Total Pageviews

Friday, November 27, 2015

“சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிட இயக்கம் என்ற நூற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்டது சிவகங்கை’’சிவகங்கை 27 கழகத்தின் சார்பில் நாடு முழுவதும் நடைபெறும் தெருமுனை  பகுத்தறிவு பரப்புரை தொடர் பயணத்தின் இரண்டாம் குழு நிறைவு விழா மற்றும் 370ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு 26.11.2015 அன்று சிவகங்கை நகரில் சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் உ.சுப்பையா தலைமை வகித்திட நகர தலைவர் அ.மகேந்திரராசன் வரவேற்புரையாற்றி னார்.  மாநில வழக்குரைஞரணிச் செயலாளர் வழக்கு ரைஞர் ச.இன்பலாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, மண்டல செயலாளர் வேம்பத்தூர் ஜெயராமன், மாவட்டச் செயலாளர் ஜெ.தனபாலன, பொதுக்குழு உறுப்பினர் மணிமேகலை சுப்பையா, மாவட்ட அமைப்பாளர் சி.ச.கருப்பையா,மண்டல இளைஞர் அணி செயலாளர் காளாப்பூர் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் ஜாதி ஒழிப்பு வீரர் ஜெயராமன் நினைவு கம்பத்தில்  கழக கொடியினை மொழிக்காவலர் தூதை கணேசன் ஏற்றி வைத்தார்.
தொடக்கத்தில் தலைமை கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.அவர் தமது உரையில்:_
நீண்ட இடைவெளிக்கு பின் சிவகங்கை நகருக்கு வந்துள்ளேன். இடையிடையே  தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வந்திருப்போம் என்றாலும் இன்றைக்கு சுயமரியாதை இயக்கத்திற்கு 100 ஆண்டுகள் ஆக போகிறது என்ற நிலையில் இந்த இயக்கத்தின் சேவைகளில் சிவகங்கை நகருக்கு பெரும் பங்கு உண்டு என்ற அடிப்படையில் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி அதனை தொடர்ந்து திராவிட இயக்கம் என்று பாரம்பரியமாக தனிப்பெருமை கொண்ட நகரம் சிவகங்கை ஆகும்.
அய்யா இராமச் சந்திரனார், அவரை தொடர்ந்து இராம.சுப்பிரமணியம், நீதிபதி சத்தியேந்திரன், அய்யா சண்முகநாதன் என்று தொடர்ந்து இந்த பகுதிகளில் மக்களுக்கு பல்வேறு வகையில் சமூக சேவை செய்தவர்கள். சர்வீஸ் கமிசன் துறையில் எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியவர்கள் ஆவார்கள். இங்கே இந்த கருத்துக்கள் அடங்கிய நூல்கள் மலிவு விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கி படித்து வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் படிக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் துறவிகளுக்கு மேலானவர்கள் என்று அய்யா பெரியார் சொன்னார்கள். ஏன் என்றால் துறவிகளுக்கு கூட கீழ் லோகம், மேல்லோகம் என்று சில பற்றுகள் இருக்கும். அதையும் தவிர்ப்பவர்கள் எங்கள் தொண்டர்கள் என்ற அடிப்படையில் அதை சொன்னார்கள்.திராவிட இயக்கம் அறிவுலகம் நோக்கி சிந்திக்க வைக்கின்ற இயக்கமாகும்.
செவ்வாய் மண்டலத்தில் இறங்கி  ஆராய்ச்சி நடத்தும் காலம் வந்து விட்டது. ஆனால் நம் நாட்டில் இன்னும் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு பெண்களுக்கு திருமணம் செய்வதில் தடையாக உள்ளது. இன்றைக்கு  மிகப்பெரிய மாற்றத்திற்கு வந்து விட்டோம். உடை, கல்வி என்று அனைத்தும் மாறி விட்டது. பச்சை தமிழர் காமராசர் அவர்களை வைத்துக்கொண்டு குலக்கல்வி திட்டத்தை குழி தோண்டி புதைத்து விட்டோம்.
இன்றைக்கு உடல் உறுப்பு தானம் என்பது மிகப் பெரிய அளவிற்கு விழிப்புணர்வு வந்து விட்டது. அதற்கெல்லாம் முன்னோடியாக தந்தை பெரியார் அவர்கள்தான் தமிழனுக்கு முதுகெலும்பை தானமாக தந்தவர். எதற்கெடுத்தாலும்  காலில் விழுகிறான். 
மந்திரியாக இருந்தவர்களும்சரி மந்திரியாக ஆக வேண்டும் என்று நினைப்பவனும் சரி.கால் எதற்கு இருக்கிறது நடப்பதற்கல்லவா? சிந்திக்க வேண்டும். இத்தனை கோயில்கள் இருக்கிறதே அத்தனையும்  தமிழன் கட்டிய கோயில்கள் ஒரு கோயிலாவது பார்ப்பான் கட்டி யிருப்பானா? கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போல நாம் கட்டிய கோயிலில் பார்ப்பான் குடிகொண்டு நம்மை உள்ளே விட அனுமதிக்க வில்லையே?
இந்த நிலை மாறத்தான் கலைஞர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வருவதற்கு சட்டம் கொண்டு வந்தார். இது போன்ற நிலைகளை கொண்டு வர தந்தை பெரியாரால் மட்டும் தான் முடிந்தது. மறுக்க முடியுமா?மாட்டு மூத்திரத்தை குடிக்க வச்சுட்டானே பார்ப்பான். 
அதுவும் அய்.ஏ.எஸ்.அய்.பி.எஸ், நீதிபதி என்று வித்தியாசமில்லாமல் அவ்வளவு பேரும் வரிசையில் நின்னு வாங்கி குடிக்கிறார்களே! பஞ்ச கவ்யம் என்பது என்ன சந்திர மண்டல மிக்சரா?இவ்வளவு நாகரிகம் வளர்ந்த காலத்தில் நரபலி கொடுக்கிறானே? அப்படியென்றால் இந்த நாட்டில் பகுத்தறிவு இயக்கத் திற்கு இன்னும் எவ்வளவு தேவை இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்
ஒரு முறை தி.மு.க. அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்களை மேடையில் பக்கத்தில் வைத்துக்கொண்டு அய்யா பெரியார் அவர்கள் சொன்னார்கள். என்னதான் மந்திரி ஆனாலும் எனக்கும் மன்னை நாராயணசாமிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். நான் வெறும் சூத்திரன். இவர் மாண்புமிகு சூத்திரன் அவ்வளவுதான் என்று சொன்னார்கள். எட்டு வயது பாப்பார பையன் என்பது வயதான நமது மிராசுதாரை பேரைச் சொல்லி அழைக்கும் காலம் ஒரு காலம்! பஞ்சமன், பறையன் என்ற பெயரை மாற்றிய இயக்கம் திராவிட இயக்கம்.  பழைய நிலைகளை மீண்டும் கொண்டு வரத்தான் மத்தியில் உள்ள ஆட்சி யாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைகளில் இருந்து நாங்கள் சொல்வதை நன்றாக சிந்தித்து பாருங்கள் என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர்.

இந்த நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தென் மாவட்ட அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தி.எடிசன் ராசா, காரைக்குடி மாவட்ட கழக தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட கழக செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட துணை செயலாளர் இரா.பெரியார் குணாஹாசன், 
சிவகங்கை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் திருமலை ஆ.முத்துராமலிங்கம், மாவட்டதி.மு.க. மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், சிவகங்கை நகரமன்ற தலைவர் அர்ச்சுனன், தி.மு.க.நிர்வாகி ஜெயக் குமார்,  மதுரை மண்டலச் செயலாளர் மா.பவுன்ராசா, மதுரை மாவட்டச் செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை நா.முருகேசன், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மண்டபம் முருகேசன்,மந்திரமா?தந்திரமா நிகழ்ச்சியாளர் பழனி அழகிரிசாமி,சிவகங்கை நகர செயலாளர் புகழேந்தி, காரைக்குடி நகர தலைவர் ந.செகதீசன், தேவகோட்டை ஒன்றிய தலைவர் கொ.மணிவண்ணன், வையகளத்தூர் ஆ.தங்கராசன், நாட்டரசன்கோட்டை முரளிதரன் நகர இளைஞர் அணி தலைவர் சிவகங்கை அ.நேரு மற்றும் த.மு.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: