Tuesday, November 17, 2015

பிரான்ஸ் தலைநகரில் மதவெறிக்கு 130 மனித உயிர்கள் பலி கண்டிக்கத்தக்கது!


நோய் நாடி, நோய் முதல் நாடி மூலக்காரணம் அறிந்து ஒழிக்கப்பட வேண்டும்!
தமிழர் தலைவர் மனிதநேய அறிக்கை

கடந்த 13.11.2015 நாளன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களுக்கு 130 அப்பாவிப் பொது மக்கள் பலியான கோரத்தாண்டவம், சொல்லொணாத் துயரத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்குமுன் மும்பை ஓட்டலில் நடைபெற்ற தீவிர வாத - பயங்கரவாதப் பலிகளை - நினைவூட்டுவதாகவே அது அமைந்தது!
எந்த மதவெறியும் கண்டிக்கத்தக்கதே!
உலகின் அமைதி இப்படி கேணீள்விக்குறியாகும் இக் கொடுமைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?
மதவெறி - அது எந்த மதவெறியானாலும் வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட வேண்டும்.
இந்த வன்முறைக்கு அய்.எஸ். என்ற ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
எந்த மதவெறியானாலும் (இஸ்லாமிய, இந்து, கிறித்துவ, யூத, பவுத்த (இலங்கை, மியன்மா)  மதவெறி எதுவாயிலும்) அது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே!
இதை உலக நாடுகளின் தலைவர்களும், அய்.நா. போன்ற அமைப்பும் வெறும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பிரச்சினையாக மட்டும் கருதாமல், இதன் மூல காரணத்தினைப் பற்றி ஆராய்ந்து அதற்குரிய பரிகார நடவடிக்கைகளை எடுத்து, அமைதியை உலக மக்களுக்குத் தர வேண்டியது - நயத்தக்க நாகரிகக் கடமையாகும்.
130 உயிர்களும் - அவர்கள் எந்நாட்டினராயினும் மக்களே! 350 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குழந்தைகளைக்கூட பலி கொண்டிருக்கிறது அந்த மதவெறியின் கோ(ப)ரப்பசி!
வரலாற்றில் இப்படி அடிக்கடி இரத்தக்கறை படிவது விரும்பத்தக்கதா? ஏற்கத்தக்கதா?
முன்கூட்டியே மோப்பம் பிடிக்காதது ஏன்?
திட்டமிட்டு இப்படி நடைபெறும் குரூரச் செயலை முன்கூட்டியே மோப்பம் பிடித்து தடுப்பு நடவடிக் கைகளில் ஈடுபடாத பிரான்ஸ் நாட்டு இயலாமையும் வருந்தத்தக்கது.
மேடையில் முழங்கி  தீவிரவாதம் ஒழிக என்றால் அது ஒழிந்துவிடாது; நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும். அதற்குரிய பரிகாரத்தை சிகிச்சையைக் கைக் கொள்ள வேண்டும்.
மதவெறி மாய்த்து, மனிதநேயம் மலரட்டும்!
மறைந்த மனிதர்களும் நம் உறவினரே, யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் அவர்களை இழந்து வாடுவோருக்கு நம் ஆறுதல் - இரங்கலை கூறுகிறோம்.
தேவை நிரந்தரத் தீர்வு!
நிரந்தரத் தீர்வு காண அனைவரும் முன்வந்து, புதியதோர் உலகு செய்ய முன் வரட்டும்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
17-11-2015 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...