறோம். தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன் இது பெரியாருக்குத்தான் பொருந்தும் என் றாரே தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார்.
ஆம், அந்த இயற்கைக் கூறுதான் தந்தை பெரி யாரை சுயமரியாதை இயக்கத்தை முகிழ்க்கச் செய்தது.
காங்கிரசில் இருந்தபோதும் சரி, அதிலிருந்து அவர்கள் தன்னைத் தானே விடுதலை செய்து கொண்ட போதும் சரி, நீதிக்கட்சியின் செவிலித் தாயாக இருந்தபோது வெளியிலிருந்து ஊட்டி வளர்த்தபோதும் சரி. திராவிடர் கழகத்தைச் தோற்றுவித்து இறுதி மூச்சு அடங்கும் வரை இனமானம், மொழி மானம், தன்மானம், உலக அபிமானம், பாலியல் நீதி, மனிதநேயம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சரி, அதற்கு அவர் களிடம் வேராக, அடிநாதமாக இருந்ததே அந்தச் சுயமரியாதை உணர்வுதான் சுயமரியாதை இயக்கம் என்ற சொல்லாக்கத்தை அவர்கள் தேர்ந்தெடுத்ததுபற்றிக் கூறுகிறார். இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டுவந்து போட்டு,ஏடு ஏடாகப் புரட்டிப் பார்த்தாலும் அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டு பிடிக்க முடியாது (குடிஅரசு 1.6.1930). என்று தந்தை பெரியார் எழுதியுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
வெட்கத்தையும், ரோஷத்தையும் உண்டாக்குவதே சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் என்றும், மானமும், அறிவும் மனிதர்க்கழகு என்றும் இரத்தினச் சுருக்கமாக திருக்குறள் போல தம் இயக்கக் கருத்தினை தந்தை பெரியார் எடுத்துக் கூறி  வந்திருக்கிறார்கள்.
செங்கற்பட்டில் 1929 பிப்ரவரியில் நடத்தப்பட்ட முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டின் திரட்சிகளைப் பார்த்தால், அனேகமாக தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைத் தத்துவத்தின் சூள் என்பது என்னவென்று புரியும்.
அம்மாநாட்டிற்கு உணவு சமைப்பவர்கள் விருது நகர் நாடார்கள் என்றும், அச்சாப்பாட்டை எல்லோரும் சேர்ந்து உண்ண உடன்படுவோரே மாநாட்டுப் பிரதிநிதி களாக வரலாம் என்றும் அறிவிப்புக் கொடுக்கப்பட்டது சாதாரணமா! அந்தக் கால கட்டத்தில் சமுதாய அமைப்பு எந்த நிலையில் இருந்தது என்பதையும், அதன் முதுகெலும்பை முறிக்கும் வகையில் வார்த்தைகளால் அல்ல, செயல்முறையால் நடத்திக் காட்டியது சுயமரி யாதை இயக்கமும் - அதன் தத்துவச் சூரியனாகிய தந்தை பெரியாருமே!
தனிப்பட்ட ஸ்திரிகளும், தங்களை வித வைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வர வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறோம் என்று குடிஅரசு அம்மாநாட்டுக்குக் கொடுத்த அழைப்பிற்கு மேலாக அந்தக் கால கட்டத்தில் சிந்தித்தவர்கள் யார், யார்?  அம்மாநாட்டில் தான் பெயர்களுக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த ஜாதிப் பட்டத்தைத் துறக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. வெறும் வார்த்தை வடிவத்தில் மட்டுமல்ல - அம்மாநாட்டிலேயே மாநாட் டின் தலைவர் சவுந்தரபாண்டியன்  பெயரில் ஒட்டிக் கொண்டிருந்த நாடாரை இன்று முதல் வெட்டி எறிகிறேன்  - சிவகங்கை இராமச்சந்திரனார் பெயரில் ஒட்டிக் கொண்டிருந்த சேர்வைப் பட்டத்தை  தூக்கி எறிகிறேன் என்றனரே! இன்று தமிழ்நாட்டில் பெயருக் குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதற்கு வெட்கப் படும் சூழலை ஏற்படுத்தியது சுயமரியாதை இயக்கம் தானே! பொதுவுடைமைக் கட்சி முன்னணித் தலைவர்களே கூட தங்கள் பெயருக்குப் பின்னால் நெளியும் ஜாதி வாலை வெட்டி எறிய முடியவில்லை என்பதிலிருந்தே சுயமரியாதை இயக்கத்தின் அந்தப் பிரகாசமான வெற்றியின் உன்னதம் எத்தகையது என்பது விளங்குமே!
வருணப் பேதத்தை ஒழிப்பதோடு சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடு முடங்கிப் போய் விட வில்லை. வர்க்கப் பேதத்தையும் தந்தை பெரியார் எந்தக் கண் கொண்டு நோக்கினார் என்பது கவனிக்கத் தக்கது.
பணக்கார்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழு வதையும், தங்களது சுகபோக வாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்னலம் இருக்கிற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும் என்று ஈரோட்டில் 1930ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாட்டின் உரையில் தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளாரே!
சுருக்கமாகச் சொல்லப் போனால் சாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அது அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தி யும், சுகமும் கிடையாது. அந்த நிலையை அடைந்து தான் ஆக வேண்டும்; அதுவே என் கொள்கை என்று ரத்தினச் சுருக்கமாக தந்தை பெரியார் கூறியதையும் (குடிஅரசு 10.5.1936) கருத்தில் கொண்டால் சுயமரியாதை இயக்கத்தின் பரந்து விரிந்த தத்துவத்தின் மேன்மை யைப் புரிந்து கொள்ளலாம்.
அவ்வியக்கத்தின் 90ஆம் ஆண்டில் அக் கொள் கைகளை மேலும் வேகமாக விவேகமாக எடுத்துச் செல்ல உறுதி கொள்வோம்! வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை!!
ஆசிரியர்,
விடுதலை
சென்னை     21.11.2015

0 comments: