Thursday, November 5, 2015

லாலு - நிதீஷ்குமார் வழிகாட்டுகிறார்கள்



பிகார் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வந்தாலும் வந்தது; அதில் நல்லதோர் திருப்பம் ஏற்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. பீகார் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த லாலுபிரசாத்தும், நிதிஷ்குமாரும் இந்தத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டார்கள்.
இந்தக் கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றி கிட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது ஆட்சிஅமைக்கும் பட்சத்தில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும், நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும்; கூட்டணி ஆட்சி அமைக்கும் பொழுது கருத்து மாறுபாடுகள் பொதுவாக ஏற்பட்டு இடையில் முறிவுகள் நடப்பதும் கண்கூடு.
இதனைத் தவிர்க்க இந்த இரு கட்சிகளையும் இணைத்து விடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்ற செய்தி வரவேற்கத்தக்கது. அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இரு கட்சிகளும் தூக்கிப் பிடிப்பது சமூக நீதிச் சுடரைத்தான் - மதச் சார்பின்மைப் பதாகையைத் தான்.
இந்த இரு குறிக்கோள்களும் இக்காலக் கட்டத்தில் மிகவும் முக்கியமானவை. பாரதிய ஜனதா அதிகாரத்தில் வந்துள்ள நிலையில், மதச் சார்பின்மைக்கும் சவால்  - சமூக நீதிக்கும் மரணக் குழி என்ற நிலைதான் நீக்கமற நிலவுகிறது. இந்த நிலையில் இந்த இரு கொள்கை களிலும் அழுத்தமான நிலைப்பாடு கொண்டவர்கள் ஒன்றிணைவது வரவேற்கத்தக்கதே! தலைவர்கள் மத்தியில் நிலவும் தன் முனைப்புதான் பெரும்பாலும் தனித்தனிக் கட்சிகளாக இயங்குவதற்கு முக்கிய காரணம் ஆகும். லாலு பிரசாத் இந்த வகையில் இந்தி யாவுக்கே வழிகாட்டி விட்டார் - கூட்டணி வெற்றி பெற் றால் நிதிஷ்குமார்தான் முதல் அமைச்சர் என்று லாலு கூறும் ஒப்பரியப் பெருந் தன்மை விரிந்த பொது நல நோக்கினை யாரிடம் எளிதில் எதிர்ப்பார்க்க முடியும்?
உரிமை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பிளவுபட்டுக் கிடக்கும் பொழுது ஆதிக்க ஜாதியினர்  அந்தப் பிளவைத் தங் களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் இந்த வகையில் சூடுபட்டவர்கள் அனுபவங்களின் மூலமாகத் தெள்ளிதின் உணர்ந்து, பிளவைத் தூக்கி எறிந்து பிணைப்புக்குக் கைகோக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஒரு கட்டத்தில் சமூகநீதி அணி - சமூக நீதிக்கு எதிரான அணி என்று பிரிந்து அதில் சமூக நீதி அணி வி.பி. சிங் தலைமையில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.
அந்தச் சமூக நீதி அணி ஆட்சிக் கட்டிலில் அமர்ந் ததால் தான் பத்தாண்டுக் காலம் ஊறுகாய் ஜாடியில் போடப்பட்ட மண்டல் குழுப் பரிந்துரையில் ஒரு அம்ச மாகிய பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு என்பது செயல்படுத்தப்பட்டது.
கான்சிராம் அவர்கள் இந்திய அரசியலில் ஒரு முக்கிய முழக்கத்தை வைத்தார்; தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்தாம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள்; ஆட்சி அதிகாரம் என்பது இவர்கள் கையில் வர வேண்டியதுதான் உண் மையான ஜனநாயகம் என்ற குரலை முன்னெடுத்தார்.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் அதனைச் சாதித்துக் காட்டி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வி மாயாவதியை முதல் அமைச்சர் ஆக்கினார்.
அந்த வடிவம் இந்தியா முழுமையும் பரவியிருந் தால் இந்தியாவின் அரசியல்  வேறு வகையாக இருந் திருக்கும்.
அதற்கான பாதையை வகுத்து நடை போட வேண் டிய செல்வி மாயாவதி அவர்களே தடம் மாறியதால் கன்ஷிராம் வகுத்துக் கொடுத்த அந்தத் தத்துவம் நொடித்துப் போய் விட்டது; என்ன கொடுமை என்றால் இந்தக் கொள்கைக்கு நேர் எதிரான இந்துத்துவா இப்பொழுது அதிகாரப் பீடத்தில் அமர்ந்து கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என்று சொல்லுகிற அளவுக்கு நிலைமை மாற்றம் அடைந்து விட்டது.
இந்தக் குறுகிய ஒன்றரையாண்டு பிஜேபி ஆட்சி யில், இந்தியா முழுமையும் உள்ள சூத்திர பஞ்சம மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு புதிய எழுச்சியும், சித்தாந்தமும் தோன்றித் தீர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.  அது வேறு ஒன்றும் இல்லை. இந்துத்துவா என்பது உயர் ஜாதி பார்ப் பனர்களின் நலனைச் சார்ந்தது. இதனை வீழ்த்திட இரு பெரும் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வழிகாட்டி யுள்ளனர்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய இரு தலைவர்களும் காட்டியுள்ள சித்தாந்த வழிதான் அது.
வருணாசிரமவாதிகளுக்கும் வருணாசிரமத்தை எதிர்ப்போருக்கும் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் போராட்டம் நம் கண் முன் தெளிவாகத் தெரிகிறது!
இந்த நிலையில் எதிரும் புதிருமான இருந்த லாலு பிரசாத்தும் நிதிஷ்குமாரும் இணைந்து ஒரே குரலால் பேசும் நிலை - இந்தியா முழுமையும், குறிப்பாக வட மாநிலங்களிலும் எதிரொலித்து அரசியல் வடிவம் பெற வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தின் பெரும் அரசியல் சக்தியாக விளங்கக் கூடியவரும், சமூக நீதியில் நம்பிக்கையுள்ள வருமான சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் அவர்களும் லாலுவோடும், நிதிஷ்குமாருடனும் கை கோப்பார்களேயானால் சரியானதோர் மாற்று அரசியல் சக்தி உருவாகிட அதிக வாய்ப்புண்டு:  கெட்ட வாய்ப்பாக பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் மிகப் பெரிய தலைவராக இருக்கக்கூடிய முலாயம்சிங் யாதவ் அவர்கள், பிகாரில் லாலு - நிதிஷ் கூட்டணி தோல்வி அடைய வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களிடையே இருந்து வரும் இந்தக் கோணல் புத்திதான் ஒடுக்கப்பட்ட மக்களின் இடுப்பை முறித்து எதிரிகளுக்கு அதிகார நாற்காலியை அமைத்துக் கொடுக்கிறது. பிகார் தேர்தல் முடிவு புதிய வெளிச் சத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...