Saturday, October 24, 2015

பி.ஜே.பி. வேறு; ஆர்.எஸ்.எஸ். வேறு என்று நாடகம் நடத்தியவர்களின் முகத்திரை கிழிந்துவிட்டது!



பி.ஜே.பி. வேறு; ஆர்.எஸ்.எஸ். வேறு என்று
நாடகம் நடத்தியவர்களின் முகத்திரை கிழிந்துவிட்டது!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
சென்னை, அக்.23- பி.ஜே.பி. வேறு; ஆர்.எஸ்.எஸ். வேறு என்று நடத்தி வந்த அரசியல், மாட்டுக்கறிப் பிரச்சினைமூலம் அம்பலமாகி விட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
13.10.2015 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் “மாட்டுக்கறியும் - மதவாத அரசியலும்” என்கிற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பகுத்தறிவாளர்கள்,
பல்துறை அறிஞர்கள்
குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்ற இந்த சிறப்புக் கூட்டம், ‘‘மாட்டுக் கறியும் - மதவாத அரசியலும்’’ என்கிற தலைப்பில் பல்வேறு செய்திகளை - இன்றைய நாட்டின் போக்கு - பல ஆட்சிகளினுடைய நோக்கு இவைகளெல்லாம் எப்படி எதிர்காலத்தை இருட்டாக்கிக் கொண்டிருக் கின்றன.
ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்து ஒரு பாசிசம் இங்கு வந்துவிடுமோ என்று சொல்கின்ற அளவிற்கு, அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலையை நாட்டில் திணிக்கப்படக்கூடிய ஒரு அபாயகரமான போக்கு இருக்கிறது என்பதை மக்களுக்கு வழக்கம் போல் திராவிடர் கழகம் - “கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்”
என்கிற முறையில் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோடு கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் எனக்கு முன்பாக ஒரு சிறந்த தொடக்கவுரையை நிகழ்த்தியுள்ள கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
மிகச் சிறப்பான வகையில் கருத்துகளை எடுத் துரைத்து அமர்ந்துள்ள அருமைச் சிந்தனையாளர் தோழர் மதிமாறன் அவர்களே, இந்த நிகழ்விற்கு வருகை புரிந்து இந்தப் பணி கட்சிகளுக்கு அப்பாற் பட்டது, ஜாதிகளுக்கு அப்பாற்பட்டது, மதங்களுக்கு அப்பாற்பட்டது, மனிதநேயத்திற்கு உட்பட்டது என்பதையெல்லாம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டு வதுபோல, பகுத்தறிவாளர்கள், பல்துறை அறிஞர்கள் குழுமியிருக்கின்ற மன்றமாக இந்த மன்றம் அமைந் துள்ளது.
இதில் பங்கேற்று சிறப்பிக்கின்ற ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பெருமக்களாக அமைந்திருக்கக்கூடிய பெரியார் பேருரையாளரும், முதுபெரும் பெரியார் சிந்தனையாளருமான  புலவர் நன்னன் அவர்களே,
நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற சமூகநீதிப் பேரவையின் தலைவராக - நடத்துநராக இருக்கக்கூடிய பேராயர் சற்குணம் அவர்களே,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும், தொலைக்காட்சி நிகழ்வுகளில் மதவாதத்தினுடைய கொம்புகளையெல் லாம் பிடித்து ஆட்டி, அதனைத் திணற வைக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய தோழர் பலராமன் அவர்களே,
என்றைக்கும் பல்வேறு சிந்தனைகளுக்கு ஆளாகி, பல கொடுமைகளுக்கு ஆளானாலும், பல ஆண்டு காலம் சிறைச்சாலையில் வதிந்தாலும், சிறைச்சாலை  மேலும் என்னை சிந்தனைச் சாலையாக, தியாகியாக ஆக்க முடியுமே தவிர வேறில்லை என்று வந்திருக்கின்ற எங்கள் அன்பிற்குரிய சகோதரர் குணங்குடி ஹனீபா அவர்களே,
நம்முடைய செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களே,
தஞ்சை கூத்தரசன் அவர்களே, பொதுச் செயலாளர் குமரேசன் அவர்களே இன்னும் பல்வகை அறிஞர்களே, இன்றைக்கு திராவிட வரலாற்று ஆராய்ச் சியாளராக தனித்தன்மையோடு எழுதிக் கொண்டிருக் கக்கூடிய நீதிக்கட்சி  வரலாற்று ஆசிரியராக இருக்கக் கூடிய அருமைத் தோழர் திருநாவுக்கரசு அவர்களே,
வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய அனைத்து இயக்கங்களைச் சார்ந்து, மதம், ஜாதி, கட்சிகளுக் கெல்லாம் அப்பாற்பட்டு வந்திருக்கக்கூடிய, அரங்கத் தில் இருக்கக்கூடிய பெருமக்களே, தோழர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாட்டுக்கறியை கட்டாயம் எல்லோரும் சாப்பிட்டே தீரவேண்டும் என்று தீர்மானம் போடுவதற்கல்ல
எனக்கு முன் பேசியவர்கள் அருமையான கருத்துகளை இங்கே எடுத்து வைத்தார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால், இருவருடைய கருத்துகளும் தெளிவான கருத்துகளாகும்.
ஒரே ஒரு செய்தியை உங்களுக்கு நினைவூட்டவேண்டும். மாட்டுக்கறியினு டைய சிறப்பு என்பது இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம் அல்ல. அது சிறப்பா? குறைவா? என்பது அவரவர்களுடைய உரிமை. மாட்டுக்கறியை கட்டாயம் எல்லோரும் சாப்பிட்டே தீரவேண்டும் என்று தீர்மானம் போடுவதற்கல்ல இந்தக் கூட்டம்.
யார் எதை உண்ணுவது என்பது அவரவருடைய அடிப்படையான உரிமை. பறிக்கப்பட முடியாத உரிமை. இன்றைக்கு மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக ஒருவர் கொல்லப்படவேண்டும்; மாட்டுக்காக மனிதன் கொல்லப்படவேண்டும் என்கிற கொடுமையான ஒரு போக்கு அரசியலாக மாறிக் கொண்டிருக்கிறது. இது ஒரு ஆபத்தான போக்காகும். அந்த ஆபத்து துளிர்க்கும் பொழுதே, அது வேர் விடும்பொழுதே, வேரடி மண்ணோடு பிடுங்கி எறியவேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டிற்கு உண்டு; பெரியார் மண்ணுக்கு உண்டு.
ஆனால், இன்றைக்குப் பெரியார் மண்ணைவிட, அதிகமாக மற்றவர்கள் அறிவாளிகள், அவர்கள் நமக்கென்ன என்று அறிஞர்கள் எல்லாம் ஒதுங்கிப் போன காலம் உண்டு. ஆனால், எப்பொழுதுமே பாட்டாளி மக்கள், அடித்தள மக்கள், நேரிடையாக பாதிக்கப்பட்ட மக்கள் இவர்கள்தான் போர்க்கொடி தூக்குவார்கள்; அறப்போராட்டங்களை நடத்துவார்கள்; தேவைப்படின் தங்கள் இன்னுயிரையும் விடுவார்கள். இது வரலாற்றினுடைய ஒரு காலகட்டம்.
உலகளாவிய தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய ஒரு எதிர்ப்பு
ஆனால், இப்பொழுது ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. மோடி அவர்களுடைய ஆட்சி மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று சொல்லி ஏமாற்றத்தையே கொடுத்துக் கொண்டிருக்கின்ற அந்த ஆட்சி, இன்றைக்கு எல்லாத் தரப்பு மக்களின் அதிருப்தியையும் சம்பாதித்திருக்கிறது.
வெறும் அரசியல்வாதிகளினுடைய, வெறும் கட்சிக்காரர்களி னுடைய, வெறும் எதிர்க்கட்சிக்காரர்களின் எதிர்ப்பை மட்டும் அவர் சம்பாதிக்கவில்லை. மாறாக, மிகப்பெரிய புயலுக்கு முன் ஏற்படும் ஒரு அமைதியைப் போன்று, உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு எதிர்ப்பு - அண்மையில் இன்றுவரையில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்ற ஒன்று.
இந்தியாவில் இதற்குமுன் எப்பொழுதும் நடந் திராத - சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகியிருக் கின்றன என்று சொல்லப்படுகின்ற இந்தக் கால கட்டத்தில்கூட - ஒரு அமைதிப் புரட்சி - ஒரு எதிர்ப் புரட்சி நடக்கிறது. அது என்ன தெரியுமா? அதுதான் அறிவாளிகள் மிகப்பெரிய அறிஞர்கள்,
இலக்கிய மேதைகள், தொண்டறச் செம்மல்கள், யார் யாருக் கெல்லாம் இதற்கு முன்பாக இருந்த மத்திய அரசு விருதுகள் கொடுத்தனவோ, அந்த விருதுகளை யெல்லாம் அவர்கள் திருப்பிக் கொடுத்து, நாங்கள் இதனைப் பெறுவதற்குரிய தகுதி இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்துவிட்டார்கள் என்று சொன்னால்,
அறிஞர்களுடைய கண்ணீர், அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்தான் செல்வத்தைத் தேய்க் கும் படை என்று சொன்னாரே வள்ளுவர், அதனை யெல்லாம் தாண்டி, அவர்கள் நேரிடையாக அல்லலுக்கு ஆளாகவில்லை. ஆனாலும், கருத்துச் சுதந்திரம் என்பது மூச்சு விடுவதற்குரிய வாய்ப்பு போன்றது.
உண்ணுவதற்கும் உரிமையில்லை, எண்ணுவதற்கும் உரிமையில்லை என்று சொல்லக்கூடிய போக்கு விரும்பத்தக்கதா?
மூச்சை விடாதே என்று சொல்வதற்கும், கருத்தை வெளியிடாதே என்று சொல்வதற்கும் பெரிய வித்தி யாசம் ஒன்றுமில்லை. இன்னுங்கேட்டால், மூச்சு விடாதே என்று சொன்னால், அது அதோடு முடிந்து விடுகிறது, அது அப்போதே விடுதலை கிடைத்து விடுகிறது. ஆனால், கருத்துச் சுதந்திரத்தை நீ வெளி யிடாதே என்று சொன்னால்,
இதைவிட மனிதனுக்கு, ஆறறிவு உள்ள மனிதனுக்கு, அதுவும் பகுத்தறிவு வளர்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், விண் வெளியில் பயணம் செய்து, செவ்வாயக் கோளையும் கண்டுபிடித்து, அதற்குப் பிறகு அங்கே குடியேறலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்ற இந்தக் காலகட்டத்தில்,
உண்ணுவதற்கும் உரிமை யில்லை, எண்ணுவதற்கும் உரிமையில்லை என்று சொல்லக்கூடிய போக்கு விரும்பத்தக்கதா? மக்களை சிந்திக்க வைப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம். இதைக் கண்டு ஏன் காவிகள் மிரளுகின்றன?
ஒவ்வொரு நாளும் கவிஞர் அவர்களைக் கேட்பேன். நான்கு நாள்களுக்கு முன்புதான் இந்தக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்தோம். இந்தக் கூட்டத்திற்கான விளம்பரத்தை நம்முடைய எதிரிகள் எடுத்திருக்கிறார்களா? எதிர் அறிக்கை, ஆர்ப்பாட்டம் போன்றவைகள் எல்லாம் வந்தால்  மிக நன்றாக இருக்குமே!
அது அதிகமான பேர்களுக்கு தகவல் போய்ச் சேருமே என்றேன். ஆனால், அவர் களுக்குப் போதிய அவகாசம் இல்லை போலிருக்கிறது. நாங்கள் போதிய அவகாசத்தைக் கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.
இன்னும் காலந்தாழ்ந்து விடவில்லை. நாங்கள் இதுபோன்ற கூட்டங்களை அடிக்கடி நடத்துவோம்
இந்தக் கூட்டத்திற்கு வரும்பொழுது வழியில் எங்கேயாவது நம்முடைய கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்தேன். ஆனால், இந்தக் கூட்டத்திற்கான போஸ்டர்களைத்தான் நான் பார்த்தேன். ஆனால், இங்கே வந்த பிறகுதான் எனக்கு ஒரு தகவல் தெரிந்தது.
அவர்களும் விளம்பரம் செய்திருக்கிறார்கள். குறுகிய காலத்தில், கடைசி நேரத்தில்தான். இந்த விளம்பரத்தை இன்னும் முன்கூட்டியே செய்திருக்கக் கூடாதா? இன்னும் இந்தக் கூட்டத்திற்கு அதிகமானோர் வந்திருப்பார்களே! பரவாயில்லை, இன்னும் காலந் தாழ்ந்து விடவில்லை.
நாங்கள் இதுபோன்ற கூட்டங் களை அடிக்கடி நடத்துவோம். நாங்களும் விளம்பரங் களை செய்வோம்; நீங்களும் விளம்பரங்களைச் செய்யுங்கள். எனவே, முதலில் இங்கே வந்திருக்கின்ற உங்களுக்கு நன்றி செலுத்துவதற்கு முன்பு, குறுகிய காலத்தில், அவர்கள் முடிவெடுத்து, ‘‘இந்து சனாதன சேனா’’ அமைப்பினர் சுவரொட்டி அடித்திருக்கின்றனர். அதில், மாட்டுக்கறிக்கும், வீரமணிக்கும் என்ன சம்மந்தம்? என்று.
எங்களுக்கு ஒரு சம்மந்தமும் இல்லை; சம்மந்தம் முழுவதும் உங்களுக்குத்தான். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். வெறும் மாட்டுக்கறி என்று தலைப்பு வைத்திருந்தால், நீங்கள் கேள்வி கேட்கலாம்; மாட்டுக் கறியும் - மதவாத அரசியலும் என்று தலைப்பு வைத் திருக்கிறோம். அதுதானே மிக முக்கியம்.
மதவாத அரசியல் இன்றைக்கு உருவாகிவிட்டால், நாட்டில் குடிமகனாகக்கூட யார் வர முடியும்? நேற்று வரையில் நேபாளம் ஒரே இந்து நாடாக இருந்தது. அதற்காக உங்களுடைய முதுகினை நீங்களே தட்டிக் கொண்டி ருந்தீர்கள். எதைப் பெருமையாக சொல்லிக் கொண் டிருந்தீர்களோ - இன்றைக்கு அரசியல் சட்டத்தில் அந்த இந்து நாடு ஏன் காணாமல் போனது என்பதைச் சிந்தித்துப் பார்த்தீர்களா?
ஜனநாயகம் அளித்திருக்கின்ற
மிகப்பெரிய வாய்ப்பு
இந்தியாவை இந்துராஷ்டிரமாக்கவேண்டும்; இந்து நாடாக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக் கிறார்கள் இங்கே. ஆனால், நேபாள நாட்டில் நேற்று வரையில், இந்து நாடு என்று இருந்த வரையில், அந்த நாட்டினுடைய ஆட்சித் தலைவராக இந்து மதத்தைச் சார்ந்தவர் மட்டும்தான் வர முடியும். மதச்சார்புள்ள நாடுகள் உலகத்தில் இருக்கின்றன.
ஆனால், அந்த மதச்சார்புள்ள நாட்டில், அந்த மதத்தைச் சார்ந்தவர் தான் தலைவராக வர முடியுமே தவிர, இந்த ஜனநாயக நாட்டில் இருப்பதைப்போல, யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம் என்பது ஜனநாயகம் அளித்திருக் கின்ற மிகப்பெரிய வாய்ப்பு - ஒரு அருட்கொடை.
அதனால்தான், இந்தியாவில் சீக்கியர், இஸ்லாமியர், தாழ்த்தப்பட்டவர், பார்ப்பனர்கள் அதிக முறை, உயர்ஜாதிக்காரர்கள் எல்லோரும்  தலைவர் களாக வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை, இந்த வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பது எதனால்?
India that is Bharat என்று இப்போது போட்டாலும், இந்திய அரசியல் சட்டத்திலுள்ள, Preamble
WE, THE PEOPLE OF INDIA, having solemnly
resolved to constitute India into a  [SOVEREIGN
SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC] and to secure to all its citizens:
என்று இருப்பதினால்தான், ஜனநாயக நாட்டில் இந்நிலை இருக்கிறது. இதனை எடுத்துவிட்டால் என்னாகும்? நான் ஒரு சில ஆதாரங்களை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஒரு புத்த பிக்கு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். நேபாளம் புத்தர் பிறந்த மண் ஆகும். அப்படிப்பட்ட ஒரு நாட்டில், அந்த புத்த பிக்கு தெரியாமல் சென்று, புத்தர் ஜாதி ஒழிப்பை வலியுறுத்தினார்; வருணாசிரம தருமத்திற்கு விரோதமாகப் பேசினார். எனவே, நாம் ஜாதிகளால் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கக்கூடாது.
எல்லோரும் சகோதரத்துவத்துடன் இருக்கவேண்டும் என்று பேசினார். அவர் சொன்ன வுடன்,
நேபாள காவல்துறையினர் அவரை கைது
செய்து சிறையில் அடைத்தனர். இது எப்பொழுது?, நேபாளம் இந்து நாடாக இருந்த வரையில். நேபாளம் இந்து நாடு என்று அறிவிக்கப்பட்ட பிறகு, ஜாதி ஒழிப்பைப்பற்றி பேச முடியாத நிலை அங்கே!
‘‘என்னை ஒரு வாடகைக் குதிரையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்’’ என்று
மனம் நொந்து சொன்னார் அம்பேத்கர்
ஆனால், இங்கே ஜாதி ஒழிப்பைப்பற்றி சுதந்திர மாகப் பேசுகிறோம். அண்ணல் அம்பேத்கர் அவர் களைப் பார்ப்பனர்கள் பயன்படுத்திக்கொண்டு, பல்வேறு திருவிளையாடல்களை அரசியல் சட்டத்தில் செய்திருக்கின்றார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர் களே சொன்னார், ‘‘என்னை ஒரு வாடகைக் குதிரை யாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்’’ என்று மனம் நொந்து சொன்னார். அது ஒரு பக்கத்தில் இருந்தாலும்,
Liberty,  Equality,  Fraternity என்று சொல்லக் கூடிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இந்த மூன்றையும் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் முகப்பில் வைத்து, மிகப்பெரிய சாதனை செய்தார். இது பிரெஞ்சு புரட்சியில் கிடைத்திருக்கின்ற கனிந்த பலன்; விழுமிய கனிகள்.
தயவு செய்து நீங்கள் இப்பொழுது எண்ணிப் பாருங்கள். ‘இந்துராஷ்டிரம்’ என்று சொல்லி - பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் இருக்கின்ற நாட்டில், என் மதம் பெரும்பான்மை மதம் - இந்து மதம்தான் ஆளவேண்டும் என்று சொன்னால், மற்ற மதங்கள் இருக்கலாம்,
எங்களுடைய அனுமதி யோடு இருக்கலாம். கோல்வால்கர்தான் இவர்களுடைய ‘ஆதர்ஷ புருஷன்’ அவர்களுடைய மொழியில் சமஸ்கிருத வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன். அவர்தான் தத்துவகர்த்தா - பி.ஜே.பி.யும் - ஆர்.எஸ்.எசும் வேறு வேறா? ஆர்.எஸ்.எஸ்.தானே பி.ஜே.பியை ஆட்சி செய்கிறது.
பி.ஜே.பி. வேறு - ஆர்.எஸ்.எஸ். வேறு என்று காட்ட முயற்சித்து நாடகம் நடத்துகிறார்கள்
இன்றைக்கு பிகாரில் தேர்தல் நடைபெறுகின்ற காரணத்தினால்,  நிதிஷ்குமார், லாலுபிரசாத், காங்கிரசு ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கின்ற காரணத்தினால், பி.ஜே.பி. வேறு - ஆர்.எஸ்.எஸ். வேறு என்று காட்ட முயற்சித்து நாடகம் நடத்துகிறார்கள். இட ஒதுக்கீடு பிரச்சினை வந்ததிலிருந்து அவர்கள் வேறுவிதமாகப் பேசுகிறார்கள். இப்பொழுது மோடி மேக் இன் இந்தியா என்று வெளிநாட்டில் பேசுகிறார்.
பா.ஜ.க. என்பது என்ன? ‘‘மேக் இன் இந்தியா’’ என்பதுபோல, ‘‘பா.ஜ.க. மேக் இன் ஆர்.எஸ்.எஸ்.’’ ‘‘மேட் பை ஊம்?’’ ‘‘மேட் பை இந்துத்துவா!’’
மாட்டுக்கறிக்குத் தடை, மாட்டுக்கறி உண்ணக் கூடாது என்று சொல்கின்ற கட்டத்தைத் தாண்டி, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்கிற ஒரு பொய்யைச் சொல்லி, உத்தரப்பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் முதிய வரை கொலை செய்திருக்கிறார்கள். இதை நான் சொல்வதைவிட, என் கையில் உள்ளது ‘துக்ளக்’ பத் திரிகையில் வெளிவந்த செய்தியையே சொல்கிறேன். நான் எதிரிகளையே கையாண்டு சொல்கிறேன்.
ஒருக்காலும்எங்களுக்குமதம்பிடிக்காது; மதவாதிகளைநாங்கள்வெறுத்ததில்லை
எனக்கும், மாட்டுக்கறிக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களே, நான் மனிதன் இல்லையா? எனக்கு மதம் இல்லை; எனக்கு மதம் பிடிக்காது; ஒருக் காலும் எங்களுக்கு மதம் பிடிக்காது. ஆனால், மத வாதிகளை நாங்கள் வெறுத்ததில்லை. மதநெறியைப் பின்பற்றுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
அவர்களை மாற்றவேண்டும் என்று நாங்கள் கருது வதும், எங்களை மாற்றவேண்டும் என்று அவர்கள் கருதுவதும் - இரண்டு பேருக்கும் உள்ள கருத்துச் சுதந்திரம் அது. அந்தக் கருத்துச் சுதந்திரம்தான் ஜனநாயகத்தினுடைய அடிப்படை
மூன்று மணிநேரம் ஒரு கூட்டத்தில் பேசுகின்ற ஒரு தலைவர் தந்தை பெரியார் அவர்கள்; அவர் உரையாற்றுவதற்கு முன்பும் சொல்வார்; உரையாற்றிய பின்பும் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வார்.
என்னுடைய கருத்தை எடுத்தவுடன் நம்பாதீர்கள்; நான் சொல்கி றேன் என்றவுடன் நீங்கள் நம்பாதீர்கள். உங்கள் அறி வுக்குச் சரியென்று பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார். நம்பாதீங்க என்று சொல்கிறவர்கள் பகுத்தறிவுவாதியாகத்தான் இருப்பார்கள்.
‘‘காட்டுமிராண்டித்தனமான செயல்!’’ ‘துக்ளக்’ வெளியிட்ட செய்தி!
‘துக்ளக்’ இதழில்  ‘‘காட்டுமிராண்டித்தனமான செயல்!’’ என்கிற தலைப்பில் அந்தச் செய்தி வெளியிட் டிருக்கிறார்கள் அதைப் படிக்கிறேன் கேளுங்கள்:
“டில்லியிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள உ.பி. தாத்ரி மாவட்டத்தைச் சேர்ந்த பிஸாதா என்ற கிராமத்தில், முகமது அக்லாக் என்ற முஸ்லிமை, அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று, 200 பேர் கொண்ட கும்பல் அடித்தே கொன்றுவிட்டது. பொதுவாக உ.பி. இந்து - முஸ்லிம் மோதலுக்குப் பேர் பெற்றது. நல்லவாய்ப்பாக, இந்த மாட்டிறைச்சி
சம்பவம் பெரிய மதக்கலவரமாகவில்லை. இது சம்பந்தமாக இதுவரை பத்து பேரை உ.பி. போலீஸ் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சிவம், விஷால் என்ற இரண்டு பேரும் அடக்கம். கும்பலின் தாக்கு தலுக்கு ஆளானவர்களில் முகமது அக்லாக்கின் சகோதரர் தானிஷும் ஒருவர். இவர் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முகமது அக்லாக்கின் மண்டை கூர்மையான ஆயுதத்தால் பிளக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்களின் அறிக்கை கூறுகிறது.
பசுங்கன்றைக் கொன்று சாப்பிட்டதாகப் பரவிய வதந்தியினால், முகமது அக்லாக்கும், அவரது சகோ தரரும் கொலை வெறியுடன் தாக்கப்பட்டிருக்கின்றனர். அந்த ஊரிலுள்ள கோவில் ஒன்றிலுள்ள ஒலி பெருக்கி மூலம் இந்த வதந்தி ஒலிபரப்பப்பட்டிருக் கிறது. அந்தக் கோவில் அர்ச்சகர்மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உ.பி.யில் பசுவதைத் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது. பசுவை வதைத்தால் உ.பி.யில் இரண் டாண்டு தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் உண்டு. முகமது அக்லாக் பசுங்கன்றைக் கொன்று சாப்பிட்டார் என்பதற்கு எந்தத் தடயமும் இல்லை, சான்றுமில்லை. வெறும் வதந்தி. பெரிய கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கத்துடன், திட்டமிட்டே குறி வைத்து இந்தப் படுகொலை நடந்திருக்கிறது.
அப்படியே முகமது அக்லாக் மாட்டிறைச்சியைச் சாப்பிட்டிருந்தாலும், அதை விசாரிக்க வேண்டியது போலீஸ், தாசில்தாரின் கடமை. ஏதோ ஒரு வன்முறைக் கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, இந்தக் காட்டுமிராண்டித்தனமான படுகொலையைச் செய்தி ருக்கிறது. ஏன் இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும்தான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களா, இந்துக்களில் ஒரு பகுதியினர் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லையா?
தமிழ்நாட்டில்கூட வயதான மாடுகளை, உழவுக்கோ பால் தரவோ முடியாத மாடுகளைத் தக்க சான்றிதழ் அனுமதியுடன் அறுக்கலாம் என்றுதான் சட்டம் கூறுகிறது.
இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 48 ஆவது பிரிவில், ‘பசுக்கள், கன்றுகள், பால் தரும் விலங்குகள், பொதி சுமக்கும் கால்நடைகள் இவற்றை வதை செய்யாமல் தடுப்பதற்கு, அரசு முயற் சிகள் மேற்கொள்ளவேண்டும்’ என்று கூறியிருப்பதை அனுசரித்துத்தான், 26 மாநிலங்களில் மாடுகளைக் கொல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா ஒரு விவசாய நாடு.
மாடுகள் விவசாயிகளின் செல்வம். மேலும், இந்துக்கள் பசுவைப் புனிதமாகக் கருதுவ தாலும், மாடுகளையும், இதர கால்நடைகளையும் பாதுகாப்பதற்காக அரசியல் சட்டத்தில் அப்படியொரு சரத்து சேர்க்கப்பட்டுள்ளது.
எந்தச் சட்டமாக இருந்தாலும், அதை அமல் படுத்தவேண்டியது அரசுதான். இந்தியாவின் எந்தக் குடிமகனும், தானே தான்தோன்றித்தனமாகச் சட்டத் தின்படி யாருக்கும் தண்டனை வழங்கிவிட முடியாது. அந்தப் பிஸாதா கிராமத்தில் முகமது அக்லாக்கை அடித்தே கொன்றது சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்பட்டுள்ள பெரும் சவால். கடைந்தெடுத்த காட்டுமிராண்டித்தனம்.
இந்தியா இந்துக்களுக்காக மட்டுமல்ல. இந்தியா, முஸ்லிம்களுக்காகவும், கிறிஸ்தவர்களுக்காகவும், சீக்கியர் போன்ற சிறுபான்மை மக்களுக்காகவும்தான். படுகொலையாகியிருப்பது ஒரு சக இந்தியன் என்பதை நினைத்துப் பாருங்கள்!
மேற்சொன்ன செய்தியை ‘துக்ளக்’ இதழ் வெளியிட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றதுபோல இங்கே வந்துவிடக்கூடாதே! அது நொடிப் பொழுதில் பரவிவிடும் அல்லவா! பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் பரவிடும்போது, வெளிநாட்டிலிருந்து வரு கின்ற பயணிகளை பரிசோதித்துத்தான் அனுமதிக் கிறார்கள் அல்லவா!
ஆரோக்கிய மாதா கோவிலான வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் சென்றால்கூட, அங்கே காலரா நோய் பரவுகிறது என்றால், முதலில் காலரா தடுப்பு ஊசி போட்டுவிட்டுத்தான் கோவி லுக்குச் செல்கிறவர்களை அனுமதிக்கிறார்கள். அது தவறு என்று நாம் சொல்லமாட்டோம். அதுதான் தடுப்பு முறையாகும்.
இது பெரியார் பண்படுத்திய பூமியாகும்!
இதுபோன்ற கூட்டங்களை நடத்துவதற்கு எங்களுக்கு என்ன உரிமை உள்ளது என்று கேட்கின்ற நண்பர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், கேட்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு; பதில் சொல்கின்ற உரிமை எங்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில்தான் நாங்கள் சொல்கிறோம்.
உ.பி.யில் நடைபெற்றது போன்ற நோய் இங்கே வந்துவிடக் கூடாதல்லவா! வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஆனால், ஒருக்காலத்திலும் இங்கே வராது. இது பெரியார் பண்படுத்திய பூமியாகும்.
பச்சைத் தமிழர் காமராசரையே திராவிடர் இயக்கத்துக்காரர்கள்தான் காப்பாற்றினார்கள். அகில இந்தியாவிலேயே பதவியை விரும்பாமல் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு தலைவர் பச்சைத் தமிழர் காமராசர் ஆவார். அப்படிப்பட்ட காமராசரை, இந்தப் பசுவதைத் தடுப்பு என்கிற பெயரால்தானே அவர்கள் கொல்லை நினைத்தார்கள்.
டில்லியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குள்ளே தீ வைத்தார்கள் - அது திட்டமிட்டு நடந்தது. ‘‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்!’’ இந்த வார்த்தையை யார் போட்டது தெரியுமா? தந்தை பெரியார் போட்ட வார்த்தையாகும்.
அந்தத் தலைப்பில் வெளிவந்த புத்தகத்தை நாங்கள் வெளியிடுவதற்கு முன், நிறைய தகவல்களை நாங்கள் திரட்டித்தான் வெளியிட்டோம்.
நிறைய பேர்களுக்கு ‘பேய்’ பிடித்திருக்கிறது - மதப் பேய்; மதவெறி பிடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்
நிர்வாண சாமியார்கள் எல்லாம் திரண்டு நாடாளு மன்றத்தையே நடத்தவிடக்கூடாது என்று ஆட்டம் போட்டனர். பசுவா முக்கியம்? பசு இறைச்சியா முக்கியம்? அதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியல்! அதற்குப் பின்னால் இருக்கின்ற மனித விரோத போக்கு - வெறும் மதம் பிடித்து ஆடக்கூடியதல்ல!
தவத்திரு குன்றக்குடி அடிகளார் சில நேரங்களில் சொல்வார், வீரமணி உங்களுக்குப் ‘பேய்’ என்பதில் நம்பிக்கையில்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன், பேயைவிட, பேய் பிடித்தவன்தான் அதிகமாக ஆடுவான் என்று.
அதுபோன்று இப்பொழுது நிறைய பேர்களுக்கு பேய் பிடித்திருக்கிறது - மதப் பேய்; மதவெறி பிடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
சோசியலிசத்தை காமராசர் கொண்டு வரப் போகிறார் என்பதற்காக அவரை அழிக்கவேண்டும் என்று நினைத்தனர். அதற்குப் பின்னால் மதவாத அர சியல் தலைதூக்கவேண்டும்; இன்றைக்கு வந்ததைப் போல ஒரு அடித்தளத்தை உருவாக்கவேண்டும் என்று அப்பொழுது முயற்சி எடுத்தனர். ஆனால், அன்றைக்கு அவர்களால் முடியவில்லை.
இன்றைக்கு 18 வயதுள்ள வர்களுக்கு வாக்களிக்க உரிமை கொடுத்துள்ளோம். பாவம், அந்த இளைஞர்கள், புரியாதவர்கள். அவர் களுக்கு மாற்றம் தெரிந்தது; குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று நம் நாட்டிலுள்ள மீடியாக்கள், ஊடகங் கள்,
ஏற்கெனவே மத்தியில் இருந்த ஆட்சியின் மீதுள்ள கசப்புணர்ச்சி, எதிர்ப்புணர்ச்சியின் காரணமாக - ஒரு விரக்தி மனப்பான்மையினுடைய விளைவுதான் இந்த ஆட்சி வருவதற்குக் காரணமாக இருந்தது. அதனுடைய விளைவு எப்படிப்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஓநாய் ஒருபோதும் சைவமாகவில்லை என்று அவர்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த நாட்டில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் ஆர்.எஸ்.எசைத் தவிர வேறு எந்த ஒரு இயக்கமாவது இருக்கிறதா? அருள்கூர்ந்து சொல்லட் டும்.  ஓநாய் சைவமாகிவிட்டது என்று ஒப்புக்கொள்ள முடியுமா? இன்றைக்கு ஓநாய் சைவமாகிவிட்டது என்று சொன்னார்கள்.
இல்லை, ஓநாய் ஒருபோதும் சைவமாகவில்லை என்று அவர்கள் காட்டிக் கொண்டி ருக்கிறார்கள். அதுதான், உ.பி. மாநிலம் தாத்ரியில் நடைபெற்ற சம்பவமாகும். அதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
சில செய்திகளை உங்களுக்குத் தொட்டுக்காட்ட விரும்புகிறேன். இது அறிவார்ந்த அரங்கமாகும். இங்கே வந்திருப்பவர்கள் எல்லாம் ஆழமான விவரம் தெரிந்த தோழர்கள். நீங்கள் எக்கட்சி, எக்கொள்கை, எந்த உணர் வாளர்களாக இருந்தாலும், அருமையான சிந்தனையா ளர்களாக இருக்கக்கூடியவர்களால் இந்த அரங்கம் நிரம்பியிருக்கிறது. அவர்களுக்கு சில தகவல்களை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், புரிந்துகொள்ள வேண்டும் நீங்கள்.
மதவாத அரசியல் எப்படி படம் எடுத்து ஆட ஆரம்பித்திருக்கிறது. தடியெடுத்து அடித்தவுடன் அந்தப் பாம்பு புற்றுக்குள் தலையை இழுத்துக் கொள் கிறது. அந்தப் பாம்பு செத்துவிடவில்லை. அந்த வெறி இன்னும் அடங்கிவிடவில்லை. அந்தப் பாம்பு மீண்டும் மீண்டும் வெளியே வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் அடையாளமாக, இதனுடைய வரலாறு எவ்வளவு காலத்திற்கு முன்பு, எங்கே நடந்திருக்கிறது தெரியுமா?
“Gita Press and the making of
Hindu India”
இதோ என் கையில் இருக்கின்ற மற்றொரு புத்தகம். Gita Press and the making of Hindu India
இதனை எழுதியவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் ஒரு பத்திரிகையாளராக இருக்கக்கூடிய அக்சய முகுல் என்பவர். அது ஒரு ஆய்வுரையாகும்.
மிகப்பெரிய அளவிற்கு இந்தப் புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார்கள். 540 பக்கம் உள்ள புத்தகம் இது. இந்த புத்தகத்திலிருந்து இரண்டு, மூன்று செய்திகளை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
உண்ணும் உரிமை, எண்ணும் உரிமை எல்லோ ருடைய அடிப்படை உரிமையாகும். பறிக்கப்பட முடியாத உரிமை அது. அதேநேரத்தில், சாதாரண எளிய மக்களுக்கு மாட்டுக்கறிதானே உணவு. எனக்கும்,  மாட்டு கறிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர் களே, அவன்தான் என்னுடைய சகோதரன்; நானும், அவனும் என்றைக்கும் ஒன்றுதான்.
உன்னைப் போன்று பூணூல் போட்டு அல்லது உன்னை போன்று அடிமைகளாக்கி, உன்னைப் போன்று தனியே சொல்லிக் கொண்டிருப்பன் அல்ல. ஒருவர் கிறிஸ்தவராக இருக்கலாம்; ஒருவர் இஸ்லாமியராக இருக்கலாம்;
மதத்தால் அவர்கள் மாறுபட்டவர்கள்; இனத்தால் அவர்கள் என்றும் ஒன்றுபட்டவர்கள். இனம் என்று சொல்லும்பொழுது, திராவிட இனம் என்பது மட்டுமல்ல, மனித இனம் என்பது மிகவும் முக்கியமானது என்று ஒரு படி மேலே சொல்வதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் வீட்டில் இருப்பதெல்லாம் வீட்டுப் பெண்; உன் வீட்டில் இருப்பது மாட்டுப்பெண்!
அந்த அடிப்படையில், நீங்கள் அந்த இனத்தி லேயே இல்லை. ஏன் நாங்கள் எல்லாம் மனித இனம் இல்லையா? அவர்கள்தான் மனித இனமா? என்று உன்னால் கேட்க முடியுமா? அப்படி உன்னால் கேட்க முடியாதே! ‘‘நீ கோமாதா என்கிறாயா, மாட்டுக்குப் பிறந்தவன் என்று சொல்கிறாயே!
எங்களுக்கு மாடு தாய் இல்லையே! அக்கிரகாரத்துக்காரன் சொல்லியதை நீ எடுத்துக்கொண்டுள்ளாயே, அவன்தான் மருமகனைப் பார்த்து, ‘‘மாட்டுப்பெண்’’ என்று சொல்வான். எங்கள் வீட்டில் இருப்பதெல்லாம் வீட்டுப் பெண்; உன் வீட்டில் இருப்பது மாட்டுப்பெண். இதுதான் இரண்டு கலாச்சாரம் வெவ்வேறு என்பதற்கு அர்த்தமாகும்.
Gita Press and the making of Hindu India  என்ற புத்தகத்தில் அவர் சொல்கிறார்,The month of the planning to put of the united face and speak in single Hindu voice went completely awry on 7 November. Delhi had never witnessed such a surge of people, estimated between 1,25,000 and 700,000 who had begun congregating days before the event. The mega event was to terminate in front of the Parliament with  galaxy of cow protection movement leaders, otherwise belonging to ideologically diverse groups, set to address the crowd. Golwalker, karpatri Maharaj and prabhudatt Brahmachari, Congress’s seth Govind das, Jana sangh’s Atal Bihari Vajpayee and Gita Press’s poddar were on the stage.
இதன் தமிழாக்கம் வருமாறு:
“மாதங்களாக தொடர்ந்த ரகசியத் திட்டத்தின் மூலம் டில்லியில் நவம்பர் மாதம் ஒன்றுகூடினர். தலைநகர் டில்லி இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒருபெருங்கூட்டத்தைக் கண்டதில்லை, சுமார் 125000 முதல் 700000 வரையினாலான பெருங் கூட்டம் இந்த நிகழ்ச்சியின் போது கூடியது, இந்த பெருங்கூட்டத்திரளுக்கு ஊடே பசுவதைத் தடுப்பு இயக்கத் தலைவர்களும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கூடி இருந்த னர்.
இவர்களில் முக்கியமானவர்கள், கோல்வால்கர், கருபத்திரி மகராஜ், பிரபாந்தத் பிரம்மாச்சாரி, அடல் பிகாரி வாஜ்பாயி மற்றும் கீதா பிரஸ்சின் ஹனுமன் பிரசாத போதார் போன்றோர் கூடியிருந்தனர்.
காங்கிரசையும், காங்கிரஸ் தலைமையையும் எதிர்ப்பதற்குக் காரணம் என்ன?
நண்பர்களே! இங்கே ஒரு செய்தியை உங் களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 1937 ஆம் ஆண்டு வரையில், இந்து மகாசபா - காங்கிரஸ் இவையிரண்டும், முதல் நாள் காங்கிரஸ் மாநாடு ஒரு மேடையில் நடைபெறும். அதேமேடையில், அடுத்த நாள் இந்து மகாசபா கூட்டம் நடைபெறும்.
1937 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அது மாற்றப்பட்டது. இப்படிப்பட்ட போக்கு அன்றைக்கு இருந்தது. இன்றைக்குக் காங்கிரசையும், காங்கிரஸ் தலைமையையும் எதிர்ப்பதற்குக் காரணம் என்ன? அரசியல் மட்டுமல்ல நண்பர்களே, நீங்கள் அதையும் தாண்டி சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
அன்றைய காங்கிரசுக்கும், இன்றைய காங்கிர சுக்கும் வித்தியாசம் உள்ளது. அன்றைக்கு சோசலி சயத்தை ஏற்றுக்கொள்ளாதது; காமராசர் தலைமை தாங்கிய பிறகு மிகப்பெரிய திருப்பம் காங்கிரசுக்கு வந்தது. சமதருமத்தைக் கொண்டுவரக்கூடிய அந்தச் சூழல் வந்தது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனவே, இப்பொழுது ஒரு அக்லக் கொல்லப் பட்டார் என்பது முக்கியமல்ல; அல்லது கொல்லப் பட்டது ஒரு நபர் என்பது முக்கியமல்ல. கொல்லப் படவிருக்கிறது ஜனநாயகம் என்பதை மறந்துவிடா தீர்கள். கொல்லப்படவிருக்கிறது சோசலிசம் - சமதர்மம் என்பதை மறந்துவிடாதீர்கள். வரவிருப் பது மனுதர்மம் - அதையும் நினைவுபடுத்திக் கொள் ளுங்கள் என்று சொல்வதற்காகத்தான் இந்தக் கூட்டம்.
அம்பேத்கரை ஈன ஜாதியைச் சார்ந்தவர் என்று சொன்னார்கள்
அம்பேத்கர் அவர்களை எவ்வளவு கொச்சைப் படுத்தினார்கள். அவரைப் பதவியிலிருந்து விரட்ட வேண்டும் என்று திட்டமிட்டதே அந்தப் பாசறைதான். ஆர்.எஸ்.எசுக்கே குருநாதர்கள் இவர்கள். யார்? கீதா பிரஸ், கோரக்பூர். (உ.பி.)
அம்பேத்கர் இந்து கோட் பில் - பெண்களுக்குச் சொத்துரிமைக்காக அவர் பாடுபட்டது - அது முடிய வில்லை என்று சொன்னவுடன், ராஜேந்திர பிரசாத்தே விரோதமாகப் போனார்.
நேருவால், அம்பேத்கர் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை (கவலைப் படாதீர்கள் நாம் நிறைவேற்றிவிடலாம் என்றார்) நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு அத்தனையும் என்ன பின்புலம்? இதுவரையில் எதிலேயும் வராத தகவல்கள் அந்தப் புத்தகத்தில் வந்திருக்கின்றன.
Ambedkar bore the front of podars hostility throughout stint as the law minister’s is resignation was demanded on the slight at the pretext.
இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், வேஷம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்களே! அம்பேத்கர் அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகளை உண்டாக்கினார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக் கிறார்களே, அவர்களின் நிலைமை அன்றைக்கு என்ன?
அம்பேத்கர் அவர்களை எவ்வளவு கொச் சைப்படுத்த முடியுமோ? அவ்வளவு கொச்சைப்படுத்தி, எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்கள்.
‘அம்பேத்கரை ஈன ஜாதியை சார்ந்தவர்’ என்று பேசியிருக்கிறார்கள். அவர் ஒரு பாப்பாத்தியை திருமணம் செய்துகொண்டால், அதன்மூலம் அவர் உயர் ஜாதியாக ஆகிவிடுவாரா? என்று கேட்டார்கள்.
‘‘Making of Hindu India’’ புத்தகத்தைப்பற்றி தனி உரையையே ஆற்றவேண்டும்.
யாருக்கும் தெரியாத ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி!
இன்றைக்கு திடீர் என்று ஞானோதயம் ஏற்பட்டி ருக்கிறது? யாருக்கு? நம்முடைய பிரதமர் மோடி அவர்களுக்கு! அம்பேத்கர் தந்த அந்த அடிப்படை உரிமையை, இட ஒதுக்கீட்டினை யாராலும் பறிக்க முடியாது.
யாருக்கும் தெரியாத ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். ஏன்? இன்னும் நான்கு கட்டமாக தேர்தல் நடைபெறவேண்டி இருக்கிறது, பிகாரில்.  எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
எனவே, மதவாத அரசியல் என்பது வெறும் மாட்டுக்கறியில் மட்டுமல்ல; அதைத் தாண்டி சிந்திக்க வேண்டிய கடமைக்கு வந்திருக்கிறார்கள், மிகப்பெரிய அளவிற்கு.
48 ஆவது பிரிவு இருக்கிறது என்றால், பசுக்கள், கன்றுகள், பால் தரும் விலங்குகள், பொதி சுமக்கும் கால்நடைகள் இவற்றை வதை செய்யாமல் தடுப்பதற்கு அரசுகள் முயற்சிகள் செய்யவேண்டும் என்று கூறுகிறது.
பஞ்சகவ்யம் என்றால் என்ன?
பசு மாடு ஒன்றுதான் இருக்கிறதா? எருமை மாடு என்னாயிற்று? எருமை மாடுதானே அதிகமாக பால் கொடுக்கிறது. எருமை மாடு கருப்பு என்பதால், அதனை விட்டுவிட்டார்கள். பசு மாடு வெள்ளை. இதிலேயே வருணாசிரம தர்மம் இருக்கிறது என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
நீ பசு மூத்திரத்தைக் குடிக்கிறாய்; சாணியைக் கலந்து பஞ்சகவ்யத்தைக் கொடுக்கிறான். பஞ்சகவ்யம் என்றால் என்ன? விண்வெளி வீரர் விண் வெளியிலிருந்து எடுத்து வந்த கெமிஸ்ட்ரி கல வையா? புதிதாகக் கண்டுபிடித்த சரக்கா? பஞ்சகவ்யம் என்றால் என்ன? மாட்டின் பால், மோர், தயிர், சாணி, மூத்திரம் இவை அத்தனையும் கலந்த கலவைதானே. அதைத்தானே குடி, குடி என்று சொல்கிறார்கள்.
பெரியார்தான் நன்றாகச் சொல்வார், நம் ஆட்களுக்குப் புத்தி வந்ததா? இல்லையா? என்பதற்கு அவன் சோதனை செய்வதற்காக அவன் கையில் இந்த தர்மா மீட்டரை வைத்திருக்கிறான் என்பார். நம்மாள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக இருப்பார்கள்.
அவரும் இந்த மாட்டு மூத்திரத்தைக் குடிப்பார். நம்மாள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பார்; அவரும் இந்த மாட்டு மூத்திரத்தை கொடுக்கும்பொழுது, அதை பவ்வியமாக வாங்கிக் குடிப்பார். அதற்கு ஒரு தத்துவார்த்தம் சொல்வார்கள், மாட்டு மூத்திரத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்று.
‘‘ஜனநாயகத்தின் தலைகுனிவு’’ என்று ‘தினமணி’ செய்தி வெளியிடுகிறது
பசு மாட்டை வைத்து இன்றைக்கு அரசியல் நடத்துகிறார்கள். மோடி வரவேண்டும், மோடி வர வேண்டும் என்று ஓடி வந்தவர்கள் எல்லாம் அன் றைக்குத் தோடி ராகம் பாடியவர்கள். அப்பேர்ப்பட்ட அவர்கள் தாத்ரி சம்பவத்தைப்பற்றி சொல்லும்பொழுது, ‘‘ஜனநாயகத்தின் தலைகுனிவு’’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பது ‘தினமணி’ நாளிதழ்.
‘தினமணி’ ஆசிரியர் யார்? அவரைவிட பலமான ஆர்.எஸ்.எஸ். வேறு யாராவது உண்டா? இன்றைக்கு அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட நிலை வந்திருக்கிறது? புத்திசாலித்தனமில்லாமல் இதுபோன்ற செயல்களை செய்து வம்பில்     மாட்டிக் கொண்டார்களே! கருப்புச் சட்டைக்காரர்கள் இதனை சும்மா விடுவார்களா? எல்லாவற்றையும் விளக்கிச் சொல்வார்களே என்று எங்களை அவர்கள் முந்திக்கொண்டு கண்டிக்கின்ற இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.
கோமாதாபற்றி கவிஞர் அவர்கள் பேசிய கருத்தையே வைத்தியநாத அய்யர் எழுதியிருக்கிறார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...