Total Pageviews

Monday, November 16, 2015

மழை வெள்ளம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்? காட்சி நடத்தக் கூடாது, ஆட்சி நடத்த வேண்டும்  • உதவி கோராமலேயே முன்வந்து மத்திய அரசு உதவ வேண்டாமா?
  • மாநில அரசு உதவி கோரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழ்நாடு வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது; முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்காதது பெரிய குறைபாடாகும். மத்திய அரசு இதுவரை எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. கேட்டால் மாநில அரசு உதவி கோரவில்லை என்று கூறப்படுகிறது - மாநில அரசு ஏன் கோரிக்கை வைக்கவில்லை - காட்சி நடக்கிறதே தவிர - இங்கு ஆட்சி நடக்கவில்லை என்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை நாட்டை தண்ணீர் வெள்ளக்காடு தேசமாக ஆக்கி வருகிறது! இன்னமும் தொடர்ந்து 3 நாள்களுக்கு மேல் மழை  நீடிக்கும் என்று வானிலை ஆய்வு தெரிவிக்கிறது. ஏற்பட்டுள்ள மனிதர்களின் சாவு, கால்நடைகளின் இழப்பு, தங்களின் பயிர் நாசம் என்ற ஏழை, எளிய விவசாயிகளின் வேதனை விசும்பல், வீட்டினை ஆக்கிரமித்த வெள்ளத்தால் வெளியேறிய மக்களின் பசி கூக்குரல்  கழிவு நீர் கலப்பு, அதன் காரணமாக மக்களுக்குப் பரவலாக ஏற்படும் தொற்று நோய்களும், உயிர்க் கொல்லிகளும் ஒரு தொடர் அவலமாகி வருகிறது!
பலத்த மழை வரப் போகிறது என்று வானிலை அறிவிப் பாளர்களால் முன்பே அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, தமிழக ஆட்சி என்ன செய்திருக்க வேண்டும்?
முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லையே ஏன்?
முன்னெச்சரிக்கையாக, பல தடுப்பு மற்றும் அதனை எதிர் கொள்ளும் ஆயத்தங்கள் - இவைகளைச் செய்திருக்க வேண்டாமா?
இறந்த பிறகு நட்ட ஈடு போல இழப்பீடு  தொகை அறிவிப்பது தானா முதல் அமைச்சரின் முக்கிய பணி?
எந்த அதிகாரியும் எங்களை வந்து சந்தித்து எந்த நிவாரணப் பணியும் செய்யவில்லை என்று தொலைக் காட்சி முன், எளிய பெண்கள் கதறி குமுறி அழுது கொண்டே சொல்வதையெல்லாம் ஆட்சியாளர் பார்க் கிறார்களா? என்று தெரியவில்லை.
அதிகாரிகள் குழுக்களை அனுப்பியிருக்கிறோம் என்பது போதிய பரிகார நடவடிக்கை ஆக ஆகி விட முடியாது.
முதல் பாதிப்புக் கடலோரப் பகுதிகளே!
பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஓர் உண்மை; கடலோர மாவட்டங்களில்தான் முதல் இயற்கை - கடல் சீற்றம் - தாழ்வு அழுத்த மண்டலம் உருவாகி, பெரு மழை, புயலாக மாறும் நிலை ஏற்படும் என்பதால், அங்கு வருமுன்னர் காக்கும் தகுந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டாமா?
அரசின் வேகம், துயர் துடைப்பு நடவடிக்கைகள் போதாது; மேலும் தீவிரமாக முடுக்கிவிடப்பட வேண்டும்.
அவசரக் கதியில் திறப்பு விழாக்கள்
மக்களைச் சந்தித்து ஆறுதல் கூற வேண்டிய ஆட்சித் தலைமை, வெறும் காணொலிக் காட்சியில் (தேர்தலை உத்தேசித்து) அவசர கதியில் திறப்பு விழாக்களை நடத்துவதால் மக்களின் அவநம்பிக்கையைப் போக்கிவிட முடியாது.
பாதிக்கப்பட்ட மக்கள் தேர்தல் நேரத்தில், நிவாரண நிதி என்று அரசு செலவிலேயே (முன்பு ஒரு முறை நடை பெற்றது. வீடு வீடாக, தலைக்கு ரூ.ஆயிரம், அய்நூறு கணக்கிட்டு கொடுத்து வாக்கு வங்கிபோல அதனை மாற்றிடச் செய்த முயற்சிபோல்)  மழையே நமக்கு உதவி யுள்ளது என்று கணக்குப் போட்டால், அது நிச்சயம் தப்புக் கணக்காகி  விடுவது உறுதி!
அரசு உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேவை அமைச்சர்கள் - சந்திப்பல்ல; நிவாரணம் - மருத்துவ உதவிகள், பசி போக்கும் உணவு ஏற்பாடுகள்.
வெள்ளம் பாதித்த பகுதி மக்களை அரசு அமைப்புகளே வெளியே அழைத்து வந்து தங்க வைத்து, உணவு, உடை அளித்து  பராமரிக்கும் ஏற்பாட்டினை - மிகுந்த பயனுறு வகையில் (effective way)  செய்ததாகத் தெரியவில்லை.
மழை நீரைச் சேகரிக்கும்  தொலைநோக்குத் திட்டம் இல்லை
மழை நீர் மூலம் ஏரி, குளங்கள், நிரம்புவது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், அவைகளைச் சேமிக்கப் போதிய தடுப்பணைகளை, நீர்த் தேக்கங்களை உருவாக்கிடும் தொலைநோக்குப் பார்வையும் திட்டங்களும் தமிழக அரசுக்குத் தேவை.
இப்படி மழை நீர் தேங்கி ஆங்காங்கே வெள்ளக்காடு ஏற்படுவதற்கு என்ன காரணம்? என்ன மூல காரணம்?
ஏரி, குளங்கள் எல்லாம் காணாமற் போய் கட்டடங் களாகி, மவுலிவாக்கங்களாக்கப் படும் நிலையால்தானே!
தூர்வாருதலை முன்பே செய்திருக்க வேண்டாமா? விவசாயப் பணிகள் தொடங்கு முன்னரே தொடங்கியிருக்க வேண்டாமா?
நிதிச் செலவு கணக்கு எப்படியோ ஒதுக்கப்பட்ட தொகைக்கு வந்து விடும்; ஏற்படும் உருப்படியான பலன் - விளைவுகள் ஏற்பட்டதா என்று தெரிந்து கொள்ள வேண்டாமா! முக்கியமாக வாக்காளர்கள்.
காட்சி நடத்தக் கூடாது
காட்சி நடத்தக் கூடாது; ஆட்சி நடத்த வேண்டும்; முதல் அமைச்சர் இதுவரை குறைந்தபட்சம் ஹெலிகாப்டர் மூலம் கூடச் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடக்கூடச் செல்லவில்லையே என்று மக்களின் ஆதங்கம் நியாயமானதல்லவா? முதல் அமைச்சர் அப்படி அக்கறை காட்டும்போது ஆட்சி எந்திரங்களும் அதிக வேகத்தோடு செயல்படும் அல்லவா!
எது நடந்தால் என்ன - கடைசி ஒரு வாரத்தில் தேர்தலில் வெற்றி பெறும் கலைபற்றி அறிந்துள்ளோம் என்ற நம்பிக்கை கை கொடுக்காது, நிச்சயம் இம்முறை கை கொடுக்காது; எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையற்ற நிலை ஒரு வேளை உதவிடும் என்ற நம்பிக்கைதான் இனி  ஒரு நம்பிக்கை போலும்! மத்திய அரசு கடமை
மத்திய அரசு எவரையும் அனுப்பவும் இல்லை. மத்திய இணையமைச்சர் திரு. பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் எங்களிடம் உதவி கோரவில்லை மாநில அரசு என்று கூறுகிறார்.
உதவி கோரினால்தான் உதவுவது என்பது மத்திய அரசுக்கு சரிதானா?
மக்கள் அவலத்தை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
மாநில அரசு எந்த உதவியும் கேட்கவில்லை என்ற புகாருக்கு தமிழக அரசின் பதில் என்ன?
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு  - மக்களுக்கோ?...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மட்டும் மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு என்பதே வேறு எந்த மாநிலத் திலாவது நடைபெற்றுள்ளதா? மாநில உரிமைகளுக்கு இதைவிடப் பெருத்த அவமானம் தரும் கேள்விக்குறி வேறு உண்டா?
என்ன விநோதம் பாரு; எவ்வளவு ஜோக்குப் பாரு என்றுதான் கூறத் தோன்றுகிறது!
நீதிபதிகள் பாதுகாப்புக்கு இப்படி ஏற்பாடு என்றால் மக்கள் - வரிப்பணம் செலுத்தும் தமிழக மக்கள் பாதுகாப்பு...? இந்த கேள்வி மிகவும் சிக்கலானது அல்லவா? அந்தோ தாழ்ந்த தமிழகமே! உன் நிலை இப்படியா?


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
16-11-2015

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: