Monday, November 16, 2015

இலண்டன் ஆர்ப்பாட்டம் எதைக் காட்டுகிறது?


இந்தியத் துணைக் கண்டத்தின் பிரதமர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்ததுண்டு. அப்பொழுதெல்லாம் பெருமை மிக்க வரவேற்புகள் அவர்களுக்குக் கிடைக்கும். உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. அத்தகைய ஒரு பெரிய நாட்டின் பிரதமர் ஒரு நாட்டுக்கு வருகிறார் என்றால், அது பெரிய அளவில்தான் இருக்கும், மிக முக்கிய நிகழ்ச்சியாகவும் கருதப்படும்.
அந்த நிலை அந்தப் பெருமை இப்பொழுதுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளதா என்றால்  கிடைக்க விட்டாலும் பரவாயில்லை; அதன் எதிர் நிலையல்லவா வெடித்திருக்கிறது.
குஜராத் முதல் அமைச்சராக இருந்த அவர் அமெரிக்கா, இங்கிலாந்து செல்ல முயற்சித்தபோது அந்நாடுகள் அவருக்கு விசா வழங்கக்கூட முன் வரவில்லை, காரணம் மோடி முன்னின்று நடத்திய குஜராத் இனப்படுகொலையே!
இப்பொழுதோ பிரதமர் வெளிநாட்டுப் பயணம், பிரதமர் பதவிக்கான சிறந்த அணிகலன் என்று கருதி), அந்த வேலையை மட்டும் இதுவரை வந்துள்ள எந்த இந்தியப் பிரதமரும் இவருக்கு ஈடு இணையில்லை என்று சொல்லும் அளவுக்கு உலகம் சுற்றிய வாலிபனாக உலகப் பந்தைச் சுற்றி வருகிறார்.
இவர் செல்லுவதற்கு முன்பே, இந்தியாவிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் அந்த நாடுகளுக்குச் சென்று, மோடிக்கு வரவேற்பு கொடுப்பது, மக்கள் பெரிய அளவு திரள்வது என்ற நாடகங்களை நடத்துவதும் உண்டு.
இவற்றையும் கடந்து மோடி வருகிறார் என்றால் மனித உரிமை ஆர்வலர்களும், மதச் சார்பின்மைக் கொள்கையாளர்களும் அவரை எதிர்த்து ஆர்ப்பாட் டமும் நடத்துகிறார்கள். லண்டன் மாநகர மேயரின் தலைமையிலேயே கண்டன ஆர்ப்பாட்டம் என்றால் பார்த்துக் கொள் ளலாமே!
லண்டன் வாழ் தமிழர்கள், சீக்கியர்கள் சிறு பான்மையினர், நேபாள மக்கள், பெண்கள் என்று அணித் திரண்டு ரத்தக் கறை படிந்த மோடியே திரும்பிப் போ! திரும்பிப் போ! என்று முழக்க மிட்டுள்ளனர்.
ரத்தக் கறை படிந்த மோடியின் கைகளை இங்கி லாந்து பிரதமர் குலுக்கலாமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். மோடிக்கு எதிராகக் கிளம்பியுள்ள இந்தக் கடும் எதிர்ப்பைக் கண்டு குஜராத் இந்து அமைப்பினர் (அழைத்தவர்களே) அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
மோடி பிரதமராக ஆனது இந்திய மக்களுக்கு எந்த வகையிலும் பெருமை அளிக்கக் கூடியதாக இல்லை என்பது இதன் மூலமாகத் தெரிந்து விட்டது.
என்னதான் முதலாளித்துவ ஊடகங்களும், பார்ப்பன ஊடகங்களும் மூடி மறைத்தாலும், நரேந்திர மோடி என்றால் குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக் கான மக்கள் படுகொலைக்குக் காரணமானவர் நரேந்திர மோடிதான் என்ற அசைக்க முடியாத கருத்தும், எண்ணமும், பிற நாடுகளில் மிக ஆழமாகவே வேரூன்றிப் போய் விட்ட, மறுக்கவே முடியாத கெட்டியான மிகப் பெரிய உண்மையாகும்.
மத்தியில் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பேயி இருந்த நிலையில் அவருக்கே மோடி மீது அத்தகைய அதிருப்தி இருந்தது. மோடி குஜராத் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயின் முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டவரே அத்வானிதான் (இப்பொழுது மோடியை எதிர்க்கிறார் என்பது வேறுவிடயம்).
குஜராத் படுகொலையைத் தொடர்ந்து நான் எந்த முகத்தோடு வெளிநாடுகளுக்குச் செல்லுவேன்? என்று வெளிப்படையாக பிரதமர் வாஜ்பேய் புலம்பவில் லையா? மோடி ராஜ தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்று இடித்துரைக்கவில்லையா?
மோடி பிரதமர் ஆன நிலையில், இந்தியா முழுமை யும் மத வெறித்தனம் கொம்பு முளைத்துச் சூறையாடக் கிளம்பி விட்டதே!
உ.பி.யில் முசாபர் நகர் கலவரம் என்ன சாதாரண மானது தானா? பிஜேபி மத்திய மாநில அமைச்சர்களும், பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாயைத் திறந்தாலே வசைப் பாட்டுகள்தான் - சிறுபான்மை மக்கள் மீதான வன்மங்கள்தான்.
ஆட்சிக்கு வந்த எந்த அரசும் மக்கள் மத்தியில் சுமூக சுழலை நிலைப்படுத்துவதில்தான் கருத்தாக இருப்பார்கள். இங்கு என்னடா என்றால் பிஜேபி அதிகாரத்துக்கு வந்தபின்,  அதுவும் நரேந்திர மோடி பிரதமரான நிலையில், ஒவ்வொரு நாளும் எந்த அளவுக்கு ஹிந்து வெறித்தனத்தைக் கிளப்பி விடுவது. எந்த அளவுக்குச் சிறுபான்மை மக்கள்மீது அவதூறு சேற்றினை வாரி இறைப்பது என்கிற கல்லா கட்டும் வேலைதான் நாளும் நடந்து கொண்டுள்ளது.
வளர்ச்சி வளர்ச்சி என்ற கோயபல்சு பிரச்சாரத்தை கண் மூடித்தனமாக நம்பி, இருந்து வந்த நல்லிணக் கத்தையும் தொலைத்துக் கொண்டு விட்டனர்; வளர்ச்சி என்பது வளமையின் வளர்ச்சியல்ல - வறுமையின் வளர்ச்சி என்பதுதான் மக்கள் அன்றாடம் அனுபவித்து வரும் நிலைமை! - எவ்வளவுக் காலம் இந்த ஆட்டம் தொடர்கிறது என்பதைப் பார்ப்போம்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...