Total Pageviews

Thursday, November 12, 2015

சுயமரியாதை இயக்க மகுடத்தில் இதோ ஒரு வைரக் கல் வெற்றி! அதன் வரலாற்றில் இது ஒரு நல்ல பரிசு!

சுயமரியாதை இயக்க மகுடத்தில் இதோ ஒரு  வைரக் கல் வெற்றி!
அதன் வரலாற்றில் இது ஒரு நல்ல பரிசு!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின்மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு - சுயமரியாதை இயக்கத்தின் மகுடத்தில் பொறிக்கப்பட்ட மற்றொரு வைரக்கல் என்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் சமுதாயப் புரட்சியின் கனியான சுயமரியாதைத் திருமணச் சட்டம் தமிழக சட்டமன்றத்தில், அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த தி.மு.க. ஆட்சியில் எதிர்ப்பின்றி - ஏகமனதாக நிறைவேறி இப்போது 47 ஆண்டுகள் ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஓடி விட்டது!
உலகில் பல நாடுகளிலும் செல்லுபடியாகும் சுயமரியாதைத் திருமணம்
பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டிலும், கடல் கடந்து, மலேசியா, சிங்கப்பூர் அமெரிக்கா போன்ற பற்பல நாடுகளிலும் அந்நாட்டு சட்ட அங்கீகாரத்துடன் நடைபெற்றுக் கொண்டுள்ளன!
சட்டப்படி, இத்திருமணம் செல்லு படியாகும்  என்ற இந்த அமைதிப் புரட்சி சட்டம் அமுலாகியபின் திருமணம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கும் இம்முறைப்படி சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகின்றது!
இந்நிலையில், இவ்வளவு காலமாக இச்சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரும் பொது நல மனு - வழக்கு ஏதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வில்லை.
இத்தனை ஆண்டு காலமாக இல்லாமல், இப்போது சில மதவாத சக்திகளுக்கும், பார்ப்பனர் - வீபிஷ்ணர் கூட்டுற வுக்கும் ஒரு புதுத் தெம்பு, குருட்டுத்தனமான பேராசை தலை நீட்டிப் பார்க்கிறது!
பெரியார் சிலையில் கடவுள் மறுப்பு வாசகம் நீதிமன்ற தீர்ப்பு
இது நமக்குப் புதியதல்ல. தந்தை பெரியாரின் சிலை பீடத்திலுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண் டும் என்று  தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு நெருக்கடி காலத்தில் - மிசாவின் கொடுமை நரித்தனம் - நர்த்தனம் - ஆடிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டு, அந்நாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு எம்.எம். இஸ்மாயில் அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டது! பெரியார் சிலை பீடத்தில் அவர் கருத்துகளைச் செதுக்காமல், பிறகு வேறு ஒருவர் கருத்துரையைப் பொறிப் பாளர்களா? என்று சாட்டையடிக் கேள்வியோடு தீர்ப்புரை எழுதினார்.
உயர்நீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு!
இப்போதும் தலைமை நீதிபதி மாண்பமை கவுல் அவர்களும் சிவஞானம் அவர்களும், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
இந்து மதத்தில் உள்ள சடங்குகள் பின்பற்றப்பட வில்லை. எனவே இந்து திருமணச் சட்டத்திருத்தமாக இச்சட்டம் நிறைவேறியுள்ளது செல்லாது. இதில் இந்துத் திருமணச் சடங்குகள் எதுவுமே செய்யப்படுவதில்லை என்று ஏதோ ஒரு அதிபுத்திசாலித்தன (?) கேள்வியை எழுப்பியுள்ளார் - வழக்காடிய இந்து நவீன மனுவின் வாரிசு!
அதற்குத் தீர்ப்புரையில்  இரு நீதிபதிகளும் நன்கு பதில் அளித்துள்ளனர். பல காலம் - பலவாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளது இம்முறை; எனவே இது செல்லுபடியாகும் என்று சுயமரியாதைத் திருமணச் சட்டம் - இந்து திருமணச் சட்டத் திருத்தமாகக் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. சட்டப்படி சரியானதே - செல்லுபடியாகும் என்று கூறியுள்ளனர்!
இந்த நல்ல தீர்ப்பு - சட்டப்படி சரியான நியாயத் தராசு நடுநிலையில் நின்று அளிக்கப்பட்டுள்ள ஓர் சட்டபூர்வ தீர்ப்பு.
47 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு வழக்குப் போட்டு, அச்சட்டத்தினை உறுதி செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய வழக்காடிக்கு (அவர் பார்ப்பனரோ, விபீஷ்ணரோ எவராயினும்) நமது நன்றி அவருக்கு!
இந்து மதத்திற்கென்று குழப்பமில்லாத சட்ட திருத்தங்கள் உண்டா?
1) ஹிந்து மதம் என்பதற்கும் ஏதாவது திட்டவட்டமான கொள்கை, கோட்பாடு, சடங்கு, சம்பிரதாயம் - ஜாதி வர்ணாஸ்ரமத்தை தவிர வேறு ஏதாவது உண்டா?
எடுத்துக்காட்டாக, கடவுள் உண்டு என்ற நம்பிக்கை உடைய ஆஸ்திகரும் ஹிந்துதான் - கடவுள் மறுப்பாளரான நாஸ்திகரும் - ஹிந்துதானே - இதுதானே சட்டத்தின்  நிலைப்பாடும் கூட!
2) இதற்கு முன் ஹிந்து மதத்தின் வேரில் வெந்நீர் ஊற்றிய மணவிலக்குச் சட்டம், வாரிசுரிமை - சொத்துரிமைச் சட்டம், விதவை மறுமணச் சட்டம் போன்ற பலவற்றிலும் ஹிந்துக்கள் சட்டத் திருத்தம் (Hindu Code Bill) என்ற டாக்டர் அம்பேத்கர் கொணர்ந்த மசோதா, சனாதனிகளால் எதிர்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் அதனை பகுதி பகுதியாக நிறைவேற்றி யுள்ளனர். அவைகளையெல்லாம் செல்லாது என்று நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடுவார்களா இந்த வல்லடி வழக்கு வம்பர்கள்?
இது எதைக் காட்டுகிறது? விடுதலை 11.11.2015 தலையங்கம் மிக அருமையான இரண்டு வரலாற்று ரீதியான வழக்குகளைச் சுட்டிக் காட்டியுள்ளது!
உச்சநீதிமன்றத்தில் சேர்ந்து வாழ்ந்து, குழந்தைகள் பெற்றாலே அது செல்லும் என்ற வரலாற்றுப் புரட்சித் தீர்ப்புகள் வந்துள்ளன. அதற்கு இந்த ஹிந்துத்துவ மேதைகள் என்ன வயிற்றிலும் வாயிலுமா அடித்துக் கொண்டனர்?
சு.ம. இயக்கத்தின்  மகுடத்தில் மற்றொரு  வைரக்கல்!
பெரியார் மண்ணில் இன்னமும் பேதலித்த புத்தியில் உள்ளவர்களும் உள்ளனரே! எனவே சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டில் இத்தகைய வழக்கு - வெற்றிகள் சுயமரியாதை இயக்கத்தின் மகுடத்தில் மற்றொரு வைரக் கல் ஆகும்.கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சிங்கப்பூர்
12-11-2015

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: