Saturday, November 28, 2015

தென் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதி அடையாளமா? கண்டிக்கத்தக்கது!

தென் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்களிடையே  ஜாதி அடையாளமா? கண்டிக்கத்தக்கது!
கண்காணிப்புக் குழுவை அமைத்து திராவிடர் கழகம் களத்தில் இறங்கி செயல்படும்

தமிழர்  தலைவரின் காலங் கருதிய அறிக்கை


தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல் வேலியில் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர் களைப்  பிரித்து அடையாளப்படுத்துவதற்காக  ஜாதி அடையாளம் காட்டும் சின்னங்களோடு பள்ளிக்கு வரச் செய்வது கண்டிக்கத்தக்கது. திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, கண்காணித்து உரிய செயல்களில் கழகம் ஈடுபடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சில தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் - ஜாதி வெறி நோயால் பீடிக்கப் பெற்ற தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் சிலர், ஜாதியை அடையாளம் காண (குறிப்பாக தாழ்த்தப்பட்டோரை) கையில் குறிப்பிட்ட வண்ணத்தில் கயிறு கட்ட வற் புறுத்தப்பட்டுள்ளது. அவர்களை எதிரிகள் போல் கருதுவது பைத்தியக்காரத்தனமானது; கண்டனத்திற் குரியது. பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த சிலர் பார்ப்பனிய நச்சுத் தொத்து காரணமாக இப்படி நடப்பதாக அறிந்த போதெல்லாம் பகுத்தறிவாளர்களும், முற்போக்கா ளர்களும் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். அதன் காரணமாக இந்த நோய் மேலும் பரவாமல் ஆங்காங்கு துடைத் தெறியப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ஜாதிப் பாம்பு!
நெல்லை மாவட்டத்தில் கோபாலபுரம் பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூக மாணவச் செல்வங்களை அடையாளப் படுத்த  தனி உடை அணிந்து வரச் சொல்லும் நிலை உள்ளது என்ற புகார் எழுந்ததன் காரணமாக, பள்ளிக் கல்விச் செயலாளர் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதன் காரணமாக நிலைமை மாற்றம் அடைந்துள்ளது! மாவட்ட ஆட்சியரைப் பாராட்டுகிறோம். ஆற்றல் மிகு தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் அம்மையார் அவர் களும் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். தேனி மாவட்டத்திலும் இந்த நோய் பரவி வருவதை அறிகிறோம். இது தொடர்பாக கல்வித் துறைச் செயலாளருக் கும் கழகத்தின் சார்பில் இன்று ஒரு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. பள்ளியில் சீருடை அணிந்து மாணவ  - மாணவிகளை வரச் சொல்வதன் தத்துவம் என்ன? ஏழை, பணக்காரர், இல்லாதோர், இருப்போர் என்ற பிரிவுகூட பள்ளியில் மாணவச் செல்வங்களிடையே தலை நீட்டக் கூடாது என்பதால் தானே!
அப்படி இருக்கையில், இந்த பகுத்தறிவு பூமியில் - பெரியார் மண்ணில் - இப்படி ஒரு அவலம் - அசிங்கம் அரங்கேற்றம் என்றால் இதைவிட வெட்கித் தலைகுனியும் நிலை வேறு உண்டா?
திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு...
தென் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத்தவர் இதற்கென ஒரு தனி கண்காணிப்புக் குழுவைப் போட்டு, உளவுத் துறைபோல ஆய்ந்தறிந்து தலைமைக் கழகத்திற்கும், கழகத்தின் வழக்குரைஞரணிக்கும் உடனடியாக அறிவிக்க வேண்டுகிறோம்.
இதேபோல கவுரவக் கொலை என்ற காட்டுமிராண்டிச் செயல் நடந்தால், நமது இயக்கக் குழுக்கள் சரியான தகவல்களைச் சேகரித்து தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
மேற்கொண்டு, நேரடி நடவடிக்கையோ, சட்டப் பரிகார நடவடிக்கையோ, அறப் போராட்டமோ எதுவென முடிவு செய்து செயலில் இறங்குவது திராவிடர் கழகத்தின் 2016ஆம் ஆண்டு முக்கிய பணியாகவே தொடரும்!
கழகத்தில் தனி அணி!
இதற்கென வெளிப்படையான பெரியார் தொண்டர் அணி - தனியே பணியாற்றும்; 30 வயதுக்குட்பட்ட  விருப்பமுள்ள இளைஞர்களே முன் வருக. அதில் பங்கும் பயிற்சியும் பெறுக.
கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்
சென்னை
28-11-2015
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...