Tuesday, November 10, 2015

‘கிருஷ்ண பரமாத்மா’ எங்கே போனான்?



இந்த நாளில் தீபாவளியைக் கொண்டாடினால் தீமைகள் அகன்று நன்மைகள் ஒளி விடுமாம் - அது தான் தீபாவளியாம்; பார்ப்பன ஏடுகளும், சங்கராச் சாரியார்களும் இப்படித்தான் கூறுகிறார்கள்.
நரகாசூரன்வதம் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி இப்படி ‘திருவாய்’(?) அருளுவதுதான் படு நகைச்சுவை.
அசுரன் - நரகன் அழிக்கப்படுகிறான் - பகவான் கிருஷ்ணனும், சத்தியபாமாவும் அசுரனை அழித்த நாள்தான் தீபாவளியென்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளலாம்.
அசுரன் என்பவன் யார் என்று வரலாறு கூறுவது ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் சொல்லுவது போல தீமையின் உருவம்தான் அசுரன் - நரகாசுரன் என்றால் அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கத்தக்க சகல ‘தகுதிகளையும்’ உடையவர் சாட்சாத் இந்த ஜெயேந்திர சரஸ்வதிதானே.
எதற்காக இவர் வேலூர் சிறைச்சாலையில் கம்பியை எண்ணினார்? விடுதலைப் போரில் ஈடுபட்டா? தீண்டாமையை ஒழிக்க மறியலில் பங்கு கொண்டா? சமூக நீதிக்கான களத்தில் காலூன்றி நின்றா?
பட்டப் பகலில் காஞ்சிபுரம் வரதராசன் கோயிலில், அக்கோயில் மேலாளரான சங்கரராமன் என்பவர் படுகொலை செய்யப்பட்டதில், காஞ்சி சங்கராச்சாரியாருக்கு முக்கியப் பங்குண்டு என்ற அடிப்படையில்தானே அவர் கைது செய்யப்பட்டார் - அதுவும் ஒரு தீபாவளி நாளில்தானே நடந்தது? (மிகவும் பொருத்தம்தான் - அசுரனை வதம் செய்வதுதானே தீபாவளியின் தத்துவம்)
நீதிமன்றத்தில் விடுதலை பெற்று விட்டதாலேயே அவர் குற்றமற்றவர் என்று கருதிவிட முடியாது. நம் நாட்டு வழக்கு முறையிலும், நடைமுறையிலும் உண்மைக் குற்றவாளிகள் தப்புவதற்கு ஏராளமான சந்து பெந்துகள் இருக்கத் தான் செய்கின்றன.
அனுராதா ரமணன் என்ற பார்ப்பன பெண் எழுத்தாளர் இந்த ஜெயேந்திர சரஸ்வதியை பற்றி என்ன சொன்னார்? கண்ணீரும் கம்பலையுமாக அவர் தெரிவித்த தகவல்களைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பவில்லையா?
காஞ்சி சங்கர மடத்துக்கு வரச் சொல்லி, ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க இருப்பதாகவும், அதில் அந்த அம்மையார் பொறுப்பேற்றுப் பணியாற்ற வேண்டும் என்று கூறியதாகவும், அது சம்பந்தமாக மற்றொரு நாள் ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்தபோது ‘என் கையைப் பிடித்து இழுத்தார்’ என்று சொன் னதையும்விட இந்த சங்கராச்சாரியாருக்கு வேறு அசிங்கம் என்ன வேண்டும்?
இந்த பெரிய(?) மனிதர்கள் - ஜெகத் குரு என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் - கொலை வழக்கில் சிறை சென்றிருந்தாலும், கொஞ் சமும் விட்டுக் கொடுக்காமல் ‘பெரியவாள்’, ‘பெரிய வாள்’ என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்களே - இதனைப் பொது மக்கள் குறிப்பாகப் பார்ப்பனர் அல்லாதார் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இந்தத் தகுதியில் உள்ளவர்தான் அசுரன் என்றும், ராட்சதன் என்றும் நம் மக்களை இழித்துப் பேசுவதைக் கவனிக்க வேண்டும். யார் அசுரன் என்பதை அவர்கள் கூறும் அளவுகோலின்படி எடை போட்டுப் பார்க்கட்டும்.
இந்தத் தீபாவளியைப் பொறுத்தவரை கடுமழை காரணமாக குறிப்பாக கடலூர் மாவட்ட மக்கள் எத்தகைய துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்! மழை வெள்ளத்தால் பத்து பேருக்குமேல் அடித்துச் செல்லப் பட்டுள்ளார்கள் என்ற செய்தி நம் நெஞ்சங்களை ஊடுருவித் தாக்குகின்றன.
அந்த மக்களை கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றவில்லையே!. கிருஷ்ண பரமாத்மா - அடுத்தவர்களைக் கொல்லுவதற்கும், சண்டை போட்டு உற்றார் உறவினர்களை சாகடிப்பதற்காகவும் தூண்டுவதற்காகவும் தான்  இருக்கின்றானா?
விஷ்ணு என்ற இந்து மதக் கடவுள் எடுத்த அவதாரங்கள் எல்லாம் எதிரிகளை (அதாவது அசுரர்களாகிய திராவிடர்களை) அழிக்கத்தானா? கடவுளுக்கு இதுதான் வேலையா? இதில் என்ன நகைச்சுவை என்றால் இந்த விஷ்ணுதான் காத்தல் கடவுளாம். அழிக்கும் கடவுளான சிவன் செய்ய வேண்டிய வேலையை இந்தக் காத்தல் கடவுள் செய்வானேன்? என்று கேள்வி கேட்டால், அதனை விதண்டாவாதம் என்று ஒரே வரியில் பதில் சொல்லி சமாளிக்கப் பார்ப்பார்கள்.
நரகாசுரன் கதை அறிவுக்குப் பொருத்தமற்றது என்றாலும், ஆரியர் - திராவிடர் போராட்டத்தை மய்யப் புள்ளியாக வைத்துப் பின்னப்பட்டது என்பதைத் திராவிடர் பெருங்குடி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன இழிவை ஒழிப்பதே நமக்குத் தூய ரத்தம் ஓடுகிறது என்பதற்கு அடையாளம், தீபாவளி நாளில் நாமும் இந்த வகையில் சிந்திப்போம்!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...